கடந்த 30 ஆண்டுகால தமிழக அரசியல் களத்தில் மிகுந்த பங்களிப்பைக் கொண்ட அரசியல் தலைவராக வலம் வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, இயற்கை எய்தியுள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆணாதிக்க சமுதாயத்தில், குறிப்பாக அரசியலில் துணிச்சல் மிக்க பெண்ணாக பல்வேறு சோதனைகள், போராட்டங்கள், வழக்குகள் என அனைத்தையும் தனியாளாக எதிர்கொண்டு நெஞ்சுரத்துடன் செயல்பட்டு, தமக்கு வந்த சோதனைகளை எல்லாம் தவிடுபொடியாக்கியவர் அவர்.
தமிழகத்தின் மிக முக்கியமான காவிரி பிரச்சினை என்றாலும், முல்லை பெரியாறு பிரச்சினை என்றாலும், திடமான முடிவெடுத்து நிலைமாறாது செயல்பட்டு, தமிழகத்திற்கான சாதகமான தீர்ப்புகளை தமிழக முதல்வராக இருந்து அவரால் பெற முடிந்தது பெரும் சாதனையே.
அதுமட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கை கையாளுவதில் மிகத் துணிச்சலுடனும், தீர்க்கமான மனத்துடனும் செயல்படக்கூடியவர் முதல்வர் ஜெயலலிதா என்பதை தமிழகத்தில் யாரும் மறுக்கமாட்டார்கள். புகழ்பெற்ற எம்ஜிஆர் விட்டுச்சென்ற அதிமுக என்கிற மாபெரும் இயக்கத்தை கட்டிக்காத்து இன்றைக்கு தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் கட்சியாக முன்னிறுத்தியதில் ஜெயலலிதாவின் பங்களிப்பு மிக மிக அதிகம்.
அரசியல் ரீதியாக துணிச்சலான நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர் என்பதால், தமிழகத்தின் இரும்புப் பெண்மணி என வர்ணிக்கப்பட்டாலும்கூட, சமூகத்தில் கடைநிலையில் இருக்கும் தொண்டனைக்கூட அமைச்சர், எம்பி அந்தஸ்துக்கு உயர்த்தி அழகு பார்க்கும் மனப்பாங்கு கொண்டிருந்தவர் என்பதால், அவர் சார்ந்த இயக்கத் தொண்டர்களுக்கு கரும்புப் பெண்மணியாகவும் விளங்கினார். அதனால்தான் இயக்கத்தொண்டர்கள் மட்டுமல்லாமல், பெருவாரியான மக்களாலும் "அம்மா' என்று அடைமொழியிட்டு அன்போடு அழைக்கப்பட்டு வந்திருப்பவர் அவர்.
தமிழக அரசியலில் அவரது மறைவு ஈடு செய்ய இயலாத இழப்பாகும் என்பதையும், அந்த வெற்றிடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். தமிழகம், தமிழர் நலன் என்கிற கோட்பாடுகளோடு திராவிட இயக்கங்களின் சமூக மேம்பாட்டுக் கொள்கைகளையும் மேலும் முன்னெடுத்துச் செல்கின்ற அரசியல் தலைவராக அடையாளம் காணப்பட்டவர் அவர்.
தேசிய சிந்தனை கொண்ட, ஆனால் மாநில நலனுக்காக கிஞ்சித்தும் அஞ்சாமல் போராடக்கூடிய ஒரு மாபெரும் தலைவராக அவர் விளங்கியதை நாடு நன்றாக அறியும். துயரமிக்க இந்த தருணத்தில் அதிமுக கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தங்களது தலைவி வகுத்து தந்திருக்கும் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்வதோடு, மாபெரும் அரசியல் தலைவியான அவரது கொள்கைகளையும், கனவுகளையும் திறமையாக முன்னெடுத்துச் சென்று தமிழகத்தை வளமாக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது என்பதையும் உணர்ந்து செயல்பட்டாக வேண்டும் என்பதே
தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்! வாழ்க அவர்தம் புகழ்.!
கட்டுரையாளர் : எம்.ஜே.வாசுதேவன்
ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்...
பதிலளிநீக்குஆன்மா அமைதியுற ஆண்டவனை இறைஞ்சுகிறேன்
பதிலளிநீக்குதிருமதி இந்திரா காந்திக்குப் பின் நாம் கண்ட இரும்புப்பெண்மணி.
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்.....
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள். ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்..
பதிலளிநீக்குகருத்துரையிடுக