சனி, ஜூன் 27, 2015

கர்ப்பப்பையை காப்பாற்றுங்கள்..!


டுத்தர வயதுள்ள 10 பெண்களை எடுத்துக்கொண்டால், அதில் இருவருக்கு கர்ப்பப்பை எடுக்கப்பட்டிருக்கும். மேலும் இருவர் அதை எடுத்துவிடும் முடிவில் இருப்பார்கள். 

மனித உடலில் வேறு எந்தவொரு உறுப்பையும் இவ்வளவு சாதரணமாக யாரும் தூக்கி எறிந்து விடுவதில்லை. 

ஆனால், பெண்களைப் பொறுத்தவரை குழந்தை பிறக்கும் வரைதான் அது முக்கியமான ஒன்று. அதன்பின் அது அவர்களுக்கு தொந்தரவும் பிரச்னையும் தரும் ஒரு அங்கமாகத்தான் இருக்கிறது. அதனால்தான் கர்ப்பப்பையை எடுத்ததை பெருமையான விஷயமாக பல பெண்களும் வெளியில் சொல்லிக்கொள்கிறார்கள்.

இந்த பெருமையான கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் அந்த பெண்களுக்கு நெடு நாட்கள் நீடிப்பதில்லை என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை என்கிறார் கர்ப்பப்பை அகற்றப்பட்ட 200 பெண்களை ஆய்வு செய்த அமிர்தம்.

மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் படிக்கும் போது ஆய்வு பட்டத்துக்காக இந்த சப்ஜெட்டை கையில் எடுத்தார், அமிர்தம். அப்போதுதான் கர்ப்பப்பையை இழந்த பெண்களின் துயரம் அவருக்கு புரிந்தது. 

அன்று முதல் தேவையில்லாமல் கர்ப்பப்பையை அகற்றும் பெண்களின் அறியாமையை போக்குவதையே தனது நோக்கமாகக் கொண்டார். இதற்காக கிராமங்கள் தோறும் முகாம்களை அமைத்து பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரை சந்தித்த போது...

"இன்று ஒன்றுமில்லாத காரணத்திற்காக கர்ப்பப்பையை அகற்றும்  பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இது வேதனையான விஷயம். 

கர்ப்பப்பையை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000-ல் இருந்து 50,000 வரை செலவாகிறது. இவ்வளவு செலவு செய்தும் பல பெண்கள் நிம்மதியின்றி தவிக்கிறார்கள். காரணம் அவர்களில் 65 சதவிகிதம் பெண்கள் கர்ப்பப்பையை அகற்றப்படமலேயே சரி செய்யக்கூடிய நிலையில் உள்ளவர்கள் என்பதுதான். 

கர்ப்பப்பையை எடுத்தால்தான் உயிர் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் மட்டுமே அதை எடுக்க வேண்டும். (உதாரணமாக கர்ப்பப்பை புற்றுநோயை சொல்லலாம்) இல்லையென்றால் எடுக்கக் கூடாது. நிறைய பெண்கள் வயிற்றுவலி, அதிக உதிரப்போக்கு, நீர்க்கட்டி போன்றவற்றிற்கு கூட எடுத்துவிடுகிறார்கள்.      

இவற்றையெல்லாம் விட பெரிய கொடுமை, ஜாதகம்..! வயிற்றில் கத்தி பட வேண்டும் என்று ஜாதகத்தில் உள்ளது, அதற்காக எடுத்து விட்டோம் என்பார்கள். எவ்வளவு கொடுமை! பெண்களுக்கு அவ்வளவு இம்சையையா கொடுக்கிறது உயிரை உருவாக்கும் புனிதமான அந்த கர்ப்பப்பை.


ஒருபோதும் இல்லை. மாறாக, கர்ப்பப்பையை எடுத்தவர்களில் 60 சதவிதத்தினர் நிரந்தர நோயாளிகளாக மாறியிருக்கிறார்கள். தாங்க முடியாத தலைவலி, தூக்கமின்மை, போன்ற பல நோய்கள் அவர்களை எளிதில் தாக்குகிறது. பல பெண்கள் தங்கள் பெண்மையைத் தொலைத்து விட்டோமே என்ற மனநல பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்." என்கிறார் அமிர்தம். 

இதை ஆமோதிக்கும் விதமாக ஒத்தக்கடையை சேர்ந்த லிங்குசாமியும் அவரது மனைவி அழகுராணியும் தொடர்கிறார்கள். 

"உண்மைதான், என்னுடைய அம்மா, இரண்டு அக்காக்கள் என்று மூன்று பேருமே கர்ப்பப்பையை எடுத்தவர்கள் தான். அதனால் அவர்கள் பட்ட துயரங்களையும் கஷ்டங்களையும் நேரடியாக பார்த்திருக்கிறேன். கர்ப்பப்பை இருந்த போது அவர்களிடம் இருந்த சுறுசுறுப்பும் துள்ளலும் எடுத்த பின் அவர்களிடம் சுத்தமாக காணாமல் போய் விட்டது. எப்போதும் சோர்வாகவே காணப்பட்டார்கள். அவர்களின் ஹீமோகுளோபின் குறைந்து கொண்டே வந்தது. தொடர்ந்து மாத்திரை மருந்து எடுத்தும் குணமாகவில்லை. 

அவர்களால் தண்ணீர் குடத்தை தூக்க முடியாது. கொஞ்சம் தூரம் கூட நடக்க முடியாது. எதிப்பு சக்தியும் குறைந்தது. எப்போதும் நோயோடு வாழ்பவர்களாகவே அவர்கள் இருந்தார்கள். 

இதையெல்லாம் நேரடியாக பார்த்ததால்தான் என் மனைவிக்கு கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, அதை தவிர்த்தேன். மாற்று மருத்துவத்திற்கு மாறினேன். இன்று என் மனைவி கர்ப்பப்பையுடன் ஆரோக்கியமாக இருக்கிறார்." என்று கூறுகிறார். 

லிங்குசாமியின் மனைவி அழகுராணியிடம் பேசிய போது, "எனக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் பிறந்த சில நாட்களிலேயே என்னுடைய ஃபெலோபியன் டியூப்பில் கட்டி இருக்கிறது என்று டாக்டர்கள் சொன்னார்கள். ஆபரேஷன் மூலம் அதை சரி செய்தோம். 

மறுபடியும் அடுத்த பக்கத்தில் இருக்கும் மற்றொரு டியூப்பில் கட்டி இருப்பதாக சொன்னார்கள். இந்த கட்டி தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கும். இதற்கு தீர்வு, கர்ப்பப்பையை எடுத்துவிடுவதுதான் என்றும் சொன்னார்கள். 

கர்ப்பப்பையை எடுத்துவிட்டு தினம் தினம் செத்துப் பிழைக்கும் எனது மாமியார் மற்றும் மதினிமார்களின் அனுபவங்களை கேட்டபின் எனது கர்ப்பப்பையை இழக்க நான் விரும்பவில்லை. எனது கணவருக்கும் அதில் உடன்பாடில்லை. 

அதனால் கட்டியை கரைக்க தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்டேன். எந்தப் பலனும் இல்லை. வயிறு ஊத்தம் கொடுத்தது. கை, கால்களில் எல்லாம் தாங்க முடியாத வலி இருந்து கொண்டே இருந்தது. பீரியட்ஸும் சரியாக இல்லை. பசி எடுக்கவில்லை. 

யாரைப் பார்த்தாலும் எரிச்சலும் கோபமும் வந்தது. அப்போதுதான் ஆங்கில மருத்துவத்தில் இருந்து விலகி வந்தோம். மாற்று மருத்துவத்தில் இதற்கான தீர்வு இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம். அக்குபங்க்சர் மருத்துவம் எடுத்துக் கொண்டேன். பூரணமாக குணமானது. 

இப்போது ஐந்து வருடம் கடந்தும் ஆரோக்கியமாக இருக்கிறேன். எல்லா தொந்தரவுகளும் சரியாகிவிட்டது. கட்டியும் கரைந்து விட்டது. என் கர்ப்பப்பையை இழக்காமலே என் ஆரோக்கியத்தை மீட்டுவிட்டேன்." என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் அழகுராணி. 

"அவசரப்பட்டு எடுத்திருந்தால் அழகுராணியும் ஒரு நிரந்தர நோயாளியாக மாறியிருப்பார். எங்களிடம் ஆலோசனைக்கு வரும் பெண்களிடம் உயிருக்கு ஆபத்து இருக்கும் பெண்களை தவிர மற்ற பெண்களை சித்தா, அக்குபங்க்சர், ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவத்தை முயற்சி செய்து பார்க்க சொன்னோம். நல்ல பலன் கிடைத்தது. இப்போது அனைவருமே நன்றாக இருக்கிறார்கள். 

கர்ப்பப்பை பாதிப்புகளில் சில வெறும் கால்சியம் மாத்திரைக்கு கூட சரியாகிவிடும் தன்மை கொண்டது. ஆனால், பணத்திற்கு ஆசைப்பட்டு பல மருத்துவர்கள் ஒன்றும் இல்லாத காரணத்துக்கு கூட கர்ப்பப்பையை எடுத்துவிடுகிறார்கள். 

ஒரு சாதாரண புடவை எடுப்பதற்கே ஐந்தாறு கடைகள் ஏறி இறங்கும் பெண்கள், தங்கள் உடலின் ஒரு பகுதியான பெண்மைக்கு மிக முக்கியமான கர்ப்பப்பை விஷயத்தில் அலட்சியமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. 

கர்ப்பப்பை அலட்சியமான ஒன்றல்ல, அதை எடுக்க வேண்டும் என்று ஒரு டாக்டர் சொன்னால், சரியென்று சொல்லிவிடாதீர்கள். இரண்டு, மூன்று டாக்டர்களிடம் ஆலோசனை கேளுங்கள். 

தனியார் மருத்துவர்களை விட அரசு மருத்துவமனையில் ஆலோசனை பெறுவது நல்லது. ஏனென்றால், அங்கு வர்த்தக நோக்கம் இருக்காது. அனைத்து டாக்டர்களும் ஒரே முடிவை சொன்னால் மட்டுமே கர்ப்பப்பையை அகற்ற வேண்டும். அதுதான் பெண்ணுக்கும் பெண்மைக்கும் நல்லது." என்று தீர்க்கமாக சொல்லி முடிக்கிறார், அமிர்தம்.

குழந்தையைப் பெற்றுத் தருவதோடு கர்ப்பப்பையின் வேலை முடிந்துவிடுவதில்லை. பெண்மையை வளப்படுத்துவதிலும் அது முக்கியப் பங்கு வகுக்கிறது. அதை பெண்கள் புரிந்து கொண்டு, பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.    
வியாழன், ஜூன் 25, 2015

ராமக்கல் மெட்டு - கோடையிலும் நடு நடுங்க வைக்கும் குளிர்


குலும்பன், குலும்பி தம்பதி
ட்ஜெட் சுற்றுலாவுக்கும், ஒரு நாள் பிக்னிக்கிற்கும் ஏற்ற இடம் ராமக்கல் மெட்டு. வருடம் முழுவதும் நடு நடுங்க வைக்கும் குளிர்தான் இதன் சிறப்பு.

தமிழ்நாடு - கேரளா வன எல்லைக்குள் கேரளா பகுதியில் அமைந்துள்ள மிக உயர்ந்த முகடுதான் ராமக்கல் மெட்டு. தேக்கடி, மூணாறு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு தவறாமல் வந்து இந்த குளிரை அனுபவித்துவிட்டு போவார்கள்.

18 ஹேர்பின் வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பாதையில் பயணிப்பதே ஒரு சுகமான அனுபவம்தான். காபி, மிளகு என நறுமணம் கமழும் மலைப்பயிர்களை ரசித்தப்படி பயணம் செய்தால் ராமக்கல் மெட்டு வந்துவிடும். காற்றாலைகளையும் பார்க்காலாம்


அங்கு முதலில் நம்மை வரவேற்பது 60 அடி உயர ஆதிவாசி தம்பதிகள் சிலைதான். இம் மலையில் வாழ்ந்த குலும்பன், குலும்பி தம்பதிகளின் சிமெண்ட் சிலைதான் இந்த இடத்தின் ஹைலைட். சிலையை சுற்றியுள்ள பாறைகளில் நின்று கீழே பார்த்தால் ஆகாயத்தில் பறந்து கொண்டே பார்ப்பது போல் இருக்கும்.

நம் கண்ணெதிரே பாதத்தின் கீழே கம்பம், உத்தமபாளையம், பண்ணைபுரம், கோம்பை ஆகிய ஊர்களைப் பார்த்து ரசிக்கலாம். கேரளாவின் மலைகளின் வனப்பையும் அழகையும் பார்க்க ரசிக்க சிறந்த இடம். 


தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து 13 கி.மீ. மலை வழிப் பயணம் செய்தால் கம்பம் மெட்டு வருகிறது. அங்கிருந்து 10 கி.மீ. பயணித்தால் ராமக்கல் மெட்டு வந்துவிடும். ராமக்கல் மெட்டில் வீடுகள், கடைகள் உண்டு. இரவில் தாங்கும் விடுதிகள் இல்லை. கம்பம் நகரம் தான் தங்குவதற்கு ஏற்றது.  

குளிரையும் வேகமாக வீசும் காற்றையும் அனுபவிக்க நினைப்பவர்களுக்கு ராமக்கல் மெட்டு அருமையான இடம்..!!! 
செவ்வாய், ஜூன் 23, 2015

இந்த விஷத்தை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்..!

வாட்சப்பில் வந்த தகவல் நல்லதாக இருந்ததால் இங்கு பகிர்கிறேன். பதிவெழுத நேரம் இல்லாததும் ஒரு காரணம்தான். 


ஐயா தயவு செய்து இந்த விஷத்தை நீங்களும் உங்கள் குழந்தைகளும் உண்ணாதீர்கள், மன்னிக்கவும் யாரும் உண்ணவேண்டாம் மன்னிக்கவும்! sugar disease is a slow poison இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி!

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?


இனிப்பை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிலிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.


2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.


ஞாயிறு, ஜூன் 21, 2015

இளம் பெண்ணும் ஐயாயிரம் ஆண்களும்


நிக்கி லீ
து ஒரு 'அல்ஸ் ஒன்லி' பதிவுதான். அதை முதலிலே சொல்லிவிடுகிறேன்.  இப்படி ஒரு பதிவு தேவையா என்றுகூட பலர் நினைக்கலாம். ஆனால், நான் அடிக்கடி சொல்வதுதான், நாம் வாழும் உலகில் நம்மோடு சேர்ந்தே ஒரு வித்தியாசமான உலகம் இயங்கி வருகிறது. அதை பலருக்கும் தெரிவிப்பதுதான் இதன் நோக்கம். செக்ஸ் என்பதற்காக அதை ஒதுக்கிவிட முடியாது. இந்தக் கட்டுரையை நான் 2010-ல் எழுதினேன். இப்போது இந்த எண்ணிக்கை மாறியிருக்காலாம்...!

இனி சாதனைப் பெண் பற்றி..

சாதிப்பது என்று முடிவு செய்துவிட்டால், அது எப்படிப் பட்ட சாதனையாக இருந்தாலும் பரவாயில்லை! என்று சிலர் துணிந்து விடுகிறார்கள். இப்படிதான் 25 வயதான ஒரு இளம் பெண் சாதனைக் களத்தில் குதித்திருக்கிறார். இவர் சாதிக்கப் போவது உடலுறவில்...!

அழகுக் கலை நிபுணர், மாடல் என்று இரண்டு விதமான தொழிலை செய்யும் இந்த இங்கிலாந்து பெண்ணுக்கு தனது 16-வது வயதில் முதல் அனுபவம் ஏற்பட்டது. இல்லை, திணிக்கப் பட்டது. ஆம், அந்த வயதில் அவள் ஒரு ஆணால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள்.

பொதுவாக கொடூரமான சம்பவங்கள் நடக்கும் போது அதை மறக்கவே முயற்சிப்பார்கள். அதை ஒரு கசப்பான உணர்வாக வெறுத்து ஒதுக்குவார்கள். 

ஆனால், நிக்கி லீ வித்தியாசமானவள். தனக்கு ஏற்பட்டது பலாத்காரம் என்றாலும் கூட 'அது' அவளுக்கு பிடித்துவிட்டது. கற்பழிப்பில் கூட இப்படி ஓர் இனிமையா என்று அவள் மனம் மீண்டும் மீண்டும் அதையே நினைத்தது. திரும்பத் திரும்ப 'அது' நடக்க வேண்டும் உள்ளுணர்வு பரபரத்தது.

மாடலாக நிக்கி லீ
அதற்காக அவள் ஆண்களை தேட ஆரம்பித்தாள். ஆண்களை கவர்வது அவளுக்கொன்றும் சிரமமாக இல்லை. அவளிடம் அழகு நிறைந்திருந்தது. எடுப்பான இளமை இருந்தது. வாளிப்பான உடல் இருந்தது. இது எல்லாமே ஒரு ஆணை, பெண்ணிடம் மயக்கங்கொள்ள வைக்க போதுமானது.

கிறங்க வைக்கும் அம்சங்களைக் கொண்ட நிக்கி லீ, ஆணுடன் கூடுவதற்கு தனியான அறையையோ, வீட்டையோ தேர்ந்தெடுக்கவில்லை. பால்கனி, கடற்கரை, தெருவோரம், கிளப், சினிமா தியேட்டர், டிஸ்கோ ஆடும் இடங்கள் போன்றவைதான் அவள் ஆண்களுடன் கூடும் இடங்கள். தினமும் புதிது புதிதாக ஆண்களுடன் உறவு கொள்ளவில்லை என்றால் நிக்கி லீ கண்களில் உறக்கம் வராது. 

நிக்கி லீ தான் உறவு கொள்ளும் ஆண்களின் விவரங்களை தனியாக ஒரு டைரியில் எழுதி வந்தாள். ஒவ்வொரு ஆணுக்கும் அவன் கொடுத்த சுகத்துக்கு இத்தனை மார்க் என்று மதிப்பெண்கள் வேறு கொடுத்திருக்கிறாள். முழு திருப்தி அளித்த ஆணுக்கு ஸ்பெஷல் மதிப்பெண்களும் உண்டு.

இப்படியே இந்த பட்டியல் நீண்டு கொண்டே போனது. தனது 18-வது வயதில் 800 ஆண்களை உறவு கொண்டிருந்தாள். அப்போதுதான் இதையே சாதனையாக்கினால் என்ன என்று தோன்றியது. 

அதற்காக திட்டம் போட்டாள். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டாள். ஒரே இரவில் நான்கு ஆண்கள் என்ற சாதனை அளவும் நிக்கி லீயிடம் உண்டு. 

தனது 21-வது வயதில் 2,289 ஆண்களுடன் உறவு கொண்டிருந்தாள். இதில் ஒரே ஆண் மீண்டும் வராமல் பார்த்துக்கொண்டாள். தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரே ஆணிடம் இரண்டு முறை உறவு கொண்டதை 'துன்ப நிகழ்வு' என்று வேதனையோடு தெரிவிக்கிறாள். தனது 25-வது வயதில் 5,000 ஆண்களை நிறைவு செய்திருந்தாள். கிட்டத்தட்ட 9 வருடங்களில் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறாள். 

சரி, நிக்கி லீயால் இப்படியே சென்று உலக சாதனை செய்துவிட முடியுமா.. ? என்றால் முடியாது என்பதுதான் உண்மை. ஏனென்றால், நிக்கி லீயை விட முன்னோடியான பெண்கள் ஏற்கனவே இந்த சாதனைப்  பட்டியலில் இருக்கிறார்கள். 

பேரரசர் அகஸ்டஸின் மகள் ஜூலியா தான் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெண். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இவரின் சாதனையை எந்த பெண்ணாலும் நெருங்கக்கூட முடியவில்லை. கி.மு.14-ல் வாழ்ந்த இவருக்கு அழகு, அறிவு, படிப்பு என்று எல்லாமே அளவுக்கு மீறி இருந்தது. இது எல்லாவற்றையும் விட ஆணாசையும் மிக மிக அதிகமாக இருந்தது.

ஜூலியோ அகஸ்டஸ்
வயதுக்கு வருவதற்கு முன்பிருந்தே ஆண்களை அனுபவிக்க தொடங்கிவிட்டார். ஒன்று இரண்டாக ஆரம்பித்த ஆண்களின் எண்ணிக்கை கொஞ்ச நாட்களிலேயே ஆயிரத்தை தொட்டுவிட்டது. ஒரு கட்டத்தில் இளவரசியோடு இரவைக் கழிக்காத இளைஞனே ரோம் நகரில் இல்லை என்ற நிலை வந்தது. 

பின் தன் தோழிகளோடு வெளிநாட்டு வியாபாரிகள் கூடும் இடங்களுக்கு சென்றார். உடலை அப்பட்டமாக வெளியே காட்டும் மெல்லிய உடைகளைப் போட்டுக் கொண்டு வீதியில் அலைந்தார். 

எதாவது ஒரு புது ஆண் கண்ணில் பட்டுவிட்டால் போதும் அவனை இழுத்துக் கொண்டு ஆளில்லாத இடத்தில் ஒதுங்கி விடுவார். இவர் அப்படி உறவு கொண்ட ஆண்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் மேல். 

இளவரசியின் இந்த ஆண்கள் வேட்டை செயலை தாங்க முடியாத மன்னர், மானம் போகிறது என்று ஆள் நடமாட்டமே இல்லாத பான்டதீரியா தீவுக்கு அவரை நாடு கடத்தி விட்டார். இல்லாவிட்டால் கணக்கு லட்சத்தை கடந்திருக்கும். 

இரண்டாவது இடத்தில் வருபவர் பிரெஞ்ச் நடிகை மெல்லி துபோஸ். இவரும் தான் உறவு கொண்ட எல்லா ஆண்களின் விவரங்களையும் டைரியில் எழுதி வைத்துள்ளார். இவர் சந்தித்த ஆண்கள் 16,527. இந்த இரண்டாவது இடத்தை வேண்டுமானால் நிக்கி லீ அடைய முடியும். முதலிடத்திற்கு இன்னும் நிறைய தூரம் போக வேண்டும். 

"நிக்கி லீ ஒரு செக்ஸ் அடிமை. அவள் தன்னையே பாழாக்கிக் கொள்கிறாள்." என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். இதை நிக்கி லீ ஏற்கவில்லை. "எனது நடவடிக்கையால் நான் யாரையும் புண்படுத்தவில்லை. நான் செக்ஸியான பெண். அதனால் தான் என்னால் இந்த சாதனையை படைக்க முடிகிறது. ஆணுறை இல்லாத உறவை நான் அனுமதிப்பதில்லை. கருத்தடை மாத்திரையும் நான் எடுத்துக் கொள்கிறேன். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை அருகில் உள்ள மருத்துவமனையில் சென்று பரிசோதித்துக் கொள்கிறேன். இந்த உடலுறவால் எனக்கு பாதிப்பில்லை. பதிலாக நான் சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு அது தேவையாக இருக்கிறது." ஆனாலும் அளவுக்கு மீறினால் எல்லாமே கெடுதல்தான்.

இது பெண்களுக்கான காலம். இன்னும் பெண்கள் எதிலெதில் சாதிக்கப் போகிறார்களோ..! தெரியவில்லை..!    ஞாயிறு, ஜூன் 14, 2015

இலங்கை கடற்படையினர் எப்போதும் இப்படிதானா..?ராமேஸ்வர மீனவர்களைப் பற்றிய செய்தி வராமல் ஒரு வாரம் செய்தித்தாள் வந்துவிட்டால் அது உலக அதிசயம்தான். இந்த இலங்கைக் கடற்படையினரிடம் சிக்கிக்கொண்டு தமிழக மீனவர்கள் படும்பாடு சொல்லிமுடியாது. ஏன் இப்படி மீனவர்கள் இரக்கம் இல்லாமல் வதைக்கப்படுகிறார்கள்?

ராமேஸ்வர மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடுவதும், தடிகளைக் கொண்டு அடிப்பதும், கற்களை வீசுவதும், மீன்கள் மற்றும் வலைகளை பறித்துக்கொண்டு செல்வதும் சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. 

உண்மையில் கடலுக்குள் அப்படி என்னதான் நடக்கிறது? என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் 'தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மீனவர் கூட்டமை'ப்பின் பொதுச் செயலாளர் என்.ஜே.போஸை சந்தித்தேன்.

என்.ஜே.போஸ்
"மீனவர்களாகிய நாங்கள் முன்பெல்லாம் இலங்கை, இந்தியா என்ற தேச எல்லைகள் இல்லாமல் வாழ்ந்து வந்தோம். நாங்கள் கடலில் மீன் பிடிக்கும் போது படகில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அருகில் இருக்கும் இலங்கைக்கு சென்று சரிசெய்து கொள்வோம்.

கடல் சீற்றம் ஏற்படும் போது வலை காணமல் போனாலோ, மீனவர்கள் வழிதவறி சென்று விட்டாலோ இலங்கை கடற்படையினர் அவர்களை பத்திரமாக எங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள். நாங்கள் இலங்கை சென்று திரும்புவதும், இலங்கை மீனவர்கள் ராமேஸ்வரம் வந்துவிட்டு போவதும் எங்களுக்குள் சகஜமாக இருந்தது. 

கடல் எல்லைகள் எங்களை எப்போதும் கட்டுப்படுத்தியது இல்லை. எங்களுக்குள் நிறைய அன்னியோன்யம் இருந்தது. நாங்கள் கையோடு எடுத்துச்செல்லும் பழைய சோற்றையும் கருவாட்டுக் குழம்பையும் சாப்பிட நடுக் கடலில் காத்துக்கிடப்பார்கள் இலங்கைக் கடற்படையினர். எங்களுக்கு அவர்கள் சாப்பிட வைத்திருக்கும் பிரெட்டையும், ரொட்டிகளையும் தருவார்கள். அந்த மேற்கத்திய உணவு எங்களுக்குப் பிடிக்கும். அவர்களுக்கு எங்களின் சாப்பாடு பிடிக்கும். இப்படி எங்களுக்குள் எந்த வேற்றுமையும் இல்லாமல் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தோம். 

இந்த நிலையில் 1983-ல் இலங்கையில் விடுதலைப் புலிகள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கினார்கள். எங்களின் எல்லா நட்பும் தடம் தெரியாமல் மாறத்தொடங்கியது. எங்களுக்குள் திடீரென்று தேச எல்லைகள் முளைத்தன. சிநேகம் காட்டிய சிங்களர்கள் சீறத் தொடங்கினார்கள். 

இலங்கைக் கடற்படையினர்
கடலில் எல்லை கடந்தவர்களை சுட்டுத் தள்ளினார்கள். இதுவரை 350 மீனவர்களை துப்பாக்கி சூட்டில் இழந்திருக்கிறோம். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கையிழந்து, காலிழந்து, கண்ணிழந்து ஊனமாகியிருக்கிறார்கள். படகுகள், வலைகள், மீன்கள் என்று கோடிக்கணக்கான எங்களின் உடைமைகள் இலங்கைக் கடற்படையினரால் களவாடப்பட்டன. 

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகள் 
சரி, விடுதலைப்புலிகள் பிரச்னை இருக்கும் வரை நமக்கு இதுதான் விதியென்று பொறுமை காத்தோம். விடுதலைப் புலிகள் வீழ்ச்சியடைந்த காலமும் வந்தது. மீண்டும் 1983-க்கு முந்தைய வசந்த காலம் திரும்பும் என்று நினைத்திருந்தோம். 

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்
ஆனால், நிலைமை முன்பைவிட மோசமானது. இப்போது சிங்களர்கள் மட்டுமல்ல, சீன ராணுவத்தினரும் சேர்ந்துகொண்டு எங்களை ஓட ஓட விரட்டுகிறார்கள். நாங்கள் என்ன செய்வது? என்று புரியாமல் தவித்து வருகிறோம். மீன் பிடிக்கும் தொழிலே எங்களுக்கு வாழ்வா..? சாவா..? என்ற போராட்டமாக மாறியுள்ளது."

விடுதலையாகி நாடு திரும்பும் மீனவர்
"கடல் எல்லையை கடப்பதால்தானே இத்தனை பிரச்னையும், இந்திய கடல் எல்லைக்குள்ளே மீன் பிடிக்கலாமே..? மீனவர்களுக்கு கடல் எல்லை தெரியாதா..?"

"தெரியும்! மீனவர்களுக்கு நன்றாக கடல் எல்லைகள் தெரியும். ஆனாலும் எல்லை கடந்து சென்று மீன் பிடிப்பது என்பதை நாங்கள் பரம்பரை பரம்பரையாக, தலைமுறை தலைமுறையாக செய்து வருகிறோம். இது பாரம்பரியமாக வந்த பழக்கம். அதை விட முடியவில்லை. 

அது மட்டுமல்ல. மீன் பிடிப்பதில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று இழு வலை முறை. மற்றொன்று தள்ளு வலை முறை. இந்திய மீனவர்கள் பயன்படுத்துவது இழுவலை முறையை. இலங்கை மீனவர்கள் உபயோகிப்பது தள்ளு வலை முறையை. 

இழுவலையில் சில வகை மீன்களும், தள்ளு வலையில் சில வகை மீன்களும் தான் சிக்கும். இயற்கையின் வினோதம் என்னவென்றால், நமக்குத் தேவையான மீன்கள் இலங்கைக் கடற்பகுதியிலும், அவர்களுக்கு தேவையான மீன்கள் இந்திய கடற்பகுதியிலும் இருப்பதுதான். 

மீன்பிடிக்க புறப்படும் மீனவர்கள்
ஒரு இந்திய மீனவன் இந்திய கடற்பகுதியில் மட்டும் மீன் பிடித்து திரும்பினால் அவன் நஷ்டத்தோடுதான் வீடு திரும்புவான். அவன் குடும்பம் பட்டினியோடுதான் போராடவேண்டும். 

மீனவன் ஒருமுறை கடலுக்கு போய்வர 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. அதைவிட அதிகமான மீன்களைப் பிடித்து கரைக்கு திரும்பினால்தான் லாபம். 

காலை 6 மணிக்கு கடலுக்குப் போய் மறுநாள் காலை 10 மணிக்கு கரை திரும்புவார்கள். ஒருதடவை போய்வர 200 முதல் 300 லிட்டர் வரை டீசல் தேவை. வாரத்துக்கு மூன்று முறை என்ற கணக்கில் மாதத்திற்கு 12 முறை கடலுக்குள் போய்வருவோம். 
மீன்களுடன் கரை திரும்பும் மீனவர்கள்
அதற்காக அரசு மானிய விலையில் 15,000 லிட்டர் டீசலை வருடத்திற்கு தருகிறது. இது போதுமானதாக இல்லை. எங்களுக்கு ஒரு மாதத்திற்கு 3 ஆயிரம் லிட்டர் தேவைப்படுகிறது. வருடத்தில் 10 மாதமும் கடலுக்குள் செல்வதால் 30,000 லிட்டர் டீசல் மானியத்துடன் அரசு கொடுத்தால் நல்லது. 

1983-ல் ராமேஸ்வரத்தில் வெறும் 200 படகுகள் தான் இருந்தன. இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. இவற்றில் சில படகுகளில் அனுமதிக்கப்பட்ட திறனைவிட கூடுதல் திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்துகிறார்கள். 

அதிலும் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலை, சுருக்கு மடிவலை முறையை பயன்படுத்துகிறார்கள். இதனால் கடலின் மொத்த வளமும் சுரண்டப் படுகின்றன. 

சாதாரண படகின் மூலம் 12,000 ரூபாய்க்கு மீன் பிடித்து திரும்புவதே பெருங்காரியமாக இருக்கும்போது, தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு, அதிக சக்தி வாய்ந்த படகுகள் மூலம் ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் மீன்களை பிடித்து வந்து விடுகிறார்கள். 

இதேநிலை நீடித்தால் நமது சந்ததிக்கு மீன் கிடைக்காது. வருமானம் முக்கியம்தான். அதைவிட வருங்காலம் மிக முக்கியம். வருங்கால சந்ததியை மனதில்கொண்டு செயல்பட வேண்டும். மீன்பிடி தொழிலை ஒழுங்குபடுத்த வேண்டும். அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும்.

கடலில் மீன் வளத்தை அதிகரிக்க 2 முதல் 3 வருடங்கள் எடுத்துக் கொள்ளாம். அந்த காலங்களில் மீனவர்களுக்கு அரசு நிவாரணம் கொடுக்க வேண்டும். இப்படி 3 வருடங்கள் மீன் பிடிக்காமல் பொறுத்திருந்தால் கடலில் ஏராளமான மீன்கள் பெருகும். வருங்காலத்தையும் கடல் வளத்தையும் காக்க முடியும். 

மீனவர்கள் பிரச்னை, கச்சத்தீவு பிரச்சனைகளை அரசியல்வாதிகள் தங்கள் அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் மீனவர்களுக்கு எந்த நன்மையையும் இல்லை. உண்மையான அக்கறையோடு அரசு செயல் பட்டால் மீனவர்கள் வாழ்வு உயரும்." என்று உணர்வு பொங்க கூறி முடித்தார் என்.ஜே.போஸ்.சனி, ஜூன் 13, 2015

ஆரம்பத்தில் அல்லாடி, ஏற்றம் கண்ட ஏ.வி.எம்.


ஏ.வி.எம். ஸ்டுடியோவின் ஒரு பகுதி அப்பார்ட்மெண்டாக மாறப்போகிறது என்ற செய்தியை இன்று படித்ததன் விளைவே இந்த பதிவு.

இந்த ஸ்டுடியோ சென்னையில் தொடங்கி, பின் தேவகோட்டையில் சிறிது காலம் இயங்கி, மீண்டும் சென்னைக்கே வந்த கதை சுவாரஸ்யமானது. 


ஏ.வி.எம். நிறுவனத்தின் நிறுவனரான ஏ.வி.மெய்யப்பன் செட்டியார் புதுமையாக எதையாவது செய்து கொண்டே இருப்பார். அதற்காக முதலீடு செய்வதற்கும் தயங்காதவர். ஆரம்பகாலத்தில் காரைக்குடியில் 'ஏவி அண்டு சன்ஸ்' என்ற பெயரில் இசைத் தட்டுகளை விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். அதை பெரிய அளவில் விரிவு படுத்தினார். 1932-ல் தென்னிந்தியா முழுவதற்கும் விற்பனை உரிமையைப் பெற்றார். சிறிய ஊரில் இருந்து பெரிதாக சிந்தித்தவர்.


அதன் பின் சென்னையில் சிவம் செட்டியார், நாராயண அயங்கார் என்ற இருவரை சேர்த்துக் கொண்டு 'சரஸ்வதி ஸ்டோர்ஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது ஜெர்மனியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ஓடியன் கிராமபோன் கம்பெனியுடன் ஒப்பந்தம் ஒன்று செய்து வியாபாரத்தை விரிவு படுத்தினார். 

அந்த காலத்தில் கிராமபோன் இசைத் தட்டுக்களில் கர்னாடக இசைப் பாடல்கள் மட்டுமே வெளிவரும். அதில், 'வண்ணான் வந்தானே...' போன்ற கிராமியப் பாடல்களை முதன் முதலில் இசைத்தட்டாக வெளியிட்டது சரஸ்வதி ஸ்டோர்ஸ்தான். அந்த பாடல் வரலாறு காணாத விற்பனை தொட்டது. 

அந்த வெற்றி தந்த தெம்பில் 1935-ல் 'சரஸ்வதி சவுண்ட் புரொடக்க்ஷன்' என்ற சினிமா கம்பெனியை தொடங்கினார்கள். 'அல்லி அர்ஜுனா', 'ரத்னாவளி' என்ற இரண்டு படங்களை இப்படி எடுத்தார்கள். இரண்டுமே செட்டியாருக்கு திருப்தியளிக்கவில்லை.

அல்லி அர்ஜுனா 1935
சொந்தமாக ஒரு ஸ்டுடியோ இல்லாததால் தரமற்ற கேமராவைக் கொண்டு படங்கள் எடுப்பதால், படங்களின் தரம் குறைகிறது என்று எண்ணிய அவர், இந்த இரண்டு படங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் சொந்த ஸ்டுடியோ உருவாக்கம் எண்ணத்தை தோற்றுவித்தது. 

சொந்த ஸ்டுடியோவிற்காக சென்னையில் இடம் தேடினார்கள். மைலாப்பூர் கபாலி டாக்கிஸ் அருகில் ஒரு தென்னந் தோப்பு இருந்தது. அதன் உள்ளே விஜயநகர மகாராஜா என்ற மாளிகை ஒன்று இருந்தது. அதில் பேய்கள் நடமாடுவதாக பேச்சு. அதனால் அந்த பகுதியில் யாரும் நடமாட மாட்டார்கள்.

பேய், பிசாசுப் பற்றி கவலைப் படாத செட்டியாரும் அவரது பங்குதாரர்களும் அந்த மாளிகையை வாடகைக்கு எடுத்தார்கள். மாதம் 325 ரூபாய் வாடகை. அரண்மனை மாளிகை பிரகதி ஸ்டுடியோவாக மாறியது. முதன் முதலாக ஒரு தெலுங்கு படத்தை தயாரித்தார்கள்.

அன்றைக்கெல்லாம் நடிகர்களுக்கு மாத சம்பளம்தான். நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு மாதச் சம்பளம் 67 ரூபாய் 8 அணா. 1941-ல் 'சபாபதி' என்ற படத்தை தயாரித்து இயக்கினார் மெய்யப்ப செட்டியார். அதன்பின் 1945-ல் 'ஸ்ரீவள்ளி' படத்தை  பிரகதி ஸ்டுடியோவில் தயாரித்து இயக்கி வெளியிட்டார். இந்த படத்தில் டி.ஆர்.மகாலிங்கம், ருக்மணி நாயகன் நாயகியாக நடித்திருந்தார்கள். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

ஸ்ரீவள்ளி 1940
1934-ல் இருந்து 1940 வரை சினிமா துறையில் நஷ்டத்தையே சந்தித்து வந்த செட்டியாருக்கு 'சபாபதி' சிறிய ஏற்றத்தை தந்தது. 'ஸ்ரீவள்ளி'யோ உச்சத்திற்கு கொண்டு போனது. அந்த மகிழ்ச்சியை கொண்டாட காஷ்மீர் சென்று வந்தார்.

சென்னை திரும்பிய செட்டியாருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவரின் பங்குதாரர்கள் வேறு தொழிலில் ஈடுபட முடிவு செய்திருந்தார்கள். பேய் பங்களாவாக இருந்த மாளிகை பிரகதி ஸ்டுடியோவாக மாறியப் பின் செல்வாக்கு கூடியது. அதனால், அதை 7 லட்ச ரூபாய்க்கு விலை பேசிவிட்டார்கள்.

செட்டியாருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடைசியாக தயாரித்த 'ஸ்ரீவள்ளி' வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருந்தது. இனி கூட்டு சேராமல் தனியாக தொழில் செய்வது என்று செட்டியார் தீர்மானித்தார்.

ஆனால், அப்போது உலக யுத்தம் தொடங்கி இருந்த நேரம். பிலிம் இறக்குமதியில்லை. இருந்தாலும் பிலிமுக்கு ஆர்டர் கொடுத்தார். யுத்தம் முடிந்ததும் அனுப்பி வைக்கச் சொன்னார். யுத்தம் முடிந்தது. பிலிம் மட்டுமல்லாமல் கேமரா, ஒலிப்பதிவு கருவி ஆகியவற்றை வாங்கினார்.

எல்லாம் வந்து விட்டது. ஆனால், சென்னை நகர் முழுவதும் மின்சாரம் இல்லை. யுத்தம் காரணமாக அமலில் இருந்த மின்வெட்டு நீக்கப் படாமலே இருந்தது. தொடர்ந்து இருளில் இருக்கும் சென்னையில் ஸ்டுடியோ ஆரம்பிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த செட்டியார் சொந்த ஊரான காரைக்குடியில் புதிய ஸ்டுடியோவை தொடங்க நினைத்தார்.

காரைக்குடிக்கு வந்த செட்டியாருக்கு முதல் பிரச்சனையாக இருந்தது மின்சாரம்தான். இப்போது போல் அந்த காலத்தில் மின்சாரம் அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை. காரைக்குடி பகுதிக்கு மின்சார விநியோகம் செய்து கொண்டிருந்த 'மீனாட்சி சுந்தரேஸ்வரர் கார்பரேஷன்' என்ற நிறுவனம் 50 கிலோவாட் மின்சாரம் தருவதாக உறுதி தந்தது. அதுவும் நகருக்கு வெளியேதான் தர முடியும் என்றது.


செட்டியார் காரைக்குடிக்கு வெளியே இடம் தேடினார். தேவகோட்டை ரஸ்தா அருகே ஒரு நாடகக் கொட்டகை இருந்தது. அதை தேவகோட்டை ஜமீன்தார் சோமநாதன் செட்டியார் கட்டியிருந்தார். அந்த நாடகக் கொட்டகைக்கு ரூ.2,000-மும், சுற்றிலும் இருக்கும் வெறும் காலி இடத்திற்கு ரூ.1,000-மும் என மாத வாடகைக்கு அந்த இடத்தை பேசி முடித்தார், செட்டியார்.

இதுதான் ஏ.வி.எம்.மின் முதல் ஸ்டுடியோ. நாடகக் கொட்டகைதான் படப்பிடிப்பு தளம். சுற்றிலும் இருந்த வேற்று இடங்களில் சின்ன சின்ன குடிசைகள் அமைக்கப்பட்டன. அதில்தான் நடிகர், நடிகைகள் தனித்தனியாக தங்கிக் கொண்டார்கள். அங்கு மேகப் செய்வதற்கும், ஒத்திகைப் பார்ப்பதற்கும் தனித்தனி குடிசைகள் அமைக்கப் பட்டிருந்தன.

'நாம் இருவர்'. 1947
இங்கு முதன் முதலாக எடுத்தப் படம் 'நாம் இருவர்'. 1947-ம் வருடம் பொங்கலன்று மதுரையில் வெளியிடப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்துதான் (மார்ச்) சென்னையில் வெளியானது. படம் மாபெரும் வெற்றி. மகாகவி பாரதியின் தேசப்பக்தி பாடல்களை முதன் முதலாக  சினிமாவில் பாடலாக பயன்படுத்தியது இந்த படத்தில் தான். விடுதலை வேட்கை கொழுந்துவிட்டு எரிந்த நேரத்தில் இந்த பாடல்கள் பட்டி தொட்டிகளெல்லாம் ஒலித்தன.

நாம் இருவர் போஸ்டர்
அடுத்த ஆண்டே 'வேதாள உலகம்'  வெளிவந்தது. இந்த படமும் பிரமாண்டமான வெற்றி. தமிழ்நாட்டைக் கடந்து இந்தியா முழுவதும் செட்டியாருக்கு சினிமா உலகில் மதிப்பும் மரியாதையும் கூடியது.

தனது நாடகக் கொட்டகையில் எடுத்த இரண்டு படங்களும் வசூலை அள்ளிக் குவிப்பதைப் பார்த்த தேவகோட்டை ஜமீன்தாருக்கு மனம் மாறியது. 300 ரூபாய்க்குக் கூட பெறுமானம் இல்லாத அந்த இடத்திற்கு செட்டியார் 3,000 ரூபாய் வாடகையாக கொடுத்துக் கொண்டிருந்தார். அது போதாது தனக்கு 10,000 ரூபாய் வாடகை வேண்டும் என்றார். இது மாபெரும் கொள்ளை என்று நினைத்த செட்டியார் மீண்டும் சென்னைக்கே தனது ஸ்டுடியோவை கொண்டு செல்ல முடிவெடுத்தார்.

அதற்காக சென்னையில் இடம் தேடினார். அப்போது எஸ்.எஸ்.வாசன் தனது ஜெமினி ஸ்டுடியோவை விலைக்கு வாங்கிக் கொள்ளும்படி செட்டியாரிடம் கூறினார். "உங்கள் ஸ்டுடியோவோ மவுண்ட் ரோட்டில் நல்ல இடத்தில் இருக்கிறது. ஏராளமான பொருட்களும் இருக்கின்றன. அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. கேமரா, ரெக்கார்டிங் மெஷின் எல்லாம் என்னிடம் ஏற்கனவே இருப்பதால் எனக்கு காலி இடம் மட்டும் போதும்." என்றார்.

வடபழனி கோயிலுக்கு சற்று தொலைவில் ஒரு முஸ்லிம், தோல் கிடங்கு ஒன்றை வைத்திருந்தார். அப்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த நேரம். நிறைய முஸ்லிம்கள் இந்தியாவில் வாழப் பிடிக்காமல் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தார்கள். அப்படி சென்றவர்களில் ஒருவர்தான் தோல்ஷாப் சாயபு. அவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் அகதி சொத்தாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் பிரஜையாக மாறிவிட்ட தோல்ஷாப் சாயபுவின் 10 ஏக்கர் நிலத்தை ரூ.37,500-க்கு வாங்கினார். சென்னையில் ஏ.வி.எம். ஸ்டுடியோ உதயமானது. தேவகோட்டை ரஸ்தாவில் ஸ்டுடியோ இருந்த போது தொடங்கிய பட வேலைகளை மீண்டும் சென்னையில் தொடங்கி படத்தை வெளியிட்டார், செட்டியார். படத்தின் பெயர் 'வாழ்க்கை'

ஜமீன்தாரின் பணத்தாசை மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் ஒருவேளை காரைக்குடியும் தேவகோட்டையும் மிகப் பெரிய திரைப்பட நகரங்களாக கூட மாறியிருக்கலாம்.

யார் கண்டது..?!

சிதிலமடைந்த நிலையில் ஏ.வி.எம்.ஸ்டுடியோவின் உட்பகுதி

வியாழன், ஜூன் 11, 2015

உயரத்தில் ஓர் உலாரு நடைபாதையை சுற்றுலாதலமாக மாற்ற முடியுமா..? முடியும் என்கிறார்கள் சீனர்கள். அங்குள்ள லூஜியாஸுய் சர்குலர் நடைமேடையைப் பார்த்தால் இது புரியும்.

இது ஒரு மிகப் பெரிய வட்ட வடிவ நடைபாதை பாலம், இது பாதைகளையும் சுற்றி இருக்கும் நிதி நிறுவனங்களையும் ஒன்றிணைக்கிறது. ஷாங்காய் பகுதியில் உள்ள புடோங் மாவட்டம் சமீபத்தில்தான் சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டது.


அதனால் இந்த பகுதியில் பல நிறுவனங்களும் வணிக மையங்களும் முளைத்தன. பாதசாரிகள் சிரமமின்றி போவதற்காக 20 அடி உயரத்தில் இந்த வட்டவடிவ பாலம் கட்டப்பட்டது. இதன் அகலம் 5.5 மீட்டர். 15 மனிதர்கள் பக்கவாட்டில் ஒருவருடன் ஒருவர் இடிக்காமல் நடந்து செல்லலாம்.

நடைபாதைக்கு செல்ல படிக்கட்டுகளும், நகரும் படிகளும் உள்ளன. இரவு நேரத்தில் வண்ண மின்விளக்குகளில் பாலம் ஜொலிப்பது கண்கொள்ளாக்காட்சி. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் இடமாக இது மாறியுள்ளது.


சரி, இங்கு எப்படி போவது? சென்னையிலிருந்து புடோங் விமான நிலையத்திற்கு டிராகன் ஏர், ஏர் இந்தியா விமான சேவைகள் உள்ளன. 12 மணி நேர பயணத்தில் சென்றடையலாம். ரிட்டர்ன் டிக்கெட்டுடன் கட்டணம் ரூ.57,040-ல் இருந்து தொடங்குகிறது.

ஷாங்காய் நகரில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் ஹோட்டல் தங்குவதற்கு ஏற்றது. ஒருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.8,990.

நடைப்பாலத்தின் மேலே
நடைப்பாலத்தின் கீழே
ஞாயிறு, ஜூன் 07, 2015

வெடிக்கும் மக்கள் தொகை - சிக்கலில் இந்தியாசுற்றுச்சூழல் மாசுபடுதலில் தொடங்கி புவி வெப்பமடைதல் வரை பல சிக்கல்கள் பூதாகரமாக கிளம்பி நாம் வாழும் பூமியை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது அந்த சிக்கலுடன் மக்கள் தொகையும் சேர்ந்துள்ளது.

மனித சரித்திரத்தில் முன் எப்போதும் இருந்ததைவிட, தற்போது மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. மனிதன் காலத்தை கணக்கிடத் தொடங்கிய கி.பி. முதல் வருடத்தில் உலக மக்கள் தொகை வெறும் 20 கோடிதான்.

ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் ஒரு கோடி என்ற விகிதத்தில் அதிகரித்து கி.பி.1000-ம் ஆண்டில் 31 கோடியாக உயர்ந்தது. ஆயிரம் ஆண்டுகளில் வெறும் 11 கோடிதான் அதிகரித்தது. உலக மக்கள் தொகை 100 கோடியை  எட்டியது 1820-ல் தான்.


மனிதன் பூமியில் தோன்றிய காலத்தோடு ஒப்பிட்டால் இது மிக நீண்ட காலம். இந்த 100 கோடி என்ற அளவை எட்ட மனிதனுக்கு ஒன்றரைக்கோடி வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால், அதன்பின் மக்கள் தொகை வளர்ச்சி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது.

நூறு கோடியை எட்டத்தான் ஒன்றரைக்கோடி ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால், இந்த 100 கோடி 700 கோடியாக உயர வெறும் 191 வருடங்களே தேவைப்பட்டுள்ளன. மக்கள் தொகை 700 கோடியை தொட்டது 2011-ம் ஆண்டில். இன்றைய நிலவரப் படி உலகின் மக்கள் தொகை 732 கோடி. 2024-ம் ஆண்டில் இது 800 கோடியைக் கடந்து விடும்.


மக்கள்தொகை வளர்ச்சி இப்படி நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மளமளவென்று உயர்வதற்கு காரணம் மருத்துவத் துறையின் வியத்தகு வளர்ச்சிதான். மனித சரித்திரத்தில் மக்கள் கொத்துக்கொத்தாக அழிந்து போனதற்கு போர்களோ, யுத்தங்களோ காரணம் அல்ல. நோய்கள்தான் காரணம்.

காலரா, பிளேக், மலேரியா போன்ற கொள்ளை நோய்கள் வந்தால் போதும், கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக மக்கள் செத்துமடிவார்கள். 20-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மருத்துவப் புரட்சி, நோய்களால் மக்கள் இறந்து போவதை குறைத்தது. எந்த வகையான நோயானாலும் உடலைவிட்டு விரட்டியடித்தது. உயிரைப் பிடித்து வைக்கும் மருத்துவம் மனிதனை காப்பாற்றியது. மனித ஆயுளும் நீண்டது.

1950-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி ஆண்களின் சராசரி ஆயுள் 40 வயதாகவும், பெண்களின் வயது 38 ஆகவும் இருந்தது. 2001-ல் ஆண்களின் ஆயுட்காலம் 63 ஆகவும், பெண்களின் ஆயுட்காலம் 65 ஆகவும் உயர்ந்தது. 2010-ல் ஆண், பெண் இருவரது சராசரி ஆயுட்காலமும் 75 ஆண்டாக உயர்ந்துள்ளது.

ஆயுள் நீண்டதால் உலகம் முழுவதும் முதியோர்களின் எண்ணிக்கை கூடியது. இறப்பு விகிதம் வெகுவாக குறைந்தது. இப்போதைய கணக்குப்படி உலகில் வருடத்திற்கு 20 கோடி பிறப்புகள் நிகழ்கின்றன. ஆனால், இறப்பு என்பது வெறும் 8 கோடிதான். இதனால்தான் ஜனத்தொகை கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே போகிறது.

இதே வேகத்தில் மக்கள் பெருக்கம் இருந்தால், இன்னும் 50 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 1,200 கோடியைக் கடந்து விடும். எல்லா உயர்வுக்குமே ஒரு உச்சம் இருப்பதுபோல் இதற்கும் உச்சம் இருக்கிறது. அதைக் கடந்து செல்ல முடியாது. மக்கள் தொகையும் அப்படிதான்..!

இந்த உலகம் 1,400 கோடி மக்களைத்தான் தாங்கும். அதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாது. அந்த தாக்குப் பிடிக்க முடியாத அளவை நோக்கித்தான் உலகம் படு வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த அபாயமும் இந்தியாவிற்குத்தான் மிக அதிகம். 2028-ல் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு மக்கள்தொகையில் முதல் நாடக முன்னுக்கு வந்துவிடும்.

அபாயம் அதுவல்ல..! வேறு..!

நமது உடலில் எல்லா பகுதியும் ஒரே மாதிரி சீராக வளர்ந்தால் அது வளர்ச்சி. ஒரு இடம் மட்டும் அபரிவிதமாக வளர்ந்தால் அதற்கு பெயர் கட்டி.  எப்போது வேண்டுமானாலும் கட்டி உடைந்து பாதிப்பை ஏற்படுத்தலாம். மக்கள் பெருக்கமும் அப்படிதான்.


அமெரிக்காவிலும் கனடாவிலும் இப்போது உள்ள மக்கள்தொகையே 2050-லும் நீடிக்கும். பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யாவில் 12 % மக்கள் தொகை குறையும். அப்படியானால், ஆபத்தான மக்கள்தொகை பெருகி வெடிக்கப் போவது இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நைஜீரியா ஆகிய நாடுகளில். 

வீக்கம் என்பது இந்தியாவிலும் இந்தியாவைச் சுற்றியும் மட்டுமே நிகழ்கிறது. 2011-ம் ஆண்டின் கணக்குப்படி உலகின் மக்கள்தொகை 700 கோடி. இந்தியாவில் 121 கோடியே 7 லட்சம் (121,01,93,422), தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சம் (7,21,38,958) என்ற அளவில் உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 2028-ல் 145 கோடி என்ற இலக்கை எட்டி உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்திற்கு வந்துவிடும்.

உலக மொத்த நிலப்பரப்பில் இந்தியாவின் பங்கு வெறும் 2.5 % தான். ஆனால் மக்கள்தொகையிலோ உலக மக்களில் 16 % மக்களை தன்னோடு வைத்துள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் எத்தனை மக்கள் வாழ்கிறார்கள் என்பதுதான் மக்கள்தொகை அடர்த்தி என்று சொல்லப்படுகிறது. உலக அளவில் ஒரு சதுர கி.மீ. பரப்பளவில் சராசரியாக 52 பேர் வாழ்கிறார்கள். இந்தியாவில் 382 பேர், தமிழ்நாட்டில் 555 பேர், அதுவே சென்னையில் என்றால் ஒரு ச.கி.மீ. 27,000 பேர் வசிக்கிறார்கள். அடர்த்தி இந்தியாவிதான் அதிகம். 


இப்போதே இந்தியாவின் மக்கள் நிலை படுமோசம். நாட்டில் வாழும் பாதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை. உணவு, மருந்து, வீடு, சுகாதாரம் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. உலக வங்கி அறிவித்திருக்கும் புதிய மதிப்பீட்டின்படி சர்வதேச வறுமை கோட்டிற்கு  கீழே வாழும் இந்திய மக்களின் எண்ணிக்கை 45.6 கோடி. அதாவது ஒரு நாளைக்கு 1.25 அமெரிக்க டாலர் கூட வருமானம் இல்லாதவர்கள். உலக ஏழைகளில் 33 % பேர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள். அதாவது உலகின் மூன்று ஏழைகளில் ஒருவர் இந்தியர். 

2050-ல் இந்தப் பற்றாக்குறை இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும். இத்தனைக்கும் இந்தியாதான் உலகில் முதன் முதலாக பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் குடும்பக் கட்டுப்பாடு முறையை கொண்டுவந்த நாடு.  

1952-ல் குடும்பக்கட்டுப்பாடு பற்றிய சர்வதேச கருத்தரங்கு இந்தியாவில் நடந்தது. அன்றைய மத்திய சுகாதார அமைச்சராக இருந்த ராஜகுமாரி அம்ரித்கவுர் இதில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். குழந்தைப் பிறப்பை தடுப்பது அன்று கொடும் பாவமாகக் கருதப்பட்டது. 


அந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய அன்றைய துணை ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பேச்சுதான் இந்திய அரசையே உலுக்கிப் போட்டது. 

"குழந்தைகளை, பெண்களின் கர்ப்பப்பைக்கு கடவுள்தான் அனுப்பி வைக்கிறார். அவர் விருப்பத்தில் குறுக்கிட நமக்கு என்ன உரிமையுள்ளது? என்று சிலர் கேட்கிறார்கள். குழந்தையைக் கொடுக்கும் அதே கடவுள்தான் நமக்கு அறிவையும் கொடுத்திருக்கிறார். பயன்படுத்துவதற்குத்தான் அறிவு. எதிர்கால விளைவுகளையும், பெண்களின் ஆரோக்கியத்தையும் கருதி நாம் இதை செய்தாக வேண்டும். இதற்கு அறிவை பயன்படுத்தாவிட்டால் மனித இனம் அழிந்துவிடும்." என்றார். 

இந்தியர்களின் மனசாட்சியை உலுக்கிய பேச்சு அது! உடனே நாட்டின் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பிரதமர் நேரு தீர்மானித்தார். இதற்காக 65 லட்சம் ரூபாயை ஒதுக்கினார். குழந்தைப் பிறப்பைக் கட்டுப்படுத்தும் முதல் முயற்சியை இந்தியா தொடங்கியது. 


அரசின் இந்த முயற்சியால் ஆறேழு குழந்தைகளை பெற்றெடுத்த இந்தியர்கள் ஒன்று இரண்டோடு நிறுத்திக்கொள்ள தொடங்கினார்கள். அப்படியிருந்துமே 1947-ல் வெறும் 30 கோடியாக இருந்த இந்தியாவின் மக்கள்தொகை இப்போது 121 கோடியைத் தாண்டிவிட்டது. ஒருவேளை பிறப்பை கட்டுப்படுத்தாமல் விட்டிருந்தால் இந்தியாவின் நிலை, நினைத்தாலே தலை சுற்றுகிறது...!  
சனி, ஜூன் 06, 2015

வருடத்தில் 100 நாட்கள் நாடகம் நடைபெறும் கிராமம்கிராமத்துக் கோயில் திருவிழா என்றால் அதில் ஒரு கரகாட்டம், ஒரு நாடகம், ஒரு பாட்டுக் கச்சேரி, ஒரு ஆடல்பாடல், ஒரு பட்டிமன்றம் என்று விதவிதமான நிகழ்ச்சிகள் இருக்கும். ஆனால் வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லாமல் நாடகத்தை மட்டுமே திருவிழாவாக கொண்டாடும் ஒரு கிராமம் மதுரைக்கு அருகே இருக்கிறது. அதுவும் ஒன்றிரண்டு நாடகங்கள் அல்ல, 100 நாடகங்கள். ஒவ்வொரு வருடமும் இந்த 100 நாட்கள் நாடகத் திருவிழா நடைபெறுகிறது.

அந்த கிராமத்தின் பெயர் வலையங்குளம். மதுரையில் இருந்து தூத்துக்குடி செல்லும் நான்குவழிச் சாலையில் 22-வது கி.மீ. தொலைவில் அந்த கிராமம் அமைந்துள்ளது.

கிராமங்களின் அழகே திருவிழாக்களில் தான் இருக்கிறது என்பார்கள். இந்தக் கிராமமும் அதற்கு விலக்கல்ல. இங்கு திருவிழா 100 நாட்கள் தொடர்ந்து களைக்கட்டுகிறது. இவையெல்லாமே இங்கே குடிகொண்டிருக்கும் தானாக தோன்றிய தனிலிங்கப் பெருமாளுக்காகத்தான்.

இந்த விஞ்ஞான உலகத்தில் கூட இந்தக் கோயிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதியில்லை. அவர்கள் கோயிலுக்கு வெளியே இருந்தபடி கடவுளை வணங்குவது விநோதமாக தெரிகிறது. கோவிலுக்கு முன்பே நாடக மேடை அமைந்துள்ளது. இந்த மேடையே அந்த ஊர் மக்கள் தெய்வமாக நினைக்கிறார்கள். காலில் செருப்பணிந்து இந்த மேடை அருகே யாரும் போக மாட்டார்கள். நாடகத்தை தவிர வேறு எந்த நிகழ்ச்சியையும் இதில் அரங்கேற்ற முடியாது.

இப்படி நாடகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கம் எப்படி வந்தது? என்று கிராம முன்னாள் தலைவர் செல்லத்துரையிடம் கேட்டபோது, "இந்தக் கோயிலில் இருக்கும் தனிலிங்கப் பெருமாள் ஒரு நாடகப் பிரியர். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதானே பக்தர்களின் கடமை. அதைதான் செய்கிறோம்.

பக்தர்களின் வேண்டுதலை பகவான் நிறைவேறியவுடன் நேர்த்திக்கடனாக அவரவருக்குப் பிடித்த நாடகம் போடுவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். தங்களது காணிக்கையாக நாடகத்தை  நடத்துகிறார்கள்.

இந்த பாரம்பரியம் மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரியில் திருவிழா ஆரம்பமாகும். அன்று முதல் தினமும் நாடகம் நடக்கும்.

முதல் நாடகம் எப்போதும் 'அபிமன்யு சுந்தரி'தான். 425 வருடங்களுக்கு முன்பு இந்த நாடகம் நடந்து கொண்டிருந்த போதுதான் திருமலை நாயக்கர் வந்தார். நாடகத்தை பார்த்து உள்ளம் மகிழ்ந்து பாராட்டினார். அதனால் அந்த நாடகத்தில் நடித்தவர்களுக்கு 'திருமலை மெச்சினார்' என்ற பெயர் வந்தது.

இன்றைக்கும் திருவிழாவின் முதல் நாடகமான 'அபிமன்யு சுந்தரி'யை திருமலை மெச்சினார் பரம்பரையில் வந்தவர்களே நடித்து தொடக்கி வைப்பார்கள். தினமும் ஒரு நாடகம் வீதம் 100 நாடகங்கள் நடைபெறும்.

சித்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில்  இறங்கும் நாளான சித்ரா பௌர்ணமியில் நாடகத்தை முடிப்போம். கடைசி நாடகம் முடிந்ததும் பட்டாபிஷேகம் நடத்தி சமபந்தி உணவுடன் திருவிழா முடியும்" என்றார்.


ஒவ்வொரு நாளும் நாடகம் தொடங்குவதற்கு முன் ஊர் மந்தையில் இருந்து தீப்பந்தங்களை மேளதாளத்துடன் எடுத்து வருவார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்தில் தீப்பந்தங்கள்தானே நாடகத்திற்கான வெளிச்சம். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த சம்பிரதாயம் இன்னமும் தொடர்கிறது.

தீப்பந்தம் மேடைக்கு வந்ததும், கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. ஊர் பெரியவர்கள் அனைவருக்கும் மரியாதையை செய்தபின் நாடகம் தொடங்குகிறது. சரியாக இரவு 10 மணிக்கு தொடங்கும் நாடகம் விடியற்காலை 5 மணிக்கு முடிகிறது. அதுவரை கோயில் நடை திறந்தே இருக்கும். நாடகத்தை கோயிலில் இருக்கும் தெய்வம் பார்த்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

நாடகம் நேர்த்திக்கடனாக மாறியதற்கு ஒரு சம்பவத்தை சொல்கிறார், 'திருமலை மெச்சினார்' மலைச்சாமி. "ஒரு முறை இந்த பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. பஞ்சம் தலைவிரித்தாடியது. மழை வேண்டி மக்கள் நாடகம் நடத்துவதாக வேண்டுதல் வைத்தார்கள். மழை வந்தது. ஊர் செழித்தது. மக்கள் நன்றிக்கடனாக அடுத்த வருடம் நாடகத்தை நடத்தினார்கள். அன்றிலிருந்து இந்தப் பழக்கம் அனைவரையும் தொற்றிக்கொண்டது." என்கிறார்.

இங்கு நாடகத்தை நேர்த்திக்கடனாக போட நினைப்பவர்கள். நினைத்தவுடன் போட்டுவிட முடியாது. அதற்கு தேதி கிடைக்காது. ஒரு வருடத்திற்கு முன்பே ரூ.100 கொடுத்து முன்பதிவு செய்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். ஒதுக்கப் பட்ட நாளில் சம்பந்தப்பட்டவர்கள் நாடகம் நடத்திக்கொள்ளலாம்.


ஒரு நாடகம் நடத்த குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். இதுவே சினிமா நடிகர்களை வைத்து என்றால் 60,000 முதல் ஒரு லட்சம்  வரை செலவாகும். அவரவர்கள் தகுதிக்கேற்ப நாடக நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை நாடக கலைஞர்களும் இங்கு வந்து நடித்திருக்கிறார்கள்.

எப்படிப்பட்ட மனக்குறையோடு வந்து நின்றாலும் நாடகம் போடுவதாக தனிலிங்க பெருமாளிடம் வேண்டிக் கொண்டால் உடனே அது நிறைவேறிவிடுகிறது. மழலைச்செல்வம் வேண்டி சரணடையும் தம்பதிகள் அடுத்த வருடமே தங்கள் மழலையோடு வந்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள் என்று பெருமையோடு கூறுகிறார்கள் ஊர் மக்கள்.வியாழன், ஜூன் 04, 2015

கார்களின் நிறமும் விபத்துக்களும்இந்த காரை எந்த நிறத்தில் சேர்ப்பது
கார்களின் நிறத்துக்கும் விபத்துக்கும் சம்பந்தம் உண்டா..? என்றால் உண்டு..!  என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதற்காக 20 வருடங்களாக 8,50,000 விபத்துக்களை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். அதன் முடிவில்தான் இப்படி ஒரு தீர்வை தந்திருக்கிறார்கள். இது விஞ்ஞான முறையில் நிரூபிக்க படாவிட்டாலும் 20 வருட ஆய்வு ரீதியாக உண்மை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நமது ஊரில் டிராவல்ஸ் கார்கள் எல்லாமே வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று வெண்மை நிறம் சூரிய ஒளியை கிரகித்துக்கொள்ளாது. திருப்பி அனுப்பிவிடும். இதனால் வெயிலின் தாக்கம் காருக்குள் குறைவாக இருக்கும். ஏ.சி.யின் குளுமை நன்றாக இருக்கும். இதனால் எரிபொருள் செலவு குறையும்.

மற்றொன்று நமது சாலைகள் எல்லாமே கருப்பு. அதில் வெள்ளை நிறத்தில் வரும் கார் 'பளிச்'சென்று எதிரே வரும் வாகன ஓட்டுனருக்கு தெரியும். இதனால் வெண்மைக் கார்கள் பாதுகாப்பானவை. விபத்துக்கள் நடைபெற வாய்ப்பு குறைவு என்கிறது அந்த ஆய்வு. இந்த காரணங்களினால் தான் வாடகைக் கார்கள் பெரும்பாலும் வெள்ளை நிறமாகவே இருக்கிறது.

கருப்பு நிறம் உலகம் முழுவதும் விரும்பப்படும் ஒரு வண்ணம். கார்களில்தான் மனிதர்களில் அல்ல. இளைஞர்கள் எப்போதும் கருப்பு நிறக் காரையே விரும்புகிறார்கள். ஆனால், கருப்பு விபத்தை ஏற்படுத்தும் நிறம் என்கிறது ஆய்வு. அவர்கள் ஆராய்ந்த 8 லட்சத்து 50 ஆயிரம் விபத்துக்களில் 47% கருப்பு நிறக் கார்கள். அதனால் இந்த நிறத்தை 'பாதுகாப்பற்ற நிறம்' என்கிறார்கள்.

'பாதுகாப்பற்ற நிறம்'
கருப்பு நிறக் காரில் பயணிக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக  பயணிக்க வேண்டும். சாலையின் நிறமும் கருப்பு என்பதால் எதிரில் வரும் வாகன ஓட்டுனர்களுக்கு தெரியாது. அதிலும் மாலை நேரங்களில் கேட்கவே வேண்டாம். இந்த நேரங்களில்தான் அதிகமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன என்று ஆய்வு கூறுகிறது. அதனால் கருப்பு, கிரே போன்ற அடர் வண்ணங்களில் கார் வைத்திருப்பவர்கள். லேசாக இருட்டியதுமே 'பார்க் லாம்ப்' போட்டுக் கொள்வது பாதுகாப்பு.

இந்த ஆய்வு பாதுகாப்பான நிறம் என்று மூன்று வண்ணங்களை சொல்கிறது. வெள்ளை, பொன்னிறம், மஞ்சள் என்பதுதான் அது. இந்த நிறக் கார்கள் வெறும் 3 % தான் விபத்தில் சிக்கியுள்ளதாம். ஆக, புதிதாக கார் வாங்கப் போகும் நண்பர்கள் இதை கவனத்தில் கொள்ளவது நல்லது.

மேலும் அந்த ஆய்வு சிவப்பு நிறக் கார்களை விட நீல நிறக் கார்கள் அதிகம் விபத்துக்கு உள்ளாவதாக தெரிவிக்கிறது. அடர் பச்சை நிறத்தில் இருக்கும் கார்களுக்கு இன்னொரு பிரச்னை இருக்கிறது. மேலே பறக்கும் பறவைகள் இவற்றை மரம் என்று நினைத்து வந்து அமர்கின்றன. எச்சம் இடுகின்றன. பறவைகள் அதிகமாக எச்சம் இடுவது இந்த நிறக் காரில்தான்.


மஞ்சள் நிறத்தில் கார் வைத்திருப்பவர்கள் எப்போதும் கார் கண்ணாடிகளை இறக்கிவிடக் கூடாது என்கிறார்கள். பூந்தோட்டம் என்று நினைத்து தேனீக்களும் வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் இந்த கார்களை சூழ்ந்து கொள்கின்றனவாம். கண்ணாடி திறந்திருந்தால் உள்ளே புகுந்து கொட்டிவிடும் என்கிறார்கள்.


வெளிர்நீல நிறத்தில் கார்கள் வைத்திருப்பவர்களுக்கு இன்னொரு பிரச்னை உண்டு. பறவையின் கண்களுக்கு இந்த கார் சிறிய நீர்த்தேக்கம் போல் தெரியுமாம். அதனால் பறவைகள் இந்த காரை தேடி வந்து மோதி அடிபட வாய்ப்பு உண்டு.

ஆபத்தான நிறம் என்று சொல்லப் படும் கருப்பு நிறக் கார்கள் கூட சில நாடுகளில் பாதுகாப்பானவையாக இருக்கின்றன. எப்போதும் பனி சூழ்ந்து காணப்படும் குளிர் நாடுகளில் கருப்பு நிறம்தான் பாதுகாப்பானது. வெண்மை நிற பனியில் கறுப்புக் கார் பளிச்சென்று தெரியும்.

நம்மூரை பொறுத்தவரை வெள்ளை நிற கார்களே பாதுகாப்பானவை. அடர் நிற கார்களைவிட வெள்ளை நிற கார்களில் அழுக்கு குறைவாகவே தெரியும். கீறல் விழுந்தால் கூட பளிச்சென்று தெரியாது. அதனால் நமக்கு ஏற்ற வண்ணம் வெண்மைதான்.


=====

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...