Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

நீர்வழிச் சாலை: ஏரிகள் படும்பாடு - 12


ஏரிகள் படும்பாடு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளும் நிறைந்தாலும் அதன் கொள்ளளவை விட இந்த நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகம். நமது அணைகளின் மொத்த நீர் கொள்ளளவு 243 டி.எம்.சி. கிட்டத்தட்ட 147 டி.எம்.சி. நீர் அதிகம். எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். நமது முன்னோர்கள் எத்தகைய தீர்க்கதரிசிகள் என்பதை இந்த நீர் மேலாண்மை காட்டுகிறது. 


* * * * * * *
ரி என்பது ஓர் அற்புதமான நீர்நிலை வடிவம். நதியை கட்டுப்படுத்துவதும் பராமரிப்பதும் கடினம். அதேவேளையில் ஏரியை பராமரிப்பது நதியோடு ஒப்பிடும்போது சுலபம். தமிழக நில அமைப்பைப் பார்க்கும் போது ஆற்றுப் பாசனத்தைவிட ஏரிப் பாசனமே சிறந்தது. இந்த நுட்பம் தெரிந்ததால்தான் நமது முன்னோர்கள் ஏரிகளைக் கொண்டாடினார்கள்.

தமிழக நீர்பாசனத்தின் உயிர் ஏரிகள்தான். நமது உயிர்நாடியாக இருந்த சங்கிலித்தொடர் ஏரிகளின் வரத்துக் கால்கள், வாய்க்கால்கள் என்ற ஏரிக்கு நீர் கொண்டுவரும் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, அடைபட்டதால் சங்கிலி தொடர் அறுபட்டு, அந்த ஏரிகள் எதுவும் இப்போது எந்த மழைக்கும் எந்த வெள்ளத்துக்கும் நிரம்புவதில்லை. நீரின் உயிரை கொன்று கொண்டிருக்கிறோம்.


ஏன் ஏரிகள் முக்கியம் என்று மீண்டும் மீண்டும் நம் நீரியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள் என்றால், நம்மிடம் இருக்கும் ஏரிகளை நாம் பராமரித்து அதற்கு மீண்டும் நீரைக் கொண்டு வந்து சேர்த்தாலே போதும் நாம் கர்நாடகாவிடமும் கேரளாவிடமும் கையேந்த வேண்டியதில்லை. அவ்வளவு நீர் வளம் கொண்ட ஏரிகளை நாம் வைத்திருக்கிறோம்.

தற்போதைய கணக்குப்படி நம்மிடையே 39,202 ஏரிகள் இருக்கின்றன. இந்த ஏரிகளை இரண்டு விதமாக பிரிக்கிறார்கள். நூறு ஏக்கருக்கு மேல் ஆயக்கட்டு கொண்ட ஏரிகள் என்றும், 100 ஏக்கருக்கு குறைவாக ஆயக்கட்டு கொண்ட ஏரிகள் என்றும் வகைப் படுத்துகிறார்கள். இதில் முன்னதை பெரிய ஏரிகள் என்ற கணக்கில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறது. இப்படி பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் 18,789.

நூறு ஏக்கருக்கும் குறைவான ஆயக்கட்டு கொண்ட ஏரிகளை உள்ளாட்சி அமைப்புகள் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அந்த ஏரிகளின் எண்ணிக்கை 20,413. இதுபோக ஊரணிகள் ஐயாயிரத்திற்கும் மேல் இருக்கிறது. கோயில் குளங்கள்  மூவாயிரத்துக்கு மேல் உள்ளன. இவைகள் அனைத்தின் நீர் கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? 390 டி.எம்.சி. ஒரு  டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி அளவு கொண்ட நீரைக் குறிக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளும் நிறைந்தாலும் அதன் கொள்ளளவை விட இந்த நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகம். நமது அணைகளின் மொத்த நீர் கொள்ளளவு 243 டி.எம்.சி. கிட்டத்தட்ட 147 டி.எம்.சி. நீர் அதிகம். எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். நமது முன்னோர்கள் எத்தகைய தீர்க்கதரிசிகள் என்பதை இந்த நீர் மேலாண்மை காட்டுகிறது. இவைகளை நீரால் நிறைக்க நடவடிக்கை எடுத்தாலே போதும். நம் தண்ணீர் பஞ்சம் ஓடிப்போய்விடும்.

ஆனால், இந்த ஏரிகளை நமது அரசு கண்டுகொள்வதே இல்லை. ஏரிகளை அரசுத் துறைகள் பலவும் பட்டாப் போட்டு சொந்தம் கொண்டாடுகின்றன. அப்படி சொந்தம் கொண்டாடும் எந்த துறையும் ஏரியை காப்பாற்றுவதில்லை. ஒரு ஏரியை எடுத்துக் கொண்டால் அதனை சொந்தம் கொண்டாட குறைந்தது ஐந்து துறைகளாவது இருக்கும்.

ஏரியின் அடிநிலம் வருவாய்த்துறைக்கு சொந்தம். நிலம் மட்டும்தான் வருவாய்த் துறைக்கு சொந்தம் அதில் இருக்கும் மண்ணுக்கு அவர்கள் உரிமை கொண்டாட முடியாது. அதற்கு சொந்தம் கொண்டாட கனிம வளத்துறை இருக்கிறது. பெரிய ஏரியாக இருந்தால் அதன் கரைக்கும் மதகுகளுக்கும் பொதுப்பணித் துறை பொறுப்பு, ஏரி சின்னதாக இருந்தால் உள்ளாட்சி அமைப்புகள் பொறுப்பு. இதுபோக ஏரியைச் சுற்றி வளரும் மரங்களுக்கு வனத்துறை பொறுப்பு. இத்தனைத் துறைகள் பொறுப்பாக இருப்பதாலோ என்னவோ ஏரிக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒருவரும் முன்வருவதில்லை. இப்படியே ஏரிகள் பாழாகி வருகின்றன.

மற்ற மாநிலங்கள் ஏரிப் பராமரிப்பில் எங்கோ போய்விட்டன..!

ஏரிகள் விஷயத்தில் தமிழகம் போன்ற ஒரு அலட்சிய போக்கு வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. சொல்லப்போனால் மற்ற மாநிலங்கள் எல்லாமே சுதாரித்துக்கொண்டன. கர்நாடகாதான் ஏரிகள் ஆணையத்தை  அமைத்தது என்றால், மத்தியப்பிரதேசம் 2004-ல் 'ஏரிகள் பாதுகாப்பு ஆணையம்' என்று ஒன்றை ஏற்படுத்தி, ஏரிகளை புனரமைக்கத் தொடங்கிவிட்டது.

சில்கா ஏரி
ஒடிஸா கூட ஜப்பான் நாட்டு உதவியுடன் 'சில்கா அபிவிருத்தி ஆணையம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி ஏரிகளை மேம்படுத்த தொடங்கிவிட்டது.  ராஜஸ்தான் ‘ஏரி, நதி அபிவிருத்தி திட்டங்களுக்கான கொள்கை நிலைக்குழு’ என்று பல திட்டங்களை வகுத்து ஏரிகளை பேணத் தொடங்கிவிட்டது. ஜம்மு காஷ்மீர் 'ஏரி மற்றும் நீர்வழிகள் அபிவிருத்தி ஆணையம்' என்ற அமைப்பையும், உத்தரகாண்ட் 'நைனிடால் ஏரிகள் பாதுகாப்பு திட்டம்' என்றும், மணிப்பூர் 'லோகாக் ஏரி அபிவிருத்தி ஆணையம்' என்றும், மகாராஷ்டிரா 'ஒருங்கிணைந்த ஏரிகள் பராமரிப்பு ஆணையம்' என்றும் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களும் தங்களின் ஏரிகளை மீட்டெடுக்கத் தொடங்கிவிட்டன.

இந்த மாற்றங்கள், அமைப்புகளை ஏற்படுத்தியது எல்லாமே ஒரு 25 வருடங்களுக்குள் நடந்த ஒன்றுதான். அதற்கு முன்பு அவர்களும் ஏரிகளை சாதாரணமாகத்தான் நினைத்தார்கள். சுற்றுச்சூழல் வலுப்பெற வலுப்பெற அரசின் கொள்கைகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. நீர்நிலைகளை காக்க கங்கணம் கட்டிக்கொண்டன.  மாநிலங்களின் மாற்றங்களைப் புரிந்து கொண்ட மத்திய அரசு தனது பங்கிற்கு 'தேசிய ஏரிகள் பாதுகாப்பு திட்டம்' என்ற ஒன்றை ஏற்படுத்தியது.

அதற்காக 14 மாநிலங்களுக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தது. அந்த நிதியின் மூலம் மாநில அரசுகளின் பரிந்துரை அடிப்படையில் 1015.59 கோடி ரூபாய் செலவில் 60 ஏரிகள் சீரமைக்கப்பட்டன. மற்ற மாநிலங்கள் எல்லாம் இந்த நிதியில் பெரிய பாசன ஏரிகளை சீர்படுத்திக்கொள்ள, தமிழகமோ பாசன ஏரிகளை விட்டுவிட்டு ஊட்டி, கொடைக்கானல் ஏரிகளை மேம்படுத்தியது. நமக்கு விவசாயத்தை விட சுற்றுலா முக்கியமாக பட்டதா என்றால் அதுவும் இல்லை. மற்ற மாநிலங்களைவிட சுற்றுலாவிலும் நாம் பின்னுக்குத்தான் இருக்கிறோம்.

ஏரிகளை அழித்து அதை வீடாக மாற்றுவதில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னணியில் இருக்கிறது. மற்ற மாநிலங்களில் இப்போது யாரும் ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்யமுடியாத அளவிற்கு பலமான சட்டங்கள் இயற்றப்பட்டுவிட்டன. ஆனால், தமிழகத்தில் அரசே ஏரிகளை அழிப்பதில் முதலாளாக நிற்கிறது.

கண்மாயை ஆக்கிரமித்த மதுரை உயர்நீதி மன்றம்
மதுரை மாநகரில் 37 கண்மாய்கள் இருந்தன. அதில் 30 கண்மாய்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு பேருந்து நிலையமாகவும், உயர்நீதிமன்றமாகவும், வணிக வளாகமாகவும், வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுவிட்டன.  மீதியிருக்கும் 7 கண்மாய்களும் பெரும் ஆக்கிரமிப்பின் பிடியில் திணறிக் கொண்டிருக்கின்றன.

பருவநிலை மாற்றத்தால் வருங்காலங்களில் பெரும் மழைகள் சர்வசாதரணமாக வரலாம். சென்னையைப் போல மதுரையில் மழை வரலாம். அப்படி ஒன்று நடந்தால் 30 கண்மாய்களை அழித்த மதுரைக்கு ஏகப்பட்ட பாதிப்பு ஏற்படும். மீளமுடியாத துயரைத் தரும். மற்ற மாநிலங்களைப் போல் நாமும் ஏரிகளை மேம்படுத்த வேண்டும். இல்லையென்றால் இயற்கை சீற்றத்தின் முன் நாம் காணாமல் போய்விடுவோம். அதற்கு நீர்வழிச் சாலை உதவும்.

அதற்குமுன் இந்தியாவின் நீர் வளத்தையும் நதிகள் பற்றியும் பார்த்துவிடுவோம்.

                                                                                                                              -தொடரும்

* * *
அனைவருக்கும் 
கிருஸ்துமஸ்
வாழ்த்துகள்!

* * *


தொடர்புடைய பதிவுகள்

20 கருத்துகள்

  1. மதுரையில், உயர்நீதி மன்றமே கண்மாயை ஆக்கிரமித்துள்ளது என்று படத்துடன் பளிச்சென்று எழுதி வெளியிட்டுள்ளது, தாங்கள் ஒரு பத்திரிகை ஆசிரியரும்கூட என்பதைப் பறை சாற்றுவதாக உள்ளது.

    சிந்திக்க வைக்கும் படங்களும் பதிவும் வழக்கம்போல் அருமையோ அருமை. பாராட்டுகள். தொடரட்டும்...... வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  2. அன்புள்ள அய்யா,

    பல புள்ளிவிவரங்களோடும் படங்களோடும் ஏரிகள் படும்பாடுகள் பற்றி நன்றாக விளக்கி இருக்கிறீர்கள். இனிமேலாவது தமிழக அரசு அலட்சிகாட்டாமல்... ஓட்டு அரசியலைப் பார்க்காமல்... ஒட்டுமொத்தத் தமிழகம் மேம்பட... ஏரிகள் பாதுகாப்பு ஆணையம் அமைத்து மனிதகுலம் சிறக்கச் செம்மையாகப் பணியாற்றட்டும்.

    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எந்த நல்ல அறிகுறியும் நமது அரசிடம் தெரியவில்லை என்பதுதான் வேதனையாக இருக்கிறது.
      தங்கள் வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  3. உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள்...
    உயர்நீதி மன்றக் கட்டிடம் இருக்கும் இடம் கண்மாயாக இருந்ததுதானே...

    அனைத்தையும் வாசிக்கிறேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீர்நிலைகள் விஷயத்தில் முதல் குற்றவாளி அரசுதான். மக்கள்கூட ஓரம்சாரமாக வீடு கட்டுவார்கள். அரசுதான் முழு நீர்நிலைகளையும் ஆக்கிரமித்த ஏப்பம் இட்ட பெரும் குற்றவாளி. இதில் சந்தேகமே இல்லை.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு

  4. சென்னையைப்போல் மதுரைக்கும் ஆபத்து காத்திருக்கிறது என்பதை சொல்லிவிட்டீர்கள். செவிடர்கள் காதில் சங்கை ஊதியிருக்கிறீர்கள். அது கேட்டதா என பொறுத்திருந்து பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் நம் அரசிடம் சொல்வது செவிடன் காதில் ஊதிய சங்குதான். என்னாவொரு நல்ல சேதி என்றால், இப்போது மக்கள் முன்வருகிறார்கள். கிட்டத்தட்ட 10 நீர்நிலைகளை அரசை எதிர்பார்க்காமல் மக்களே மீட்டெடுத்திருக்கிறார்கள். அத்தகைய மக்களுக்கு இது போய் சேர்ந்தால் போதும்.
      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  5. பதில்கள்
    1. வருகைக்கு நன்றி மருமகளே, தொடர்ந்து பதிவுக்கு வந்து கருத்துச் சொல்! காத்திருப்பேன்.

      நீக்கு
  6. மறுக்க முடியாத ஆதாரத்தோடு வந்துள்ள உங்கள் பதிவு அனைவரும் அதுவும் முக்கிய மாக அரசும் உணரவேண்டும் நன்றி நண்பரே! அனைத்தையும் நூலாக வெளியயிடுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசு உணர்ந்தால் நல்லது. உணருமா என்று பார்ப்போம்.
      வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  7. மிக நுணுக்கமான தகவல்கள் செந்தில் சார்! விட்டுப்போன சில முந்தைய பதிவுகளையும் நான் இனிதான் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மோகன் ஜி! மற்றவற்றையும் படித்து கருத்திடுங்கள்.

      நீக்கு
  8. தங்களின் பதிவு வியக்க வைக்கிறது நண்பரே
    அரசே திட்டமிட்டு நீர்நிலைகலை ஆக்கிரமிப்பு செய்துகொண்டே போனால்
    எதிர்காலம் என்னாவது?
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது அரசாங்கங்கள் தம் மக்களைப் பற்றிதான் சிந்திக்கிறதே தவிர நாட்டு மக்களைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  9. தொடர்ந்து படித்து வருகின்றேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அட மதுரையிலும் கண்மாய்கள் போய்விட்டதா....!! சென்னையில் விமானனிலையமே ஆற்றின் படுகையின் மேல்தானே..அடையாறு ஆற்றின் மேல்...

    நாகர்கோயில் பேருந்துநிலையத்தின் பேரே குளத்து பஸ்டாண்ட் தான்..எப்போது மழை பெய்தாலும் தேக்கம்தான் ..இப்படித்தான் ஒவ்வொரு குளம் ஏரியும் அரசே ஆக்ரமித்தால்...தமிழ்நாடுதான் மிக மிக மோசம் என்பது நன்றாகத் தெரியும் ஏரிகளைக் காப்பதிலும் சரி, சுற்றுலா வருவாய் இழப்பதிலும் சரி. அத்தனை மெத்தன அரசுகள்! அவர்களுக்கு அவர்கள் கொள்ளைஅடிப்பது மட்டுமே குறி..தமிழ்நாட்டின் விதி மாறுமா? எங்கள் அடுத்த பதிவின் தலைப்பே இதுதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாகர்கோயிலில் எந்த பஸ் ஸ்டாண்ட் என்று தெரியவில்லை. வடசேரி, மீனாட்சிபுரம் இரண்டுமே பள்ளத்துக்குள்தான் இருக்கிறது. ஓரளவு நீர் ஞானம் கொண்டவர்கள் என்று நினைத்த கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர்களும் அப்படித்தானா..! சரி, அரசியல்வாதிகள் எல்லா இடத்திலும் ஒருவர்தானே!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை