• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  ஞாயிறு, ஜனவரி 29, 2017

  ஆன்லைன் வருமானம் சாத்தியம்தானா..? - 1


  அது என்னவோ தெரியவில்லை..!

  வலைப்பக்கத்தில் நான் எழுத ஆரம்பித்தப் பின் இணையம், கணினி சார்ந்த சந்தேகங்களை நிறைய பேர் என்னிடம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். சிலர் நேரிலும், பலர் தொலைபேசியிலும்.. 

  அவர்களிடம் எத்தனையோ முறை அதைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்லியிருக்கிறேன். ஆனாலும் திரும்ப திரும்ப கேட்கிறார்கள். தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு நமது வலைச்சித்தர் எண்ணை கொடுத்துவிடுவேன். மற்ற கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த விளக்கத்தைக் கொடுப்பேன்.


  இப்படி கேட்கப்படும் கேள்விகளில் அதிகமாக இடம்பெறுவது இணையத்தில் சம்பாதிக்க முடியுமா..? என்பதுதான். எனக்கும் அது தெரியவில்லை என்பேன். ஆனாலும் விடாமல் அதைப்பற்றி எழுதுங்களேன் என்பார்கள்.


  பலரும் நிறைய பணம் எல்லாம் வேண்டாம். நான் கணினியை தவணை முறையில் வாங்கியிருக்கிறேன் அதற்கான தவணைத் தொகையை அதிலிருந்தே சம்பாதிப்பது போல் ஏதாவது திட்டம் இருந்தால் சொல்லுங்கள் என்பார்கள்.

  சிலர் லட்சம் லட்சமாக பணம் கொட்டுமாமே என்று கேட்பார்கள். தொடர்ந்து வந்த இத்தகைய கேள்விகள் தான் என்னை ஆன்லைன் வருமானம் பற்றி தெரிந்துகொள்ளத் தூண்டியது. 

  அப்படி நுழைந்த போதுதான் இணைய உலகம் எத்தனை பிரமாண்டமானது. அங்கு எத்தனை எத்தனை தொழில்கள், எத்தனை வருமானங்கள் எல்லாம் மலைக்க வைத்துவிட்டன. அவற்றில் எது சரி எது தவறு என்று முடிவுக்கு வருவதற்குள்ளே தாவு தீர்ந்துவிட்டது. அத்தனை விஷயங்கள் அதற்குள் கொட்டிக் கிடக்கின்றன. 

  இதில் நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் ஆன்லைன் வருமானத்தில் 98 சதவீதம் போலியானவை என்பதுதான். இதில் சம்பாதிப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள், வேலை செய்தேன் பணம் வரவில்லை என்பார்கள். சிலர் பணம் கட்டி ஏமாந்து இருப்பார்கள். ஆனாலும் சிலர் வருமானம் ஈட்டுவதாக சொல்கிறார்களே என்று கேட்கலாம். வருமானம் ஈட்ட முடியும் என்பது உண்மை. ஆன்லைன் வருமானம் சாத்தியம்தான். 

  'வயிற்றில் பால் வார்த்தீர்கள். சொல்லுங்க சொல்லுங்க எப்படி சம்பாதிக்கணும்னு..? இத வச்சு ஒரு வீடு கட்டிடனும்!' 

  இப்படித்தான் பலரும் ஆன்லைன் என்றதும் அது எதோ பணம் காய்க்கும் மரம் என்று நினைத்து விடுகிறார்கள். அதற்கு காரணம் ஆன்லைன் விளம்பரங்கள் பலவும் மில்லினர், பில்லினர் என்றுதான் பேசுகின்றன. 'அப்போ அவ்வளவு வருமானம் வராதா?' என்று கேட்டால் வாய்ப்பிருக்கிறது. அதற்கான உழைப்பு மிக அதிகம். 

  ஒரு மாதம் முழுக்க வேலை செய்து 15 ஆயிரமோ 20 ஆயிரமோ சம்பளமாக பெறுகிறோம். ஆனால், ஆன்லைனில் மட்டும் உடனே பணம் கிடைக்க வேண்டும் என்றால் அது எப்படி முடியும்? ஆன்லைனிலும் கடுமையான உழைப்பிருந்தால் சாத்தியம். ஆனாலும் பெரும்பாலான ஆன்லைன் வருமானங்கள் பைசா கணக்கில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. அதனால் பொறுமை மிக அதிகம் இருக்க வேண்டும். 

  குழப்பமாக இருக்கிறதா..!

  பொறுமையாக புரிந்து படித்தால் குழப்பம் என்பதே இருக்காது. ஆன்லைன் வருமானம் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது 'டேட்டா என்ட்ரி' வேலைதான். ஒரு காலத்தில் கோலோச்சிய இந்த வேலை இன்று அவுட் ஆப் பேஷனாக மாறிவிட்டது. இந்த வேலையின் கடுமையான அழுத்தம் பலரை இந்த வேலையின் பெயரை சொன்னாலே பயப்படும் அளவுக்கு செய்திருக்கிறது. ஆனால் இன்றைக்கும் இதில் சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள்.

  இப்போது விஷயத்துக்கு வருவோம். ஆன்லைனில் நமது திறமைக்கு ஏற்ற வேலைகள் இருக்கின்றன. பள்ளிப் படிப்பை முடித்தவர்களைவிட கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சம்பளம் சற்று கூடுதலாக கிடைப்பதுபோல் ஆன்லைனில் ஆங்கில மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றவர்கள் அதிகம் சம்பாதிக்க முடியும். உடனடியாக வருமானம் ஈட்டலாம். ஓரளவு ஆங்கிலம் தெரிந்தவர்கள் நீண்ட நாட்கள் விடாமுயற்சி மூலம் நல்ல சம்பாத்தியம் பெற முடியும்.


  ஆன்லைன் வேலையில் தவிர்க்க வேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றன. ஒரு நாளைக்கு 100 டாலர் 200 டாலர் என்று வருமானம் ஈட்டலாம் என்று வரும் வேலைகளை தவிர்த்து விடுங்கள். அது உடனடியாக முடியாது. அந்த நிலையை அடைய பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். இப்படி ஆசை வார்த்தை காட்டும் விளம்பரங்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட தொகையை பணமாக செலுத்தி இந்த வேலையில் சேர சொல்லும். ஆன்லைனில் பணம் கேட்கும் நிறுவனங்கள் நம்பிக்கையற்ற நிறுவனங்களாகவே இருக்கின்றன. இலவசமாக கிடைக்கும் வேலைகளை மட்டுமே கையில் எடுத்துக் கொள்ளுங்கள். எந்த சூழலிலும் உங்கள் பணத்தை செலவு செய்து ஒரு வேலையை எடுக்காதீர்கள்.

  சரி, இப்போது யார் யார் எப்படிப்பட்ட வேலைகளை செய்யலாம் என்று கொஞ்சம் பார்ப்போம்.

  ஆங்கில மொழியில் நல்ல தேர்ச்சி கொண்டவர்கள் ஆன்லைன் சர்வே, ஆன்லைன் மைக்ரோ டாஸ்கிங், போன்றவற்றை செய்யலாம். இதற்கு அந்தந்த வேலையைப் பொறுத்து ஒரு சர்வேக்கு $ 0.5 முதல் $ 5.0 வருமானம் பெறலாம். இது உடனடி சம்பாத்திய முறையும் கூட.

  ஆங்கிலத்தில் லேசான தேர்ச்சி உள்ளவர்களுக்கு நிறைய வேலைகள் கொட்டிக்கிடக்கின்றன. அவர்கள் விளம்பரம் பார்ப்பதன் மூலம், கேப்சா டைப் செய்வதன் மூலம் வருமானம் பார்க்கலாம். இதற்கு ஆங்கில அறிவு தேவையில்லை.

  இந்த தொடரில் எனக்கு தெரிந்த சில நம்பகமான சரியாக பணம் தரக்கூடிய சில வகை ஆன்லைன் வருமான முறைகளை சொல்கிறேன். இதன் மூலம் பலரும் பல வருடங்கள் வருமானம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவற்றில் எது உங்களுக்கு ஏற்றதாக இருக்கிறதோ அதனை செய்யலாம்.

  முதலில் ஒரு வருமானத்தை பற்றி பார்ப்போம்.

  இதற்கு உங்களிடம் ஆதார் அடையாள அட்டை இருக்க வேண்டும். வங்கி கணக்கு இருக்க வேண்டும். வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இணைய வசதி கொண்ட கணினி அல்லது ஸ்மார்ட் மொபைல் வேண்டும். இவற்றையெல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் அடுத்தப் பதிவில் அதில் வருமானம் பார்ப்போம்.

  இப்படி அவ்வப்போது ஆன்லைன் வருமானம் பற்றி இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

  - மேலும் சம்பாதிப்போம்
  12 கருத்துகள்:

  1. தெளிவான பதில்கள். அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்

   பதிலளிநீக்கு
  2. தெளிவான பதில்கள். அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்

   பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு நண்பரே/சகோ தொடருங்கள்..

   கீதா: சகோ ஒரு சில மொழிபெயர்ப்பு வேலைகள் பயன் தரக் கூடியவை. தமிழிலும், ஆங்கிலத்திலும் நல்ல புலமை இருந்தால் மொழிபெயர்ப்பு வேலைகளைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் நீங்கள் சொல்லுவது போல் நம்பத்தகுந்தவையாக இருக்க வேண்டும். நமது வலைப்பதிவர் அபயா அருணா அவர்கள் ஜப்பானிய மொழி கற்றிருப்பதால் அவர்கள் அவ்வப்போது மொழிபெயர்ப்பு வேலை செய்து வருகிறார்கள். அது போன்று சில டெக்னிகல் வேலைகள் இருக்கின்றனதான். ஆன்லைனில் கற்றுக் கொடுக்கும் வேலை, ப்ராஜக்ட் செய்து கொடுக்கும் வேலை என்று ஆனால் எல்லாமே மிகவும் கவனமாக அணுக வேண்டியவை, நீங்கள் சொல்லியிருப்பது போல். ஆன்லைனில் அதாவது ஸ்கைப் மூலம் (பிற நாட்டுக் குழந்தைகளுக்கு) ஆங்கிலம், கணக்கு, அறிவியல் பாடங்கள் எடுக்கலாம் ஆனால் அவர்கள் மொழி உச்சரிப்பு புரிய வேண்டும். அது போன்று பாட்டு கற்றுக் கொடுக்கலாம். இங்கு சென்னையில் ஒரு சிலர் ஸ்கைப் மூலம் வெளிநாட்டிலிருக்கும் நம் குழ்னதைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கிறார்கள். இதற்கு இணைப்பு சரியாக வேலை செய்தால் நல்ல வருமானம் உண்டு. நீங்கள் தேடி ஆராய்ந்து கண்டதையும் அறிய காத்திருக்கிறோம். தொடர்கிறோம் சகோ நல்ல பதிவு. பலருக்கும் பயனுள்ளது.

   பதிலளிநீக்கு
  4. நல்ல தகவல்கள்... மேலும் தகவல்களுக்கு காத்திருக்கிறேன்.

   பதிலளிநீக்கு
  5. எனது அனுபவத்தில் : வேண்டவே வேண்டாம்... வியர்வை சிந்த செய்யும் வேறு எந்த தொழிலும், உடலுக்கும் மனதிற்கும் நல்லது...

   கவனிக்க : கைபேசியில் உங்கள் தளம் காணும் போது ( clix sense ) விளம்பரம் வருகிறது...

   பதிலளிநீக்கு
  6. காத்திருகிறேன்! சம்பாதிக்க அல்ல! தெரிந்து கொள்ள!

   பதிலளிநீக்கு
  7. பயனுள்ள தகவல்
   அறிந்து கொள்ளக் காத்திருக்கிறேன் நண்பேரே

   பதிலளிநீக்கு
  8. உங்களிடமிருந்து வந்த ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு.

   பதிலளிநீக்கு
  9. அடடே நீங்களே இது பற்றி எழுதத் தொடங்கி விட்டீர்களா! அருமை!

   எனக்கும் இதில் நிறைய ஆர்வம் உண்டு. இது பற்றி நிறையப் படிக்கவும் செய்திருக்கிறேன். ஆனால், இன்னும் முழுமையாக இறங்கிப் பார்க்கவில்லை. அதற்குள் ஏதாவது நல்ல வேலை கிடைத்து விடுகிறது! என்ன செய்ய! ;-)

   பதிலளிநீக்கு
  10. பயனுள்ள தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்