• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  சனி, ஜனவரி 14, 2017

  வறுமைக்கோட்டை எப்படி கணக்கிடுகிறார்கள்?


  றுமைக்கோடு என்கிற வார்த்தை பொருளாதார நிபுணர்களின் பேச்சில் அடிக்கடி அடிபடும் ஒன்று. வறுமைக்கோடு என்றால் என்ன? எதை வைத்து அதனைக் கணக்கிடுகிறார்கள் என்று ஆராய்ந்தால்.. அது உணவை அடிப்படையாக கொண்டது.

  உணவின் மூலம் கிடைக்கும் 'கலோரி'யைக் கொண்டே கணக்கிடுகிறார்கள். ஒரு மனிதன் நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடன் வாழத் தேவைப்படும் குறைந்தபட்ச கலோரியின் அளவு வறுமைக்கோடு என்று அழைக்கப்படுகிறது. தன் உணவின் மூலம் இந்த அளவு கலோரியைப் பெறுவதற்கு ஒரு தனி மனிதனின் வருமானம் போதுமானதாக இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அவர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவராக கருதப்படுவார்.


  பொதுவாக வறுமைக்கோட்டிற்கு அருகாமையில் வாழும் மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள், வயது, தொழில், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் வறுமைக்கோடு அமையும். நகரத்திற்கும் கிராமத்திற்கும் தனித்தனியே இது கணிக்கப்படுகிறது. வறுமைக்கோட்டைக் கணக்கிடுவதற்காகவே 'இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் சத்துணவுக் குழு' என்று தனியாக இயங்கி வருகிறது. இந்தக் குழுதான் வறுமைக்கோட்டை நிர்ணயம் செய்கிறது. இந்தக் குழுவின் கணிப்புப்படி ஒரு மனிதன் நலமுடன் வாழ ஒரு நாளைக்கு நகர மக்களுக்கு 2100 கலோரியும், கிராம மக்களுக்கு 2400 கலோரியும் தேவைப்படுகிறது. 


  இந்த வறுமைக்கோட்டையும் இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். ஒன்று 'சராசரி அளவு'. இதுதான் பெரும்பாலும் நாம் வறுமைக்கோட்டை குறிப்பிடும் அளவுகோல். இது ஆரோக்கியமான வாழ்வு இல்லாதவர்களைக் குறிக்கும். இரண்டாவது வகை குறைந்தபட்ச அளவு. இதனை 'கடுமையான வறுமைக்கோடு' என்கிறார்கள். இது ஒருவர் உயிர் வாழ போதுமான கலோரியின் அளவை மட்டுமே குறிக்கிறது. இந்தக் கலோரி கிடைக்கவில்லை என்றால் அந்த மனிதன் இறந்து விடுவான். 

  மக்களின் வாழ்க்கைத்தரத்தை நமக்குப் பெரிதும் உணர்த்துவது தனி மனித வருமானமே. அத்தகைய தனி மனித வருமானம் தமிழகத்தில் மகிழ்ச்சி தரும் நிலையில் இல்லை. 1960-க்குப்பின் இது தொடர்ந்து இந்தியாவின் சராசரியை விட குறைவாகவே இருந்து வருகிறது. அதனாலே இங்கு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை இந்திய சராசரியை விட அதிகம் இருக்கிறது. இதிலும் நகரத்தில் 31 சதவீதத்தினர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள். இதுவே கிராமத்தில் 44 சதவீதத்தினர் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள். 

  கிராமங்களில் நிலமற்ற தொழிலாளர்கள் மத்தியிலும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் மத்தியிலும் வறுமை அதிகமாக நிலவுகிறது. நகர மக்களை பொறுத்தவரை கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழிலில் ஈடுபடுவோர்கள் மத்தியிலும் இது மிகுதியாக இருக்கிறது. 


  உலக வங்கியின் கணக்குப்படி ஒரு நாளைக்கு 1.90 அமெரிக்க டாலர்களுக்கு குறைவாக வருமானம் பெரும் அனைவரும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளவர்களே. அந்தக் கணக்கின்படி உலகில் 90 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளவர்களாக அறிவித்துள்ளது. இதில் 70 கோடி மக்கள் கடுமையான வறுமைக்கோட்டுக்கு கீழேயிருக்கிறார்கள். அதாவது தினமும் மரணத்தோடு போராடி செத்து செத்துப் பிழைப்பவர்கள். 

  ஒருவேளை இன்றைக்கு அவ்வையார் இருந்திருந்தால் 'கொடிது கொடிது வறுமைக்கோடு கொடிது, அதனினும் கொடிது கடுமையான வறுமைக்கோடு' என்று பாடியிருப்பாரோ..!
  17 கருத்துகள்:

  1. வறுமைக்கோடு பற்றி ஆச்சர்யமான பல தகவல்கள் .... பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
  2. 1960-க்கு முன் தமிழகத்தின் பொற்காலம்...?

   விளக்கத்திற்கு நன்றி தோழர்...

   பதிலளிநீக்கு
  3. அன்பிற்கினிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

   பதிலளிநீக்கு
  4. வறுமைக்கோட்டை பற்றி பல புதிய புரிதல்கள் கிடைத்தன. நன்றி.

   பதிலளிநீக்கு
  5. வேதனையான புள்ளிவிவரங்கள்! இல்லையா?!

   கீதா: மீண்டும் கற்ற பொருளாதாரப் பாடத்தை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி சகோ!

   பொங்கல் வாழ்த்துக்கள்!

   பதிலளிநீக்கு
  6. அருமையான கண்ணோட்டம்

   வறுமை ஒழிப்பு
   எப்பதான் முடிவுக்கு வருமோ...?

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்