Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

வந்தே விட்டது வளர்ச்சியில் பாதிப்பு !


லகத்தின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்கிற இந்தியாவின் பெருமை பறிபோய்விடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

2016-17ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6 சதவிகிதத்திலிருந்து 7.8 சதவிகிதம் வரை இருக்கும் என்றே உலக வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட சர்வதேச ரேட்டிங் அமைப்புகளும் கணிப்பு வெளியிட்டிருந்த சூழலில், தற்போது ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக வளர்ச்சி எதிர்பார்ப்பில் ஏமாற்றம் ஏற்படுவதற்கான சூழல் தோன்றியுள்ளது.


ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நிதியம், நடப்பு நிதியாண்டில் தாங்கள் முன்னர் அனுமானித்திருந்த 7.6 சதவிகித வளர்ச்சி என்பதைவிடவும் குறைந்து இந்தியாவின் வளர்ச்சி 6.6 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  அதேநேரம், நடப்பு நிதியாண்டில் சீனாவின் வளர்ச்சி விகிகதம் 6.7 சதவிகிதமாக அதிகரித்து மிக வேகமாக வளரும் பொருளாதார நாடு என்கிற பட்டத்தை மீண்டும் பெற்றுவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது இந்தியர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமையக்கூடும்.

ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக நுகர்வுத்தன்மையில் பெரும்
பாதிப்பு ஏற்பட்டதோடு, பணம் கொடுக்கல் வாங்கலிலும் இன்னமும் நிலைமை சீரடையாத நிலை உள்ளதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்பது ஓரளவு எதிர்பார்க்கப்பட்டதே என்றாலும் 1 சதவிகித அளவிற்கு வளர்ச்சி பாதிக்கும் என்பது தற்போது ஏறக்குறைய நிச்சயமாகியுள்ளது.


குறைந்தகால அடிப்படையில் மட்டுமே வளர்ச்சியில் வீழ்ச்சி இருக்கும் என்பதை ஏற்றுக்கொண்டாலும்கூட, நடப்பு நிதி ஆண்டில் மட்டுமே ரூபாய் மதிப்பிழப்பு விவகாரத்தின் அடிப்படையில் ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு மொத்த உற்பத்தி இழப்பு ஏற்படும் என்பது எளிதில் ஜீரணிக்க இயலாத செய்தியாகவே இருக்க முடியும்.

75 நாட்கள் கடந்த பின்னரும் கூட, ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையின் நேரடியான பலன்கள் கண்ணுக்குத் தெரியாத சூழலில், ஏற்கெனவே கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும் கூட வங்கிகளுக்குள் வந்து விட்டதாக தெரியும் சூழலில், இத்தகைய உள்நாட்டு மொத்த உற்பத்தி இழப்பு மேலதிக ஏமாற்றம் தருவதாகவே இருக்கும்.

இந்தியப் பொருளாதாரத்தின் மீது வலிந்து திணிக்கப்பட்டதே இது என்பதையும் மறுக்க இயலாது. சந்தேகத்திற்கிடமான டெபாசிட்டுகள் மிக அதிகமாக இருக்கின்றன என்றும், அதன் மூலம் வரி வருவாய் அரசுக்கு வரக்கூடும் என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், அதன் முடிவுகள் தெரியவர ஓராண்டுக்கு மேலாகும் என்கிற யதார்த்தத்தையும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளதால், வளர்ச்சி இழப்பு அரசின் மீதான வருத்தங்களையே அதிகரிக்கச்செய்யும்.

இந்நிலையில், மேற்கொண்டும் சீர்திருத்த நடவடிக்கைகள் குறிப்பாக, அரசியல் கட்சிகளிடம் அதிக அளவில் கருப்பு பணம் புழங்குவதை தடுக்கும் நடவடிக்கைகள், ரியல் எஸ்டேட் துறையில் குவிந்திருக்கும் கருப்பு பணத்தை
கட்டுப்படுத்துவதற்கான செயல் பாடுகள் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே மத்திய அரசு மக்களின் நம்பிக்கையை பெற இயலும் என்பதே யதார்த்தமாகும்.

யானை இளைத்தாலும் குதிரை மட்டமே என்கிற பழமொழிக்கேற்ப உலகின் பெருவாரியான நாடுகளின் வளர்ச்சியை ஒப்பிடும் போது இந்தியாவின் 6.6 சதவிகித எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி என்பதே அதிகமானதாகத்தான் இருக்கும் என்கிற வாதத்தை ஏற்றுக்கொண்டாலும்,  இத்தகைய வளர்ச்சி இழப்பு தவிர்த்திருக்கக்கூடியதே என்பதையும் ஏற்கத்தான் வேண்டும்.

ஏமாற்றங்களுக்கான பதில்களும், ஆறுதல் அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறுமா என்கிற எதிர்பார்ப்பே தற்போது நிலவுகிறது.


கட்டுரையாளர்: எம்.ஜே.வாசுதேவன் 


* * * * * * * * * *


லகின் தலைசிறந்த இலக்கியப்படைப்புகளில் ஒன்றாக கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் ஃபிரெஞ்ச் நாவல் 'கேண்டீட்' தற்போது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. மனதில் தோன்றும் உளவியல் போராட்டங்களை தத்துவார்த்தமாக விளக்கும் கதைமாந்தர்கள் உலவும் நாவல். இந்தளவிற்கு உளவியல் ரீதியாக கதையை நகர்த்தும் புதினங்கள் அதிகம் இல்லை என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட 250 ஆண்டுகளாக இலக்கிய பொக்கிஷமாகத் திகழும் இந்த நாவலைப் பற்றிய சிறு அறிமுகம் இது.

'கேண்டீட்' 





9 கருத்துகள்

  1. வேதனை
    வளர்ச்சி என்னும் பெயரால் தளர்ச்சி

    பதிலளிநீக்கு
  2. இன்னும் குறையும்... அப்போதாவது மாற்றம் வரட்டும்...

    பதிலளிநீக்கு
  3. இப்போதைய வளர்ச்சியில் தொய்வு வேதனைதான். எனினும் ஒரு அளவிற்கு மேல் குறைந்திட முடியாது என்று நம்புவதால் அப்படி ஏற்படும் போது மீண்டும் மேலெழுப்பிட அரசு முனைந்திடத்தான் வேண்டும்..எனவே பட்ஜெட்டில் அதற்கான வழிமுறைகள் இருக்கும் என்று நம்பி எதிர்பார்ப்போம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. தாமதமான வருகைக்கு மன்னிக்க. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது அறிந்து வருத்தமே. இது வலிந்து திணிக்கப்பட்டது என்பதை அறியும் போது தான் கோபம் வருகிறது. பயனுள்ள செய்திகள். நன்றி செந்தில்!

    பதிலளிநீக்கு
  5. கேண்டிட் புத்தகம் பற்றிய அறிமுகவுரை கேட்டேன். நன்றாயிருந்தது. அவசியம் வாங்கி வாசிப்பேன்.

    பதிலளிநீக்கு
  6. பயனுள்ள பகிர்வு. நூல் அறிமுகம் நன்று.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை