• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வியாழன், ஜனவரி 12, 2017

  வரிஇணக்கம் இல்லா சமூகமா.. விழிபிதுங்க வரி நெருக்கும் சமூகமா..!


  ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைகளின் வெற்றி தோல்வி பற்றிய தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுவதை தவிர்க்க இயலாது. இந்நிலையில், ரூபாய் மதிப்பிழப்பு அறிவிப்பின் கீழ் வங்கி பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் எனவும், அதன் மூலம் நேர்மறை பொருளாதார சூழல் மேம்படும் என்றும் தொடர்ந்தும் கருத்து தெரிவித்து வரும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தற்பொழுது இன்னொரு முக்கியமான கருத்தை பதிவு செய்துள்ளார். அது நிச்சயம் சர்ச்சைக்கிடமானதே.
  அதாவது, வரி செலுத்துவதைப் பொறுத்த வரையில் வரி இணக்கம் இல்லாத சமூகமாக நாம் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வரி செலுத்துவதை தவிர்க்க விரும்புவர்கள் நாம் என்கிற அர்த்தமே அதற்கு.  125 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாட்டில் மூன்று கோடி பேர் மட்டுமே வருமான வரி படிவங்களை தாக்கல் செய்கிறார்கள் என்பதும், அதிலும் குறிப்பாக மக்கள் தொகை 1 சதவிகிதம் அளவிற்கு கிட்டத் தட்ட 1.25 கோடி பேர் மட்டுமே உண்மையில் வருமான வரி செலுத்துகிறார்கள் என்பதும் புள்ளி விவரங்கள் சொல்லும் செய்தி.

  இந்த செய்தியின் அடிப்படையிலும், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு மொத்த உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் அதாவது 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் நிழல் பொருளாதாரத்தைச் சேர்ந்தது என்பதையும் கணக்கில் எடுத்து பார்த் தால், நிதியமைச்சரின் குற்றச்சாட்டில் நியாயம் இருப்பது புலப்படும். ஆனால், பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக வரி நெருக்கடிகளால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விழி பிதுங்கும் மக்கள் தொகையும் இங்கு அதிகம் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

  உதாரணமாக பெட்ரோல் உற்பத்தி விலை லிட்டருக்கு ரூ.31.54 என்கிற நிலையில், அதன் விற்பனை விலையோ ரூ.70.60 என்பதை கணக்கில் கொண்டால் வரி 55 சதவிகிதமாகும். அதேபோல் ரூ.30.34வுக்கு உற்பத்தியாகும் 1 லிட்டர் டீசல் ரூ.57.82வுக்கு விற்கப்படுவது 45 சதவிகித வரியைக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல், வீட்டு உபயோகப் பொருட்கள், இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் போன்றவற்றிற்கான பல்வேறு வரிகளும் 30 சதவிகிதம் வரையிலும் விதிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக ஹோட்டல்களில் சாப்பிடும் உணவுக்கும்கூட சேவை வரி செலுத்தி வருகிறோம். 1994ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சேவை வரி, இன்றைக்கு அரசுக்கு மிகப்பெரும் அளவில் வருவாய் தரும் வரியாக விளங்கி வருவதும் கண்கூடு.

  கடந்த ஆண்டில் மட்டுமே கிட்டத்தட்ட ரூ.2.20 லட்சம் கோடி சேவை வரியாக வசூலிக்கப் பட்டதாக தெரிய வந்துள்ளது. ஒட்டு மொத்தமாக 25 விதமான வரிகள் விதிக்கப்படுவதாக சொல்லப்படுவதுண்டு. சமூக வலைதளங்களிலும் இந்திய வரிச்சுமை பற்றிய விமர்சனங்கள் அவ்வப்போது வைரல் ஆவதுண்டு. வர்த்தகம் செய்வதற்கு தொழில்முறை வரி, பொருட்கள் விற்பனைக்கு விற்பனை வரி, வெளிமாநிலங்களிலிருந்து பொருட்கள் தருவித்தால் சென்டரல் எக்ஸைஸ் வரி, கஸ்டம்ஸ் , ஆக்ட்ராய் வரிகள், பொருட்களை விற்று லாபம் இருப்பின் வருமான வரி, லாபத்தைப் பிரிப்பதனால் டிவிடண்ட் விநியோக வரி, பொருட்கள் உற்பத்திக்கு தொழிற்சாலை எக்ஸைஸ் வரி, அலுவலகங்களுக்கு நகராட்சி வரி, பணியாளர்களுக்கு தொழில்முறை வரி, சேவைகளுக்கு சேவை வரி, பொழுதுபோக்கிற்கு பொழுதுபோக்கு வரி, வீடு வாங்கினால் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணங்கள், வரி செலுத்த தாமதமாயின் வட்டி மற்றும் பெனால்டி என சமூக வலை தளங்களில் இந்தியாவின் வரிச் சுமை பற்றி வேடிக்கையாக பகிரப்படுவதுண்டு.

  அதாவது நேர்முக, மறைமுக வரிவிதிப்பு மிகப்பெரும் எடுப்பில் இந்தியாவில் விதிக்கப்படுவது கண்கூடான உண்மை.  இவ்வளவிற்குப் பிறகும், வரி இணக்கம் இல்லாத சமூகம் என்று இந்திய சமூகத்தை அழைக்க முடியுமா என்கிற கேள்விக்கு நிதியமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும். அதேநேரம், வரி ஏய்ப்பைத் தடுக்கும் இணக்கமான, மிக எளிமையான நடைமுறைகள் கொண்ட வரி கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும், லஞ்ச ஊழல்களை மிகப்பெரும் அளவிற்கு கட்டுப்படுத்துவதன் மூலமும் நாட்டின் வரிக்கட்டமைப்பின்கீழ் வருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமே அன்றி, ஏற்கெனவே பலமுனைகளிலும் வரி செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் ஒரு சமூகத்தை வரி இணக்கம் இல்லா சமூகம் என்று குற்றம் சாட்டுவது நியாயமாகாது என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கும்.

  இருந்தபோதும், இந்தியா போன்ற பரந்துபட்ட, ஏழ்மை இன்னமும் முற்றிலும் ஒழிக்க முடியாத  நாட்டில் பெருவாரியான மக்களை வரி கட்ட மைப்பின்கீழ் கொண்டுவர வேண்டியது மிக மிக அவசியம் என்பதையும் மறுக்க இயலாது. எளிதாக செலுத்தத்தக்க மிகக்குறைந்த வரி விதிப்பு நடைமுறைகள் ஒட்டுமொத்த வெற்றியை வழங்கத்தக்கதாக அமையும் என்பது மட்டும் நிச்சயம்.

  கட்டுரையாளர்: எம்.ஜே. வாசுதேவன்   

  6 கருத்துகள்:

  1. வாங்கும் வரியை சரியான படி மக்கள்சேவையில் பயன்பட வேண்டும்.மக்களுக்கும் சரியான படி புரியவைக்கப்பட வேண்டும், எல்லா வரியும் அறவிட்டு விட்டு வசதிகளை பெருக்காமல் அதே நிலையில் இருந்தால் கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு எனவும் புரிந்திட வேண்டும். இப்படி பல வேண்டுங்கள் உண்டெனும் உண்மை எவருக்கு புரியும்.

   பதிலளிநீக்கு

  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு
  3. சரிதான் சகோ! ஆனால் நம்மிடம் வாங்கிய வரியை ஒழுங்காக மக்கள் நலனிற்காகச் செலவு செய்கிறார்களா? அதிலும் எவ்வளவு ஊழல்கள்? சேவை வரி அனைத்தும் அரசிற்கா செல்லுகிறது? தனியார்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் செல்லுகிறதே!!

   நம் செலவுகள் அனைத்தும் வங்கிக் கணக்கிற்குள் வர வேண்டும் கணக்கில் வர வேண்டும் என்று சொல்வதை நாம் (பெரும்பான்மையானோர் - நடுத்தரவர்கத்து மக்கள்) நேர்மையாக வர வேற்கிறோம் இல்லையா? நமது கணக்கை அரசாங்கம் அறியும் போது, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசும், மாநில அரசும் (அந்தந்த மாநிலங்களுக்கு) நமக்கு என்ன செலவு செய்தன, அரசு கஜானாவிற்கு என்ன வரவு என்று மக்களிடம் நேர்மையாகக் கணக்கைக் காட்ட வேண்டும் தானே? என்ன நான் சொல்லுவது சரியா இல்லையா? இதை நான் வெளியிடாத பதிவில் எழுதியிருந்த கருத்து!!!!

   கீதா

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்