• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  ஞாயிறு, டிசம்பர் 13, 2015

  நீர்வழிச் சாலை: சங்கிலித் தொடர் ஏரிகள் - 7


  பிரமிக்கவைக்கும் சங்கிலித் தொடர் ஏரிகள்


  "கடைசி ஏரிதான் முதலில் நிறையும். முதல் ஏரி கடைசியாக நிறையும்." அப்படியொரு தொழில்நுட்பத்தில் அமைந்ததுதான் சங்கிலித் தொடர் ஏரிகள்.
  * * * * * * *

  ரு மொழியின் செழுமை என்பது அதன் சொற்களில் இருக்கிறது. தமிழ் சொற்களுக்கு பஞ்சம் இல்லாத ஒரு மொழி. மனிதன் உருவாக்கிய நீர்நிலை கட்டுமானங்களுக்கு அவன் ஏகப்பட்ட பெயர் வைத்திருக்கிறான். இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி, மலங்கன், மடு, ஓடை, வாவி, சலந்தரம், வட்டம், தடாகம், நளினி, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம், கண்மாய்... அப்பாடி..! சொல்லிமுடிக்கவே மூச்சு முட்டுகிறது..!

  பொய்கை
  இத்தனை பெயர்களையும் அதன் பயன்பாட்டைப் பொறுத்து அந்தந்த நீர்நிலைகளுக்கு வைத்திருந்தார்கள். இயற்கையான நீர் ஊற்றுகள் உள்ள இடங்களில் அமைந்த நீர்நிலைகளுக்கு 'பொய்கை', 'ஊற்று' என்று பெயர். தானாகவே நீர் கசிந்து சிறிய அளவில் தோன்றும் நீர் நிலைகளுக்கு 'சுனை', 'கயம்' என்று பெயர். ஊற்றுகள் எதுவும் இல்லாமல் மழைநீர் மட்டும் தேங்கி இருக்கும் சிறு நீர் தேக்கத்திற்கு 'குட்டை' என்று பெயர். இன்றைக்கு இந்த சொல் சாக்கடை நீர் தேங்கும் இடத்தை குறிப்பதாக மாறிவிட்டது.

  மக்கள் குளிப்பதற்காக உருவாக்கப்பட்ட நீர்நிலைகளுக்கு 'குளம்' என்று பெயர். அழுக்கு போகக் குளிப்பது என்பது இப்போதைய வழக்கம். ஆனால், அன்றைய குளித்தலின் அர்த்தம் வேறு. பகல் முழுதும் வயலில் வெயிலில் வேலை செய்து வெப்பமான உடலை குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நடைமுறையே குளிர்த்தல். இதுவே காலப்போக்கில் குளி(ர்)த்தல் என்று மாறியது. குளங்கள் மனிதர்களின் உடலை குளிர்வித்தன. 

  ஊருணி
  குடிப்பதற்கும் சமைப்பதற்கும் என்ற உணவுத் தேவைகளுக்கு பயன்படும் நீர்நிலைகளை 'ஊருணி' (ஊண்–உணவு, ஊருணி–தண்ணீர்) என்று அழைத்தார்கள். இத்தகைய நீர்நிலைகளை அமைப்பதற்கு நிலத்தின் தன்மை ஆராய்வார்கள். நிலத்தின் உவர்ப்பு தன்மை நீரில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். சில ஊர்களில் நல்ல நிலத்தைக் கண்டறிவது சிரமம். அப்போது இருப்பதிலேயே உவர்ப்பு தன்மை குறைந்த நிலத்தில் ஊரணி அமைப்பார்கள்.

  நிலத்தால் மாறுபடும் நீரின் சுவையை இனிமையாக்க ஊரணிக் கரைகளில் நெல்லி மரங்களை நட்டுவைத்தார்கள். அது நீரின் சுவையை கூட்டும் அதே வேளையில் கிருமிகளையும் கொல்லும் மருந்தாகவும் பயன்பட்டன. ஊரணி அமைப்பதற்கும் வரைமுறைகள் நிறைய உண்டு.

  ஏர் உழுதல் தொழில்களுக்கு நீர் தரும் நீர்நிலைகளுக்கு 'ஏரி' என்று பெயர் வைத்தார்கள். வெறும் மழைநீரை மட்டுமே ஏந்தி தன்னுள் சேர்த்து வைத்துக் கொள்ளும் நீர்நிலைகளுக்கு 'ஏந்தல்' என்று பெயர். இதில் நதியின் நீர் சேர்வதில்லை.

  கண்மாய்
  நதியின் நீரை கால்வாய் மூலம் கொண்டு வந்து சேர்த்து அதன் மூலம் உருவாக்கப்பட்ட நீர்நிலைகளுக்கு 'கண்மாய்' என்று பெயர். இந்தப் பெயர்களை வைத்தே அந்த நீர்நிலைகளின் தன்மையை அறிந்து கொள்ள முடியும்.

  மழை எப்படி பொழிகிறது? என்று உலகம் அறியாத காலத்திலேயே அதைப்பற்றி பாடல்கள் எழுதியிருக்கிறார்கள் தமிழர்கள்.  மாவீரர் அலெக்ஸாண்டரின் ஆசிரியர் அரிஸ்டாட்டில் கூட கி.மு.4-ம் நூற்றாண்டில் 'குளிர்ச்சியான காலத்தில் காற்று உறைந்து மழைப் பொழிகிறது' என்று மழைக்கு விளக்கம் கொடுத்தார்.

  மற்றொரு கிரேக்க அறிஞரான தேல்ஸ் 'கடலின் அடித்தளத்தில் நீர் உற்பத்தியாகிறது. அந்த கடல் நீர் மண்ணால் உறிஞ்சப்பட்டு மலையின் உச்சிக்கு சென்று அங்கிருந்து ஆறாக வெளிப்படுகிறது' என்றார். எப்படிப்பட்ட அறிஞர்கள் அவர்கள் அவர்களே அவ்வளவு அறியாமையில் இருந்திருக்கிறார்கள்!

  ஆனால், அதே காலக்கட்டத்தில் வாழ்ந்த புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் தனது பட்டினப்பாலையில்

  “வான்முகந்த நீர் மழை பொழியவும்
  மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
  மாரி பெய்யும் பருவம் போல்
  நீரின்றும் நிலத்து ஏற்றவும்
  நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
  அளந்து அறியாப் பல பண்டம்.”
                                                                  -பட்டினப்பாலை, 126-131.
  என்று பூம்புகார் துறைமுகத்தின் பெருமை பாடுகிறார்.

  அதாவது, 'ஒருபுறம் கடல்நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டு மழை பொழிகிறது. மறுபுறம் பெய்த மழை ஆறுகளில் ஓடி கடலில் கலக்கிறது. அதுபோன்று புகார்த்துறையில் ஒருபக்கம் கப்பல்களில் இருந்து பல பண்டங்கள் வரிசையாக நிலத்துக்கு இறக்கப்படுகின்றன. மறுபக்கம் நிலத்திலிருந்து பல பண்டங்கள் வரிசையாக கப்பலுக்கு ஏற்றப்படுகின்றன.' என்கிறார்.

  அன்றே மழை எப்படி உருவாகிறது? எப்படி பொழிகிறது? என்ற ஞானத்தை பெற்றிருந்தார்கள். நாம் எத்தகைய மேன்மையான அறிவைப் பெற்றிருந்தோம் என்பதற்கு இதுவொரு சின்ன உதாரணம்.

  தமிழர்கள் வடகிழக்குப் பருவமழையைப் பற்றியும் கணித்து வைத்திருந்தார்கள். தமிழகத்திற்கு பெரும் மழையை கொண்டுவந்து சேர்ப்பது இதுதான். இதுவொரு கொடூரமான பருவமழை இதன் போக்கை அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ளமுடியாது. நினைத்தால் மேகமே வெடித்தது போல் கொட்டித் தீர்த்துவிடும். ஊரெல்லாம் வெள்ளக்காடாக மாற்றிவிடும். இல்லையென்றால் ஒரு சொட்டு நீர் கூட கீழே விழாமல் பெரும் வறட்சியை தந்துவிடும்.

  அப்படிப்பட்ட இந்த காட்டுத்தனமான பருவமழையை தங்களின் நீர் மேலாண்மையால் கட்டிப்போட்டு வைத்தார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கியதுதான் 'சங்கிலித் தொடர் ஏரிகள்'. வருடத்தில் மூன்று மாதங்கள் பெய்யும் மழையை தேக்கிவைத்து வருடம் முழுவதும் விவசாயம் செய்யும் தொழில்நுட்பம்தான் சங்கிலித் தொடர் ஏரிகள்.

  சங்கிலித் தொடர் ஏரிகள்
  இந்த ஏரிகள் சங்கிலித் தொடர் போல் ஒன்றன்பின் ஒன்றாக அமைத்திருப்பார்கள். முதல் ஏரியில் பாதியளவு மட்டும் தண்ணீர் நிறைப்பார்கள். அதன்பின் அந்த நீர் அடுத்த ஏரிக்கு போகும். அந்த ஏரியும் பாதியளவு நிறைந்ததும், அதற்கடுத்த ஏரிக்கு தண்ணீர் போகும். இப்படியே கடைசி ஏரி வரை எல்லா ஏரிகளிலும் பாதியளவு மட்டுமே நீரை நிரப்புவார்கள். எதற்கு பாதியளவு நீர் என்கிறீர்களா? அங்குதான் நமது நீர் பங்கீட்டு முறையின் உன்னதம் இருக்கிறது.

  முதல் ஏரி முழுதாக நிறைந்தால்தான் அடுத்த ஏரிக்கு தண்ணீர் என்றால் கடைசியில் இருக்கும் ஏரிகள் எல்லாம் நிறைவதற்கே வழியில்லாமல் போய்விடும். இதனால் முதல் ஏரி பாசனம் பெரும் விவசாயிகள் உயர்ந்தவர்களாகவும். கடைசி ஏரி பாசன விவசாயிகள் கையேந்துபவர்களாகவும் மாறிவிடுவார்கள். விவசாயிகளிடம் இந்த ஏற்ற தாழ்வு வந்துவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள்.

  அதனால் முதலில் சங்கிலித் தொடரில் இருக்கும் எல்லா ஏரிகளுக்கும் பாதியளவு தண்ணீர் கட்டாயமாக கொடுத்துவிடுவார்கள். இதில் ஒட்டு மொத்த மக்களும் கடவுளிடம் வேண்டுவது கடைசி ஏரி நிறைய வேண்டும் என்றுதான்.

  ஏரியின் கலிங்கு வரை நீர் நிறைந்துவிட்டால் ஏரியின் பாதி கொள்ளவிற்கு நீர் நிறைந்துவிட்டது என்று அர்த்தம். இந்த கலிங்குகளுக்கு மேல் இரண்டடி உயரத்தில் அணைக்கற்கள் கொண்டு வலிமையான சுவர் கட்டப்பட்டிருக்கும். இந்த சுவருக்கும் கலிங்குக்கும் இடையே பலகைகளை சொருகிவிட்டால் போதும். ஏரி நீர் வெளியேறாது. நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிவிடும்.


  இப்படி கடைசி ஏரி பாதி நிறைந்ததும், அந்த ஏரியின் கலிங்கு மீது பலகைப் போட்டு நீரைத் தடுத்து முழு கொள்ளளவையும் நிறைப்பார்கள். கடைசி ஏரிதான் முதலில் நிறையும். முதல் ஏரி கடைசியாக நிறையும். தாமிரபரணி ஆற்றின் சங்கிலித் தொடர் ஏரிகளில் கடைசி ஏரி திருச்செந்தூர் குளம்.

  கடைசி ஏரியில் ஒரு கோயில் அமைத்திருப்பார்கள். அந்தக் கோயிலில் ஏரி நிறைந்ததும் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறும். இந்த பூஜைதான் சங்கிலித் தொடர் ஏரிகளின் உயிர்ச் செய்தி. விவசாயிகள் விவசாயத்தை தொடங்கலாம் என்பதற்கான அனுமதி. ஆனாலும் தொடங்க மாட்டார்கள்.

  எல்லா ஏரிகளிலும் நீர் இருப்பதால் விவசாயத்துக்கான தொடக்க வேலைகள் மும்மரமாக நடக்கும். கடைசி ஏரி முழுதாக நிறைந்ததும் அதற்கு முந்திய ஏரியில் பலகை போடுவார்கள். அதுவும் நிறைந்ததும் அதற்கு முந்திய ஏரி. இப்படியாக கடைசியில் இருந்து முதல் ஏரி வரை ஒவ்வொரு ஏரியாக நிறைந்து கொண்டே வரும்.

  எல்லா ஏரிகளும் நிறைந்த பின் பாசனத்திற்கென்று ஏரியின் நீர் திறந்துவிடப்படும். இதனால் விவசாயிகள் ஒற்றுமையோடு இருந்தனர். ஏரிகளில் இருந்து நீர் எப்படி விவசாய நிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படுகிறது என்பதை ஏற்கனவே முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.

  ஒவ்வொரு ஏரிக்கும் விளைநிலங்கள் போலவே வடிகால் நிலங்களும் சொந்தமாக இருந்தன. ஏரி நிறைந்து வெளியேறும் உபரி நீர் வடிகால் நிலங்களில் சேர்க்கப்பட்டன. அந்த நீரையும் அடுத்த ஏரிகளுக்கு அனுப்பும் தொழில்நுட்பமும் நம்மிடையே இருந்தது. பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வயல்களில் இருந்து வெளியேற்றப்படும் நீரையும் வீணாக்காமல் அடுத்த ஏரியில் கொண்டுபோய் சேர்க்கும் தொழில்நுட்பமும் நம்மிடம் இருந்தது.

  சங்கிலித் தொடர் ஏரிகளின் குறைந்த எண்ணிக்கையாக 4 ஏரிகளும் அதிக எண்ணிக்கையாக 318 ஏரிகளும் இருந்தன. இன்று பாலைவனமாக காட்சியளிக்கும் பாலாறு தான் தனது குழந்தைகளாக 318 சங்கிலித் தொடர் ஏரிகளை வைத்திருந்த பெருந்தாய். அத்தனை ஏரிகளுக்கும் நீரைக் கொடுத்த பிரமாண்டமான நீர்வளம் கொண்ட நதியைதான் மணல் அள்ளி மணல் அள்ளியே பாலைவனமாக மாற்றிவிட்டோம்.

  'எப்படி இருந்த நாம், ஏன் இப்படி ஆனோம்?' அந்த சரித்திரத்தையும்  பார்ப்போம்.

                                                                                                                               -தொடரும்

  34 கருத்துகள்:

  1. எப்படி இருந்த நம்மை..இப்படி ஆக்கியவர்களின் சரித்திரத்தை அறிய தொடர்கிறேன் நண்பரே........

   பதிலளிநீக்கு
  2. எவ்வளவு சிறப்பான சிந்தனை... பகிர்ந்து வாழும் முறையை ஏனோ மறந்து அழிந்து கொண்டிருக்கிறோம்.....

   பதிலளிநீக்கு
  3. ஒரு பொருளைக் குறித்து பல சொற்கள் மொழியில் வழங்கப்பட்டாலும் அவற்றிற்கிடையே நுட்பமான வேறுபாடு உண்டு. ஊருணி, கண்மாய், ஏரி, குளம் போல.!
   ஆங்கிலேய ஆட்சி அழித்தொழித்த விடயங்களில் முதன்மையானது நம் மரபு சார்ந்ததெல்லாம் அறிவீனம் என்றும் முட்டாள்தனமானது என்றும் ஏற்பட்ட கற்பிதம்.
   நமக்கென்று உள்ள மருத்துவத்தை இழந்தோம், விவசாயத்தை இழந்தோம், நெசவை இழந்தோம், இயற்கையை அவதானித்து வாழும் வாழ்க்கை இழந்தோம்.

   அதனால் எல்லாம் இழந்த ஓர் நாளில் நின்று கொண்டு நம் முன்னோர் குறித்துச் சிந்திக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.
   பழமைகளில் ஒதுக்க வேண்டியனவற்றை ஒதுக்கவும் ஒழிக்க வேண்டியவற்றை ஒழிக்கவும் வேண்டுமென்பதில் நம்மிடம் மாற்றுக் கருத்தில்லை.

   ஆனால் எல்லாம் அறிவீனமென்று வெறுத்தொதுக்குவதில்தான் கோளாறு இருக்கிறது.

   இன்று நாம் காணும் அனுபவிக்கும் பல கோளாறுகளுக்கு இதுவே அடிப்படையும் கூட.

   தொடர்கிறேன் நண்பரே!

   த ம

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆம், நம் பாரம்பரியத்தை அறியாமல் நாம் வீனானோம். இனியாவது சுதாரித்துக்கொள்வோம்.

    நீக்கு
  4. பிரமிக்க வைக்கும் தகவல்கள் நண்பரே தொடர்கிறேன்...
   தமிழ் மணம் 4

   பதிலளிநீக்கு
  5. நெல்லிக்கனியாக இனிக்கும் செய்திகள் யாவும் படிக்கப் படிக்கச் சுவையாக உள்ளன.

   பட்டினப்பாலையில் உருத்திரங்கண்ணனார் சொல்லியுள்ளது படிக்க மிகவும் வியப்பாகத்தான் உள்ளது.

   சங்கிலித்தொடர் ஏரிகள் நம் முன்னோர்களின் தொழில்நுட்பத்தையும், நல்லெண்ணத்தையும், நமக்கு நன்கு எடுத்துச்சொல்வதாக உள்ளது.

   மேலும் தொடரட்டும் தங்களின் இந்த விழிப்புணர்வுப்பணி.

   பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நன்றி அய்யா!
    தங்களின் தொடர் வருகையும் பின்னூட்டமும் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது. தொடர்கிறேன்.

    நீக்கு
  6. அன்புள்ள அய்யா,

   நீர் நிலைகளுக்குப் பழந்தமிழன் எப்படி பகுத்தாய்ந்து பெயர் வைத்துள்ளான் என்பதை எண்ணுகின்ற பொழுது வியப்பாக இருக்கிறது. மழை பற்றிய தெளிந்த அறிவுடையவனாகப் புலவன் இருந்திருக்கிறான். பாலாற்றைப் பாழாக்கிய பாவிகளானோம்.

   தமிழ் மணம் ஆறாகப் பெருகட்டும்.

   பதிலளிநீக்கு
  7. முதல் ஏரி, கடைசி ஏரி என்ற சங்கிழ்த் தொடர் ஏரிகள் தகவல் புதுசு மற்றும் பிரமிப்பு அளிப்பது. தகவலுக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
  8. நம் முன்னோரின் நீர்மேலாண்மையை நினைத்தால் பெருமையாகவும், இன்றைய அவலநிலையை நினைத்தால் வெட்கமாகவும் உள்ளது. சங்கிலித்தொடர் ஏரிகளின் அமைப்பும் செயல்பாடும் வியக்கவைக்கின்றன. அந்நாளில் உழவுத்தொழில் செழிக்க இதுவும் ஒரு முக்கியக்காரணம் அல்லவா? நீர்நிலைகளுக்கான பெயர்க்காரணங்கள், பட்டினப்பாலைப் பாடல், ஏரிகளின் திட்டமிட்ட வடிவமைப்பு என்று இப்பதிவில் ஒவ்வொரு பத்தியும் வியப்பில் ஆழ்த்தி விழிவிரியச் செய்கின்றன. அற்புதமான இப்பதிவு பலரையும் சென்றடையவேண்டும். உங்கள் உழைப்புக்கு மனமார்ந்த பாராட்டுகள் செந்தில்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இன்றைக்கு இருக்கும் அதே பருவநிலைதான் அப்போதும் இருந்தது. மூன்று மாதம் மட்டும் மழை. அந்த மழையை சரியாக சேகரித்து வருடம் முழுவதும் செழிக்க வைத்தார்கள். அவர்கள் மேன்மையானவர்கள் தான்.
    வருகைக்கு நன்றி!

    நீக்கு
  9. அருமை அருமை சகோ,

   நம் முன்னோர் தந்த நீர் மேலாண்மைக் குறித்து,, அருமை,

   நானும் கொஞ்சம் சங்க இலக்கியங்களில் இருந்து தொகுத்தேன். நேரம் இல்லை ,

   தொடர்கிறேன்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தொடருங்கள். நானும் தொடர்கிறேன்.
    வருகைக்கு நன்றி சகோ!

    நீக்கு
  10. எத்தனை அறிவு சார்ந்த நீர் மேலாண்மை. இயற்கையோடு ஒன்றி வாழும் நிலையை இழந்து நமது முன்னோர்களின் பலவற்றையும் நாம் இன்று இழந்து நிற்கின்றோம். எதையோ தேடித்திரிந்துகொண்டு. அருமையான தொடர். பல தகவல்கள். தொடர்கின்றோம்

   கீதா: எங்கள் ஊரைச் சுற்றி அல்லிப்பொய்கை, தாமரைப் பொய்கைகள் உண்டு, தடாகங்களும்(நாங்கள் குளம் என்போம்...) சுனைகள் உண்டு. ஊருணிகள், குளங்கள், ஏரிகள், குறுக்குவெட்டுக் கால்வாய்களும், கால்வாய்களும், நீரோடைகளும் வரப்புகளுக்கிடையில் ஓடிச் சங்கிலியாய் கைகோர்த்துக் கொண்டு, நதிகளுமாய் அத்தனை அழகுடன் பொலிவுடன்...இன்று நினைத்தாலும் மனம் விம்மும்.

   தொடர்கின்றோம்..

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே!

    நீக்கு
  11. வியக்கவைக்கும் தகவல்கள். பாராட்டுக்கள்! தொடர்கிறேன்.

   பதிலளிநீக்கு
  12. வணக்கம்
   அறியாத தகவல் ஒவ்வொன்றையும் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 11
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   பதிலளிநீக்கு
  13. தகவல் தொழில் நுட்பம் வளராத காலத்திலேயே ,தேவையான விவரங்கள் எப்படி பரிமாறிக் கொள்ளப் பட்டிருக்கிறது ?ஆனால் ,இன்று ?நீரின் முழுக் கொள்ளளவை தேக்கி விட்டு ,மொத்தமாய் திறந்து விட்டு மக்களை சாகடித்துக் கொண்டிருக்கிறோம் !

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்