Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

இந்தியாவின் ஊழல் - ஜஸ்ட் பாஸா.. வொர்ஸ்ட் கேஸா!


'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல்' என்கிற சர்வதேச அமைப்பு ஊழல் மற்றும் வெளிப்படையான நிர்வாகம் குறித்த சர்வதேச நாடுகளின் செயல்பாடுகள் பட்டியல் ஒன்றை வருடா வருடம் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


2016-ம் ஆண்டிற்கான பட்டியலில், பிரேசில், சீனா மற்றும் இந்தியாவிற்கு 40-வது இடம் கிடைத்துள்ளது வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை நோக்கி இந்தியா வெகுதூரம் பயணப்பட வேண்டியுள்ளதன் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது. நியூசிலாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் 90 புள்ளிகள் பெற்று ஊழலற்ற மிகச்சிறப்பான நாடு என்கிற தகுதியைப் பெற்றுள்ள வேளையில், உலகத்தில் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ள இந்தியாவில் லஞ்ச ஊழல், வெளிப்படையற்ற நிர்வாகம் நாட்டை சீரழித்து வருவது மறுபடியும் நிரூபணமாகியுள்ளது.

கடந்த காலங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல்கள் மூலமாகவே பெரும் எடுப்பிலான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், லோக்பால் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு ஊழலுக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றெல்லாம் அரசியல் அரங்கிலே பேசப்பட்டு வந்தது. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த தகவல் தெரிவிப்போரை பாதுகாப்பதற்கான சட்டங்கள் வெகு முனைப்புடன் கொண்டு செலுத்தப்படவில்லை என்பதும் யதார்த்தத்தில் நாம் காணும் உண்மையே.

பொருளாதார வளர்ச்சி வருடா வருடம் அதிகரித்து வந்தபோதிலும், லஞ்ச ஊழலைக் குறைப்பதில் வளர்ச்சிக்கு பங்கேதும் இல்லை என்பதும் வருத்தத்திற்குரிய விசயமே. அதாவது, சமச்சீரற்ற நிலையிலான வளர்ச்சி இந்தியாவில் தொடர்வதே இதற்கு அர்த்தம். 2015ம் ஆண்டில் 38 புள்ளிகள் மட்டுமே பெற்ற இந்தியா தற்போது 40 புள்ளிகள் பெற்றுள்ளதே சிறப்பான செயல்பாடுகள் என்ற அளவில் எடுத்துக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே.

உலக வங்கி தருகின்ற புள்ளிவிவரங்கள், உலகப் பொருளாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் தருகின்ற தகவல்கள் அடிப்படையில் 176 நாடுகளின் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் குறித்த பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான  அரசும்கூட லோக்பால் மற்றும் ஊழல் குறித்த தகவல் கொடுப்போருக்கு பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்களில் பெருத்த அளவில் கவனம் செலுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. ரூபாய் மதிப்பிழப்பு அறிவிப்பு, லஞ்ச ஊழலுக்கு எதிரான நடவடிக்கையே என்று பிரதானமாக பேசப்பட்டாலும், அதற்கு பிந்தைய நடவடிக்கைகளில் வேகம் காட்டப்படவில்லை என்பதும் வருத்தத்திற்குரியதே.

அதேபோல் அரசியல் கட்சிகள் பெறுகின்ற நன்கொடைகளில் 71 சதவிகிதம் பெயர் தெரியாத நபர்களிடமிருந்து பெறப்படுகிறது எனும் போது, எந்த நன்கொடையையும் காசோலையாகவோ அல்லது மின்னணு பரிவர்த்தனை மூலமாக மட்டுமே அரசியல் கட்சிகள் பெறவேண்டும் என சட்டம் இயற்றுவது, பினாமி சொத்து குவிப்புக்கு எதிரான சட்டங்களை தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது, ரியல் எஸ்டேட் துறையில் கருப்பு பணம் பரவாதிருக்க வழி வகைகள் செய்வது என பல்வேறு வகைகளில் மத்திய அரசு கடிவாளம் போடும் எனில், நிச்சயமாக லஞ்ச ஊழல் குறித்த நடவடிக்கைகளை கட்டுக்குள் வைக்க இயலும்.

ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர், நடத்தப்பட்ட மிகப்பெருவாரியான ரெய்டுகள் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டவையாகவே இருக்கின்றன என்பதை கவனிக்கும் போது, எந்த இலக்கை நோக்கி லஞ்ச ஊழலுக்கு எதிரான தீவிரம் அதிகரிக்கப்படவேண்டும் என்பதை புரிந்துகொள்ள முடியும். அதேநேரம், சமூகம் என்ற அளவிலும் கூட பல்வேறு மட்டங்களிலும் இதுகுறித்த கருத்து பரிமாற்றங்களும், அறப்போராட்டங்களும் அவசியம் என்றே தோன்றுகிறது.

தமிழ் இனத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கிறோம் என்று சொல்லி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அறப்போராட்டம் ஜல்லிக்கட்டுடன் முடிவடைந்து விடக்கூடாது என்பதே சமூகநல ஆர்வலர்களின் பிரார்த்தனையாக உள்ளது. சொல்லப்போனால், ஒரு மாதத்திற்கு அல்லது இரு மாதங்களுக்கு ஒருமுறை அறப்போர் நேரம் என்கிற பெயரில் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் அணி திரண்டு ஒவ்வொரு ஊரிலும் ஒரு அரை மணி நேரமாவது லஞ்சம், ஊழல் மற்றும் வெளிப்படையற்ற நிர்வாகத்திற்கு எதிரான கோசங்களை அறவழியில் நின்று எழுப்பி கலைந்து செல்லுதல் தொடருமானானல், லஞ்ச ஊழலுக்கு எதிரான போராட்டம் நீர்த்துப் போகாமல் உயிர்ப்புடன் இருக்கும் என்பதோடு, லஞ்ச ஊழலில் ஈடுபடும் அனைவருக்கும் அது ஒரு எச்சரிக்கையாகவும் அமையும் என்கிற நிலையில், சமுதாயத்திற்கு நீண்டகால அடிப்படையில் மிகப்பெரும் பயன்களை அளிப்பதாக அமையும் என்பதை மறுக்க இயலாது.

மிக மோசமான ஊழல் மற்றும் லஞ்சம், வெளிப்படைத் தன்மையில்லாத நிர்வாகத்தைக் கொண்டிருக்கும் நிலையிலும், இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாகத் திகழும் நிலையில், ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகமும், கனிம சுரண்டல்கள் இல்லாத போக்கும் ஏற்படுத்தப்படுமானால், உலகின் முன்னணிக்கு இந்தியா வந்துவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை மட்டும் அறுதியிட்டுக் கூற முடியும்.


கட்டுரையாளர்: எம்.ஜே.வாசுதேவன் 



4 கருத்துகள்

  1. நல்ல பகிர்வு சகோ! கட்டுரையாளர் சொல்லுவது போல் பண மதியிழப்பு வந்த சில வாரங்கள் பேசப்பட்டது. லஞ்ச ஒழிப்பு என்றார்கள், பணம் குவிந்தது என்றார்கள்...அடுத்து சொத்துகளும் இது போல் கணக்கிலடப்படும் என்றார்கள் ஆனால் அப்படியே தேய்ந்து போனது போல் இருக்கிறது. இப்போது சத்தம் அடங்கியது போல் உள்ளது. கட்சிகளுக்குக் கொடுக்கப்படும் நன்கொடை போலும் கணக்கில் காட்டப்டவேண்டும். அரசும் தனது கணக்கை, பொதுமக்களுக்கு என்ன செலவு செய்கிறது என்றவற்றை மக்களுக்குப் ப்கிரங்கமாக வெளியிட வேண்டும்...கட்டுரையாளர் சொல்லுவது போல் அதைச் செய்தால் நம் நாடு உலக அரங்கில் பேசப்படும்...நல்ல கட்டுரை.பகிர்விற்கு மிக்க நன்றி சகோ

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை