தொலைந்த பாரம்பரியம்
இயற்கை எல்லா பருவநிலைகளிலும் உயிர்களை பட்டினி போடாமல் பாதுகாக்க உணவை தந்திருக்கிறது. அதன் அருமை தெரியாமல் தொலைத்தவர்கள் நாம்தான். எல்லா நிலத்திலும் எல்லா காலத்திலும் ஒரே மாதிரியான வீரிய ரகத்தை விதைத்துவிட்டு, விவசாயம் லாபகரமான தொழில் இல்லையென்று மடத்தனமான முடிவுக்கு வந்தோம்.
* * * * * * *
நமது விவசாயிகளிடம் பெரிய அறிவுப் பொக்கிஷமே இருந்தது. பயிர்கள் பற்றிய அவர்களது ஞானம் நம்மை வியக்கவைக்கிறது. இன்றைய காலம்போல் ஒரேவகையான பயிர்களை விளைவித்து, வெள்ளம் வந்தால் பயிர்கள் அழுகிப்போவதும், வறட்சி வந்தால் பயிர்கள் கருகிப்போவதும் அப்போது நடைபெறவில்லை.
விவசாயிகளுக்கு தங்கள் பகுதியில் பெய்யும் மழையின் அளவு தெரிந்திருந்தது மண்ணின் வளம் புரிந்திருந்தது. இதுபோக நிலத்தின் தன்மையையும் அறிந்து வைத்திருந்தார்கள். இவற்றைக் கொண்டுதான் அந்த பகுதியில் எந்த பயிர்களை பயிரிடலாம் என்று முடிவெடுப்பார்கள்.
வறண்டு போன வானம் பார்த்த பூமிஎன்றால் அதில் 'குழி வெடிச்சான்' என்ற பாரம்பரிய நெல் ரகத்தை விதைப்பார்கள். சொட்டுத் தண்ணீர் இல்லையென்றாலும் முத்து முத்தாக நெற்கதிர்களை விளைவித்திடும் ரகம் இது. இதைப்போலவே கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு, சோளம், குதிரைவாலி என்ற சிறுதானியங்களும் வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது. இந்த வருடம் வானம் பொய்த்துப் போகும் என்றால் உடனே 'குழி வெடிச்சானை' விதைத்து விடுவார்கள். விவசாயி நஷ்டப்படாமல் விளைச்சல் பார்த்துவிடுவார்.
அதேவேளையில் மழை வெள்ளமும் வரலாம் அல்லது வறட்சியும் வரலாம் என்று கணிக்க முடியாத நிலையிருந்தால் 'மாப்பிள்ளை சம்பா' என்ற நெல் ரகத்தை பயிரிடுவார்கள். புதிதாக திருமணமான மாப்பிள்ளைக்கு தெம்பையும் இல்லறத்துக்கான வீரத்தையும் கொடுக்கும் ரகம். அதனால் தான் பெயரிலேயே மாப்பிள்ளை இருக்கிறது. இது வெள்ளம் வந்தாலும் அழுகிப்போகாது. வறட்சி வந்தாலும் கருகிப் போகாது. அற்புதமான இந்தப் பயிர் ஓர் இயற்கை அதிசயம். விளைச்சலை தந்துவிடும்.
எப்போதும் தண்ணீருக்கு பஞ்சம் இல்லாத செழிப்பான பூமி என்றால், வயலில் மாதம் முழுவதும் நீர்க்கட்டி நிற்கும் என்கிறபோது 'சொர்ண' என்ற நெல் ரகத்தை விதைப்பார்கள். எவ்வளவு நீர் இருந்தாலும் நாற்றோ பயிரோ அழுகிப்போகாது. விளைச்சலை அமோகமாக தந்துவிடும். இப்படி இடத்துக்கு ஏற்றாற்போல் விவசாயம் செய்தார்கள் நம் முன்னோர்கள்.
இதையெல்லாம் விட அன்றைய விவசாயிகள் ஆறு, குளம், ஏரிகளில் விதைப்பதற்காகவே ஒரு நெல் ரகத்தை வைத்திருந்தார்கள். அதன் பெயர் 'மடு முழுங்கி'. நீர்நிலைகள் வறண்டிருக்கும் காலங்களில் அந்த நீர்நிலைகளுக்குள்ளே நெல் விதைகளை தூவிவிடுவார்கள். நெல்லும் மண்ணில் புதைந்துபோகும் இந்த விதைகள் ஒரு மழை பெய்ததும் முளைக்கத் தொடங்கும். நீர்மட்டம் எவ்வளவு உயர்ந்தாலும் கவலைப் பட வேண்டியதில்லை. அந்த உயரத்திற்கு பயிர் வளர்ந்துவிடும். தாமரை மலர்போல நீர் மட்டத்திற்கு மேலே நெற்கதிர்கள் உருவாகும். இந்த நெல்லை பரிசலில் சென்று அறுவடை செய்து வருவார்கள்.
மலைச் சரிவுகளில் பயிரிடுவதற்காகவே 'ஐவனம்' என்ற நெல் இருக்கிறது. இதற்கு மலையின் குளுமையும் லேசான ஈரப்பதமும் இருந்தாலே போதும். விளைச்சலை அள்ளித்தட்டி விடும். இப்படி வகைவகையாய் நம்மிடம் இருந்த நெல் ரகங்கள் எத்தனை தெரியுமா? ஒன்றல்ல.. இரண்டல்ல.. மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள், நான்கு லட்சம் நெல் ரகங்கள். ஒரு வேளைக்கு ஒரு ரகம் என்று ஆக்கிப் பொங்கி சாப்பிட்டால் கூட அத்தனை ரகத்தையும் சாப்பிட ஆயுசு பத்தாது.
அப்படிப்பட்ட பாரம்பரிய ரகங்களை எல்லாம் அழித்துவிட்டு இப்போது வெறும் 130 நெல் ரகங்களை மட்டும் வைத்துக் கொண்டு திண்டாடிக் கொண்டு இருக்கிறோம். மழை பெய்தாலும் பயப்படுகிறோம். மழை பெய்யாவிட்டாலும் பயப்படுகிறோம். நம்மைப் போலவே நமது நெல்லும் எதையும் தாங்கும் சக்தியற்று நோஞ்சானாக இருக்கிறது. பசுமைப் புரட்சி என்ற ஒரு சுனாமி அத்தனை பாரம்பரிய ரகங்களையும் கூண்டோடு அடித்துக்கொண்டு போய்விட்டது.
இப்போது மீண்டும் பாரம்பரிய ரகங்களை மீட்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு இருப்பது ஆறுதலான விஷயம். இயற்கை எல்லா பருவநிலைகளிலும் உயிர்களை பட்டினி போடாமல் பாதுகாக்க உணவை தந்திருக்கிறது. அதன் அருமை தெரியாமல் தொலைத்தவர்கள் நாம்தான். எல்லா நிலத்திலும் எல்லா காலத்திலும் ஒரே மாதிரியான வீரிய ரகத்தை விதைத்துவிட்டு, விவசாயம் லாபகரமான தொழில் இல்லையென்று மடத்தனமான முடிவுக்கு வந்தோம்.
இன்னும் நம் மேன்மையை நாம் உணராமலே இருக்கிறோம். நாம்தான் ஆங்கில மோகத்தில் நம்மை அழித்துக்கொண்டோம். நம் சந்ததிகளுக்காகவாவது நம் பாரம்பரியத்தை புரியவைப்போம்.
மேலும் பேசுவோம்.
-தொடரும்
தொடர்புடைய பதிவுகள்
விவசாயத்தின் விதை நெல்லாய் வித்திட்ட பதிவு.
பதிலளிநீக்குவாழ்த்துகள் நண்பரே!
த ம 1
நட்புடன்,
புதுவை வேலு
முதல் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!
நீக்குஇத்தொடர் பதிவு பல அரிய செய்திகளைக் கொணர்கிறது. நம் முக்கியத்துவத்தை நாம் உணர வைக்கிறது.
பதிலளிநீக்குநாம் உணராத பல அம்சங்கள் நம் பாரம்பரியத்தில் இருக்கிறது.
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!
என்ன தகவல் குவியல்...நண்பரே...ஒரு நூலாக வெளியிடுங்கள்
பதிலளிநீக்குநூலாக கொண்டுவர முயற்சிக்கிறேன் நண்பரே!
நீக்குஅறிவியல் வளர்ச்சி என சொல்லிக்கொண்டு நமது பாரம்பரிய தானியங்களை இழந்துவிட்டோம். இனியாவது அரசு விழித்துக்கொண்டு வேளாண்மை அறிவியலார்கள் மூலம் அவைகளை திரும்பவும் கொண்டு வரவேண்டும். அருமையான் தகவல்களை பகிர்ந்துகொண்டு இருப்பதற்கு பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குசில தன்னார்வ குழுக்கள் இந்த பாரம்பரிய ரகங்களை மீட்க முயற்சி எடுத்து வருகின்றன. அரசு வழக்கம் போல எதையும் கண்டுகொள்வதில்லை.
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குபிரமிப்பான தகவல்கள் நண்பரே ஆகமொத்தம் இன்றைய விவசாயிகளுக்கு விவசாயம் தெரியவில்லை என்ற நிலையிலேயே வாழ்கின்றோம் காலநிலை அறியாமல் பயிரிட்டால் அர்த்தம் என்ன ? இனி நாளைய சந்ததிகளுக்கு எப்படி தெரியும் ? சொல்லிக் கொடுக்க ஆளில்லையே..
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
சொல்லிக்கொடுக்கலாம். நம் தலைமுறைதான் அதை சொல்லவேண்டும். இந்த தொடர் பதிவு கூட அதில் ஒரு வகைதான். ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இப்போது அனைவரிடமும் ஒரு மாற்றம் தெரிகிறது.
நீக்குவருகைக்கு நன்றி நண்பரே!
பாரிய தேடலின் பின் வரும் பதிவென்பதை புரிந்திட முடிகின்றது. நெல்ரகங்களின் பெயர்கள் அவை விளையும் நிலமென பதிவு அத்தியாவசியமான
பதிலளிநீக்குசமூகதேவையை குறித்து சாடலுடன் சொல்கின்றது.இனியேனும் நம சமூகமும் அரசும் விழித்தால் நல்லது.
விளைநிலங்களைஅழித்துதொடர்மாடிகளும்,தொழிற்சாலைகளும் கட்டுவதை காணும் போது என் மனசு பதை பதைக்கும்.ஐயோ !இதில் விளைவித்த சோளமும், கோதுமையும்,உருளையும் இனி விளைவிக்கப்படாதே! இப்படியே போனால் நாளைய நம் எதிர்காலம் உணவுத்தேவையை எப்படி பூர்த்தி செய்ய போகின்றது என கவலைப்படுகின்றேன். சனத்தொகை வளர்ச்சி, நகரகட்டுமானம் என ஆயிரம் காரணம் சொன்னாலும் விளை நிலைங்கள் அழிக்கப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அதே போல் விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதும் வருத்தத்துக்குரிய விடயம். எங்களூரில் நிஜ பணக்காரர்களும் கோடிஸ்வரர்களும் விவசாயிகள் தான். அரசு அத்தனை சலுகையை அவர்களுக்கு கொடுக்கின்றது.ஆனால் ஆசிய,ஆபிரிக்க தேசங்களில் வியர்வை சிந்தும் விவசாய வர்க்கம் ஏழையாயிருக்கும் படி அவனை மிதித்து கொண்டு மேல் வர்க்கம் மேலே மேலே உயர்ந்து தம் தேவையை பூர்த்தி செய்கின்றது.
அரிசியும் பருப்பும் கோதுமையையும் விளைவிப்பவன் புழுதியில் புரண்டு போராடும் நிலையில் விவசாயம் என்றாலே இளம் தலை முறை அலறி அடித்து ஓடும் நிலையில் இருக்கின்றது.
என்ன தான் தொழில்னுட்பத்தில் நாம் வளர்ந்தோமென சொன்னாலும் விளை நிலங்களில் வளம் அறிந்து விதைப்பதிலும் இயற்கையை இனம் கண்டு அதற்கேற வாழ்க்கை போக்கை நிர்ணயிப்பதிலும் அக்கால விவசாயிகளுடன் போட்டி போட முடியவே முடியாது.அதே போல் மண் வளத்தை பாதுகாப்பதில் அவர்கள் காட்டும் அக்கறை பெற்ற பிள்ளையை பேணி பாதுகாப்பது போலிருக்கும்.
தொடர்ந்து ஒரே பயிரை பயிரிட்டால் மண் வளம் குறையும் என மாற்று பயிர்களை பயிரிடுவதை காணும் போது மனமார பாராட்ட தோன்றும்.
மிகவும் உணர்வுப் பூர்வமாக எழுதியுள்ளீர்கள். எனக்கும் இதே எண்ணம்தான் ஏற்படும். இப்போது கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருப்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
நீக்குவருகைக்கு நன்றி நிஷா!
எத்தனை வகைகள் நெல்லில்! அருமையான பதிவுகள் அனைத்தும்!நூலாக வெளியிட ஆவன செய்யுங்கள்
பதிலளிநீக்குமுயற்சிக்கிறேன் அய்யா!
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நான்குலட்சம் விதை ரகங்களா? மலைக்க வைக்கிறது! சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குஒரு சில நெல் ரகங்கள் தெரிந்திருந்தாலும் பல தெரியாத் ரகங்கள்! அதுவும் இத்தனை ரகங்களா என்று! அருமையான தகவல்களுடன் ஒரு சிறப்பான பதிவு நண்பரே. வறண்ட பூமிக்கெனவும் , வளமான பூமிக்கெனவும், இரண்டையும் தாங்கும் சக்தி கொண்டவை எனவும் பிற பயிர்களுமுண்டு. அதை வைத்துத்த்தான் பயிர் விளைனிலம் எல்லாமே..
பதிலளிநீக்குகீதா: திருநெல்வேலிக்கும் மதுரைக்கும் இடைப்பட்ட பூமி மிகவும் வறண்ட பூமி விளைனிலம் அல்ல என்று சொல்லப்படும். அந்த மண்ணைச் சோதித்து அதில் விளையும் பயிர்களை விளைவிக்க ஒரு காலத்தில் முயற்சி எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டதும் உண்டு. அதாவது ஏரைட் ரீஜன் என்று சொல்லப்பட்டது. ராஜஸ்தான் பகுதியிலும் பெரும்பான்மையான பகுதி இந்தப் பகுதிதான். எனவே அதற்கேற்றாற் போல விளைவிக்க நான் படிக்கும் போது அக்ரிக்கல்சுரல் எக்கான்மிக்ஸில் சொல்லப்பட்டது. அதன் பின்னர் அது அப்படியே கைவிடப்பட்டதாக நினைவு.
தொடர்கின்றோம்...
நீங்கள் சொல்லும் இந்த வறண்ட பகுதிகளுக்கு என்று தனி பயிர்கள் நமது பாரம்பரிய வேளாண்மையில் இருந்திருக்கிறது. இன்று அதை தொலைத்துவிட்டு திணறுகிறோம்.
நீக்குவருகைக்கு நன்றி நண்பர்களே!
அருமையான பதிவுகள் சகோ! மலைக்க வைக்கும் செய்திகள் அனைத்தும். ஏனையவற்றையும் முடிந்த வரை வாசிக்க முயல்கிறேன். எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்க மனம் வருந்துகிறது. எப்படி மீளப் பெறப் போகிறோம் இவற்றை என்று. ஆராய்ச்சி செய்பவர்களுக்கு வெற்றி கிட்ட என் வாழ்த்துக்கள் ! பதிவுக்கு நன்றி !
பதிலளிநீக்குஇப்போது மீண்டும் நம்பிக்கை சற்று துளிர் விட்டிருக்கிறது. அதற்கான ஆயத்த வேலைகள் நடைபெறுகின்றன. ஆனால், இழந்ததை மீட்க முடியுமா என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.
நீக்குவருகைக்கு நன்றி சகோ!
படிக்காமல் விட்டுப்போன இந்த பதிவினை இன்றுதான் படித்தேன். தொடர்கின்றேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே, தொடருங்கள்.
நீக்குகருத்துரையிடுக