ஞாயிறு, ஜூலை 31, 2016

வாங்க.. சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம்..! - 2


முந்தைய பதிவின் தொடர்ச்சி..

லகம் முழுவதும் லட்சக்கணக்கில் வங்கிகள் இருந்தாலும் சுவிஸ் வங்கியில் மட்டும் நமது இந்தியர்கள் பணத்தை கோடி கோடியாய் கொண்டு போய் கொட்டக் காரணம், நம் நாட்டில் மட்டும்தான் கணக்கு காட்டாமல் சட்ட விரோதமாக எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும் என்ற அடிப்படை காரணம்தான். மற்ற நாடுகளில் கணக்கில் வராமல் சம்பாத்தியம் என்பது கடினமான காரியம். இந்தியாவில் அது சுலபம் அதனால்தான் சுவிஸ் வங்கியின் 60 சதவீத கணக்குகள் இந்தியர்களுடையதாக இருக்கிறது.


சுவிஸ் வங்கியில் இரண்டு விதமான கணக்கு முறைகள் உள்ளன. ஒன்று உலகம் முழுவதும் எல்லா வங்கிகளும் பின்பற்றும் சாதாரண நடைமுறை. அதாவது கணக்கு வைத்திருப்பவரின் பெயர் வெளிப்படையாக தெரியும். டெபாசிட் செய்த தொகைக்கு வட்டி கிடைக்கும். இந்த முறை நமது இந்திய ஊழல்வாதிகளுக்கு பிடிக்காத முறை. இந்த முறை கணக்கை நமது இந்தியர்கள் யாரும் சுவிஸ் வங்கியில் வைக்கவில்லை என்பது தனிக்கதை. 

மற்றொரு முறைதான் இந்திய அரசியல்வாதிகளுக்கும் சட்டவிரோத தொழில் செய்பவர்களுக்கும் பிடித்தமானது. இதில் கணக்கு வைத்திருப்பவரின் பெயர் இருக்காது. எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்தாலும் எப்படி வந்தது என்று கேட்க மாட்டார்கள். இரண்டாவது கணக்கு முறையில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர் சுவிஸ் வங்கியில் வேலை செய்யும் யாருக்குமே தெரியாது. மிக உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு மட்டுமே அது தெரியும். அவர்களும் எந்த காரணத்தைக் கொண்டும் பெயரை வெளியே சொல்லக்கூடாது. மீறி பெயரை சொன்னால் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், 50 ஆயிரம் சுவிஸ் ஃபிராங்க் அபராதமும் செலுத்த வேண்டும். அதனால் யாரும் கணக்கைப் பற்றி வாயை திறக்கமாட்டார்கள்.


நம்மூரில் வெறும் ஆயிரம் ரூபாயை வைத்து வங்கியில் புதிதாக கணக்கு தொடங்கிவிடலாம். சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்க மிக குறைந்தபட்ச தொகையாக ஒரு கோடி ரூபாய் வேண்டும். சில வங்கிகள் இந்தியர்களின் இரண்டாவது வகை கணக்கிற்கு ரூ.50 கோடியில் இருந்து 100 கோடி வரை டெபாசிட் செய்ய சொல்கிறது. நம்மூர் வங்கிகளில் இப்படி கோடி கணக்கில் டெபாசிட் செய்தால் கிடைக்கும் வட்டியில் கால்நீட்டி உட்கார்ந்து வாழ்நாள் முழுதும் சாப்பிடலாம். 

சுவிஸ் வங்கியில் இப்படி கோடிக்கணக்கில் செய்யப்படும் பணத்திற்கு ஒரு பைசா கூட வட்டி கிடையாது. மாறாக நாம் சுவிஸ் வங்கிக்கு பணம் கொடுக்க வேண்டும். கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறதோ அந்த தொகைக்கு 3 சதவீதம் சேவைக் கட்டணமாக கொடுக்க வேண்டும். உதாரணமாக நமது கணக்கில் 1000 கோடி இருந்தால் வருடத்திற்கு 30 கோடி ரூபாய் சேவைக் கட்டணமாக தரவேண்டும். நாம் தர வேண்டியதில்லை. வங்கியே நம் கணக்கில் இருந்து எடுத்து கொள்ளும். அப்படி பார்த்தால் நமது முத்துவேல் கருணாநிதி 35,006 கோடி ரூபாய் சுவிஸ் வங்கியில் வைத்துள்ளார். (பார்க்க: முந்தைய பதிவு) அவர் ஒருவர் மட்டும் வருடத்திற்கு 105 கோடி ரூபாயை சேவைக் கட்டணமாக தருகிறார்.


ஏன் நம் பணத்திற்கே நம்மிடம் கட்டணம் கேட்கிறார்கள்? என்று கேட்டால் நமது ஊரில் வங்கி லாக்கரில் நகை, பத்திரங்கள் வைத்து கொள்வதற்கு நமது நகையாக இருந்தாலும் பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு கட்டணம் வங்கிக்கு செலுத்துகிறோம் அல்லவா.. அப்படிதான் இதுவும். நமது பணத்தை யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கிறார்களே அதற்குத்தான் அந்த பணம். 

இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இந்த சேவை பணத்தை வருடந்தோறும் கட்ட முடியாமல் மொத்த பணத்தையும் இழந்தவர்களும் இருக்கிறார்கள். வங்கி கணக்கு எண் மட்டும்தான் இங்கு மிக மிக முக்கியம் அதை மறந்துவிட்டால் அவ்வளவுதான். பலரும் ரகசியமாக இந்த கணக்கை வைத்திருப்பதால் கணக்கு எண்ணை தொலைத்துவிட்டு பணத்தை எடுக்க முடியாமல் தவிப்பவர்களும் உண்டு. இது கணக்கற்ற பணம் என்பதால் மற்ற வங்கிகள் போல வேறு ஆவணங்களைக் காட்டி பணத்தைப் பெற முடியாது. சேவைக் கட்டணம், மறந்தவர்கள் விட்டுப்போன பணம், வாரிசில்லாமல் கணக்கில் கிடக்கும் பணம், இப்படி ஏகப்பட்ட பணம் வங்கிகள் மூலமே வருவதால் சுவிஸ் நாட்டின் பொருளாதாரமே வங்கியை நம்பித்தான் உள்ளது. 

இங்கு கணக்கு வைத்திருப்பவர் குற்றவாளியாக இருக்கும் பட்சத்தில் அவர் மீது அந்த நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கையின் பேரில் தேவைப்பட்டால் சுவிஸ் வாங்கி தனது ஒத்துழைப்பையும் விவரத்தையும் தர மறுப்பதில்லை. நாளுக்கு நாள் கோடிக்கணக்கில் பணம் சேர்ந்து கொண்டே வரும் சுவிஸ் வங்கியில் நமது இந்தியர்களின் நிலை என்ன தெரியுமா?

சேவைக் கட்டணம் கட்ட முடியாமலும், கணக்கு எண் மறந்து போனதாலும் இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் இழந்த பணம் 189 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல். சுவிஸ் வங்கியில் கணக்கு வைக்க மிதமிஞ்சிய பணம் மட்டும் இருந்தால் போதாது. நல்ல ஞாபக சக்தியும் வேண்டும்.

அவ்வளவுதான் விதிமுறைகள், வாங்க சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்க போகலாம்..!சனி, ஜூலை 30, 2016

வாங்க.. சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம்..!ங்கள் ஏரியாவில் இருக்கும் ஒருவர் சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கியிருப்பது எனக்கு அரசல்புரசலாக தெரியவந்தது. அவரிடம் நைசாக பேசி சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கும் விவரத்தை தெரிந்து கொண்டேன். நமது வலைப்பதிவர்கள் பலரும் சுவிஸ் வங்கியில் கணக்கு வைக்க ஆவலாய் ஒற்றைக்காலில் நிற்பதால், அந்த ரகசியத்தை இங்கே பகிர்கிறேன்.  

ஊழல் அரசியல்வாதிகள், சர்வாதிகாரிகள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவோரின் சொர்க்கம் சுவிஸ் வங்கி. இதற்கு காரணம் வங்கியின் ரகசியத்தை பாதுகாக்கும் அந்த நாட்டின் சட்டம். 

18 வயது பூர்த்தியடைந்த எந்த நாட்டவரும் சுவிஸ் வங்கியில் கணக்கு .தொடங்கலாம். 101 நாடுகளை சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் பணத்தை பாதுகாப்பாக பதுக்கி வைத்திருக்கிறார்கள். சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்குவது அவ்வளவு எளிதானதல்ல. புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதில் இந்த வங்கி ஏகப்பட்ட எச்சரிக்கையோடு இருக்கிறது. அப்படியிருந்தும் ஏராளமான கணக்குகள் தினமும் தொடங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

சட்டதிட்டமெல்லாம் சாதாரணமான கணக்கு தொடங்குபவர்களுக்குத்தான். கோடிக்கணக்கில் பணம் கொட்டும் நபருக்கு இந்த கெடுபிடிகள் எதுவும் கிடையாது. இப்படிப்பட்ட கணக்கை தொடங்கிக் கொடுப்பதற்காகவே பல நிறுவனங்கள் தரகர்களாக செயல்படுகின்றன. 

வங்கி கணக்கு தொடங்குவதற்கு முன்னர் வங்கி சேவையில் உள்ள தேவைகள், பணம் பற்றிய தகவல், அடுத்த 12 மாதங்களில் எவ்வளவு பணம் முதலீடு செய்யப்படும் என்பன போன்ற விவரங்களை கணக்கு தொடங்குபவர் அளிக்க வேண்டும். கணக்கு தொடங்க பாஸ்போர்ட் இருந்தால் போதுமானது. இருப்பிடத்தை உறுதி செய்ய சமீபத்திய டெலிபோன்  பில், மின்சார ரசீது போன்றவற்றில் ஒன்றை கொடுக்கலாம். கணக்கு தொடங்கும் நபரின் பொருளாதார பின்னணி, பணம் வரும் விவரம், அதற்கான ஆவணம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.


கொடுக்கும் விவரம் உண்மையானதாக .இருக்க வேண்டும். அளிக்கும் தகவல்கள் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும். நேரில் சென்று கணக்கை தொடங்குவதற்கு மூன்று மணி நேரம்  ஆகும். தபால் மூலம் பாஸ்போர்ட் அனுப்பியும் கணக்கை தொடங்கலாம்.

கணக்கு தொடங்க குறைந்தபட்சம் 500 சுவிஸ் ஃபிராங்க் இருந்தால் போதும். ஆனால், சில வங்கிகள் 10 லட்சம் சுவிஸ் ஃபிராங்க் டெபாசிட் செய்ய சொல்கின்றன. ஒரு சுவிஸ் ஃபிராங்க் 68 ரூபாய்க்கு சமமானது. சுவிஸ் வங்கிக்கு எந்த நாட்டிலும் கிளைகள் கிடையாது.

சுவிட்சர்லாந்து 1505-ம் ஆண்டுக்குப் பிறகு எந்த நாட்டுடனும் போரில் ஈடுபட்டதில்லை, என்பதால் இங்கு அரசியல் ஸ்திரத்தன்மை மிக வலிமையாக  உள்ளது. சுவிஸ் தன்னுடைய பணப்பரிமாற்றத்துக்கு தங்கத்தை பின்னணியாக கொண்டுள்ளது. உலக அளவில் மிகவும் நிலையான மதிப்பைக் கொண்ட பணமாக சுவிஸ் பணம் கருதப்படுகிறது.


நெட் பேங்கிங், சுலபமான முதலீட்டு முறைகள் போன்றவற்றால் சிறப்பான வங்கி சேவையை வழங்குகிறது. வாடிக்கையாளர் இறந்துவிட்டால் அவருடைய வாரிசுக்கு பணம் போய் சேரும். ஆனால், வாரிசு என்று நிரூபிப்பது சுலபமில்லை. 10 வருடங்களுக்குள் எந்த வாரிசும் வரவில்லை என்றால் பத்தாவது ஆண்டில் அந்த கணக்கு செயலற்றதாகிவிடும். இதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் வாரிசுகளிடம் வங்கிக்கணக்கு விவரங்களை தெரிவிக்கும்படி தனது வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து அறிவுறுத்திக்கொண்டே இருக்கும். தொடங்கப்பட்ட வங்கிக்கணக்கை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம். அதிக அளவு பணம் கணக்கில் இருந்தால் அதனை எடுக்க ஓரிரு நாட்கள் அவகாசம் கொடுக்கவேண்டும். மற்றபடி எந்த செலவும் இல்லாமல் வங்கிக்கணக்கை முடித்துக்கொள்ளலாம்.

                                                                                                                             -தொடரும் 
வியாழன், ஜூலை 28, 2016

உலகின் மிகப் பெரிய இயந்திரம்

லகத்திலேயே மிகப் பெரிய இயந்திரம் எங்கிருக்கிறது? அதை பார்க்க முடியுமா? என்று கேட்டால் பார்க்க முடியாது என்பதுதான் உண்மை. இந்த இயந்திரம் ஃபிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைப் பகுதியில் பூமிக்கடியில் 574 அடி ஆழத்தில் 27 கி.மீ. நீளத்தில் இருக்கிறது. மனிதன் இதுவரை உருவாக்கிய கருவிகளில் இதுதான் பிரமாண்டமானது. 


இந்தக் கருவி 1998 லிருந்து 2008 வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக உருவாக்கியிருக்கிறார்கள். 100 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் இயற்பியல் வல்லுனர்கள் இதை ஆக்கியிருக்கிறார்கள். இதன் பெயர் 'லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்'. 

இந்த கருவி ஒரு துகள் முடக்கி சோதனைச்சாலையாக செயல்படுகிறது. இதன் மூலம் அணுவின் அடிப்படைத் துகளான புரோட்டன்களை  கிட்டத்தட்ட ஒளியின் வேகமான நொடிக்கு 3 லட்சம் கி.மீ. வேகத்தில் ஒன்றுடன் ஒன்றாக மோதவிட்டு ஏற்படும் மாற்றத்தை கண்டறிந்தனர். இதற்காக பூமியை விட ஒரு லட்சம் மடங்கு கூடுதலான காந்தப் புலம் உருவாக்கப்பட்டது. இந்த துகள்கள் மோதல் மூலம் 'கடவுள் துகள்' என்று கூறப்படும் 'ஹிக்ஸ் போஸான் துகள்' கண்டு பிடக்கப்பட்டது. 


இதன்மூலம் பிரபஞ்சம் மிகப் பெரிய வெடிப்பின் காரணமாக உருவானது என்பதை கண்டறியமுடிந்தது. இங்கு 3 ஆயிரம் பேர் இரவுப் பகலாக பணிபுரிந்து வருகிறார்கள். 


புதன், ஜூலை 27, 2016

தூக்கத்தில் ஏற்படும் 'கட்டில் மரணம்'..!


ப்போது பார்த்தாலும் தூங்கிக்கொண்டே இருப்பவர்களை மருத்துவத்தில் 'சோம்னோலேன்ஸ்' என்கிறார்கள். அதேவேளையில் தூக்கம் வராமல் திண்டாடுபவர்களை 'இன்சோம்னியா' என்றும் குறிப்பிடுகிறார்கள். மூளை நரம்புகள் ஒன்றிணைந்து செயல்படாததால் இந்த இரண்டு நிலையும் ஏற்படுகிறது. இதே நிலையில் ஒருங்கிணைந்த உடலசைவுகள் ஏற்படும்போது 'ஸொம்னாம்புலிஸம்' என்கிற 'தூக்கத்தில் நடக்கும் வியாதி' உருவாகிறது.


தூங்கிக்கொண்டு இருக்கும்போது ஒரு அரைகுறையான சுயநினைவு நிலை ஏற்பட்டு அவர்கள் திடீரென்று எழுந்து நடந்துபோய் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்ப வந்து விடுவார்கள். இதேபோல் காரை ஓட்டிப் போகிறவர்களும் உண்டு. இப்படிப் போகிறவர்களை தட்டி எழுப்பினால் கூட அவருக்கு நடந்தது எதுவும் தெரியாது. கனவுகள் அற்ற தூக்க நிலையிலேயே இது ஏற்படுகிறது. 

இதற்கு நேர் எதிரான ஒன்று 'ஸ்லீப் மையோக்லோனஸ்' என்பது. இந்த உபாதை கனவுகளுக்கு ஊடாகத் தோன்றுகிறது. கனவில் யாரவது அடிக்க வந்தால், தூங்குபவர் கண்ணைத் திறக்காமல் படுத்தபடியே எதிரியை பந்தாடிக் கொண்டிருப்பார். எந்தவொரு காரணமும் இல்லாமல் தூக்கத்திலேயே திடீரென்று மரணம் ஏற்படுவதும் உண்டு. இந்த மரணத்தை மருத்துவத்தில் 'கட்டில் சாவு' என்கிறார்கள். இதற்கு 'ஒன்டைன்' என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது. 


கிரேக்க புராண கதைகளில் 'ஒன்டைன்' என்றொரு தேவதை உண்டு. இந்த தேவதை ஆடு மேய்க்கும் ஒரு இளைஞனை காதலித்தாள். என்ன காரணத்தினாலோ அந்த இளைஞன் அந்த தேவதையின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. கோபம் கொண்ட அந்த தேவதை இளைஞனைப் பார்த்து, 'நீ எப்போது கண்ணை மூடித் தூங்குகிறாயோ அப்போதே நீ இறந்து போவாய்!' என்று சாபம் கொடுத்துவிட்டுப் போனாள். அதனால்தான் காரணமே இல்லாமல் தூக்கத்திலேயே இறந்து போகும் வியாதிக்கு 'ஒன்டைன் சாபம்' என்ற ஒரு பெயரையும் வைத்துவிட்டார்கள். 

என்னதான் இப்படி மாற்றி மாற்றி பெயர் வைத்தாலும் இந்த மரணத்துக்கான காரணம் மட்டுமே மர்மமாக இருக்கிறது. இப்போதுதான் லேசான விடைக் கிடைத்திருக்கிறது. அதன்படி இது யாருக்கு வரும் என்று ஓரளவு கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளையில் பிறவிக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இந்த நோய் வரும். முதுகெலும்பில் அடிபட்டவர்கள், தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள், மிகவும் குண்டாக இருப்பவர்கள் ஆகியோருக்கு காரணமே இல்லாமல் தூக்கத்தில் மரணம் ஏற்படும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். 

தொண்டையில் வளரும் டான்ஸில் சதை வளர்ச்யில் கூட இத்தகைய ஆபத்து இருப்பதாக சொல்கிறார்கள். இப்போது இந்த கட்டில் மரணம் பற்றி நரம்பியல் நிபுணர்கள் மட்டுமல்லாமல், காது, மூக்கு, தொண்டை நிபுணர்களும், எலும்பு மருத்துவர்களும் கூட ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். 


தூங்குபவரை மட்டுமல்லாமல் பக்கத்தில் படுத்திருப்பவரையும் பாடாய்ப்படுத்தும் ஒரு விஷயம் குறட்டை. ஆனால், குறட்டை சத்தத்தோடு தூங்குபவர்களை விட குறட்டை இல்லாமல் அமைதியாக தூங்குபவர்களைத்தான் 'கட்டில் சாவு' சந்திக்கும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள்.   

இப்போது இந்த தூக்க மரணத்தை தடுக்க கருவிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். 'கண்ட்ரோல்டு பாசிடிவ் ஏர்வே பிரஸ்ஸர்' என்ற கருவியைத் தூங்கும்போது பொருத்திக்கொண்டால் இந்தக்கருவி மூளையின் உதவி இல்லாமல் தானாகவே சுவாசத்தைப் பார்த்துக்கொள்ளும். இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு திடீரென்று  ஏற்படும் கட்டில் சாவுகள் கொஞ்சம் குறைந்திருக்கின்றன. ஆனாலும், காரணத்தைக் கண்டுபிடித்து அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்தால்தான் மனிதர்கள் நிம்மதியாக தூங்கமுடியும். 
சனி, ஜூலை 23, 2016

பழைய டெல்லி நகரம்


1639-ஆம் ஆண்டுக்கு முன்புவரை ஆக்ராதன் மொகலாயர்கள் ஆண்ட இந்தியாவிற்கு தலைநகராக இருந்தது. அப்போது மன்னராக இருந்த ஷாஜஹான் தலைநகரை மாற்ற முடிவெடுத்தார். ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு மாற்றினார்.

மொகலாய மன்னர்கள் யாருக்கும் இல்லாத அளவுக்கு கற்பனை சக்தி படைத்த ஷாஜஹானுக்கு ஆக்ரா நகரம் பிடிக்கவில்லை. பெரிய அளவில் ஊர்வலம் செய்ய வசதியான அகலமான வீதிகள்கூட இல்லை என்பது ஷாஜஹான் அலுப்புடன் சொல்லும் வாக்கியம். ஆக்ரா கோட்டையும், அரண்மனையும் மன்னருக்கு சிறியதாக தெரிந்தன. இந்தியாவின் தலைநகராக இயங்க தகுதியான இடம் டெல்லிதான் என்று கருதினார்.

ஆக்ரா கோட்டை
டெல்லியில் யமுனை நதிக்கரையில் ஒரு புத்தம் புது நகரை உருவாக்குங்கள் என்று ஆணையிட்டார். பல்லாயிரக்கனக்கான தொழிலாளர்களின் உழைப்பில் ஒன்பதே ஆண்டுகளில் கம்பீரமாக உயிர் பெற்று எழுந்தது 'ஷாஜஹானாபாத்'. இன்றைக்கு இதன் பெயர் பழைய டெல்லி.

ஷாஜஹான் புதிய தலைநகரம் அமைக்க தேர்தெடுத்த இடம் பிரம்மாண்டமான காட்டுப்பகுதி.1639 ஏப்ரல் 29-ந் தேதி நல்ல நாளாகப்பார்த்து பிரம்மாண்டமான நகருக்கான பூமிபூஜை போடப்பட்டது. உஸ்தாத்ஹீரா, உஸ்தாத்ஹமீத் என்று இரண்டு கட்டிடத் தொழிலாளர்கள் முதலில் மண்வெட்டியை உயர்த்தி நிலத்தை வெட்டினார்கள். இவர்கள் தங்கியிருந்த குடிசை இருந்த பகுதி பின்னாளில் பெரிய தெருக்களாக உருவாக்கப்பட்டது. அந்த தெருக்களுக்கு இந்த தொழிலாளர்களின் பெயரே வைக்கப்பட்டது. இன்றைக்கும் பழைய டெல்லியில் அந்த தெருக்களின் பெயர்கள் மாறாமல் இருப்பதை காணமுடியும்.

வேலை தொடங்கிய இரண்டு வாரத்தில் புதிய அரண்மனைக்கான அடிக்கல்லை நாட்டினார் ஷாஜஹான். அஸ்திவாரத்துக்காக தோண்டப்பட்ட பெரும் பள்ளத்தில் மரண தண்டனைபெற்ற குற்றவாளிகளின் தலைகள் சீவப்பட்டு உடல்கள் பள்ளத்தில் வீசப்பட்டன. பலியிடப்பட்ட மனித உடல்கள் மீது மளமளவென்று கட்டிடம் எழுந்தது. 124 ஏக்கர் பரப்பளவில் அரண்மனை உயர்ந்தது.

சாந்தினி சவுக்
நகரின் பிரம்மாண்டமான கடைவீதியான 'சாந்தினி சவுக்' ஷாஜஹானின் மகள் ஜஹனாராவின் நேரடி பார்வையில் உருவானது. அன்றைக்கே அந்த தெருவில் 1,560 கடைகள் இருந்தன.

1648 ஏப்ரல் 19-ம் தேதி ஷாஜஹான் யமுனை ஆற்றில் பயணித்து, செங்கோட்டையின் பின் பகுதியில் அமைக்கபட்டிருந்த முழு வெள்ளியால் ஆன கதவைத் திறந்து அரண்மனைக்குள் பிரவேசித்தார். நகரம் முழுவதும் ஆரவாரம், வாணவேடிக்கைகள், உற்சாகம் என்று கரை புரண்டு ஓடியது. புதிய அரண்மனையில் சக்கரவர்த்தி குடிப்பெயர்ந்ததை பத்து நாட்கள் மிகப்பெரிய திருவிழாவாக மக்கள் கொண்டாடினார்கள். ஊர்வலம், நாடகம், இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் என்று (பழைய) டெல்லி நகரமே அல்லோலகலப்பட்டது. இப்படியாகத்தான் இந்தியாவின் புதிய தலைநகரம் பிறப்பெடுத்தது.

பழைய டெல்லி ஜிம்மா மசூதியிலிருந்துதிங்கள், ஜூலை 18, 2016

டிரைவர்கள் நாட்டின் தொழில் முன்னேற்ற சொத்துகள் - 1


சாலை விபத்துகள் இல்லாத நாளே இல்லை என்ற இடத்தை நோக்கி தமிழகம் போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் நான்கு வழிச்சாலைகள் வந்த பிறகு இதன் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்துள்ளது. அதனால் நான்கு வழிச்சாலைகளை மக்கள் மரணச்சாலை என்று அழைக்கத்தொடங்கி விட்டார்கள். 


உண்மையில் நான்கு வழிச்சாலைகள் மரண சாலைகள் தானா..?

இல்லை என்பதுதான் நிஜம். இது வந்த பிறகுதான் வாகனங்களின் வேகம் இருமடங்காக கூடியிருக்கிறது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்ல 4.30 மணி நேரம் மிச்சமாகியிருக்கிறது. பயண நேரம் குறைந்ததால் மக்களாகிய பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சி, அதைவிட தரமான சாலைகள் கிடைத்ததில் டிரைவர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம்தான். 

இந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் நெடுநாட்களுக்கு நீடிக்கவில்லை. நான்கு வழிச்சாலையில் நாளுக்கு நாள் நடக்கும் அதிகமான விபத்துகளால் எல்லோரும் நான்கு வழிச்சாலைகளை மரண பயத்துடன் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். வேகமான பயணத்துக்காக அமைக்கப்பட்ட சாலைகளில் நிறைய ஸ்பீட் பிரேக்கர்களை அமைக்க வேண்டும். வாகனங்களின் அசுர வேகத்தை குறைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அரசுக்கு ஓயாத கோரிக்கை வைக்கத் தொடங்கினர்.


அப்படியென்றால் சாலை அமைக்கப்பட்ட விதம் சரியில்லையா..? அல்லது நமது டிரைவர்கள் சரியில்லையா..? என்ற கேள்வியோடு நான்கு வழிச்சாலைக்கு வடிவம் கொடுத்த 'இந்தியன் ரோடு காங்கிரஸ்' என்ற அரசு அமைப்பில் ஆலோசகராக இருக்கும் பொறியாளர் எஸ்.ராஜசேகரை சந்தித்தேன். நிறைய பேசினார். அதிலிருந்து சில இங்கே..

"சாலைகள் அமைப்பதற்கு ஏராளமான தொழில்நுட்ப வரையறைகள் உண்டு. அதிலிருந்து இம்மியளவும் பிசகாமல் நான்கு வழிச்சாலைகளை அமைத்திருக்கிறோம். இது சர்வதேச தரத்திற்கு கொஞ்சமும் குறையாதது. இதில் நீங்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தாலும் வாகனத்தில் எந்த அதிர்வு இருக்காது. அந்தளவிற்கு மிகத் துல்லியமான தொழில்நுட்பத்தில் நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுவாக தரமான சாலை என்பது கார் போன்ற உயரம் குறைவான வாகனங்களை ஓட்டும் டிரைவர்களின் பார்வைக்கு எதிரே இருக்கும் சாலை 2 கி.மீ. தூரம் வரை தெளிவாக தெரிய வேண்டும். அதுதான் நல்ல தொழிநுட்பத்துக்கான அடையாளம். நமது நான்கு வழிச்சாலையில் சில இடங்களில் 4 கி.மீ. தூரம் வரை சாதாரணப் பார்வைக்கே தெளிவாகத் தெரியும். 


வளைவுகள் குறைவாகவும், சிறிய கிராமங்கள் குறுக்கிடும்போது சாலையை உயரமாக்கி கிராமவாசிகள் சாலையைக் கடக்க கீழே ஒரு பாதையையும் அமைத்துள்ளோம். இந்த சாலைகளைப் பிரிக்கும் மீடியன்கள் கூட அரை அடி உயரத்தில்தான் இருக்கும். இப்படி உயரம் குறைவாக அமைப்பதற்கு காரணம், ஏதாவது விபத்து ஏற்பட்டால் வாகனங்களை மாற்றி இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குறைவான உயரம் இருந்தால்தான் லேசாக இடித்து விட்டு வாகனங்களை திருப்பி விடமுடியும். 

ஸ்பீட் பிரேக்கர் 

விபத்தைக் குறைக்க நான்கு வழிச்சாலைகளில் ஸ்பீட் பிரேக்கர் அமைக்க வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள். ஓரிடத்தில் ஸ்பீட் பிரேக்கர் அமைக்க பல விதிமுறைகள் இருக்கின்றன. மற்ற சாலைகளைப் போல் நான்கு வழிச்சாலைகளில் ஸ்பீட் பிரேக்கர் அமைக்க முடியாது. அப்படி அமைத்தால் அதுவே விபத்துகளுக்கும் காரணமாகிவிடும். அதுமட்டுமல்லாமல் வருங்காலத்தில் 24 சக்கரம், 32 சக்கரம், 48 சக்கரம் கொண்ட பிரமாண்டமான வாகனங்கள் எல்லாம் வரவிருக்கின்றன. அப்படிப்பட்ட வாகனங்களை கொண்டே இத்தகைய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் மிக தாழ்வாக இருக்கும். சாலைக்கும் வாகனத்துக்கும் இடையே உள்ள உயரம் ஒரு அடிக்கும் குறைவாக இருக்கும். 

இப்படிப்பட்ட வாகனங்கள் ஸ்பீட் பிரேக்கர் இருந்தால் தட்டி நின்றுவிடும். மேலும், கேஸ், ஆசிட் போன்றவற்றை ஏற்றிவரும் வாகனங்கள் ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்கினால் கசிவு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் நான்கு வழிச்சாலையில் ஸ்பீட் பிரேக்கர்கள் அமைக்கப்படுவதில்லை. இந்த சாலையின் பிரதான நோக்கமே எல்லாவித வாகனங்களையும் இயக்க வேண்டும் என்பதுதான். 

டிரைவர்கள்தான் காரணம் 

நான்கு வழிச்சாலைகளில் அதிகமாக நடக்கும் விபத்துக்கு காரணம் சாலைகள் அல்ல. வாகனங்களை இயக்கும் டிரைவர்கள்தான். நம்மைவிட பல மடங்கு அதிகமான வாகனங்களைக் கொண்டிருக்கும் மேலைநாடுகளில் இவ்வளவு விபத்துகள் நடைபெறுவதில்லை. உலக நாடுகள் அனைத்திலும் சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் நிகழும் பட்டியலில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. 

அதற்கு காரணம் நமது டிரைவர்களுக்கு சரியான சாலை விதிமுறைகளே தெரிவதில்லை என்பதுதான். முதலில் சாலையில் இருக்கும் வெள்ளை கோடு எதற்கு என்றே டிரைவர்களுக்கு தெரிவதில்லை. நீளமாக சாலைகளில் முடிவில்லாமல் நீண்ட தூரம் செல்லும் இந்த வெள்ளைக் கோட்டை வாகனங்கள் கடக்கக்கூடாது. அதாவது வடிவேல் பாணியில் சொன்னால், இந்தக் கோட்டுக்கு அந்தப் பக்கம் நமது வாகனமும் செல்லக்கூடாது. கோட்டுக்கு அந்தப் பக்கம் செல்லும் வாகனம் கோட்டை தாண்டி இந்தப் பக்கமும் வரக்கூடாது. அவரவர் பாதையில் அந்தந்த வாகனங்கள் நேராக போய்க் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள். 

வெள்ளைக் கோடு
நான்கு வழிச்சாலைகளின் இடதுப் பக்கம் 5 அடி இடைவெளி விட்டு ஒரு வெள்ளைக் கோடு போடப்பட்டிருக்கும். இந்த சிறிய சாலை யாருக்கென்றால் இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள், மாட்டுவண்டிகள், பாதசாரிகள் ஆகியோர்களுக்கானது. இவர்கள் அனைவரும் இந்த 5 அடி சாலையில்தான் பயணம் செய்ய வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் வெள்ளைக் கோட்டை தாண்டக்கூடாது. ஒருவேளை அப்படி கடந்து ஏதாவது பெரிய வாகனங்கள் மோதி உயிரிழப்பு ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனத்தில் விபத்து காப்பீடு, கூடுதல் விபத்து காப்பீடு சலுகை பணம் கிடைக்காது. 

சாலை விதிமுறையை கடைப்பிடிக்காமல் இவரே மரணத்தை தேடிக்கொண்டார் என்ற முடிவுக்கு காப்பீடு நிறுவனங்கள் வந்துவிடும். காப்பீடு இருந்தும் இறந்தவர் குடும்பத்துக்கு பலன் கிடைக்காது. அதனால் இருசக்கர வாகனங்கள் இந்த வெள்ளைக் கோட்டைக் கடந்து வலது பக்கம் போகக்கூடாது. இந்த ஒரு சாலைவிதியை மட்டும் எல்லா இருசக்கர வாகன ஓட்டிகளும் பின்பற்றி இருந்தால் 80% இருசக்கர வாகன விபத்து உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம்.

அதேபோல் வலது பக்கம் சென்று கொண்டிருக்கும் நான்கு சக்கர வாகனங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் வாகனத்திற்கு இடது பக்கம் செல்லும் வெள்ளைக் கோட்டைக் கடந்து இருசக்கர வாகனங்கள் செல்லும் பாதைக்கு போகக்கூடாது.  ஆனால் நடைமுறையில் நான்கு சக்கர வாகனங்களைவிட இருசக்கர வாகனங்கள்தான் விதியை மீறி நான்கு சக்கர வாகனங்களுக்கான பாதையில் பயணிக்கின்றன. 


சாலை விதிகள் இன்னும் இருக்கின்றன. அதனை அடுத்த பதிவில் பார்ப்போம். 

                                                                                                                            - தொடரும்  

சனி, ஜூலை 16, 2016

எழுத்தாளர் எஸ்.ரா.வுடன் ஒரு மினி பேட்டி


விகடனில் தொடர்ந்து தொடர் எழுதி பட்டித்தொட்டிகள் வரை தனது எழுத்தைக் கொண்டு சேர்த்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனனை சில வருடங்களுக்கு முன்பு மதுரை புத்தக கண்காட்சியில் சந்தித்தேன். சின்னதாக அவருடன் நடந்த கலந்துரையாடல் பின்னர் 'தினத்தந்தி' ஞாயிறு மலரில் வெளிவந்தது. அந்த சிறிய சந்திப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

இனி பேட்டி..

எழுத்தாளர்கள் தங்கள் படிப்பை வெளிப்படுத்துவது பலன் தருமா? பாதிப்பை ஏற்படுத்துமா? என்று பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது கிடைத்த பதில் சுவாரஸ்யமானதாக இருந்தது.


"சாதாரண மக்கள்தான் எனக்கு நெருக்கமான தோழர்கள். லாண்டரி கடைக்கார் ஒருவரிடம் உட்கார்ந்து நான் நாட்டுநடப்பை அவ்வப்போது பேசுவேன். இருவரும் ஆத்மார்த்தமாக உரையாடுவோம். ஒருநாள் நாங்கள் சகஜமாக பேசிக்கொண்டிருக்கும் போது எனது இன்னொரு நண்பர் அங்கே வந்தார். வந்தவர், லாண்டரி கடைக்காரரிடம் 'சார் யார் தெரியுமா?' என்று என்னைக் காட்டி கேட்டார். கேட்டுவிட்டு என் படிப்பைப் பற்றி அவரிடம் கூறினார். அடுத்தநாள் அந்த லாண்டரிக் கடைக்காரர் என்னிடம் பேசவே ரொம்ப  யோசித்தார். கிட்டத்தட்ட பேச்சை நிறுத்திவிட்டார். 

நிறைய படித்திருப்பது அதிகமான மனிதர்களிடம் நம்மைக் கொண்டுபோய் சேர்ப்பதற்கு பதில், இருக்கிற நண்பர்களிடம் இருந்தும் நம்மை பிரித்துவிடுகிறது. நம் பெயருக்குப் பின்னால்  டிகிரிகள் சேரும்போது, நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள் நம்மிடம் இருந்து விலகிப் போய்விடுகிறார்கள்.

நான் எளிய மக்களுடன் வாழ்பவன். அவர்களிடம் போய், படித்தது ஆங்கில இலக்கியத்தில் டாக்டர் பட்டம் என்றால், வீட்டில் சாப்பாடு போடுகிறவர்கூட தயங்குவார். கல்வி அதிகமாகும்போது மரியாதை கொடுப்பதையும் கடந்து, 'அவரிடம் போய் பேசுவது சரியாக இருக்குமா?' என்ற தயக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்திவிடுகிறது. அதனால் நான் மேற்படிப்பு முடித்ததும் எல்லா சான்றிதழ்களையும் ஊரிலே விட்டுவிட்டு வெறும் ராமகிருஷ்ணனாக மட்டுமே சென்னைக்கு வந்தேன். 

காந்திஜியின் அரை ஆடை தோற்றத்தை பார்ப்பவர்களிடம் அவர் வெளிநாட்டில் சட்டக்கல்வி பயின்றவர் என்றால், நம்பமாட்டார்கள். கல்வியில் மேம்பட்ட அவர் தன் தோற்றம் மக்களிடம் இருந்து தன்னை தூரப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக சாதாரண மக்கள்போல் அரை ஆடைக்கு மாற்றிக்கொண்டார். அது அவரை மக்களிடம் மேலும் நெருங்கவைத்தது. 

இன்றும் எவ்வளவோ பெண்கள், தங்கள் கணவரைவிட அதிகம் படித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எல்லோரும் முன்னிலைப்படுத்தி வைத்திருக்கும் படிப்பை, வெளியே தெரியாமல் மறைத்துக் கொள்கிறார்கள். சிலவேளை அது குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களிடம் இருந்து தன்னை தூரப்படுத்திவிடும் என்றும் கருதுகிறார்கள். கல்வி யாவருக்கும் தேவைதான். ஆனால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அது தொடர்பாக மேம்படுகிறவர்களுக்கு அது நல்ல பயனைத் தரும். என்னைப் போன்றவர்களை எளிய மக்களிடம் இருந்து தூரமாக்கிவிடுகிறது." என்று விளக்கம் கூறும் எஸ்.ராமகிருஷ்ணன் என்ன படித்திருக்கிறார்? என்று கேட்டபோது..

"ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில். முடித்தேன். அதன்பின்பு நாட்டுப்புற கதைகளில் பி.ஹெச்டி. செய்யத் தொடங்கினேன். அப்போதுதான் எனக்கு இந்த தூரப்படுத்தும் அனுபவங்கள் கிடைக்க ஆய்வை அப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன்."

எழுத்தை வாழ்வாக ஏற்றுக் கொண்டுவிட்டீர்கள். அதற்கு உங்கள் வீட்டில் எதிர்ப்பு இருந்ததா?

"எங்கள் குடும்பம் இரண்டு தலைமுறைகளாகவே படித்தவர்களை கொண்டது. எழுத்தின் மீதும் புத்தகங்கள் மீதும் எல்லோருக்கும் இயல்பாகவே விருப்பம் இருந்தது. வீட்டில் நல்ல நூல்களைக் கொண்ட நூலகம் இருந்தது. உலக இலக்கியங்கள் பற்றிய விவாதங்கள் வீட்டுக்குள் அடிக்கடி நடக்கும். வீட்டுச் சூழலே இலக்கியத்தோடு பிணைந்து கிடந்ததால் எதிர்ப்பு இல்லை. வரவேற்பு இருந்தது."


தினமும் எவ்வளவு நேரம் புத்தகங்கள் வாசிப்பீர்கள்?

"தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் படிப்பேன். டிசம்பர் மாதம் என்றால் பகல் முழுவதும் படிப்பேன். டிசம்பர் மாதம் படிப்பதற்கு  உகந்தது. அப்போது மனது சாந்தமாக இருக்கும். என்னால் ஒரு மணி நேரத்தில் 100 பக்கங்கள் வாசித்து விட முடியும். படித்ததை அப்படியே நினைவில் நிறுத்திக் கொள்வேன்."

இலக்கியம் என்பது சிறு வட்டத்துக்குள்ளே முடங்கி விடுகிறதே, அதை ஜனரஞ்சகமாக மாற்ற முடியுமா..? 

"இலக்கியம் வாழ்வை ஆராய்ந்து சொல்வது. ரசனை மிகுந்தது. மனிதனை வழி நடத்துவது. அது ஓர் அனுபவம். அதனைப் படிக்க லட்சக்கணக்கானவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனாலும் வருடந்தோறும் இலக்கிய ஆர்வலர்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள் என்பது வரவேற்கத்தக்க மாற்றம்."

சினிமாவுடனான உங்கள் நட்பு..?

"திரையுலக நண்பர்கள் எனக்கு அதிகம் இருந்தாலும் சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வெகுநாளாக வரவில்லை. அவர்களுக்கு உதவியாக இருந்துள்ளேன். வெளியில் இருந்து செய்யும் வேலையை திரைக்குள் வந்து செய்யலாமே என்றார்கள். 1994-க்குப் பின் திரைப்படத்துக்கு ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் மனதில் வந்தது. இயக்குநர் வசந்தபாலன் விருதுநகர்காரர். நான் படித்த கல்லூரியில் படித்தவர். அவரின் 'ஆல்பம்' படத்திற்கு முதன்முதலாக வசனம் எழுதினேன்.


பின்னர் ரஜினியின் 'பாபா' படத்திற்கு வசனம் எழுதினேன். அவரோடு நல்ல நட்பு உருவானது. இயக்குநர்  லிங்குசாமி, ஜீவாவுடன் நட்பு ஏற்பட்டது. அதனால் ஜீவா படங்களுக்கு தொடர்ந்து வசனம் எழுதும் வாய்ப்பு கிட்டியது. மேலும் பலர் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். ஒத்த ரசனையுடையவர்கள் என்பதால் இணைந்து பணியாற்றினேன். ஆல்பம், பாபா, பாப்கார்ன், சண்டக்கோழி, உன்னாலே உன்னாலே, பீமா, தாம்தூம் என 8 படங்களுக்கு வசனம் எழுதினேன். மோதி விளையாடு, யுவன் யுவதி என்ற 2 படங்களுக்கு கதை எழுதுகிறேன். தற்போது பாலாவின் 'அவன் இவன்' படத்திற்கு வசனம் எழுதி வருகிறேன்." (நேர்காணல் கண்ட ஆண்டு 2010).

இயக்குனராகும் எண்ணம்..

"மனதின் எண்ணப்படி செல்பவன் நான். மனதில் தீவிரமான எண்ணம் ஏற்பட்டால் மட்டுமே எதையும் செய்பவன். இயக்குனராகும் எண்ணம் தீவிரமாகும்போது அதை செய்வேன்."

எதிர்கால திட்டங்கள்..?

"வருடத்திற்கு ஒரு துறையில் விரிவான புத்தகம் கொண்டு  வரவேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. தற்போது இந்திய சரித்திரம் பற்றி பல ஆய்வுகள் கொண்ட விரிவான புத்தகம் ஒன்றை எழுதி வருகிறேன். அடுத்து மாற்றுக் கல்வி சம்பந்தமான புத்தகம் ஒன்று கொண்டுவர உள்ளேன். கல்விக்கான மாற்றுத் தளங்கள், உலக அளவில் எழுத்தாளர்களின் கல்வி பற்றிய சிந்தனைகள், எப்படி கல்வி தருவது என்ற அனைத்தையும் கொண்டதாக அது இருக்கும். மூன்றாவதாக, இந்தியா முழுவதும் பல இடங்களில் பயணம் செய்துள்ளேன். பலரும் இந்தியா முழுக்க பயணிக்கிறார்கள். அவர்களின் பயண அனுபவங்களை எல்லாம் தொகுத்து விரிவான தொகை நூல் ஒன்றினை வெளியிட உள்ளேன். இதற்கு மூன்று வருடங்கள் கூட ஆகலாம்."

புத்தகங்களின் முக்கியத்துவம் பற்றி..?

"புத்தகங்கள் மட்டுமே காலத்தை மிஞ்சி நிற்பவை. திருக்குறள் காலத்தில் இருந்த ஒரு பொருள்கூட இப்போது இல்லை. ஆனால், திருக்குறள் இருக்கிறது. பல நூற்றாண்டுகள் கடந்தும் புத்தகங்கள் இன்றும் வீடுகளில் புனித நூலாக வாசிக்கப்படுகின்றன. காகிதத்திற்கு இரண்டு விதங்களில் மட்டுமே அதிக மரியாதை உள்ளது. ஒன்று  பணம்,மற்றொன்று புத்தகம். 

உடற்பயிற்சி எப்படி  உடலை ஆரோக்கியமாக வைக்கிறதோ அதுபோல மனத்திற்கான பயிற்சியை தருவது புத்தகங்கள்தான். புத்தக வாசிப்பை பெரியவர்கள்  சிறியவர்களுக்கு கற்றுத் தரவேண்டும். சினிமா, பூங்காவிற்கு குழந்தைகளை அழைத்துப்போவதுபோல் புத்தகக் கடைகளுக்கும், நூலகங்களுக்கும் அழைத்துப்போக வேண்டும். நூல்களை அறிமுகப்படுத்த வேண்டும். இது பெற்றோரின் கடமை." என்று முடித்தார்.

கண்காட்சியில் கூட்டம் அதிகம் இருந்தபோதும், வாசகர்களின் குறுக்கீடுகள் இடை புகுந்தபோதும் அதையெல்லாம் கடந்து என் கேள்விக்கு பதிலளித்த எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நன்றி கூறி  விடைப்பெற்றேன். தொடர்புடைய பதிவு

எழுத்து ஒரு தவம் - மனுஷ்யபுத்திரன் நேர்காணல் 

வெள்ளி, ஜூலை 15, 2016

நான்கு மதங்களின் புனித இடம்

ஒரே இடம் இந்து, புத்தம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய நான்கு மதங்களுக்கும் புனித இடமாக இருக்க முடியுமா? முடியும். மிக அரிதாக இப்படிப்பட்ட இடங்கள் உலகில் உள்ளன. அப்படியொரு இடம் தான் இலங்கையில் அமைந்துள்ள 'ஸ்ரீபாதா' என்ற 'சிவனொளி பாத மலை'.


இந்த மலையானது இலங்கையின் சபரகமுவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இடையே ஆன எல்லையில் அமைந்துள்ளது. 

கிட்டத்தட்ட 7,359 அடி உயரம் கொண்ட கூம்பு வடிவில் அமைந்த இந்த மலையில் ஏறி இறங்குவதே ஒரு ஆன்மீக அனுபவமாகும்.

இந்த மலையின் உச்சியில் 1.8 மீட்டர் அளவு கொண்ட ஒரு பாறை பாத வடிவில் அமைந்திருக்கிறது. இதை கெளதம புத்தரின் காலச் சுவடு என்று புத்த மதத்தினர் கொண்டாடுகிறார்கள். 

இந்துக்களின் புராண நியதிப்படி இது சிவனின் காலடி. அதனால் இந்துக்களும் இங்கு பயபக்தியோடு கூடுகிறார்கள்.

இஸ்லாமியர்களோ இறைவனின் கட்டளைப்படி ஆதம் வானிலிருந்து முதன் முதலாக இங்குதான் இறக்கி விடப்பட்டார். 

கிறிஸ்துவர்களுக்கோ இது புனித தோமையர் கால் பட்ட இடம். அதனால் அவர்களும் மனமுருகி பிரார்த்தனை செய்கிறார்கள்.

அதனால் இந்த மலையை இந்துக்கள் 'சிவனொளி பாத மலை' என்றும், பெளத்தர்கள் 'ஸ்ரீபாதா' என்றும், இஸ்லாமியர்கள் 'பாவா ஆதம் மலை' என்றும், கிறிஸ்துவர்கள் 'செயிண்ட் தாமஸ் மவுண்ட்' என்றும் அழைக்கிறார்கள்.

ஆன்மீகத்தை தவிர்த்துப் பார்த்தால் இந்த மலைக்கு 'பட்டர்ஃபிளை மவுண்டெய்ன்' என்று அம்சமான பெயரும் இருக்கிறது. 

இந்த மலையின் உச்சியை அடைவதற்கு 6 வழிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிகள் இருக்கின்றன. கீழேயிருந்து மேலே செல்வதற்கு வெகு நேரம் பிடிக்கும். அதனால் இரவு நேரத்தில் மலையேறுகிறார்கள்.

கோடை காலங்களில் மட்டுமே இந்த மலை மீது ஏற முடியும். மழைக்காலங்களில் பெரும் மழை பெய்வதால் ஏறுவதற்கான இடர்பாடுகள் அதிகம் இருக்கும்.


மதங்களின் வேறுபாடின்றி எல்லா மதத்தினரும் சுற்றுலாப்பயணிகளும் கூட்டம் கூட்டமாக மலை ஏறுவதை இங்கு காண முடியும். பாதையின் இடையிடையே சிறு கோயில்களும், கடைகளும் உள்ளன. படிகளின் பல இடங்களில் அடர்ந்த புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. படிகளும் சிதைவடைந்து உள்ளன.

ஆங்காங்கே இளைப்பாறுவதற்கென்றே மர இருக்கைகள் அமைத்துள்ளார்கள். மிகவும் செங்குத்தான பாதை! மேலே செல்ல செல்ல மலைப்பைத் தரும். மலை உச்சியில் உள்ள மண்டபங்களில் சிவன் படமும் புத்தர் படமும் வைக்கப்பட்டிருக்கின்றன.

குளிர் கடுமையாக இருக்கும் இடம் இது. காலையில் சூரிய உதயம் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இரவில் மலையேறுபவர்கள் தான் இங்கு அதிகம். விடிவதற்கு முன் உச்சியில் வந்து சூரிய உதயத்தை பார்க்கின்றனர்.
மலையின் உச்சியிலிருந்து சூரியன் உதிப்பதைப் பார்ப்பது ஒரு அருமையான நிகழ்வு. வாழ்நாளில் கிடைப்பதரிது.


மலைமேலிருந்து அருகிலிருக்கும் மற்ற  மலைகளின் எழில் பார்ப்பது பேரழகு. கடைசியாக அழகான கூரையின் கீழ் அந்த பிரமாண்ட பாதத்தைப் பார்க்க முடியும்.  சிவன் நடனமாடும்போது ஒரு காலை இமய மலையிலும் மறு காலை சிவனொளி பாத மலையிலும் வைத்ததாக ஒரு ஐதீகம். 

இஸ்லாமியர்களின் ஆதம் 30 அடி உயரம் கொண்டவராம். அதனால் தான் பூமியில் அவர் முதல் காலடி பதித்த இடம் இவ்வளவு பெரியதாக இருக்கிறது என்று ஒருவர் விளக்கம் கொடுத்தார்.
ஆன்மிக அன்பர்களுக்கு ஆரோக்கியம்
தரும் ஒரு பயணம் இது!வியாழன், ஜூலை 14, 2016

நடையின் காதலன்..!

ன்னுடைய பயணம் தொடருக்காக தமிழகம் முழுவதும் பயணித்துவிடுவது என்ற முடிவோடு கன்னியாகுமரி நோக்கிப் பயணித்தேன். கேரள எல்லையிலிருந்து எனது பயணத்தைத் தொடங்குவதாக திட்டம். அதற்கு தோதான இடமாக மார்த்தாண்டம் இருந்தது. கேரள எல்லையை ஒட்டியுள்ள இடங்களுக்கு பஸ்ஸில் சென்று வர மார்த்தாண்டம்தான் வசதியான சந்திப்பு. இங்கிருந்து பக்கத்து ஊர்களுக்கு சுலபமாகப் போய் வரலாம். 

இருள் முழுதுமாக அகலாத அதிகாலைப் பொழுதில் மார்த்தாண்டத்தை அடைந்தேன். குளிர் உடலில் ஊசியாக குத்தியது. டீக்கடைகள் மாத்திரம் வெளிச்சத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. குளிருக்கு இதமாக சூடாக டீயைக் குடித்துவிட்டு, தங்கும் இடம் தேடினேன். ரூபாய் 400-ல் தொடங்கி 1,500 ரூபாய் வரை வகை வகையான தங்கும் இடங்கள் இருந்தன. அதில் ஒன்றை தெரிவு செய்து தங்கினேன். 

காலை 8 மணிக்கெல்லாம் புறப்பட்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்தால் 'சோ..!'வென பலத்த மழை. மழைக்கு காரணம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் 24 மணி நேரம் நீடிக்கும் என்றும் பயமுறுத்தியது. 

பயணம் நாம் நினைத்தபடி அமைந்துவிடுவதில்லை. இடையில் எது வேண்டுமானாலும் குறுக்கிடலாம்.. எல்லாவற்றுக்கும் தயாராகத்தான் இருக்க வேண்டும். ஆனாலும், வெளியூரில் வந்து, வெளியே போக முடியாமல் அறைக்குள் தனிமையில் அடைந்து கிடக்கும் வெறுமை, மிகக் கொடுமையானது. 

மதியத்துக்குப் பின் மழை தேவதை கொஞ்சம் கருணைக் காட்டினாள். மழை பலமானத்திலிருந்து தூறலுக்கு மாறியிருந்தது. இதுதான் சந்தர்ப்பம், இதை நழுவவிட்டால் அறைக்குள்ளே முடங்கிவிட வேண்டியதுதான் என்று நினைத்து.. தூறலுக்கு ஊடே நடந்து, நனைந்து களியக்காவிளை செல்லும் பஸ்ஸில் ஏறினேன். பஸ்ஸுக்குள் வேறுவிதத்தில் மழைப் பொழிந்து கொண்டிருந்தது. அதன் வானமாக பஸ்ஸின் கூரை இருந்தது. அழுக்கோடு ஒழுகும் அந்த நீரில் நனையாமல் பயணிகள் அழகாக ஒதுங்கிக் கொண்டதில் அவர்களின் அனுபவம் தெரிந்தது. 

பெருத்த சத்தத்துடனும், கருநிற புகையைக் கக்கிக் கொண்டும் கிளம்பியது அந்த ஹைதர் காலத்து பஸ். ஒவ்வொரு நிறுத்தத்திலும் மழையில் நனைந்த மக்கள் பஸ்ஸுக்குள் ஏறிக் கொண்டிருந்தார்கள். காளியக்காவிளைக்கு இன்னும் கொஞ்ச தூரம்தான் இருந்தது. அதற்குள் பஸ் நின்றுவிட்டது. 

வெளியில் எட்டிப்பார்த்தால்.. அடாது மழையிலும் விடாது சாலை மறியல் நடந்து கொண்டிருந்தது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்காக அந்த மறியல். தமிழர்கள் எதையும் சுலபமாக ஜீரணித்துக் கொள்கிறார்கள். விலை உயர்வையும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால், கேரளத்தவர்கள் அப்படியில்லை, வாழ்வைப் பாதிக்கும் எந்தவொரு விஷயத்துக்கும் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். அன்றும் அதுதான் நடந்தது. 

அந்த இடம் கேரளா இல்லைதான். ஆனாலும் குமரி மாவட்டத்தில் கேரளாவின் சாயல் நிறையவே உண்டு. அதில் போராட்டங்களும் அடங்கும். கேரளாவின் போராட்டம் களியக்காவிளை வரை பரவியிருந்தது. 'இதற்கு மேல் பஸ் போகாது..!' என்றார் கண்டக்டர். 

வெளியில் தூறல் விட்டபாடில்லை. பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்தேன். போராட்டக்காரர்களைக் கடந்து ஒரு ஆட்டோ பிடித்தேன். குளப்புறத்தில் உள்ள முண்டப்பழவிளை போக வேண்டும் என்றேன். ஆட்டோ கிளம்பியது. 


அங்கு ஒருவர் இருக்கிறார். 'நடத்த' ராஜேந்திரன் என்பது அவர் பெயர். குழக்கல்விளையில் இருக்கும் அவரது வீட்டுக்கும் கேரள எல்லைக்கும் 500 அடித்தான் வித்தியாசம். 

ஆதிமனிதனின் முதல் பயணம் நடைதான். அவனது பயணம் உணவைத்தேடியே இருந்தது. இன்றைக்கு நடப்பதற்கு வேலையில்லை. எல்லோரிடமும் அவரவர் தகுதிக்கேற்ப ஏதாவது ஒரு வாகனம் இருக்கிறது. அதனால் நடப்பது இன்று ஓர் அரிதான நிகழ்வு! பலரும் 'ஒபிஸிட்டி'க்கு பயந்துதான் காலையில் வியர்க்க விறுவிறுக்க நடக்கிறார்கள். 

இவர்கள் மத்தியில் ராஜேந்திரன் வித்தியாசமானவர். 22 வயதில் இனி எந்த வாகனத்திலும் ஏறுவதில்லை என்று விளையாட்டாக முடிவெடுத்தார். 34 வருடங்கள் ஓடிவிட்டன. இன்று அவரின் வயது 56. இதுவரை அவர் எந்த வாகனத்திலும் ஏறவில்லை. நடந்து கொண்டேதான் இருக்கிறார். 

அவரொரு கூலித் தொழிலாளி; எழுதப் படிக்கத் தெரியாதவர்; மெலிந்த உயரமான மனிதர்; கறுத்த தேகம்; குழிவிழுந்த கண்கள்; ஒடுங்கிப்போன கன்னங்கள்; குத்திட்டுப் பார்க்கும் பார்வை, இவையெல்லாம் அவரை வேறு மனிதராக மற்றவர்களுக்கு காட்டியது. 

பஸ்ஸுக்காக காத்திருக்கும்போது கூட மற்றவர்கள் இவரை விட்டு எட்டியே நின்றனர். பஸ் செல்லும் இடத்தைக் கேட்டால் கூட யாரும் சொல்வதில்லை. விசித்திரமான ஜந்துவாகத்தான் இவரை பார்த்தார்கள். ஒதுக்கினார்கள். இந்த ஒதுக்கி வைத்தல்தான் இவரை இன்று வரை நடக்க வைத்திருக்கிறது. 

அவமானத்தோடு பஸ்ஸுக்காக காத்திருக்கும் நேரத்தில் நடந்து விடலாம் என்று நடக்கத் தொடங்கியவர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறார். இவர் நடையின் வேகம் அசாத்தியமானது. ஒரு மணி நேரத்தில் 15 கிலோ மீட்டர் நடந்து விடுகிறார். ஒரு நாளைக்கு 80 கிலோமீட்டர் தூரத்தை சர்வ சாதாரணமாக நடந்து கடக்கிறார்.

காளியக்காவிளையில் இருந்து 755 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கு 8 நாட்களில் நடந்து சேர்ந்திருக்கிறார். அடுத்து 60 நாட்களில் நடந்தே டெல்லிக்குப் போகவேண்டும் என்ற திட்டத்தையும் கைவசம் வைத்திருக்கிறார். 


"நடப்பது என்னை உற்சாகப்படுத்துகிறது. ஒரு நாளைக்கு ஒருவேளைதான் சாப்பிடுகிறேன். சில நேரங்களில் இருவேளை. அதுவும் சைவம்தான். நெடுந்தூரம் நடக்கும் போது மட்டும் 20-க்கும் மேற்பட்ட டீ. நான்கு சர்பத் சாப்பிடுவேன். எனது வருமானத்தில் பெரும்பகுதி செருப்புக்குத்தான் செலவாகிறது. சாதாரண செருப்பு என்றால் மாதத்துக்கு 6 ஜோடியும், விலையுயர்ந்த கேன்வாஸ் என்றால் மூன்று ஜோடியும் தேவைப்படுகிறது.  

ஆரம்பத்தில் என்னை பைத்தியம் என்றார்கள். போதையில் நடக்கிறான் என்பார்கள். எனது தோற்றம் என்னை மற்றவர்களிடம் இருந்து விலக வைத்தது. கடையில் 'சாய்' கேட்டால் கூட விரட்டிவிடுவார்கள். காசு இருக்கிறதா..? என்று பாக்கெட்டில் கைவிட்டு பார்ப்பார்கள். டி.வி., பேப்பர்களில் என்னைப் பற்றி வந்த பிறகு நிலைமையே வேறு. 

இப்போது எல்லோருக்கும் என்னைத் தெரிகிறது. நல்ல மரியாதை தருகிறார்கள். பணம் உள்ளதா என்று சோதித்து சாப்பாடு போட்டக் கடைக்காரர்கள், இன்று சாப்பிட்ட சாப்பாட்டுக்கு பணம் பெற மறுக்கிறார்கள். அன்போடு உபசரிக்கிறார்கள். ஆரம்பத்தில் அவமானத்தை தந்த நடை இன்று மரியாதையை தேடி தந்திருக்கிறது. இந்தப் புகழ் நடந்ததால் மட்டுமே கிடைத்தது. நடப்பது என் மரணம் வரை தொடரும்." என்றார் இந்த நடையின் காதலன். 

பெருமையைப் பெற்றுத் தந்த அதே நடை அவருக்கு இன்னொரு சோகத்தையும் தந்துள்ளது. ராஜேந்திரனின் மனைவி அவருடன் இல்லை. பிரிந்து போய்விட்டார். 11 வயது மகன் கூட அவருடன் இல்லை. 'எப்போதும் நடையைக் கட்டி அழும் மனுஷனோடு வாழ முடியாது' என்று வேறிடம்  தேடிக்கொண்டார்.

இப்போது தனிமரமாகத்தான் வாழ்ந்து வருகிறார். இதெல்லாம் நடையின் மீது அவர் கொண்ட காதலால் இழந்தது. 'வாழ்வில் எதை இழந்தாலும் நடையை மட்டும் நான் இழக்கவில்லை. நடந்து கொண்டிருக்கும்போதே என்னுயிர் போக வேண்டும். இதுதான் என் அடிமனத்தின் ஆசை.' என்று  நெகிழ்கிறார் ராஜேந்திரன். 

அவரின் நடை இன்னும் பல இலக்குகளை எட்டவேண்டும் என்று வாழ்த்தி அவரிடம் இருந்து விடைபெற்றேன். 
செவ்வாய், ஜூலை 12, 2016

நாம் வாழ நம் பூமி வேண்டும்..!மீப காலங்களில் சுற்றுச்சூழலுக்கு தொடர்ந்து ஏற்படும் ஆபத்துகளைப் பார்க்கும்போது மனதில் பெரும் அச்சம் தோன்றுகிறது. சுற்றுச் சூழலில் ஏற்படும் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்படுவது பூமிதான். இந்த பூமியில்தான் நாம் தொடர்ந்து வாழ்ந்தாக வேண்டும்  பூமியை சுரண்டி பணம் ஈட்டியப் பின் அந்தப் பணத்தைக் கொண்டு வேறு ஒரு கிரகத்தில் நாம் வாழப்போவதில்லை. அதற்கான வாய்ப்பும் இப்போதைக்கு இல்லை. அதனால் வேறெங்கும் போக முடியாது. இந்த பூமியில்தான் வாழ்ந்தாக வேண்டும். அப்படியென்றால் அந்த பூமியை நாம் எந்த அளவிற்கு காக்க வேண்டும்.


நாம் எவ்வளவுதான் கோடி கோடியாக சம்பாதித்து பணம் சேர்த்தாலும் அவற்றை அனுபவிக்க நாளைக்கு நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் பூமி வேண்டும். இயற்கை கொடுத்த அந்த அற்புத வாழ்வாதாரத்தை சுடுகாடாக மாற்றிவிட்டு, வெறும் பணத்தை மட்டும் வைத்து எந்த பெரிய கடைகளிலும் இயற்கையை விலைக்கு வாங்க முடியாது. அதனால் நாம்தான் மாறியாக வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

வேறு வழியில்லை. “நீ உயிரோடிருக்க வேண்டுமானால் இதைச் செய்துதான் ஆக வேண்டும்” என யாராவது துப்பாக்கி முனையில் மிரட்டினால், அது எப்பேர்ப்பட்ட வேலையாக இருந்தாலும் செய்துதான் முடிப்போம். அப்படி, இயற்கை நம்மை இப்பொழுது மரண விளிம்பில் நிற்க வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்த உண்மையை உணர்ந்து மாறாவிட்டால் பூமி துளியும் தயங்காமல் நம்மை தள்ளி விட்டு விடும் என்று மேலும் பயமுறுத்துகிறார்கள் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள். 


இதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் செய்யவேண்டியது என்று சிலவற்றை வரையறை செய்கிறார்கள். அதன்படி முதலில் பிளாஸ்டிக் போன்ற செயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு உருவாகப்படும் பொருட்களை தவிர்ப்போம். இயற்கைப் பொருட்களையே முடிந்த அளவு பயன்படுத்துவோம். செயற்கைப் பொருட்களை தவிர்த்தாலே மக்காத குப்பைகள் உருவாகாது. இது பூமிக்கு நாம் செய்யும் மிகப் பெரிய நன்மை. இயற்கைப் பொருட்களையும் ஒரேயடியாக இந்த தலைமுறையிலேயே செலவழித்து தீர்த்துவிடாமல் குறைவாக பயன்படுத்தினால் இயற்கை நம்மை கைவிடாமல் வெகு நாட்கள் காக்கும். 

இரண்டாவது தண்ணீர், மின்சாரம், எரிபொருள் என்ற எல்லாவற்றையும் சிக்கனாமாக பயன்படுத்த வேண்டும். பயன்பாட்டைக் குறைக்க குறைக்க உற்பத்தியின் அளவு குறையும் இதனால் இயற்கையை சுரண்டும் பாதிப்பும் குறையும். தொழிலுக்கோ வேலைவாயப்புக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. அதற்கடுத்து குப்பையைக் குறைப்பது. நாம் வெளியில் கொட்டும் குப்பை குறைய குறைய பூமித்தாய் மனம் மகிழ்வாள். நிலம், நீர், காற்று என எல்லாவற்றையும் தூய்மையாக நமக்கு வழங்குவாள். 


இதோடு நம் கடமை முடிந்து போய்விடவில்லை. சுற்றுச் சூழலைப் பற்றியும், உலக வெப்பமயமாதலைப் பற்றியும் புத்தகங்கள், விழிப்புணர்வு கட்டுரைகள் படிக்கவேண்டும். மற்றவர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களும் மாறினால்தான் உண்மையான மாற்றம் ஏற்படும் என்று மேலும் அவர்கள் கூறுகிறார்கள். 

ஆட்சியாளர்கள் கிடக்கட்டும், அவர்களை பின்னால் பார்த்துக் கொள்ளலாம். நாம் முதலில் மாறுவோம். நம் பிள்ளைகளை மாற்றுவோம். சுற்றுச்சூழல் குறித்த மாற்றத்தை நாமே தொடங்குவோம்..! வியாழன், ஜூலை 07, 2016

சுற்றுலாவை முடக்கும் தீவிரவாதம்


மீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நான்கில் ஒருவர் உள்ளூர் மற்றும் உலக பாதுகாப்பு காரணமாகவும், தொற்று நோய்க் காரணமாகவும் தங்களின் சுற்றுலா திட்டங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என்று தெரிகிறது. உலகம் முழுவதும் 2000 நபர்களிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் 77% பேர் தீவிரவாத செயல்பாடு அதிகம் இருப்பதால் சுற்றுலா செல்வதை தவிர்ப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். அந்த இடங்களில் மேற்கொள்ளப்படும் ராணுவ கெடுபிடிகள், சண்டைகள் காரணமாக செல்ல பிடிக்கவில்லை என்று அவர்களில் 59% பேர் தெரிவித்திருந்தார்கள்.    


தொற்று நோய்கள் காரணமாக 46% பேரும், தொடர்ந்து குற்றங்கள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதில்லை என்று 25% பேரும், அரசியல் காரணமாக 25% பேரும் சுற்றுலா செல்வதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 

ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் சுற்றுலா செல்ல விரும்பும் நாடுகளாக 62% பேர் கூறியிருக்கிறார்கள். 10%-க்கும் குறைவானவர்களே வடக்கு, மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளுக்கும், 20%-க்கும் குறைவானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் செல்ல விரும்புவதாக சொல்லியிருக்கிறார்கள்.


சுற்றுலாவுக்கான திட்டமிடல்களையும் எங்கு செல்வது என்ற முடிவையும் எதன் அடிப்படையில் எடுக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அங்கீகாரம் பெற்ற பயண ஆலோசகர்கள் தரும் தகவல் அடிப்படையில் 55% பேரும், சுற்றுலா பத்திரிகைகள், பயணக் கட்டுரைகள் தரும் தகவல்கள் அடிப்படையில் 36% பேரும் முடிவு எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். சுற்றுலா தொடர்பான ஆலோசனைகளை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து 34% பேரும், சமூக வலைதளங்களில் இருந்து 17% பேரும் பெறுவதாக கூறியிருக்கிறார்கள். புதன், ஜூலை 06, 2016

தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளின் மரணம்


லகம் முழுவதுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதில் அம்மாக்களுக்கு ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த தயக்கம் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் மிக அதிகமாக இருக்கிறது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் குறைவாக இருக்கிறது. இந்த தயக்கத்திற்கு காரணமாக இருப்பது தாய்ப்பால் அதிகமாக கொடுத்தால் மார்பகத்தின் அழகும் கவர்ச்சியும் குறைந்துவிடும் என்ற நம்பிக்கைதான். 


இந்த நம்பிக்கை இப்போது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் தாய்மார்களையும் தொற்றிக்கொண்டது. 37 சதவீத குழந்தைகளுக்குதான் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு இயற்கையாக தாய்ப்பால் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதில்லை. இது போக தாய்ப்பால் உடல் பருமன், சர்க்கரை நோய், ஆஸ்துமா, ரத்த அழுத்தம், அலர்ஜி, பல் சொத்தை போன்ற நோய்கள் வராமல் குழந்தைகளை பாதுகாப்பதில் தாய்ப்பால் மிக முக்கிய பணியாற்றுகிறது. 

குழந்தைகளைப் போலவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் ஏராளமான நன்மைகளை தருகிறது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் பாதுகாக்குகிறது. தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரை உடலுறவு கொண்டாலும் கரு உருவாகாமல் தடுக்கலாம். அதுவொரு இயற்கை கருத்தடை அம்சமாக திகழ்கிறது.


குறிப்பிட்ட காலம் வரை தாய்ப்பால் கொடுக்காததால் உலகம் முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட 8,23,000 குழந்தைகள் வருடந்தோறும் இறக்கின்றன. இந்தியாவில் மட்டும் 1 லட்சத்து 56 ஆயிரம் குழந்தைகள் ஆண்டுதோறும் தாய்ப்பால் கிடைக்காமல் மரணிக்கின்றன என்கிறது உலகப் புகழ் பெற்ற 'லேன்செட்' மருத்துவ இதழ். மேலும் இந்த இதழ் தாய்ப்பால் தொடர்பாக இந்தியாவில் சமீபத்தில் ஒர் ஆய்வு நடத்தியது. 

அந்த ஆய்வின் முடிவில் இந்தியாவில் அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால், வருடந்தோறும் நிகழும் 5 வயதுக்குட்பட்ட 1,56,000 குழந்தைகளின் மரணத்தை தடுக்கலாம். 36 லட்சம் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவதை தடுக்கலாம். 34 லட்சம் குழந்தைகளுக்கு நிமோனியா வராமல் பாதுகாக்கலாம். மார்பக புற்றுநோய் காரணமாக ஆண்டுதோறும் இறக்கும் 7 ஆயிரம் பெண்களை காப்பாற்றலாம். இந்த நோய்களுக்காக செலவிடப்படும் 4,300 கோடி ரூபாயையும் மிச்சப்படுத்தலாம். 

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து குழந்தைகளின் மரணத்தை தடுப்பது ஒவ்வொரு தாய்மார்களின் கடமை என்பது உணர வேண்டும். இதையும் படிக்கவும்..
தாய்ப்பால் ஏன் அவசியம்?

விலங்குகளுக்கு தாய்ப்பால் தரும் பெண்கள்..

ஞாயிறு, ஜூலை 03, 2016

களைப்பு ஏன் ஏற்படுகிறது?


னிதன் ஏன் அடிக்கடி களைப்படைகிறான் என்பதற்கு ஜேன் பிராடி என்ற மருத்துவ அறிஞர் ஒரு விளக்கம் அளித்துள்ளார். கடுமையான உழைப்பினால் கரியமிலவாயு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்கள் அதிக அளவு ரத்தத்துடன் கலந்து ஒருவனை விரைவில் களைப்படையச் செய்கின்றன என்பதுதான் அது. 


ஜலதோஷம், நீரிழிவு, புற்றுநோய் இவை சிறிது இருந்தாலும் அவை உடலை களைப்படையச் செய்துவிடும். உணர்ச்சி வசப்படுவதாலும் மனத்தளர்ச்சியினாலும், அதிகமான எதிர்பார்ப்புகளாலும் களைப்பு ஏற்படுவதுண்டு. அவசரமாக உண்பதாலோ, சரிவர உண்ணாமல் இருப்பதாலோ உடலில் சர்க்கரை சத்துக்குறைவு ஏற்பட்டு களைப்பு உண்டாகிறது. அதிகமான உடற்பயிற்சி குறைந்த உறக்கம் போன்றவையும் களைப்பின் காரணங்களாகும். 


மிகச் சமீபத்தில் மற்றொரு ஆச்சரியமான கண்டுபிடிப்பும் வெளிவந்துள்ளது. குறைப் பிரசவத்தில் அதாவது ஏழு, எட்டு மாதங்களில் பிறந்தவர்கள் வெகு எளிதில் களைப்படைந்து விடுகிறார்கள். 

அடிக்கடி களைப்பு, தொண்டைக் கமறல், கண் எரிச்சல், உடலில் சோர்வு, லேசான நடுக்கம், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் கொட்டுதல் எல்லாம் நம்மிடம் வந்து சேர்ந்து விட்ட அழையா விருந்தாளியான ஜலதோஷத்தைக் குறிக்கிறது. இந்த ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு எளிதாக பிற பெரிய நோய்களும் தாக்கக்கூடும். 


ஆகவே, இந்த தொல்லை தரும் ஜலதோஷத்தை தடுப்பது எப்படி? இதற்கு மிகச் சரியான மருந்து ஒருவகை அமிலம்தான். இதன் பெயர் 'அஸ்கார்பிக் அமிலம்' ஆகும். நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு இந்த அமிலம் 60 மில்லி கிராமும், கருவுற்ற பெண்களுக்கு 80 மில்லி கிராமும், தாய்மார்களுக்கு 100 மில்லி கிராமும் தேவைப்படுகிறது. இந்த அளவு குறைந்தால் நோய்கள் மிக எளிதில் தொற்றிக்கொள்ளும். களைப்பும் ஏற்படும். இந்த அமிலத்திற்கு மற்றோரு பெயரும் உண்டு. அதன் பெயர் வைட்டமின் 'சி'. இது குறைந்தாலும் களைப்பு ஏற்படும். கோடைக்காலத்தில் மிக அதிக அளவில் களைப்பு ஏற்படும். இந்த ஆண்டு அதிக வாசிப்பு

சமீபத்திய பதிவு

ஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..!

அது ஏப்ரல் மாதம் முதல் வாரம். 2020 ஆண்டு. கொரோனா  என்ற கண்ணுக்குத் தெரியாத அசுரன் மொத்த உலகையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்த காலம். இ...