ராணுவ ஒழுங்குடன் நடக்கும் புரட்சி
ராத்திரியிலும் அயராது தொடரும் அறப்போர்
'ஆகாவென்று எழுந்தது பார் யுக புரட்சி' என்கிற கவிஞனின் வார்த்தைகள் தமிழகத்தில் தற்போது மெய்யாகி நிற்பதை பார்க்க முடிகிறது. ஒட்டு மொத்த தமிழகமும் குறிப்பாக, மாணவர்களும் ஜல்லிக் கட்டுக்கு எதிரான தடையை நீக்கக்கோரி தொடர்ந்தும் அறவழியில் போராட்டங்களை நடத்தி வருவது அகில இந்தியாவின் கவனத்தை மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அரசியல் கட்சிகள், மற்ற பிற அமைப்புகள் என யாருடைய தூண்டுதலும் இன்றி தன்னிச்சையாக சமூக வலைத்தளங்களின் மூலமாக மாணவர்களிடத்திலே எழுந்துள்ள இந்த எழுச்சி தமிழகத்தின் 7 கோடி தமிழர்களின் உணர்வுகளையும் ஒருசேர வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதை யாரும் மறுக்க இயலாது.
ஜல்லிக்கட்டுக்கு தடை, அதற்கு எதிரான போராட்டம் என்கிற அளவில் மட்டும் இதனை எடுத்துக் கொண்டுவிட முடியாது. தன் இனத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக திரண்டுள்ள எழுச்சியாகவே இது பார்க்கப்படுகிறது. நாட்டு மாடுகள் இன ஒழிப்பு செய்யப்படுகின்றவோ என்கிற அச்சம் வெகு காலமாகவே எழுப்பப்பட்டு வந்துள்ள சூழலில், இனவிருத்திக்கு உதவக்கூடிய காளை இனங்களின் எண்ணிக்கையும் கடுகாக சிறுத்துப் போய்விட்ட பிறகு, தமிழர்தம் அடையாளத்தை மீட்டெடுக்கும் வரலாற்றுப் போராட்டமாகத்தான் இந்த மாணவர் புரட்சியை பார்க்க வேண்டும். நூற்றுக்கணக்கான காளை இனங்கள் இருந்த தமிழகத்தில் கைவிரல்களில் எண்ணிவிடும் அளவிற்கான இனங்களாக அவை சுருங்கிவிட்ட நிலையில், இது மேலும் தொடர் கதையாகிவிடக்கூடாது என்கிற சிந்தனை இந்த போராட்டத்தில் வெளிப்படுவதும் உண்மை.
ஏற்கெனவே ஆலம்பாடி இன மாடுகள் இனஒழிப்பு செய்யப்பட்டுவிட்ட நிலையில், இருக்கின்ற காங்கேயம், புளிக்குளம், மலைமாடுகள் இனங்களையாவது காப்பாற்ற வேண்டுமென்கிற விழிப்புணர்ச்சியும் இந்த போராட்டங்களில் தெரிவதை உணர முடிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, சமூகத்தை செல்லரிக்கச் செய்யும் பல்வேறு அவலங்கள் குறித்து அனைவரும் அறிந்திருந்த போதிலும், அவற்றிற்கு எதிராக ஒருங்கே குரல் கொடுக்க தயங்கி வந்த நிலையை இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் உடைத்துப் போட்டுவிட்டது. இது தமிழ்ச் சமுதாயத்திற்கும் நற்பலன்களையே அளிக்கும் என்பதையும் மறுக்க இயலாது. பின் பனிக்காலத்தின் கடும் குளிரையும் பொருட்படுத்தாது லட்சக்கணக்கான மாணவர்களும், பொதுமக்களும் இரவு முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதோடு, சுட்டெறிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது பகல் நேரத்திலும் சற்றும்குறையாத உற்சாகத்துடன் அதனைத் தொடர்வது என்பதும் தமிழக வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒன்றே என உறுதியாகக் கூறமுடியும்.
மக்களின் எழுச்சி, மத்திய மாநில அரசுகளை ஏதேனும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளதும் உண்மை. தற்போது முதல்வர் பன்னீர்செல்வம் இரண்டொரு நாளில் அவசரச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது முற்றிலும் வரவேற்கத்தக்கது.
இருந்தபோதும், தொடர்ந்த ஏமாற்றங்களால் சலித்துப்போயுள்ள போராட்டக்காரர்கள் அதனை ஏற்க மறுத்து வருவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இதுகாறும் எந்தவித சிறு சச்சரவும், சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் இல்லாத அளவிற்கு ராணுவக் கட்டுப்பாட்டுடன் இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் மாணவர்களின் போக்கு பாராட்டுக்குரியது. இளைய சமுதாயம் முதிர்ச்சி அடைந்த ஒரு சமுதாயமாகவே தோன்றுகின்ற நிலையில், இனி வரும் நாட்களிலும் சமூகத்தின் அவலங்களை களைந்து, சுயநலமில்லா சமூகத்தை நோக்கிய பயணத்தை இந்த இளைய பட்டாளம் தொடரும் என்கிற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதும் தற்போது தங்களது போராட்டத்தின் அடிப்படையிலான உணர்வுகள் புரிந்து கொள்ளப்பட்டுள்ள நிலையில் தமிழக முதல்வரின் வேண்டுகோளை மாணவர்கள் ஏற்பதே சிறப்பானதாக இருக்கும். ஆனால் அவசர சட்டம் வெளியான பின்னரே இது குறித்து முடிவெடுக்க இயலும் என்கிற நிலையை மாணவர்கள் எடுப்பார்கள் எனில் தங்களின் பிரதிநிதிகளாக ஒரு சிறிய குழுவை போராட்ட களத்திலே முன்னிறுத்தி விட்டு படிப்படியாக பின் வாங்குதல் நலம் பயக்கும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் பல நாட்களாக தொடரும் அற்புதமான அறவழி போராட்டதின் சமூக விரோதிகள் புகுந்து விடக்கூடிய வாய்ப்பை அறவே ஒழிக்க வேண்டியதும் அவசியம்.
* * * * * * * * * *
இந்திய மொழிகளில் ஜல்லிக்கட்டு கோஷம் போடும் மத்திய அரசுக் கல்லூரி மாணவர்கள். இந்தியாவின் 25 மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்கள் படிக்கும் கல்லூரி சென்னை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருக்கிறது. 'ராஜீவ் காந்தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் யூத் டெவலப்மெண்ட்' என்ற பெயர்கொண்ட அந்தக் கல்லூரியில் தமிழ் மாணவர்கள் குறைவு. வட மாநிலத்தவரே அதிகம். தமிழ் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் மற்ற மாநிலத்தவரும் கலந்து கொண்டார்கள். இவர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, மராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் கோஷமிட்டனர்.
இளம் மாணவர்கள் சமுதாயத்தின் ஒன்றுபட்ட உணர்வுபூர்வமான போராட்டங்களைப் பாராட்டி, பொறுப்புடன் அவர்களுக்கு தகுந்த சில அறிவுரைகளும் சொல்லியுள்ளது மிகவும் அழகாக உள்ளது. நிறைவாகக் காட்டியுள்ள காணொளியும் மனதுக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது. விரைவில் சுமுகமான தீர்வுகள் ஏற்படட்டும்.
பதிலளிநீக்குபகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...
பதிலளிநீக்குகாணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவிய
பதிலளிநீக்குதமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.
நல்ல தகவல்கள். நன்றி.
பதிலளிநீக்குசகோ எப்படி உங்கள் பதிவுகள் மிஸ் ஆகின?!! எங்கள் பெட்டிக்கும் வரவில்லை??!! ஜாமரா?!!!!!! நீங்கள் வாட்சப்பில் போடவில்லையா?
பதிலளிநீக்குமுடிந்த பிறகு வந்திருக்கிறோம்...
இந்தப் போராட்டம் ஜல்லிக்கட்டு என்பதை விட பல ஏமாற்றங்களால் அரசியல்வாதிகளிடம் நேரிட்டுப் போராட முடியாமல் அத்தனை ஏமாற்றங்களும் வெடித்த தங்கள் அதிருப்தியைக் காட்டிய போராட்டம் என்றும் சொல்லலாம்..மக்கள், இளைஞர்கள் விழித்துக் கொண்டார்கள். இனி மாற்றம் நிகழ வாய்ப்புண்டு என்றே தோன்றுகின்றது. பொருத்திருந்து பார்ப்போம்..
கீதா
கருத்துரையிடுக