Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

நீர்வழிச் சாலை: தண்ணீரில்லா காடா தமிழகம் - 11


தண்ணீரில்லா காடா தமிழகம்..!

முதலில் அவர்களின் விவசாயம் கம்பு, கேழ்வரகு போன்ற நீர் குறைவான பயிர்களை விளைவிப்பதாக இருந்தது. இப்போது அவர்கள் நெல் விவசாயத்தில் தனி முத்திரை பதித்து வருகிறார்கள். இந்தியா முழுவதும் 'கர்நாடகா பொன்னி', 'செல்ல பொன்னி' என்று அரிசி ரகங்கள் மக்களின் மனம் கவர்ந்த அரிசியாக மாறிவிட்டன. 

* * * * * * *
மிழகத்தில் மழையில்லை. தமிழகத்தில் தண்ணீர் கிடையாது. தமிழகம் ஒரு வறட்சி பூமி இப்படிதான் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். உண்மையில் தமிழகம் தண்ணீரில்லா காடா..? இல்லவே இல்லை. இயற்கை அப்படியெல்லாம் நம்மை வஞ்சித்துவிடவில்லை. நமது பக்கத்து மாநிலங்களைவிட நமக்கு அதிகமாகவே மழையை இயற்கை அள்ளிக் கொடுத்திருக்கிறது.

ஆந்திராவின் ஆண்டு சராசரி மழையளவு 908 மி.மீ. தமிழகத்தின் சராசரியோ 925 மி.மீ. ஆந்திராவைவிட 17 மி.மீ. மழை அதிகம். சரி, நம்மோடு நீருக்காக மல்லுக்கட்டும் கர்நாடகாவின் மழை எவ்வளவு தெரியுமா! ஆண்டு சராசரி 732 மி.மீ. அவர்களைவிட நமக்கு 193 மி.மீ. அதிகம். அப்படியென்றால், இயற்கை நம்மை ஓரங்கட்டவில்லை. நாம்தான் இயற்கையை ஓரங்கட்டிவிட்டோம்.

ஏரிகளுடனான நமது பந்தம் விலகியபோதே வறட்சி நம்மோடு வந்து ஒட்டிக்கொண்டது. நம்மிடம் 2000 ஆண்டுகளாக உபயோகத்தில் இருக்கும் ஏரிகள் இருக்கின்றன. சங்ககால ஏரிகள் மட்டும் 50 உள்ளன. இதில் மிகவும் பழமையானது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் உள்ள கண்மாய்தான். 2100 ஆண்டுகள் தொடர்ந்து உபயோகத்தில் இருக்கும் தமிழகத்தின் மிகப் பழமையான நீர்நிலை இது.

இடது பகடைக்குளம், வலது கருங்குளம் - பகடைக்குளத்தை விட கருங்குளம் தாழ்வாக இருப்பதை காணலாம்
இந்த கண்மாய்க்கு காமராஜர் சாகர் அணைக்கட்டில் இருந்து நீர் வருகிறது. ஒரே கண்மாயில் மூன்று குளங்களை மூன்று மட்டங்களில் அமைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். வயல்களின் மட்டத்திற்கேற்ப குளங்களின் மட்டத்தை நிர்ணயித்திருக்கிறார்கள். கரிசல் குளம், பகடைக்குளம், புல்வெட்டி குளம் என்ற இந்த மூன்று குளங்களை இன்றும் பார்க்கலாம். சங்க கால பெயர்கள் சற்று மாறி கருங்குளம், நடுக்குளம், புல்வெட்டி குளம் என்று இப்போது மக்கள் இந்தக் குளங்களை அழைக்கிறார்கள். 


ஏரிப்பாசனம்தான் நமது உயிர்நாடி என்று ஏற்கனவே பார்த்தோம். இதை நாம் தொலைத்ததால்தான் விவசாயத்தை தொலைத்து நிற்கிறோம். 1971-ல் 28 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்துகொண்டிருந்த நாம் இப்போது 21 லட்சமாக விவசாயத்தை சுருக்கிக்கொண்டோம். 7 லட்சம் ஏக்கர் விளைநிலங்களை எல்லாம் வீட்டுமனைகளாக விற்று மனநிம்மதி அடைந்தோம்.


ஆனால், கர்நாடகாவின் விவசாய நிலம் 1991-ல் 11.20 லட்சம் ஏக்கராக இருந்தது. இன்று அது 21.70 லட்சம் ஏக்கராக உயர்ந்திருக்கிறது. அதாவது 25 வருடத்தில் தனது பாசனப்பரப்பை இருமடங்காக உயர்த்திவிட்டது. இன்னும் உயர்த்திக்கொண்டே இருக்கிறது. இரண்டாயிரம் வருட பாரம்பரிய நீர் மேலாண்மை கொண்ட நாம் அதன் அருமையை மறந்து நீரை விலக்கிவிட்டோம். அவர்கள் பிடித்துக் கொண்டார்கள்.

வெகு தாமதமாக விவசாயத்தையும் நீர் மேலாண்மையையும் மேற்கொண்ட அவர்கள் இன்று மளமளவென்று முன்னேறிவிட்டார்கள். பாசனப்பரப்பைக் கூட்டியதால்தான் அவர்களின் நீர் தேவை அதிகரித்துவிட்டது. ஏராளமாக நீர் இருக்கும்போதே தமிழகத்திற்கு தண்ணீர் தர மூக்கால் அழுபவர்கள். இன்று அவர்களுக்கே ஏகப்பட்ட நீர்த்தேவை இருக்கும்போது தருவார்களா?  தரமாட்டார்கள். 

அதேபோல் முதலில் அவர்களின் விவசாயம் கம்பு, கேழ்வரகு போன்ற நீர் குறைவான பயிர்களை விளைவிப்பதாக இருந்தது. இப்போது அவர்கள் நெல் விவசாயத்தில் தனி முத்திரை பதித்து வருகிறார்கள். இந்தியா முழுவதும் 'கர்நாடகா பொன்னி', 'செல்ல பொன்னி' என்று அரிசி ரகங்கள் மக்களின் மனம் கவர்ந்த அரிசியாக மாறிவிட்டன.  தமிழகத்திலும் இன்று விற்பனையில் சக்கை போடு போடுகிறது. 

எப்படி அவர்களால் முடிந்தது நம்மால் முடியாமல் போனது? நமது ஏரிகளை ஒவ்வொரு அரசுத் துறையும் சொந்தம் கொண்டாடிக்கொண்டு ஏரிகளை பாழ்படுத்திக் கொண்டிருந்தபோது கர்நாடகம் விழித்துக் கொண்டு 1959-ல் 'கர்நாடகா ஏரி அபிவிருத்தி ஆணையம்' என்ற அமைப்பை ஏற்படுத்தியது. இந்த ஆணையத்திடம் எந்த அரசியல் கட்சியும் அதிகாரம் செலுத்த முடியாது. 

இதுவொரு சுயாட்சி அமைப்பு. எந்த ஆட்சி மாறினாலும் இதன் நோக்கம் ஏரிகளை பாதுகாப்பது, அவற்றை மறுசீரமைப்பது, தூர்ந்துபோன ஏரிகளை மீட்டெடுப்பது, அழிந்துபோன பழைய ஏரிகளை மீண்டும் உருவாக்குவது, நீர் சம்பந்தமான கொள்கையை உருவாக்குவது என்று அசுர வேகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது ஏரி அபிவிருத்தி ஆணையம். 

ஆனால், நாம் பழமையையும் மறந்துவிட்டோம். மற்ற மாநிலங்கள் நீர்ப்பாசனத்தில் கண்டு வரும் வளர்ச்சியையும் உதாசினப்படுத்தி வருகிறோம். நம் பணவெறிக்கு நமது வளமையான இயற்கையை தொடர்ந்து பலிகொடுத்துக் கொண்டே இருக்கிறோம்.

நம்மை மாற்றியது எது?

அதையும் பார்ப்போம்..

                                                                                                                                           -தொடரும்



தொடர்புடைய பதிவுகள்


21 கருத்துகள்

  1. இயற்கையை பலி கொடுக்க தொடங்கினால் நம்மை தான் அது பழி வாங்கும் என்பது கடந்து போன வெள்ளம் நிருபித்து இருக்கின்றதே!இனியேனும் புரிந்திடவா போகின்றோம்.

    நீருக்கு பஞ்சமான நாடுகளே தம் தேவைகளை பூர்த்தி செய்யும் போது நீரோடு வாழும் நம் பூமியில் குடி நீருக்கும் அல்லல் படும் நிலை வர நம்மை மாற்றியது என்ன?

    தொடர்கின்றேன்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், இயற்கை பலி வாங்கிக்கொண்டுதான் இருக்கிறது. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  2. அனைத்தும் பிரமிப்பான தகவல்கள் நண்பரே தொடர்கிறேன் கர்நாடகாவில் இருமடங்கு பெருக்கி விட்டார்கள் நாம் ???
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  3. அங்கே,ஆக்கப்பூர்வமான திட்டம் ,இங்கே ,இருப்பதையும் அழிப்பதே நடந்தால் பேரிடர் வராமல் போகுமா :)

    பதிலளிநீக்கு
  4. பதிவிற்கான தங்களின் உழைப்பி பிரமிக்க வைக்கிறது நண்பரே
    தொடர் பதிவிற்காகக் காத்திருக்கிறேன்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  5. அரசியல்வாதிகளுக்கு அஞ்சாத + சற்றும் வளைந்து கொடுக்காத கர்நாடக ஏரி அபிவிருத்தி ஆணையம் என்ற சுயாட்சி அமைப்பு மிகவும் பாராட்டத்தக்கது. சுவாரஸ்யமான பல தகவல்களையும் படங்களையும் கொண்ட இந்தத்தொடர் ஜோராக ... நீரோட்டமாகச் செல்கிறது. பாராட்டுகள். மேலும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள அய்யா,

    தமிழகத்தில் ஆண்டு சராசரி மழை அளவு ஆந்திரா கர்நடாக மாநிலைத்தைவிட அதிகமாக இருக்கிறது; இருந்தாலும் நாம் நீருக்காகக் கையேந்தும் நிலையில்தான் இருக்கிறோம். மற்ற மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் நீரின் மேலாண்மையைப் போல் நாம் கடைபிடிக்கத் தவறிவிட்டோம். இதிலும் அரசியல்...லாபம்... இதைத்தானே பார்க்கின்றோம்.

    நன்றி.
    த.ம.6

    பதிலளிநீக்கு
  7. பண ஆசையால் பயிர் நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பயிரிடும் பரப்பை நாம் குறைத்ததால் தான் இன்று அடுத்த மாநில அரிசிக்கு ஆலாய் பறக்கிறோம். கர்நாடகம் எப்படி நீர் மேலாண்மையை பயன்படுத்தி பாசனபரப்பை அதிகப்படுத்தினார்கள் என்பதை அந்த மாநிலத்தில் 6 ஆண்டுகள் இருந்தபோது கவனித்திருக்கிறேன். இப்போதாவது நாம் விழித்துக்கொள்ளவேண்டும்.

    புள்ளி விவரங்களோடு விளக்கும் இந்த அருமையான பதிவிற்கு எனது பாராட்டுக்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி தோழர்

    பதிலளிநீக்கு
  9. நமக்கும் இன்றைய அவசரத்தேவை ஏரி அபிவிருத்தி ஆணையமொன்று. இருப்பவற்றை தக்கவைக்க இயலாமல் அலட்சியம் காட்டியதன் பலனை இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அருமையானதொரு தொடர். பாராட்டுகள் செந்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோ, கண்டிப்பாக ஆணையம் தேவை. அதுவும் அரசியல் தலையீடில்லாத சுயாட்சி ஆணையம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  10. இயற்கையைப் பகைத்துக் கொண்டால் நிச்சயமாக அது நம்மை அழித்துவிடும்தான். பாருங்கள் கர்நாடகம் எப்படித் தழைக்கின்றது விவசாயத்தை முதன்மையாகக் கொண்டு நாமும் இருக்கின்றோமே....இருப்பதையும் தொலைத்துவிட்டு...அலட்சிய மனப் போக்கு. இனியேனும் இருக்கும் ஏரிகளைக் காப்பார்களா? தமிழ்நாட்டில் மழைக்கு ஒன்றும் பஞ்சமில்லை. மழையற்ற பூமி என்பதெல்லாம் சும்மா...நீர்மேலாண்மை இல்லாததுதான் ...தொடர்கின்றோம் அருமையான தொடரை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மிடம் எல்லாமே இருக்கிறது. மனம்தான் இல்லை. வருகைக்கு நன்றி

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை