Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

கேளிக்கையா வரிவிலக்கு கேட்பது - நீதிமன்றம்


'சவாரி' என்கிற சினிமாவுக்கு 'யு' சான்றிதழ் வழங்குவது குறித்த வழக்கு ஒன்றின்போது, தமிழ் சினிமாவுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப் படுவது குறித்து நீதியரசர் கிருபாகரன் சில கருத்துகளை வெளியிட்டுள்ளது சிந்திக்கத்தக்கதாக உள்ளது.

'சவாரி' படத்தில் சனம் ஷெட்டி
தமிழ் கலாச்சாரத்தையும், மொழியையும் வளர்க்கும் அளவில், முற்றிலும் தமிழில் பெயர் கொண்ட தமிழ் திரைப்படங்களுக்கு 30 சதவிகித கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும் என 2006 ஆம் ஆண்டு அரசு அறிவித்திருந்தது. இதுவரையில் கிட்டத்தட்ட 2120 படங்களுக்கு  கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், எந்த அடிப்படையில் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டது என்றும்,  கலாச்சாரத்தையும், மொழியையும் வளர்க்க தமிழ் திரைப்படங்கள் என்ன செய்தன என்றும், நீதிபதி கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பதால், தயாரிப்பாளர் மட்டுமே பயன் அடைகிறார் என்றும் மக்களுக்கும், அரசுக்கும் அதனால் என்ன பயன் என்றும் நீதியரசர் கிருபாகரன் கேட்டுள்ளார்.


2006 முதல் 2016 வரை படங்களுக்கு அளிக்கப்பட்ட கேளிக்கை வரி விலக்கு பணமதிப்பு என்ன என்பதை குறிப்பிடுமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்டிருந்த நிலையில், அது குறித்து தகவல்கள் இல்லையென அரசு தெரிவித்துள்ளது வேடிக்கையாக உள்ளது.  சில காலங்களாகவே தமிழ் திரைப்படங்களில் அளவுக்கு அதிகமாக காதல் காட்சிகளும், மோசமான வன்முறை காட்சிகளும் இடம்பெற்று வந்துள்ளதாக சமூக நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியே வந்துள்ளனர். அதில் உண்மை இருப்பது சராசரி சினிமா ரசிகனும் அறிந்த ஒன்றே. இருந்தபோதும், வெறும் தமிழ் சொற்களில் தலைப்புகள் வைக்கப்படுவதன் அடிப்படையில் மாத்திரமே கேளிக்கை வரி விலக்கு வழங்கப்படுவது ஏற்கத்தக்கதா என்பது கேள்விக் குறியே. அதைத்தான் நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.


ஆனால் அதேநேரம், வருடத்திற்கு ரூ.1000 கோடிக்கும் அதிகமாக புழங்கும் தமிழ் திரைப்பட உலகம், கடுமையான சவால்களை எதிர் நோக்கியுள்ளதையும், இதுபோன்ற சலுகைகளை எதிர் பார்த்து காத்திருப்பதும் யாவரும் அறிந்த ஒன்றே. புதிய தொழில்நுட்பங்களின் வரவு சினிமாத் துறை வர்த்தகத்தை  மிக மோசமாக பாதித்துள்ளதையும், யாரும் மறுக்க இயலாது.

'ஷேர் இட்' போன்ற செயலிகள் மூலம் முழு திரைப்படத்தையும், சில நிமிடங்களில் பதிவிறக்கம்  செய்துவிடமுடியும். மேலும், மொபைல் புரட்சியின் காரணமாக நான்காம் தலைமுறை '4ஜி' மூலம் குறைந்த செலவில் இணையதள டேட்டா வசதிகளை அளிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. சொல்லப் போனால்,   வரும் வருடங்களில்  திரைப்படங்களை தியேட்டர்களில், டிவி சேனல்களில் பார்ப்பதை விடவும், அதிகமான அளவில் மொபைல் போன்களிலேயே பலரும் பார்ப்பர் என்கிற அளவுக்கு  நிலைமை மாறியுள்ளது கண்கூடு. இநநிலையில் தமிழ் திரைப்படத்துறை சுய பரிசோதனை செய்வதன் மூலம் தனக்கான சவால்களை வெற்றி காண வேண்டுமேயன்றி, கலாசார மொழி வளர்ச்சி என்கிற அடிப்படையில் தமிழ் பெயருக்காக வரி விலக்கைப்பெறுவது தவிர்க்கத்தக்கதே.

எந்த திரைப்படம் வெளியானாலும், முழுமையான கட்டணங்களே வசூலிக்கப்படுவதும் யாவரும் அறிந்ததே. ஒரே ஒரு திரை கொண்ட தியேட்டர்களில் ரூ.50க்கு மிகாமலும், 3 திரைகளுக்கு அதிகம் கொண்ட தியேட்டர்களில் ரூ.120க்கு மிகாமலும் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பதே அரசின் அறிவிப்பாகும். ஆனால் யதார்த்தத்தில் இந்நிலை காணப்பட வில்லை என்பதும் அனைவரும் அறிந்த ரகசியமே. வருடத்திற்கு 150க்கும் அதிகமான படங்கள் தயாரிக்கப்பட்டாலும், அவற்றில் 10 படங்களுக்கு உள்ளாகவே குறைந்தபட்ச லாபத்தையாவது சம்பாதிக்கின்றன எனும்போது, டிஜிட்டல் தொழில் நுட்ப புரட்சியின் அடிப்படையில், விநியோக முறைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தாலேயன்றி, திரைப்படத்துறை வளமான நாட்களை எதிர்பார்க்க முடியாது என்பதே வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. 

கருப்பு பணத்தை ஒழித்தே தீருவோம் என மத்திய அரசு செயல்பட்டு வரும் நேரத்தில் கருப்பு பணம் அதிகமாக புழங்குவதாக கருதப்படும் திரைப் படத்துறை, நிதித்துறை சீர்திருத்தங்களையும், நடிகர்கள் சம்பள குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் எடுப்பதோடு, விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் புதிய பரிமாணங்களை  எட்டுவது, அலைபேசி சேவை வாயிலாக திரைப்பட விநியோகத்தை மேற்கொள்வது, அனைத்து தியேட்டர்களிலும் மேம்பட்ட வசதிகளை உருவாக்குவது என பலவாறாக கவனம் செலுத்த வேண்டியுள்ளதை குறிப்பிட்டாக வேண்டும்.


வரி விலக்கு  அளிக்கப்படுவதில் ஏற்புடைய பின்னணி இல்லையென்பதையே நீதி அரசரின் கேள்விகள் சுட்டிக்காட்டுகின்றன எனும்போது, வரி விலக்கை தவிர்த்து தமிழ் திரைப்படத் துறை  சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதே யதார்த்தம். அதேநேரம், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதால், கேளிக்கை வரி விலக்கு  குறித்த அரசாணையை விலக்கிக் கொள்வது குறித்து தமிழக அரசும் பரிசீலிக்க வேண்டியது அவசியம்.


கட்டுரையாளர் : எம்.ஜே.வாசுதேவன் 



6 கருத்துகள்

  1. நல்ல கட்டுரை. வரிவிலக்கு எதற்கு தரவேண்டும் என்று எனக்கும் பலமுறை தோன்றும்.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை