• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, டிசம்பர் 11, 2015

  நீர்வழிச் சாலை ஏன் வேண்டும் - 5

  ரிகளின் கரையில் காலாற நடந்து போனால் மடத்து கருப்பன், மட இருளன், மட முனியன் என்ற காவல் தெய்வங்களை பார்க்கலாம். இந்த தெய்வங்களை எப்போதும் ஏரியின் மடைகளுக்கு அருகிலேயே அமைத்திருப்பார்கள். அந்த தெய்வங்களின் பூர்விகத்தைக் கேட்டால் அது அந்த ஏரிக்காக உயிர்விட்ட ஒருவரின் நடுகல்லாக இருக்கும். அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.


  இப்போது நம்மவர்கள் ஏரி நீரை விளைநிலங்களுக்கு எப்படி பகிர்ந்து கொடுத்தார்கள் என்பதையும், அதற்கு அவர்கள் வைத்திருந்த தொழில்நுட்பம் பற்றியும் பார்ப்போம். அதுவும் இன்னொரு வியப்பின் உச்சம்தான். 

  விளைவிக்கப்பட்டிருக்கும் நிலங்களுக்கு ஏரியில் இருந்து எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்ற அளவை துல்லியமாக வைத்திருந்தார்கள் தமிழர்கள். அதற்கேற்ப மதகுகளை ஏரிகளில் அமைத்திருந்தனர். அவர்களின் நீர் மேலாண்மை வியக்கவைக்கிறது. 

  ஏரிகளை அவர்கள் ஏனோதானோவென்று உருவாக்கிவிடவில்லை. பாசனம் பெரும் விளைநிலங்களின் பரப்பளவு, மண்ணின் வகை, நிலத்தின் அமைப்பு, இருப்பிடம் இவற்றைக் கொண்டு ஏரியின் கொள்ளளவை நிர்ணயித்தார்கள். அதற்கு ஏற்ப மதகுகளை அமைப்பார்கள். இந்த மதகுகளில் இருந்து எவ்வளவு நீர் வெளிவரும், எல்லா மடைகளையும் திறந்தால் எவ்வளவு நீரை வெளியேற்ற முடியும் என்ற எல்லா நுட்பங்களையும் திட்டமிட்டுதான் ஒரு ஏரியை வடிவைப்பார்கள். 

  இப்படி துல்லியமாக அமைக்கப்பட்ட ஏரியிலிருந்து மதகுகள் வழியாக நீரை வயல்களுக்கு அனுப்பும் வேலையை 'மடையர்கள்' என்ற பிரிவினர் பார்த்து வந்தார்கள். ஒரு நாழிகை நேரம் மதகுகளை குறிப்பிட்ட அளவு திறந்து வைத்திருந்தால் நீர் இவ்வளவு ஆயக்கட்டுக்கு பாய்ந்திருக்கும் என்ற கணக்கீடுகளை தெரிந்து வைத்திருந்தார்கள். 

  ஏரியிலிருந்து பாசனத்திற்காக வாய்க்கால்கள் மூலம் வயல்கள் வரை கொண்டு வந்து சேர்க்கும் வேலையை 'நீர் பாச்சி' என்பவர்கள் செய்து வந்தனர் என்பதை முன்னரே பார்த்திருந்தோம். இவர்களுக்கடுத்து ஒவ்வொரு வயல்களுக்கும் தேவையான நீரை பாய்ச்சுவதற்காக 'குமுழிப்பள்ளர்கள்' இருந்தார்கள். இவர்கள் இப்படி பாயும் நீரை அளவிடுவதற்காக 'முறைப் பானை' என்ற ஒன்றை வைத்திருந்தார்கள்.

  இந்த முறைப் பானையை செம்பு அல்லது தாமிரம் கொண்டு செய்திருப்பார்கள். இது 10 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அளவில் இருக்கும். இந்தப் பானையின் அடிப்பாகத்தில் ஒரு சிறு துளையிடுவார்கள். இப்படி துளையிடும் ஊசி எந்த அளவு இருக்க வேண்டும் என்பது கூட சங்க கால பாடல்களில் துல்லியமாக சொல்லப்பட்டிருக்கிறது. 

  நீர் பாய்ச்ச இருக்கும் வயல்களுக்கு அருகே மூன்று கற்களைப் பரப்பி அதன் மீது இந்த பானையை வைத்து விடுவார்கள். பானை முழுவதும் நீர் நிரப்பிவிடுவார்கள். அதே நேரத்தில் அந்த வயலுக்கான நீரையும் வாய்க்காலில் இருந்து பாய்ச்சத் தொடங்குவார்கள். துளையிலிருந்து நீர் வழிந்து கொண்டே இருக்கும். பானை நீர் முழுவதும் வடிந்து விட்டால் ஒரு ஏக்கர் நெல் வயலுக்கும் நீர் பாய்ந்து விட்டதாக அர்த்தம். எப்படியொரு நுட்பம் பாருங்கள். 

  நீரைப் பகிர்ந்து எல்லா வயல்களுக்கும் சமமாக கொடுப்பதில் 'குமுழிப்பள்ளர்'களை அடித்துக் கொள்ள முடியாது. நீர் மேலாண்மை என்பது முழுக்க முழுக்க தலித் இன மக்களிடமே இருந்தது. இதனை 'மள்ளர் நீர் மேலாண்மை' என்று கூட அழைப்பவர்கள் உண்டு. 

  நீரை வெளியேற்றுவதில் மதகுகளுக்கும் மடைக்கும் வித்தியாசம் இருக்கிறது. மதகுகள் வழியாக நாம் நீரை வேண்டிய அளவு வெளியேற்ற முடியும். நீரைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் மடை என்பது அப்படியல்ல. அதை திறந்துவிட்டால் முழு அளவில் நீர் பீறிட்டுக்கொண்டு வெளியேறும். அதைக் கட்டுப்படுத்த முடியாது. 

  அதனால்தான் மடை ஏரியின் உயிர்நாடி என்றார்கள். இந்த மடைகளை பராமரிப்பவர்களுக்கு 'மடையர்கள்' என்று பெயர் இருந்தது. மழைநீர் பெருக்கெடுத்து ஏரி முழுவதும் நீர் நிறைந்திருக்கும் போது கரைகள் உடையக்கூடிய அபாயம் இருப்பதால், ஏரி நீரை முழுவதுமாக வெளியேற்ற வேண்டிய நிலை வரும். மதகுகள் வழியாக ஆர்ப்பரிக்கும் அவ்வளவு நீரையும் வெளியேற்ற முடியாது. அப்போது மடையை திறந்து விடவேண்டும். மடையை திறப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. உயிரை பணையம் வைக்கும் செயல் அது.

  பூண்டி ஏரி
  இந்த இக்கட்டான நிலையில் தலைமைக் கிராமம் ஏரியின் நிலைமைப் பற்றி முடிவெடுக்கும். ஒரு ஏரி கிட்டத்தட்ட 50 கிராமங்களுக்கு மேல் நீர்பாசனத்தை வழங்கும். வெள்ளம் வரும் நேரங்களில் ஏரி உடையக்கூடிய வாய்ப்பிருப்பதால். முதலில் இந்த கிராமங்களில் தண்டோரா மூலம் அபாய எச்சரிக்கை கொடுத்து மக்கள் அனைவரும் கிராமங்களை விட்டு வெளியேற்றிவிடுவார்கள்.

  அப்போது ஒரேயொரு மனிதருக்கு மட்டும் மாலை மரியாதையோடு பிரிவு உபச்சாரம் நடைபெறும். அவர்தான் அந்த ஏரியின் மடை பராமரிப்பாளர். மடையன் என்று அழைக்கப்படுபவர். தேசத்துக்காக உயிர்த் தியாகம் செய்யும் ஒரு ராணுவவீரனின் தியாகத்துக்கு சற்றும் குறைந்ததல்ல  இவர் செய்யும் தியாகமும். மனைவியும் பிள்ளைகளும் திலகமிட்டு வழியனுப்புவார்கள். அது இறுதிப் பயணம் போன்றதுதான். 

  ஒரு ஈ, காக்காய் கூட இல்லாத அந்த வெற்று ஊரில் இந்த ஒரு மனிதர் மட்டும் தன்னந்தனியாக ஏரியை நோக்கிப் போவார். ஏரியில் தழும்பி நிற்கும் நீரைப் பார்க்கும்போதே மூச்சு முட்டும். அப்படிப்பட்ட அந்த ஏரிக்குள் மூழ்கி அடி ஆழத்தில் இருக்கும் மடையை திறப்பது சாதாரண காரியமல்ல.

  செம்பரம்பாக்கம் ஏரி
  ஏரியின் பிரமாண்டம் எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். பூண்டி ஏரியின் உயரம் 35 அடி, சென்னையை தற்போது திணறடித்த செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி உயரம். இவ்வளவு உயரம் கொண்ட ஏரியின் அடி ஆழத்திற்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் ஆளாக செல்வது எத்தனை சிரமம். எவ்வளவு மூச்சை 'தம்' கட்ட வேண்டும். அதோடு சென்று மடையை திறக்கும்போது நீரின் அழுத்தத்திலிருந்து மீண்டு வருவது மறுஜென்மம் எடுப்பதுபோல். மடையை திறக்கும்போதே ஆக்ரோஷத்தோடு வெளியேறும் நீர் மடை திறப்பவரை கொன்றுவிடுவதும் உண்டு.

  இப்படி மடையை திறக்கப்போனவர்களில் உயிரோடு பிழைத்து வந்தவர்களும் உண்டு. உயிரை தியாகம் செய்தவர்களும் உண்டு. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு கிராமத்தின் சார்பாக நிலம் கொடுக்கப்படும். அவருக்காக நடுகல் நட்டுவைப்பார்கள். 50, 60 கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காத்ததால் அவர் அந்த கிராம மக்களின் காவல் தெய்வமாக மாறுவார். மடையர் என்றும் மகத்தானவர்களே. அவர்களை அப்படி அழைத்ததே தவறு.

  இந்த நீர் சமூகம் அழிந்த கதையையும் பார்ப்போம்.

                                                                                                                                              -தொடரும்

  38 கருத்துகள்:

  1. பதில்கள்
   1. அவர்கள் உயர்ந்தவர்கள்தான். வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  2. குமுழிப்பள்ளர்கள்,,,,

   சங்க இலக்கியத்தில் உண்டு,,

   நல்ல பகிர்வு சகோ,

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. சங்க காலத்தில் எல்லாமே சொல்லப்பட்டிருக்கிறது. அதை நாம்தான் நடைமுறை படுத்தவில்லை.

    நீக்கு
  3. அந்தக்கால மடையர்களின் தியாகத்தை உணராத நாமல்லவோ இன்றைய மடையர்கள் என நினைக்கத் தோன்றுகிறது. கட்டுரை வழக்கம்போல மிகவும் அருமையாகவே சென்றுகொண்டிருக்கிறது. பாராட்டுகள். தொடர வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு
  4. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் கருத்தே என் கருத்தும். அவர்கள் மக்கள் உயிரைக் காத்த மடையர்கள் என்றால் இப்போது உள்ள நாம் மக்கள் உயிரைப் பறிக்கும் மடையர்கள். தொடர்கிறேன்.

   பதிலளிநீக்கு
  5. நாம் மடையர்கள். இத்தனைக் கஷ்டப்பட்டு ஏரிகளையும், குளங்களையும் காத்த நம் தமிழ் மக்களை இழிவுபடுத்துவது போல அத்தனை நீர்நிலைகளையும் மாசுபடுத்தி, அதன் மேலேயே கட்டிடங்களும் கட்டி, பேருந்து நிலையங்களும் கட்டி வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டு பெருமிதமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோமே வெடகித் தலைகுனிய வேண்டும். அப்படி வாழ்வதால்தானே இதோ சமீபத்திய உயிர்கள் இழப்பு அவலங்கள். இங்கிருந்து சில உயிர்கள் இலங்கைக் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டன என்று சொல்லுகின்றார்கள் அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை..ஆனால் அவலம் அவலம்தானே. அரசிற்கு வெட்கம் இருப்பது போல் தெரியவில்லை. படம் ஒட்டப்பட்ட மின்விசிறி, அரைப்பான், எல்லாம் கொடுக்கப்படுகின்றனவாம்..போன உயிர்களுக்குப் பதில்?

   அருமையான கட்டுரை நண்பரே/சகோ தொடர்கின்றோம்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இத்தனை பெரிய பாதிப்புக்கு நமது ஏரிகளின் மரணம் மிகப் பெரிய காரணம். அத்திப் பற்றி பின்னால் பார்ப்போம். இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சியல்ல.

    நீக்கு
  6. மடை மேலாண்மை வாதிகளின் பணி எவ்வளவு முக்கியமானது, தீரமானது என்பது புல்லரிக்க வைக்கிறது. அந்தக் காலத்தில் எல்லாமே திட்டமிட்டு ஒழுங்காகக் கடைப் பிடிக்கப் பட்டு வந்தன என்று தெரிகிறது. பலமான கயிறால் பிணைக்கப்பட்டு மேலிருந்து அதைப் பிடித்துக் கொண்டு அவரை உள்ளே இறக்கியிருக்க முடியாதா என்றும் கேள்வி மனதுக்குள் வருகிறது. நல்ல பகிர்வு.

   தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அது முடியாது நண்பரே, பலரும் மடையை திறந்ததும் பீறிட்டு வெளியே வரும் நீரில் மடை துளை வழியாகவே வெளியே வந்துவிடுவார்கள். இப்படி நீர் அடித்துவரும் போது சுவற்றிலோ கல்லிலோ தலை மோதி மரணம் ஏற்படுவதும் உண்டு. இத்தனை தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் ஒரு மனிதரை அவ்வளவு சுலபமாக சாக விட்டிருக்க மாட்டார்கள்.

    நீக்கு
  7. நவீன காலத்தில் ,நீர் மேலாண்மை செய்யத் தவறியவர்களே உண்மையான் மடையர்கள் :)

   பதிலளிநீக்கு
  8. செந்தில் குமார்,

   "மடையர்"களின் உயிர் தியாகங்களையும் அவர்களின் உடல் வலிமையையும், முன்னோர்களின் அறிவு கூர்மையையும் நீர் ஆளுமையையும் உங்கள் கட்டுரை தெளிந்த நீர்போல - மடை திறந்த வெள்ளம் போல் பாய்ந்து வந்து விளக்குகின்றது.

   நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது.

   பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

   கோ

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நன்றி நண்பரே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..!

    நீக்கு
  9. இப்படித்தான் மடையை திறக்க...நீரில் முழ்கிய என் தந்தை மூச்சு தினறி இறந்தார் நண்பரே... கொலைகாரபாவி பண்ணையாரோ.... பேய் அடித்துவிட்டது முனி அடித்துவிட்டது என்று பொய் சொல்லி தந்தைக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் செய்யாமல் சகாடித்துவிட்டான் நண்பரே...தங்களின் பதிவை படித்தபோது என் தந்தை இறந்த நிணைவு வந்தது. நண்பரே......

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிகவும் வேதனையான நிகழ்வு நண்பரே, அவர் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் பயன்படும் ஒரு வாழ்வை வாழ்ந்திருக்கிறார் என்பதற்காக பெருமை கொள்ளுங்கள். பண்ணையார் போன்ற துரோகிகள் எங்கும் உண்டு. அவர்களை கணக்கில் எடுக்காதிர்கள்.

    நீக்கு
  10. இனியெனும் நாம் உணர வேண்டும் இதற்கெல்லாம் நாமே காரணம் தொடர்கிறேன் நண்பரே
   தமிழ் மணம் 7

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நாமும் நம்மை வழிநடத்தும் இன்றைய தலைவர்களும்தான்.

    நீக்கு
  11. மனமாரச்சொல்லுகின்றேன்...உங்கள் பதிவுகள் கால நதியை கண்ணில் காட்டுகிறது...
   ஏன் இன்னுமாய் உங்கள் முகம் பரவலாக வில்லை...உங்கள் ஆராய்ச்சிகள் , கருத்துக்கள் ஒரு நாள் நனவாகும்...கவலைகொள்ளாதீர்கள் நாங்களும்...சாட்சியாய் இருப்போம்...காட்சிப்படுத்துங்கள் இன்னும்...நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி, எல்லாவற்றுக்கும் காலம் கனிய வேண்டுமல்லவா..!

    நீக்கு
  12. மடையர்கள், குமுளிப் பள்ளர்கள், நீர் பாய்ச்சி, முறைப்பானை – என்று நிறைய புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி.

   பதிலளிநீக்கு
  13. எவ்வளவு விவரங்களை வாரி வழங்கியுள்ளீர்கள். மடையர்களின் பணி மகத்தானது.. எவ்வளவு மனத்துணிவும் தியாக மனப்பான்மையும் இருக்கவேண்டும். நினைத்தாலே புல்லரிக்கிறது.

   பதிலளிநீக்கு
  14. வணக்கம்
   இப்படியான தகவலை பத்திரிகையில் பிரசுரம் செய்தால் பலரை சென்றடையும் அருமையாக சொல்லியுள்ளீர்கள்
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   பதிலளிநீக்கு
  15. நீர் வேளாண்மை பற்றிய தாங்களின் தொடர் பதிவுகள் மிகவும் அருமை. ஏறும் போரும் குல தொழிலாக வாழ்ந்த மருத நில மக்களான மள்ளர் / பள்ளர்களை தாங்கள் தலித் என்று சந்தடி சாக்கில் குறிப்பிட்டு இருப்பது மேலும் வேதனை அளிக்கிறது. வரலாற்றின் பக்கங்களை புரட்டி ஆராய்ந்து இந்த சமுகத்தின் மேன்மையை உணர்த்த உங்களால் வந்தேறிகளின் சூழ்ச்சியால் விழ்ந்த இந்த சமுகத்தின் நிலையை உணர முடியாமல் போனது எந்த சாதிய கோட்பாட்டிலோ.

   உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.. என்ற வள்ளுவன் வாக்கினை தாங்கள் மறந்தாலும் இந்த வேளாண்குடி சமூகத்தை பார்பன/ வட இந்திய மொழி இழிவு சொற்களால் புண்படுத்தாமல் உங்கள் கட்டுரையில் தொடர்வது, நீங்கள் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரும் நன்றியாகும்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. 'தலித்' என்ற மராட்டிய சொல்லுக்கு 'ஒடுக்கப்பட்டவர்கள்' என்று பொருள். அது சாதியை குறிப்பதில்லை. இலங்கையை எடுத்துக் கொண்டால் அங்கு தலித் என்பது தமிழ் மக்கள்தான். சிரியாவை எடுத்துக் கொண்டால் அங்கு போராடும் முஸ்லிம் இனமக்களின் ஒரு பிரிவினர்தான் தலித் இங்கு அந்தப் பொருளிலே தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறேன். தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பொருளில் அல்ல. மனிதர்களில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லை என்பதே என் எண்ணம்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
   2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    நீக்கு
   3. மனிதர்களில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லை என்றிருக்க, தமிழர் திணைகளில் மற்றும் சங்க இலக்கியங்களில் எங்கும் பயன்படுத்தபடாத இந்த வடமொழி சொல் இங்கு அவசியமற்றது என்பதே எனது கருத்து.

    நீர் வேளாண்மை மற்றுமல்லாது நெல் வேளாண்மையிலும் இவர்கள் சிறந்து விளங்கியதாக பல சங்க இலக்கிய ஆவணங்கள் போற்றுகின்றன, அவற்றின் சில பதிவுகள் பின்வருமாறு.

    மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான்.

    “ பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல்
    மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட
    வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப்
    பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி. ”
    —- பெரியபுராணம், திருக்குறிப்புப் தொண்டர் நாயானார் புராணம், பாடல் 22.

    இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில்.

    “ கைவினை மள்ளர் வானங் கரக்க வாக்கிய நெற் குன்றால்
    மொய் வரை யுலகம் போலும் மளரிநீர் மருத வைப்பு. ”
    —- பெரியபுராணம், – திருநாட்டுச் சிறப்பு, பாடல் 25

    இலக்கியங்கள் இவ்வாறிருக்க, பொருளாதாரத்தில் பின்தங்கி பட்டியல் இனத்தில் இருப்பதாலேயே இம்மக்கள் இவ்வசை சொற்களுக்கு ஆளாக வேண்டியதாகவே படுகிறது. காலத்தால் இந்த சூழ்நிலை மாறும் என்று நம்புவோமாக.

    நண்பர் செந்தில் அவர்களே, தங்களின் இந்த வரலாற்று ஆராய்ச்சி பணி சிறக்க மற்றும் மேலும் மள்ளர்களின் வாழ்க்கை முறை பற்றிய மேலான கட்டுரைகள் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். கடவுள் உங்களை மேலும் ஆசிர்வதிக்கட்டும்..

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்