Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

நீர்வழிச் சாலை: இருப்பைக்குடி கிழவன் - 8


இருப்பைக்குடி கிழவன்

இவர் செய்த இன்னொரு பிரமாண்டம், ஆற்றின் மட்டத்திலிருந்து உயரமான இடத்திற்கு நீரைக் கொண்டு சென்று அங்கும் ஏரிகளை உருவாக்கியதுதான். இதனால் நீரைக் காணாமல் இருந்த வறட்சிப் பகுதிகள் எல்லாம் செழிக்கத் தொடங்கின.
* * * * * * *

னது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார், 'அது என்ன எப்போதும் தமிழர் நீர் மேலாண்மை என்றே சொல்கிறீர்களே? மற்ற எவரும் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கவில்லையா?' என்று. உண்மைதான் மற்றவர்கள் யாரும் தமிழர்கள் அளவிற்கு சிறந்து விளங்கவில்லைதான்.

மற்றவர்களுக்கு நிறைய ஜீவநதிகள் இருந்தன. வருடம் முழுவதும் நீரை அள்ளி வழங்கும் அற்புத நதிகள் இருந்தன. இதுபோக மிதமான மழையை வருடம் முழுவதும் தந்து கொண்டிருந்த இயற்கை வளம் இருந்தது. அதனால் அவர்களுக்கு நீரை தேக்க வேண்டிய அவசியமில்லை. 

தமிழகத்தில் நிலைமை அப்படியில்லை. மிதமான மழையெல்லாம் இங்கு கிடையாது. வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை என்ற கதைதான். ஜீவநதிகள் இல்லை. இருக்கும் ஒரே ஜீவநதி காவிரி மட்டும்தான். அதிலும் கர்நாடகா கட்டிய அதிகமான அணைகளால் தண்ணீரைப் பார்ப்பது அரிதாக மாறிவிட்டது.


மற்ற சமூகங்களில் விவசாயம் மழையை நம்பியும் நதியை நம்பியுமே இருந்தன. தமிழகத்தில் நதிகள் குறைவு. அதனால் ஆற்றுப் பாசனமும் குறைவு. வருடத்தில் சில மாதங்கள் பெய்யும் மழையை வைத்துதான் விவசாயம் செய்யவேண்டிய நிலை. அதற்காக நீரை தேக்க வேண்டியிருந்தது. அதை பத்திரமாக பகிர்ந்து கொடுக்க ஒரு மேலாண்மை தேவைப்பட்டது. அதனால்தான் தமிழர்கள் தங்களுக்காக உருவாக்கிய அரிய பொக்கிஷமாக இந்த 'நீர் மேலாண்மை' இருக்கிறது.

தமிழர்கள் ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் தொழில்நுட்பத்தை 5,000 ஆண்டுகளுக்கு முன்பே கற்றிருந்தனர். அப்படி கட்டிய அணைகளுக்கு ஆரியர்கள் மூலம் ஆபத்து வந்தது. இன்றைக்கு எல்லாமே 'ஆங்கிலமயமாக்கம்' ஆவது போல் அன்று எல்லாம் 'ஆரியமயமாகிக் கொண்டிருந்த காலம்'.

ஆரியர்களின் வேத நூல்கள் விவசாயத்தைப் போற்றவில்லை. அவைகள் 'பூமியை கீறுவது பாவம்' என்றன. அவர்களைப் பொருத்தவரை நிலத்தை உழுகாமல் அப்படியே விதைப்பதுதான் விவசாயம். தமிழர்களோ அகலமாக உழுவதைவிட ஆழமாக உழுது கொண்டிருந்தனர். விவசாயத்தை உன்னத தொழிலாக போற்றினர்.

அதேபோல் 'நீரை சிறைப்பிடிப்பதும் பாவம்' என்றன ஆரிய வேத நூல்கள். அணையை உடைத்து நீரை விடுதலை செய்தால் இந்திரன் மகிழ்வான் என்றன. இந்திரனை மகிழ்விப்பதற்காக அவ்வப்போது அணையை உடைத்துக் கொண்டிருந்தார்கள் ஆரியர்கள்.

அதனால் அணைக் கட்டுவதை தமிழர்கள் தவிர்த்தே வந்தார்கள். நீரைத் தேக்கிவைக்கும் இந்த மாபெரும் தொழில்நுட்பத்திற்கு இப்படியொரு ஆபத்து என்றபோது அதற்கு மாற்றாக ஒன்றை உருவாக்க வேண்டிய நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டது. அப்போதுதான் அணைக்குப் பதிலாக ஆற்றின் போக்கை தடுத்து அதை வேண்டிய இடத்தில் தேக்கி நீர்நிலைகளை உருவாக்க முனைந்தனர். அப்படி உருவாக்கப்பட்டதுதான், ஏரிகள், குளங்கள் இன்னும் பல.


சோழர்களுக்காவது காவிரி என்ற ஒரு ஜீவநதி இருந்தது. பாண்டியர்களுக்கு அதுவும் இல்லை. எல்லாமே மழைக்காலத்தில் மட்டும் நீர் நிறைந்து ஓடும் ஆறுகள் மட்டும்தான் அவர்களிடம் இருந்தது. அதை வைத்துதான் விவசாயம் செய்ய வேண்டும். குடிநீர் அளிக்க வேண்டும்.

மக்கள் அனைவருக்கும் உணவளிப்பது மன்னனின் தலையாய கடமை. அதனால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாக வேண்டிய பொறுப்பு எல்லா மன்னர்களுக்குமே இருந்தது. இதில் தவறினால் புலவர்கள் கேவலமாக பாடியே கொன்று விடுவார்கள். பழிச்சொல்லுக்கு அஞ்சியவர்கள் அன்றைய மன்னர்கள்.

அதற்காகவே நீரை சேமிக்கும் உத்தியை மன்னர்கள் மாய்ந்து மாய்ந்து செய்தார்கள். இந்த மன்னர்களில் முதன்மையானவர் 'இருப்பைக்குடி கிழவன்' என்ற சிற்றரசன். இவரை நீரியியல் நிபுணர், நீரியியல் பொறியாளர், நீரியியல் வல்லுநர், நீரியியல் விஞ்ஞானி என்று எந்த பெயர் கொண்டு அழைத்தாலும் அது இவரது நீர் நிபுணத்துவத்துக்கு குறைவான சொல்லாகவே இருக்கும். அந்தளவு ஞானம் கொண்ட ஒரு மன்னன்.

இவர் பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் ஆட்சிக்கு கட்டுப்பட்டிருந்த 'இருஞ்சோணாடு' என்ற பகுதியை ஆட்சி செய்த சிற்றரசன். இன்றைய சாத்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நாடு அது.

வறண்ட நிலப்பரப்பை அதிகம் கொண்ட தனது நாட்டை உணவு உற்பத்தியில் தன்னிறைவு மிக்க நாடாக மாற்றவேண்டும் என்ற கனவில் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை நீர் பாசனத்திற்காகவே செலவழித்த மன்னன். தனது நாடு மட்டுமல்லாமல் பாண்டிய நாடு முழுவதும் ஏரிகளை உருவாக்கிய பெருமை இந்த மன்னனையே சேரும். வைகை நதிக்கரையில் பல கண்மாய்களை உருவாக்கி அவற்றுக்கு நீர் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய்களை வடிவமைத்து தந்த தொழில்நுட்ப பொறியாளர் இந்தக் கிழவன் தான்.


இன்றைக்கு பெரிதாக பேசப்படும் 'வாட்டர் ஹார்வெஸ்டிங்' என்ற 'நீர் அறுவடை' அதாவது மழைநீர் சேமிப்பையை 1,200 வருடங்களுக்கு முன்பே செயல்படுத்திக் காட்டிய முன்னோடி. கி.பி.815 முதல் கி.பி.890 வரையிலான காலக்கட்டத்திலேயே இந்த தொழில்நுட்பத்தை முதன் முதலாக பயன்படுத்தியவர் இவர்தான். அதனால் இவரை 'மழைநீர் சேகரிப்பின் தந்தை' என்றும் சொல்வார்கள். மழைநீரை கொஞ்சம் கூட வீணாக்காமல் அதை அப்படியே ஓரிடத்தில் சேர்த்துவைத்து விவசாயத்துக்கு பயன்படுத்துவத்தில் கில்லாடி. மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தார்.

இவர் செய்த இன்னொரு பிரமாண்டம், ஆற்றின் மட்டத்திலிருந்து உயரமான இடத்திற்கு நீரைக் கொண்டு சென்று அங்கும் ஏரிகளை உருவாக்கியதுதான். புவியீர்ப்பு விசைக்கு எதிராக எப்படி நீரை மேலேற்றினார் என்ற விவரம் கிடைக்கவில்லை. ஆனாலும் நீர் மேலாண்மையில் சாதனை மன்னர் இவர் என்பதில் சந்தேகமில்லை. இந்த செயல்முறையால் அதுவரை நீரைக் காணாமல் இருந்த வறட்சிப் பகுதிகள் எல்லாம் செழிக்கத் தொடங்கின.

கிழவனேரி, திருமால் ஏரி, மாறனேரி,  திருநாராயணன் ஏரி, பெருங்குளம் என்று இன்றும் பயன்பாட்டில் இருக்கும் இந்த ஏரிகள் எல்லாம் அவர் உருவாக்கியதுதான். தற்போது தென் மாவட்டங்களில் ஓரளவு விவசாயம் நடைபெறுகிறது என்றால் அதற்கு  இருப்பைக்குடி கிழவன் அன்று ஏற்படுத்தித் தந்த நீர்நிலைகளும் பெரும் காரணம்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 -தொடரும்



தொடர்புடைய பதிவுகள்



44 கருத்துகள்

  1. இந்தத்தொடர் மிகவும் சுவாரஸ்யமாகவே சென்று வருகிறது. பாராட்டுகள்.மேலும் அறிய ஆவல். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகை தந்து பாராட்டும் வழங்கிய தங்களுக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  2. இருப்பைக்குடி 'கிழவன்' என்றாலும் குமரன்கள் கூட செய்ய முடியாத வேலைகளையும் செய்து இருக்காரே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிழவன் என்றால் வயது முதிர்ந்தவர் என்று அர்த்தமில்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் 'சர்' என்ற பட்டம் எப்படி மேன்மையான மக்களுக்கு கொடுக்கப்பட்டதோ அதைப்போலவே தமிழ் மன்னர்கள் மேன்மையான மனிதர்களுக்கு 'கிழவன்' என்ற பட்டத்தைக் கொடுத்தார்கள். 'கிழவன்' என்றால் 'ஞானம் மிக்க', 'மேன்மை பொருந்திய' என்று அர்த்தம்.

      நீக்கு
  3. இருப்பைக்குடி கிழவன் பெரிய மேலாண்மைக்காரராக இருப்பார் போல...இப்படிப்பட்ட மேலாண்மைக்காரர்கள் இருந்த நாட்டில் இப்போதைய ஆட்சிக்காரர்களை நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கின்றது. இதை எல்லாம் எடுத்துரைக்க ஆட்கள் இல்லையா என்ன? வேதனையாக இருக்கின்றது..

    அருமையான தகவல்கள் உங்கள் உழைப்பைப் பறைசாற்றும் தகவல்கள். இதை நீங்கள் நூலாகவே கொண்டுவரலாம் சகோ...நீர்மேலாண்மை குறித்து விவசாய மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். தொடர்கின்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வளமான கருத்துக்கும் நன்றி நண்பர்களே!

      நீக்கு
  4. தகவல்கள் ஒவ்வொன்றும் சிறப்பு... தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. அருமையான வரலாறு! படிக்கத் தூண்டும் நடை! தொடர்வேன்!

    பதிலளிநீக்கு
  6. இதற்கு முந்தைய பதிவினையும், இப் பதிவையும் இன்றுதான் படித்தேன். இரண்டிலும் சுவையான விளக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  7. மடைத்திறந்த வெள்ளமாக தங்கள் மொழிவளம்,கருத்து செழுமை,அருமை. தேவையான நேரத்தில் முக்கியமான பதிவு. காத்திருக்கிறோம் நிறைய தெரிந்து கொள்ள... அடுத்த தலைமுறையினர் அறிய வேண்டிய பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  8. வணக்கம் நண்பரே!

    நகலெடுப்பதைத் தடைசெய்து விட்டீர்கள் போல..:(

    இருந்தும் நகலெடுத்தேன். :))

    ““““““““ஆரியர்களின் வேத நூல்கள் விவசாயத்தைப் போற்றவில்லை. அவைகள் 'பூமியை கீறுவது பாவம்' என்றன. அவர்களைப் பொருத்தவரை நிலத்தை உழுகாமல் அப்படியே விதைப்பதுதான் விவசாயம். ““““““““

    பொதுவாக நாடோடியினக்குழுக்களின் நம்பிக்கையே இது. விதைக்கக் கூட வேண்டியதில்லை. தேவையானது கிடைக்கும் இடத்தை நோக்கி நகர்ச்சிதான் அவ்வாழ்க்கை.

    ஆனால் தனக்கென ஒரு மண்ணையும் மரபையும் கொண்ட சமூகம் அப்படி இருக்க முடியாதுதானே?!

    பதவின் ஒவ்வொரு செய்தியிலும் தங்களின் உழைப்பு மிளிர்கிறது.

    தமிழ் மணத்தில் நுழைய த ம 7

    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நேற்று தான் இங்கிருந்து [துபாய்] வெளியாகும் தினத்தந்தியில் செம்பரப்பாகம் ஏரியில் எப்படியெல்லாம் ஆக்ரமிப்பு ஏற்பட்டு நீர்வளம் பாழாகிறது என்பதைப்படித்தேன்.

    இப்போது அந்தக்காலத்தில் நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் குறைந்த நீர்வளத்தை நிறைந்த நீர்வளமாகப் பெருக்கினார்கள் என்பதையும் உங்கள் பதிவில் படித்தபோது பெருமூச்செறியத்தான் முடிந்தது.

    இருப்பைக்குடி கிழவன் எப்ப‌டி நதி நீரை மேலேற்றி ஏரிகளை உண்டாக்கியிருக்க முடியும்? யோசித்துப்பார்க்கையிலேயே பிரமிப்பு மேலோங்குகிறது! திரு.துளசிதரன் சொன்னது போல நீர் மேலாண்மையைப்ப்ற்றி நீங்கள் தொடர்ந்து எழுதும் கட்டுரைகளை புத்த வடிவில் கொன்டு வந்தால் இளைய தலைமுறைக்கு எதிர்காலத்தில் நிச்சயம் அது ஒரு பொக்கிஷ‌மாக விளங்கும்.

    அருமையான பதிவு!!

    பதிலளிநீக்கு
  10. இதுவரை யாருக்குமே தெரியாத அறிய தகவல்களை பகிர்ந்து வருவதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. //பூமியை கீறுவது பாவம்//
    இது அன்றைய மனிதன்

    //பூமியை துளையிடுவது லாபம்//
    இது இன்றைய மனிதன்

    எவ்வளவு மாற்றங்கள் தொடர்கிறேன் நண்பரே..
    தமிழ் மணம் 9

    பதிலளிநீக்கு
  12. தங்களின் தகவல்கள் படிக்க..படிக்க.. அன்றைய காலத்தை பற்றிஅறிய பெருமையாகஇருக்கிறது நண்பரே..தொடருகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம்
    மறைந்து கிடக்கும் தகவலை வெளியில் கொண்டுவந்து வெளிச்சம் போட்டு காட்டும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள் த.ம 11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  14. அன்புள்ள அய்யா,

    ‘இருப்பைக்குடி கிழவன்’ மழைநீர் சேகரிப்பின் தந்தையாக விளங்கிய சிற்றரசனைப் பற்றி அறியச் செய்தீர்கள். ஆரியர்களால் அணைக்கும் ஆபத்தா? ஆரிய மாயை இன்னும் விட்டபாடில்லை.

    நடந்தாய் வாழி காவேரி நடந்தாய் வாழி காவேரி
    நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
    நடந்தாய் வாழி காவேரி

    உணவளிக்கும் உழவர்க்கெல்லாம் கண்ணாக பண்பு
    உயர்ந்த தமிழ் நாட்டின் செல்லப் பெண்ணாக
    புலவரெல்லாம் பாராட்டும் பொன்னாக அன்பு
    பொங்கிவரும் காவிரியே வாழியாவே

    நன்றி.
    த.ம.11

    பதிலளிநீக்கு
  15. உங்கள் உழைப்பின் அருமை எழுத்தில் தெரிகிறது ....உண்மையில் பெரு மகிழ்வும் ..உங்கள் மீது சற்று பொறாமையும் வருகிறது

    பதிலளிநீக்கு
  16. உண்மையில் தமிழ்நாட்டில் பொழியும் மழையின் அளவு ஆந்திரா, கர்நாடகாவை விட அதிகம். பாதுகாத்து வைக்கத் தெரியாமல் இருப்பது நம் குற்றம்.

    உபயோகமான பல தகவல்களைச் சேகரித்துக் கொடுக்கிறீர்கள். பாராட்டுகள். ஆற்றி உயரத்திலும் அதிகமான உயரத்துக்கு எப்படி நீரை மேலேற்றினார்கள் என்பதையும் தேடித் தர வேண்டுகிறேன்.

    தம +1

    பதிலளிநீக்கு
  17. தங்களுடைய இந்தத் தொடரைப் படிக்குமாறு 'தில்லையகத்து கிரானிக்கிள்சு' கீதா அம்மணி பரிந்துரைத்தார். நல்ல பரிந்துரை! தெரியாத பல தகவல்களை எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அய்யா! படித்து கருத்திட்ட தங்களுக்கும் அறிமுகப்படுத்திய கீதா அவர்களுக்கும் நன்றி!

      நீக்கு
  18. அறியவேண்டிய, அறிந்திராத தகவல்களைத் தாங்கள் தரும் விதம் அருமையாக உள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
  19. நீர் மேலாண்மை பற்றிய தகவல்களை சேகரித்து வெளியிடு மிக அ௫மை. மேலும் எல்லா இடங்களிலும் இதனை அமல்படுத்த அரசு அல்லாத தன்னார்வளர்களை ஒ௫ங்கினைத்து(கோவை சிறுதுளி) செயல்படுத்த வேண்டும்

    பதிலளிநீக்கு
  20. அருமை.. எவ்வளவு அரிய விஷயங்கள்.. பண்டைய தமிழ்மக்களின் நீர்மேலாண்மை குறித்து எங்கிருந்து இவ்வளவு தகவல்கள் திரட்டுகிறீர்கள் என்று வியப்பாக உள்ளது. தொடரட்டும் இவ்வரிய முயற்சி. பாராட்டுகள் செந்தில்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை