வெள்ளி, செப்டம்பர் 30, 2016

சர்க்கரை நோய் நம்மை என்ன செய்யும்?நாம் செய்யும் எல்லா வேலைகளுக்கும் உடலிலுள்ள தசைநார்கள் இயங்குகின்றன. அப்படி ஒவ்வொரு இயக்கத்திற்கும் குளுக்கோஸ் எனும் சக்தி செலவாகிறது. இந்த குளுக்கோஸ் நாம் சாப்பிடும் உணவான அரிசி, கோதுமை, கிழங்குகள், பழங்கள், இனிப்பு போன்ற பொருட்களில் அதிகமாக இருக்கின்றன. இதில் இருக்கும் மாவுச் சத்தை செரிமானத்தின் மூலம் குளுக்கோஸாக மாற்றி குடல் உறிஞ்சிக் கொள்கிறது. சிறுகுடலில் இருந்து ரத்தத்தின் மூலம் ஈரலுக்குச் செல்கிறது. ஈரல் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் குளுக்கோஸை பகிர்ந்து கொடுக்கிறது. 


ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் உடலின் திசுக்களுடன் சென்று திசுக்களை வேலைப் பார்க்க வைப்பதற்காக 'இன்சுலின்' என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. இன்சுலின் ஹார்மோன் கணையத்தின் சில குறிப்பிட்ட திசுக்களிலிருந்து ஊற்றாய் ஊறி (சர்க்கரை) ரத்தத்தில் கலந்து கொள்ளும். உடலில் உள்ள திசுக்களுக்கு எவ்வளவு குளுக்கோஸ் வேண்டுமோ அந்த அளவிற்கே இன்சுலின் சுரக்கிறது. அந்த இன்சுலின் எல்லா திசுக்களுக்கும் சரிவிகிதத்தில் அனுப்பப்படுகிறது.  

ஏதாவது ஒரு காரணத்தால் இன்சுலின் சுரப்பு குறைந்துவிட்டால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் திசுக்களை சென்றடையாமல் அப்படியே ரத்தத்தில் தங்கி விடுகிறது. திசுக்களுக்கு குளுக்கோஸ் சென்றடையாததால் உணவில்லாத மனிதன் போல திசுக்கள் அசதியிடனும் சக்தியற்றும் இயங்குகிறது. அதனால் எல்லா திசுக்களும் மிக விரைவிலே முதுமை அடைகிறது. 


ரத்தத்தில் தொடர்ந்து தேங்கிக்கொண்டே வரும் குளுக்கோஸ் ரத்தத்தை அடர்த்தி மிக்கதாக கெட்டியாக மாற்றிவிடுகிறது. அதனால், மெல்லிய சிறு சிறு ரத்தக் குழாய்களில் ரத்தம் புகமுடியாமல் பல பகுதிகளுக்கு ரத்த ஓட்டமே தடைப் பட்டுவிடும்.

இந்த தடைபடுதல் மூளையில் ஏற்பட்டால், அது பக்கவாதத்தில் கொண்டுபோய் விடுகிறது. இதயத்தில் நடந்தால் மாரடைப்பாக மாறுகிறது. சிறுநீரகங்களில் நடந்தால் சிறுநீரக செயலிழப்பாக தோன்றுகிறது. இதே பாதிப்பு கண்களில் ஏற்பட்டால் பார்வை பாதிக்கப்படுகிறது. கால் விரல்களில் இந்த பாதிப்பு ஏற்படும்போது ரத்த ஓட்டம் செல்லாத பகுதிகள் அழுக்கத் தொடங்குகின்றன. அதனால் அந்தப் பகுதியை வெட்டி எடுக்க வேண்டிய நிலை வருகிறது. சர்க்கரை நோய் பெரிதும் பாதித்தவர்களின் கால் விரல்களை வெட்டி எடுப்பது இதனால்தான்.  


குளுக்கோஸ் சத்து திசுக்களுக்கு சென்று சேராததால் திசுக்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதனால் புண்கள் ஆறுவதும் தடைப்படுகிறது. இதுதான் சர்க்கரை நோயின் முழுப்பரிமாணம். ரத்தத்தில் சர்க்கரை அளவு 150 மில்லி கிராமுக்கு மேல் இருந்தால் ரத்தத்தின் பளபளப்புத் தன்மை மாறத்தொடங்குகிறது. உணவு உட்கொள்வதற்கு முன் ரத்தத்தில் 60 லிருந்து 100 மில்லி கிராம் சர்க்கரை இருப்பது இயல்பானது. உணவு உண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவு கொஞ்சம் கொஞ்சமாக ஏறுகிறது. அப்படி முழுமையாக ஏறிய நிலையில் 120 முதல் 150 வரை இருக்கலாம். சர்க்கரை நோய் இத்தனை மாற்றங்களை உடலில் ஏற்படுத்துவதால்தான் உணவு விஷயத்தில் அளவாகவும், போதிய உடற்பயிற்சி செய்தும் சர்க்கரை நோய் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த பதிவையும் படியுங்கள்..

இன்சுலின் செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்..!  


வியாழன், செப்டம்பர் 29, 2016

வீட்டில் ஒரு சிறை


சிறைச்சாலைகள் பலவிதம் உண்டு, அதில் ஒரு விதம் தான் வீட்டுச்சிறை. முதன்முதலில் 'வீட்டுச்சிறை' வைக்கப்பட்டவர் ஈராக்கை சேர்ந்த விஞ்ஞானி அல்-ஹாத்திம். கி.பி.1011-ம் ஆண்டு எகிப்தில் வாழ்ந்த போது, மன்னரைப் பற்றி ஏதோ ஏடாகூடமாக பேசப்போய், மன்னர் காலிப்பின் கோபத்துக்கு ஆளானார். தண்டனை கிடைப்பது உறுதி என்று தெரிந்தவுடன் அதில் இருந்து தப்புவதற்காக பைத்தியம் போல் நடித்தார்.

மன்னரின் உத்தரவுப்படி கி.பி.1021-ம் ஆண்டு வரை சிறையில் வைக்கப்பட்டார் அல்-ஹாத்தீம். வீட்டுச்சிறையில் அகப்பட்டுக் கொண்ட இன்னொரு விஞ்ஞானி கலிலியோ. "சூரியன் பூமியை சுற்றவில்லை. பூமி தான் சூரியனை சுற்றி வருகிறது" என்கிற அறிவியல் உண்மையை சொன்னதற்காக, மதத்துக்கு எதிராக பேசுகிறார் என்று கொந்தளித்த மதவாதிகள் கலிலியோவை வீட்டுக்காவலில் வைத்து விட்டார்கள்.

கலிலியோ
இப்போது வீட்டுச் சிறை முறையை அதிகம் பயன்படுத்தும் நாடு இத்தாலி. அந்நாட்டில் கைதிகள் தண்டனை முடியும் நிலையில் இருந்தாலோ, உடல்நலக்குறைவாக இருந்தாலோ கைதிகளை வீட்டுச்சிறைக்கு மாற்றி விடுவார்கள். ஏழையாக இருந்தால் வேலைப்பார்க்க அனுமதியுண்டு. தப்பிக்க நினைத்தால் பழையபடி சிறைக்கு போக வேண்டும்.

நியூசிலாந்தில் இரண்டு வருடங்களுக்கு குறைவான தண்டனை பெற்ற கைதிகளை வீட்டிலேயே சிறை வைத்து விடுகிறார்கள். பல வருட சிறைவாசிகளுக்கு கூட எப்போதாவது மூன்று மாதங்கள் வீட்டுச்சிறையில் இருக்க அனுமதி பெறலாம். எலக்ட்ரானிக் கருவிகள் உதவியுடன் வீட்டில் இருக்கும் கைதி கண்காணிக்கப்படுவார். வீட்டுக்கு வரும் போன்களை பதிவு செய்வார்கள்.


சில நாடுகளில் கைதிகளின் கால்களில் சென்ஸார் ஒன்றை பொருத்தி விடுவார்கள். இதை கழற்ற முயற்சி செய்தாலோ, அனுமதிக்கப்பட்ட தூரத்தை விட ஒரு சில அடிகள் மீறினாலோ போலீசாருக்கு செய்தி அனுப்பி விடும். கைதிகள் வீட்டில் தான் இருக்கிறார்களா? என்பதை தெரிந்து கொள்வதற்காக அவ்வப்போது அவர்கள் வீட்டுக்கு போன் செய்வார்கள். போனை எடுக்காவிட்டால் அடுத்த நொடியே ஜீப் வந்து நிற்கும். கோவில், மருத்துவமனை என்று எங்கு சென்றாலும் அனுமதி வாங்க வேண்டும்.

ஆங்சான் சூகி
இப்போது பெரும்பாலும் அரசியல் தலைவர்கள் தான் வீட்டுச்சிறை வைக்கப்படுகிறார்கள். வீட்டுச்சிறையில் அடைபட்டு உலகப்புகழ் பெற்றவர் மியான்மர் நாட்டை சேர்ந்த ஆங்சான் சூகி என்ற பெண் தலைவர். ராணுவ அடக்குமுறையை எதிர்த்து போராடியதற்காக கடந்த 20 ஆண்டுகளில் 14 முறை வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சமீபமாகத்தான் விடுதலை செய்யப்பட்டார்.

இந்தியாவிலும் வீட்டுச்சிறையில் ஒரு தலைவரை வைத்திருந்தார்கள். அவர் பெயர் ஷேக் அப்துல்லா. காஷ்மீர் பிரிவினையை தூண்டியதற்காக அவருக்கு அந்த தண்டனை தரப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேற்றி, தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானலில் ஒரு வீட்டில் அவர் சிறை வைக்கப்பட்டிருந்தார். 

கொடைக்கானலில் ஷேக் அப்துல்லா சிறைவைக்கப்பட்டிருந்த கோஹினூர் பங்களா
பாகிஸ்தானில்  சுல்பிக்கார் அலி பூட்டோ,  நவாஸ் ஷெரிஃப்இம்ரான் கான்,  பெர்வேஸ் முஷாரஃப் ஆகியோரும் வீட்டு சிறையில் இருந்திருக்கிறார்கள்.

சமீபத்தில் இந்திய மாணவர்கள் சிலரின் காலில் எலக்ட்ரானிக் கருவியை பொருத்தியது அமெரிக்கா. இதுவும் வீட்டுச்சிறையின் ஓர் அங்கம் தான். எங்கே செல்கிறார்கள்? யார், யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்? என்பதை கண்காணித்து தகவல் அனுப்புவது தான் இந்த கருவியின் வேலை. ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்து அவரை கண்காணித்தாலே அது சிறை தான். அது வீடாக இருந்தாலும் சரி, சிறைச்சாலையாக இருந்தாலும் சரி. 

செவ்வாய், செப்டம்பர் 27, 2016

செம்மரத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?


ரண்டு நாளுக்கு ஒருமுறை செம்மரக் கடத்தலில் தமிழர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களை ஆந்திர அரசு கைது செய்கிறது. உடனே இங்கு கண்டனக்குரல்கள் எழுகின்றன. இது ஒரு தொடர்கதையாகவே தொடர்கிறது. ஏன் இப்படி உயிரைக்கொடுத்து மரத்தை வெட்டுகிறார்கள், என்று பார்த்தால் இதன் பின் மிகப் பெரும் பணத்தாசை அரசியல் ஒளிந்திருக்கிறது. முன்பு மணல் கடத்தல், கனிமவளங்கள் கடத்தல் போன்ற தொழிலில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்தவர்களுக்கு இப்போது கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பேராசை வந்துவிட்டது. அதற்கு வசமாக வந்து மாட்டிக்கொண்டதுதான் செம்மரம். 


செம்மரங்கள் பொதுவாக வறண்ட காடுகளில் விளையும். இதற்கு தோதான இடமாக கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ஆந்திர மாநிலம் திருப்பதி வனச்சரகம் இருக்கிறது. இந்த மரத்திற்கு குறைவான தண்ணீர் இருந்தால் போதும். மரத்தை வெட்டினாலும் மீண்டும் துளிர்த்துவிடும். மரம் தன்னைத்தானே வாழவைத்துக் கொள்வதற்கு இத்தனை வசதிகள் இருந்தும் இது அழிந்து வரும் அரிய தாவர இனங்களின் பட்டியலில் இருக்கிறது. அதற்கு காரணம் வழக்கம்போல் மனிதன்தான். அதனால்தான் இந்த மரத்தின் மீது அரசு அதீத கவனத்தை செலுத்துகிறது.  


செம்மரத்தின் பயன்பாடு ஏராளம். கப்பல் கட்டுதல், தேர் சிற்பங்கள் செய்தல், தபேலா போன்ற இசைக்கருவிகள் தயாரித்தல், சாயம் தயாரித்தல், மருந்தாகப் பயன்படுத்துதல், வழக்கமான மரச்சாமான்கள் தயாரித்தல் என செம்மரங்களினால் பலன் அதிகம். இதுபோக செம்மரம் அணுக்கதிர் வீச்சை வேறு தடுக்குமாம். ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் செம்மரத்திலான பொருட்களை வைத்திருப்பது கவுரவத்தின் அடையாளம். 

இதனால் உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இதன் தேவை அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஒரு டன் ரூ.20 லட்சம் முதல் 40 லட்சம் வரை விலைபோகிறது. இதுவே வெளிநாடுகள் என்றால் ரூ.60 லட்சத்தில் தொடங்கி 1.20 கோடி வரை விலை கிடைக்கும். செம்மரங்களை கடத்த இந்த பணத்தாசை போதாதா? ஒருகாலத்தில் வயிற்றுப்பிழைப்புக்காக மரத்தை வெட்டியவர்கள் இன்று ஆடம்பர வாழ்க்கைக்காக வெட்டுகிறார்கள். பொறியியல் படித்த பட்டதாரி இளைஞர்கள் கூட விரைவில் பெரும் பணம் சம்பாதிக்க காரில் செம்மரக்கட்டைகளை கடத்துகிறார்கள்.


இதுமட்டுமல்ல, தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்குட்பட்ட மலைகளிலும் வாழும் மக்கள் காடு சார்ந்த தொழில்களில் அனுபவம் வாய்ந்தவர்கள். தற்போது அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில், ஆந்திராவில் செம்மரம் வெட்டித் தந்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று இடைத்தரகர்களின் ஆசை வார்த்தை இவர்களை உயிரையும் விட துணியவைக்கிறது.

இப்படி செம்மரம் வெட்டித் தருபவர்களுக்கு ஒரு நாளைக்கு 7000 ரூபாய் வரை கூலி கொடுக்கப்படுகிறது. அதனால்தான் ஆபத்து எனத் தெரிந்தும், இந்த மக்கள் குறுகிய காலத்தில்  நிறைய வருமானம் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் செம்மரம் வெட்டுவதற்கு செல்கிறார்கள். ஒருவர் ஒரு நாளில் இவ்வளவு சம்பாதித்தார் என்று தெரிந்ததும், பக்கத்தில் இருப்பவர்களும் இதே வேலைக்கு செல்ல துடிக்கிறார்கள். இதனால் செம்மரம் வெட்டுவதற்கு நிறைய தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த துடிப்பை காசாக்க பெரும் பண முதலைகள் பணத்தோடு இவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். 


உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நன்றாக தெரிந்தே பெரும் பணம் கிடைக்கிறது என்பதற்காகவே இந்த மரம் வெட்டும் தொழிலில் இங்குள்ள தமிழர்கள் ஈடுபடுகிறார்கள். இப்படி தொடர்ந்து ஈடுபடுவதே ஆந்திர அரசுக்கு ஆத்திரத்தை உருவாக்குகிறது. செம்மரக் கடத்தல் ஆந்திர அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பு என்பது ஒரு பக்கம், இதில் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள் என்ற கோபம் மறுபக்கம் என்ற இந்த இரண்டும் சேர்ந்துதான் ஆந்திர அரசை வெறியாட்டம் போட வைத்திருக்கிறது. 

வெட்ட வெட்ட துளிர்க்கும் தன்மை கொண்டதுதான் செம்மரங்கள். 
மனிதர்கள் வெட்டப்பட்டால் மீண்டும் துளிர்ப்பதில்லையே..!

திங்கள், செப்டம்பர் 26, 2016

நிலவில் தோன்றும் பூமியின் உதயம்


சூரிய உதயம் தெரியும். சந்திரோதயத்தையும் அறிந்திருக்கிறோம். ஆனால், பூமி உதயம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சூரிய உதயம் போன்றே பூமி உதயமும் அழகான ஒரு இயற்கை அற்புதம். இந்த பூமி உதயத்தை பார்க்க வேண்டும்என்றால் நீங்கள் நிலவுக்கு போகவேண்டும். அங்கிருந்தால்தான் பூமி உதயமாவதையும் மறைவதையும் பார்க்க முடியும்.

வில்லியம் ஆண்டர்ஸ் 1968-ல் எடுத்த படம்
இப்படித்தான் வில்லியம் ஆண்டர்ஸ், பிராங் போர்மன் மற்றும் ஜேம்ஸ் லவ்வல் ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் அப்போலோ - 8 என்ற விண்கலத்தில் நிலவின் சுற்றுப்பாதை நோக்கி பயணித்தனர். இதுதான் மனிதன் நிலவுக்கு மேற்கொண்ட முதல் விண்வெளிப் பயணம். இவர்களில் யாரும் நிலவில் காலடி வைக்கவில்லை. இவர்கள் நிலவின் சுற்றுப்பாதையில் மட்டும் சுற்றிவிட்டு பூமிக்கு திரும்பிவிட்டனர். இவர்களின் பயண அனுபவங்களை அடிப்படையாக வைத்தே இவர்களுக்கு அடுத்து பயணம் செய்த நீல் ஆம்ஸ்ட்ராங் குழுவினரின் பயணம் இருந்தது. அவர்கள்தான் நிலவில் முதலில்காலடி வைத்தவர்கள்.


1968-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி அப்போலோ - 8 விண்கலத்தில் பயணம் செய்து கொண்டிருந்த வில்லியம் ஆண்டர்ஸ் திடீரென்று "ஓ..! மை காட்..! அங்க பாருங்கள், என்னவொரு அற்புதம்! பூமி கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழுந்து வருகிறதே! வாவ்..! இதை படமெடுக்க வேண்டும்." என்றார். உடனே போர்மன் விளையாட்டாக "இது நமது பட்டியலில் இல்லை. அதனால் படமெடுக்க கூடாது" என்றார். ஆண்டர்ஸ் சிரித்தபடி "கலர் பிலிம் இருந்தால், கேமராவில் அதை லோடு செய்து கொடு ஜிம்..!" என்றார்.


அப்போது கலர் பிலிம் மிக அபூர்வம். இந்த பயணத்திற்காக கோடாக் நிறுவனம் 70 எம்.எம். கலர் பிலிமை இவர்களுக்காக பிரத்யேகமாக தயாரித்து வழங்கியிருந்தது. இந்த நிகழ்வை வண்ணப்படமாக எடுப்பதால், லவ்வல் "ஓ மேன், தட்ஸ் கிரேட்" என்று புல்லரித்துப் போனார்.

ஆண்டர்ஸ் சொல்ல சொல்ல கேமராவில் அவர் சொன்ன செட்டிங்க்ஸை செட் செய்து லவ்வல் ஆண்டர்ஸிடம் கேமராவைக் கொடுத்தார். பாதி பூமியில் பகலும் மீதி பூமியில் இருளும் சூழ்ந்திருக்கும் அந்த அற்புத பூமி உதயத்தை ஆண்டர்ஸ் படமெடுத்தார். பூமியின் உதயத்தை முதன் முதலில் படமெடுத்த மனிதர் என்று பெருமையை ஆண்டர்ஸ் பெற்றார்.


உலகின் மிக முக்கியமான 100 புகைப்படங்களில் இந்தப் படம் முதன்மையானதாக இருக்கிறது. மனித விண்வெளிப்பயணத்தின் புதிய மைல்கல், புகைப்பட வரலாற்றின் புதிய உச்சம் என்று வர்ணிக்கப்பட்டது.

நிலவின் சுழற்சி என்பது மிக மெதுவாகவே இருக்கும். அது தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 27 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பூமியை ஒருமுறை நிலவு சுற்றி வருவதற்கும் இதே கால அளவை எடுத்துக்கொள்கிறது. அதனால் நிலவின் ஒரு பகுதி மட்டுமே பூமியை நோக்கி இருக்கும் வண்ணம் சுற்றி வருகிறது. இந்த குறைந்த வேகத்தால் நிலவில் தோன்றும் பூமி உதயமும் மிக மெதுவாக நடைபெறுகிறது. நிலவின் சமத்தளத்திலிருந்து பூமி மெல்ல மெல்ல உதயமாகி முழு அளவும் மேலே வருவதற்கு 48 மணி நேரத்தை எடுத்துக்கொள்கிறது. அதனால் பூமி உதயம் காண மிகப் பெரிய பொறுமை வேண்டும்.
ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

ஆண்களின் மோசமான குணம்..!

ண்களின் மோசமான குணங்களில் ஒன்று 'ரோடு ரேஜ்'. வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்படும் வன்மம் இது. இந்த குணத்தை ரோடு ரேஜ் என்கிறார்கள் உளவியலாளர்கள். 1987-ம் ஆண்டு அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ் சாலையில் ஒரு படப்பிடிப்பை நடத்தியது. அப்போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ஓட்டுனர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதும், மோசமான சைகைகளைக் காண்பிப்பதும், வெறித்தனமாக வாகனங்களை ஓட்டுவதும் நடந்தது. அப்போதுதான் இத்தகைய செயல்களுக்கு 'ரோடு ரேஜ்' என்ற புதிய பெயரைக் கொடுத்தார்கள். 


ரோடு ரேஜ் எதைக் குறிக்கிறது? முரட்டுத்தனமாக டிரைவ் செய்தல், சடன் பிரேக், சடன் ஆக்ஸலரேஷன், வாகனத்தை மோதுவது போல் பின்னால் நெருக்கமாக ஒட்டி வருவது, ரோட்டின் ஒரு லேனில் இருந்து மறு லேனுக்கு மாற்றி ஓட்டுவது, மற்ற ஓட்டுநர்களுடன் போட்டிப் போட்டுக்கொண்டு வாகனத்தை ஓவர்டேக் செய்யாமலும், பின்புறம் செல்லாமலும் சரிசமமாக ஓட்டிவருவது, எதிரே வாகனங்கள் வந்தாலும் அப்படியே தொடர்வது, சாலைகளை பிரிக்கும் மீடியன்கள் மீது ஓட்டுவது, சாலை ஓரத்தில் இருக்கும் நடைபாதையில் ஓட்டுவது, ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவது,  மிரட்டுவது, சாலையில் செல்பவர்கள் மீது மோதுவது போன்ற எல்லாவகை அத்துமீறல்களும் ரோடு ரேஜ் வகையில்  சேர்க்கிறது.

அமெரிக்காவில் வருடத்திற்கு 1200-க்கும் மேற்பட்ட ரோட் ரேஜ் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதிலும் சரியாக 33 வயதுள்ள ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள். ரோட் ரேஜ் வழக்குகளில் 97 சதவீதம் ஆண்கள் மீதே இருக்கிறது. இதிலிருந்தே இது ஆண்களுக்கான குணம் என்று தெரியவந்தது. சரி, இது எப்படி ஆணுக்கு மட்டுமே ஏற்படுகிறது? 


இதற்கும் ஆதி மனிதனிடம்தான் சரணடைய வேண்டியிருக்கிறது. இதுவும் ஆதி ஆணின் மரபு வழியே பெற்ற குணம்தான். வேட்டையில் போட்டிபோடுவது மனிதனுக்கு பிடிக்கும். தன்னைவிட யாரும் முதன்மையாக வந்துவிடக் கூடாது என்பதில் அவன் பிடிவாதமாக இருப்பான். இன்றைக்கு வேட்டையில்லை. ஆனால் பிடிவாதம் இருக்கிறது. வாகனம் ஓட்டுவது ஆண்களுக்கு ஒரு வேட்டையாடுவது போலவும் பந்தயம் போலவும் ஒரு போட்டியாகத்தான் தோன்றுகிறது. அப்படிதான் அதில் ஈடுபடுகிறார்கள். 


இதற்கு முக்கிய காரணம், இன்றைய மனிதர்களிடம் பொறுமையும், சகிப்புத்தன்மையும் போய்விட்டது. உதவும் மனப்பான்மையும் இல்லை. பெரும்பாலான ஆண்களுக்கு போதிய தூக்கம் இல்லை. தங்கும் இடமும் வேலைப் பார்க்கும் இடமும் வெகு தொலைவில் உள்ளது. பலருக்கு வேலைக்குப் போவதே ஊருக்கு போவதுபோல் இருக்கிறது. இத்தனை சிரமங்கள் இருப்பதால் டென்ஷன் அதிகரிக்கிறது. வீடும், வேலை செய்யும் இடமும் அருகருகே இருக்கும்படியாக அமைத்துக் கொண்டால் ரோட் ரேஜ் குறைகிறது என்று மனநல ஆய்வு சொல்கிறது. அதனால் நல்ல மனநிலையோடு வாகனம் ஓட்டும்போது ரோட் ரேஜ் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. 


விபத்துகள் நடப்பதற்கு இந்த மனநிலை காரணமாக அமைகிறது. இதுபோக மனநிலையின் மாற்றமும் விபத்துக்கு காரணமாக அமைகின்றன. சாலைகள் வளைந்து நெளிந்து இருவழிச்சாலையாக இருந்தபோது இந்தப் பிரச்சனைகள் குறைவு. ஆனால், நான்குவழி, ஆறு வழி என்று சாலைகள் விரிவடைந்த போது விபத்துகளும் கூடின. அப்போது இருந்த விபத்துகளின் எண்ணிக்கையைவிட இப்போது அதிகம்.

இதற்கு மனநிலை மாற்றமும் ஒரு காரணம். நான்கு வழிச்சாலைகளில் ஒரே மாதிரியான நிலமைப்பு தொடர்ந்து வந்துகொண்டே இருப்பது. ஒரே மாதிரியான சாலை அமைப்பு, மனிதர்கள் நடமாட்டம் இல்லாத, வெட்ட வெளி, கடைகள் இல்லாத வனாந்திரப்பயணம் செய்வது போல் இருப்பது டிரைவர்களுக்கு தூக்கத்தை வரவழைத்துவிடும். 


தொடர்ந்து இதேபோன்று மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டே வாகனம் ஓட்டும்போது வண்ணங்கள் மங்கத் தொடங்கும். பகலிலே இருள் சூழ்ந்ததுபோல் தெரியத் தொடங்கும். இவையெல்லாமே விபத்துக்கு வழிவகுத்துவிடும். இவையெல்லாமே ரோட் ரேஜ் என்ற ஆண்களின் மனநிலையால் ஏற்படும் விபத்துகளாகவே உளவியல் சொல்கிறது. இதுபோக உடல்நிலை காரணமாக ஏற்படும் விபத்துகளும் உண்டு. இதில் பெரும் இடத்தப் பிடித்திருப்பது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதுதான். இவற்றையெல்லாம் மாற்றினால் விபத்துகள் குறையும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

வெள்ளி, செப்டம்பர் 23, 2016

ரப்பருக்காகவே வாழ்ந்து உயிர்விட்ட சார்லஸ் குட்-இயர்


தொட்டால் கையில் பிசுபிசு வென்று ஒட்டிக் கொள்கிற ஒன்றுக்கும் உதவாத பொருள் என்று ரப்பருக்கு கெட்ட பெயர் இருந்த காலம் அது. அப்போது தான் சார்லஸ் குட்-இயர் என்பவர் சரியான விதத்தில் ரப்பரை வேதியியல் முறையில் மாற்றம் செய்தால் பல்வேறு செயல்களுக்கு பயன்படுத்தலாம் என்று நிரூபித்தார். 1800-ம் ஆண்டு டிசம்பர் 29 அன்று நியூ ஹெவன் என்ற அமெரிக்க நகரில் பிறந்தார். 


ரப்பரை வல்கனைசிங் மூலம் தயார் செய்தால் எவ்வளவு அதிகமான வெப்பத்திலும் உருகாமல் பார்த்துக் கொள்ளலாம் என்ற அவரது கண்டுபிடிப்புதான் இன்று உலகில் ஓடும் அத்தனை வாகனங்களுக்கும் டயர் என்ற உன்னதத்தை உருவாக்கித் தந்தது.

1830-களில் யாருமே ரப்பரைப்பற்றி பெரிதாக தெரிந்து வைத்திருக்கவில்லை. தண்ணீரை ஒட்ட விடாமல் பார்த்துக் கொள்ளும் பொருள் என்ற அளவிலேயே அதைப் பற்றி தெரிந்து வைத்திருந்தார்கள். ரப்பரில் தெரிந்துகொள்ளவேண்டிய எந்த ஒரு விஷயமும் இல்லை என்று அன்றைய கண்டுபிடிப்பாளர்கள் முடிவு செய்திருந்தனர்.


தனது தந்தையுடன் சேர்ந்து பல வேலைகளை பார்த்து வந்த சார்லசுக்கு ஏகப்பட்ட கடன் இருந்தது. அந்த காலத்தில் வாங்கிய கடனை திருப்பித் தர முடியா விட்டால் சிறை தண்டனை என்ற கடுமையான சட்டம் அமெரிக்காவில் இருந்தது. அதன்படி தனது 34 வயதில் சிறை சென்றார் சார்லஸ். 

சிறையில் சும்மா இருந்த நேரத்தில் எல்லாம் அவரது சிந்தனை ரப்பர் பற்றியே இருந்தது. ரப்பரை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றால் வேதியியல் பாடம் அத்துப்படியாக தெரிந்து இருக்க வேண்டும். சார்லசுக்கோ வேதியியலில் 'ஆ'னா 'ஆ'வன்னா கூட தெரியாது. ஆனாலும் என்னவோ அவரிடம் இருந்து ரப்பர் ஆராய்ச்சியை பிரிக்கவே முடியவில்லை. இதற்காக இந்தியாவில் இருந்து வரும் ரப்பரை வாங்கி சிறைக்கு அனுப்பி வைக்கும்படி தனது மனைவியிடம் கூறியிருந்தார். அவரும் ரப்பரை அனுப்பி வைத்தார்.


சிறையில் இருந்து விடுதலையான பின்பும் தன் வீட்டில் ரப்பரை எரித்து, கிழித்து பல்வேறு விதமாக ஆய்வு செய்தார். ரப்பரை எரிக்கும் போது ஏற்படும் புகையையும், துர்நாற்றத்தையும் தாங்க முடியாது பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசில் அவரைப் பற்றி புகார் செய்து ஊரை விட்டே துரத்தினார்கள். அவரும் ஊரை வெறுத்து நியூயார்க் வந்து சேர்ந்தார். அங்கும் ஆய்வை விடவில்லை. 

ஒரு நாள் ரப்பரோடு சல்பரையும், கந்தகத்தையும் கலந்து புதிய ஆய்வை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கரைசலில் கொஞ்சம் சூடாக இருந்த அடுப்பின்மேல் கொட்டிவிட்டது. அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது தனது ஆய்வில் மும்முரமாக இருந்தார். இறுதியில் அடுப்பை சுத்தம் செய்யும் பொது சிந்திய ரப்பர் கரைசலை பெயர்த்து எடுத்தார். 


என்ன ஆச்சரியம்..!

ரப்பரின் பிசுபிசுப்பு இப்போது இல்லை. ஒரு உலோகம் போல கெட்டியாக மாறி இருந்தது. மிருதுவாகவும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் பெற்று இருந்தது. கடுமையான வெப்பத்திலும், கடுங்குளிரிலும் பாதிக்காத நிலையை பெற்றிருந்தது. ரப்பரை பலவிதங்களில் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்தார். அதன்பலனாக, ரப்பரை உயர்ந்த வியாபார பொருளாக மாற்றிய வித்தகர் என்ற பட்டத்தை 1844-ல் சார்லஸ் குட்-இயர் பெற்றார். இருந்தாலும் அவரது துரதிருஷ்டம் கடைசி வரை அவரை கொடுமைப் படுத்தியே வந்தது.


அவருக்கு 'ரப்பரின் தந்தை' என்ற பட்டம் அளிக்கப்பட்டது. அந்தப் பட்டத்திற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஏதேதோ காரணத்தை சொல்லி இவர் அந்நாடுகளில் உருவாக்கி பெரும் வருமானத்தை ஈட்டிய ரப்பர் கம்பெனிகளை பறித்து திவாலாக்கின. தொடர்ந்து இத்தகைய கொடுமைகள் சார்லசுக்கு இழைக்கப்பட்டன.

அவர் உருவாக்கிய ரப்பர் கம்பெனிகள் மூலம் நூற்றுக்கணக்கானவர்கள் பணம் சம்பாதித்தும் கூட எதுவுமே சார்லசை சென்று சேரவில்லை. கடைசியில் தனது 59-வது வயதில் 1860, ஜூலை 1-ந் தேதி இறந்தார். தெருக்கோடியில் நின்ற சார்லஸ் இறக்கும் போது 2 லட்சம் பவுண்டுகள் கடன் சுமையோடுதான் இறந்தார். கடன்காரர் என்ற பெயரோடுதான் உயிர் நீத்தார். இறுதிவரை ரப்பருக்காகவே தன் வாழ்நாளை அர்பணித்த அவரை அந்த ரப்பர் கடைசி வரை காப்பாற்றவேயில்லை. அதேவேளையில் அந்த ரப்பரை வைத்தே பல புதிய கோடீஸ்வரர்கள் உருவானார்கள் என்பதுதான் வியப்பான உண்மை.!

வெள்ளி, செப்டம்பர் 16, 2016

ஊடகங்கள் எப்படி செய்தியை பரபரப்பாக்குகின்றன?


செய்திகளை 'உள்ளது உள்ளபடி' தருவதுதான் ஊடக தர்மம். ஆனால், கொஞ்ச நாட்களாக காட்சி ஊடகங்கள் அந்த தர்மத்தை மீறி வருவதாக தெரிகிறது. அதற்கு பல காரணங்கள். இன்றைக்கு விளம்பரங்கள்தான் ஊடகத்திற்கு வருமானத்தை அள்ளித் தருகின்றன. இந்த விளம்பரங்கள் வரவேண்டும் என்றால் அதற்கு டி.ஆர்.பி. ரேட்டிங் வேண்டும். டி.ஆர்.பி. ரேட்டிங் வர அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தாக வேண்டும்.


அதற்கு சில பல அம்சங்களை சேர்த்ததாக வேண்டியிருக்கிறது. உள்ளதை உள்ளபடி சொல்வது என்பது சினிமாவில் ஆர்ட் ஃபிலிம் பார்ப்பது போல் கொஞ்சம் 'போராக' போகும். அதற்கு பதிலாக அதே கதையில் பாட்டு, நடனம், சண்டை, பஞ்ச் டயலாக்  சேர்த்து மசாலா கலவையாக கொடுத்தால் படமும் விறுவிறுப்பாக போகும். அதிகமான மக்களும் பார்ப்பார்கள். 

செய்தியும் அப்படிதான். உண்மையான செய்தியை அப்படியே தந்தால் போரடிக்கும். அதற்குப்பதிலாக கொஞ்சம் மசாலாவை அதாவது பரபரப்பை சேர்த்துக் கொடுத்தால் செய்தியும் சுவாரஸ்யமாக  இருக்கும். பார்வையாளர்களையும் ஈர்க்கும்.

பெங்களூரு கலவரத்தை பொறுத்தவரை ஊடகங்கள் ஆரம்பத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கலவரம் நடக்கின்றன என்று சொல்லி வந்தன. இப்போது வரை அங்கு அதேநிலைதான். கலவரங்கள் ஒருசில இடங்களில் மட்டுமே நடந்திருக்கின்றன. ஆனால், ஊடகங்கள் இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமை விட்டுவிட்டன. அதன் காரணமாக பெங்களூரே எரிந்து கொண்டிருப்பதாக நம்ப வேண்டியுள்ளது.  இதுவும் ஊடக தர்மத்தை மீறும் செயல்தான். செய்தியில் பரபரப்பை கூட்டுவதற்காக இரண்டு வார்த்தைகளை நீங்கியதால் பெங்களூரே பற்றி எரிவதுபோல் ஒரு தோற்றத்தை  அது தந்துவிட்டது. அதற்கு தோதாக வீடியோ காட்சிகளும் காட்டப்படுவதால் பெங்களூர் படுமோசம் என்று எண்ண வைத்தது.


இந்தநிலையில்தான் பெங்களூரில் இருக்கும் நண்பர்கள் சிலரை தொடர்பு கொண்டேன். "பெரிய கலவரமா..?" என்று கேட்டேன். "நாங்க இருக்குற ஏரியாவுல எந்த கலவரமும் இல்லை. டிவி-யை பாத்துதான் கலவரம் நடக்கிறது என்பதையே தெரிந்து கொண்டேன்" என்றார் அவர்.

பெங்களூரின் வேறுப்பகுதியில் உள்ள மேலும் சிலரை தொடர்பு கொண்டேன். அவர்களும் இதையே சொன்னார்கள். ஒரு நண்பர் கொஞ்சம் காட்டமாக "நம்மாள்க திருந்தவே மாட்டாங்களா..! ஏன் கன்னடர்களை இப்படி போட்டு அடிக்கிறார்கள். தமிழ்நாடு முழுசும் கன்னடர்களை தேடி தேடி அடிகிறங்க. ஏன் இந்த கொலை வெறி..?"

"ராமேஸ்வரத்துல மட்டும்தான் அடித்திருக்கிறார்கள். வேறு எங்கும் எதுவும் நடக்கவில்லை. சென்னையில் சில ஹோட்டல்களை அடைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான் மற்றபடி கன்னடர்கள் மீது பெரிய தாக்குதல் ஒன்றும் இங்கு நடக்கவில்லை." என்றேன்.

"அப்படின்னு நீ சொல்ற. நீயும் நானும் சொல்றத யார் நம்ப போறாங்க. டிவிக்காரன் சொன்னதாதானே நம்புவாங்க. இங்க கன்னட சேனல்கள் எல்லாம் தொடர்ந்து தமிழ்நாட்டில் கன்னடர்கள் தாக்கப்படுவையே காட்டுகின்றன. எப்படித்தான் இத்தனை வீடியோக்கள் அவர்களுக்கு கிடைக்கிறதோ தெரியவில்லை. இத தொடர்ந்து பார்க்கும்போது தமிழ்நாடு முழுவதுமே கலவர பூமியாகவே தெரிகிறது. எனக்கே இப்படியென்றால் கன்னடர்களுக்கு எப்படி இருக்கும்? ஏன் ஊடகங்கள் இப்படி கலவரத்தை தூண்டுகின்றன." என்று முடித்தார்.


"இங்கு தமிழ் சேனல்களும் அதையேதான் செய்கின்றன. தமிழர்கள் தாக்கப்படுவதை மீண்டும் மீண்டும் காட்டி வெறியேற்றுகிறார்கள்." என்று முடித்தேன்.

அடுத்து ஒரு நண்பரை தொடர்பு கொண்டேன். அவர் தீவிர இனவாதம் கொண்டவர். "கர்நாடகாவுக்கு அழிவு காலம் வந்திருச்சு. தமிழர்கள ஓட ஓட விரட்டி அடிக்கிறானுங்கோ. 1991 கலவரத்தையெல்லாம் மிஞ்சிருச்சு. 200 பஸ்ஸு, 500 லாரி, 1000 கார்களை கொளுத்திட்டானுங்கோ." என்றார். நல்லவேளை எந்த ஊடகத்தின் காதுகளுக்கும் இது கேட்கவில்லை. கேட்டிருந்தால் இதுவே பெரிய செய்தியாகியிருக்கும்.

இது உணர்ச்சிவசப்பட்டு செய்தியை மிகைப்படுத்தி சொல்வது. முன்பு இப்படிப்பட்ட ஆதாரமற்ற தகவல்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காது. இப்போது அப்படியெல்லாம் கிடையாது. எதையும் செய்தியாக்க அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

இந்தநிலையில்தான் டிவியில் இன்னொரு காட்சி பரபரப்பாக வந்தது. 'உயிருக்கு பயந்து தமிழர்கள் வெளியேற்றம்' என்று. அந்த காட்சிகளை பார்த்ததுமே அதன் சூட்சுமம் புரிந்தது.

தமிழக-கர்நாடக எல்லையில் இருக்கும் ஊடக நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டேன். "தமிழர்கள் எல்லாம் உயிருக்குப் பயந்து ஓடி வருகிறார்களா?" என்றேன். "அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. மூணு நாள் சேர்ந்தாப்பல லீவு வந்தாலே நம்ம தமிழ் மக்கள் சொந்த ஊர்ப்பக்கம் கிளம்பிடுவாங்க. இப்போ கலவரம் வேற சேர்ந்துக்குச்சு. அதனால அது முடியற வரைக்கும் எல்லாம் ஊருக்கு போறாங்க. இது ரொம்ப சாதாரணமான நிகழ்வு." என்றார்.

"நான் அந்த வீடியோவை பார்க்கும்போதே தெரிந்தது. மக்கள் சிரித்துக்கொண்டே சென்றார்கள். அப்போதே புரிந்து கொண்டேன். அப்பறம் ஏன் உயிருக்கு பயந்து வெளியேறுகிறார்கள் என்று சொல்கிறீர்கள்." என்று கேட்டேன். "தலைவரே, உங்களுக்கு தெரியாததா..?" என்று கூறினார்.

மேற்கண்ட இந்த உரையாடல்கள் ஊடகங்களின் பரபரப்பு செய்திக்கான காரணத்தை மறைமுகமாக உங்களுக்கு சொல்லியிருக்கும். இன்னும் குழப்பத்தில் இருப்பவர்கள் தெளிவாக புரிந்துகொள்ள ஒரு சின்ன கற்பனை உரையாடலை இங்கு தருகிறேன்.

தமிழர்கள் உயிருக்கு பயந்து வெறியேறுகிறார்கள் என்ற செய்தியையே எடுத்துக் கொள்வோம். இந்த செய்தி எடுப்பதற்கு முன்பு அந்த செய்தியாளர் என்னென்ன பேசியிருப்பார் என்பதை கற்பனையாக இங்கு தருகிறேன்.

ஒரு நிருபரும் ஒளிப்பதிவாளரும் அடங்கிய குழுவுக்கு பொறுப்பாளராக ஒரு தலைமை நிருபரோ அல்லது செய்தி ஆசிரியரோ இருப்பார். அவர்களின் வழிகாட்டுதலின்படிதான் இவர்கள் இயங்க முடியும். உணர்வுப்பூர்வமான ஒரு செய்தி என்றால் இவர்கள் பாடு படு திண்டாட்டம்தான்.

"என்னப்பா, அங்க நிலவரம் எப்படி இருக்கு?" - இது தலைமை நிருபர்.

"அமைதியா இருக்கு சார்! தமிழக லாரிகளெல்லாம் போலீஸ் பாதுகாப்போடு தமிழ்நாட்டுக்குள்ள வந்துக்கிட்டு இருக்கு." - இது நிருபர்.

"அதுல எதுவும் கலவரத்துல சேதமான லாரி வருதா?"

"அப்படி எந்த லாரியும் வரல சார்."

"வந்தா அத மிஸ் பண்ணிராதீங்க. பஸ் ஓடுதா..?"

"பஸ்களை இன்னும் அனுமதிக்கல. இரண்டு மாநில எல்லைகளோடு நிறுத்திடறாங்க. மக்கள் ஒரு கி.மீ. தூரம் நடந்து வந்து தமிழக பஸ்ஸில் ஏறுகிறார்கள்."

"அவங்ககிட்ட பேசினீர்களா..?"

"பேசினோம்!"

"என்ன சொன்னாங்க..?"

"சொந்த ஊருக்குப் போய் ரொம்ப நாளாச்சு. கலவரம் ஓயிற வரைக்கும் அங்க போய் இருக்கப்போவதாக சொன்னாங்க."

சிறிது நேர மவுனத்திற்குப் பின்..

"உயிருக்கு பயந்து தமிழர்கள் குடும்பம் குடும்பமாக மூட்டை முடிச்சோடு வெளியேற்றம். இதுதான் 'லீடு'! இதுக்கு ஏத்த ஃபுட்டேஜ் எடுத்து அனுப்புங்க.!"

"சரிங்க சார்.!"

===

நிருபர் கூட்டத்தை தேடி போகிறார். பெண்களை தேடுகிறார். சோகமாக யாராவது வருகிறார்களா என்று பார்க்கிறார். அப்படி யாரும் வரவில்லை. பின் ஒரு பெண்ணை நிறுத்தி கேள்வி கேட்கிறார்.

"கன்னடர்களால் உங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா..?" 

"இல்லை. மற்ற இடங்களில் கலவரமாக இருப்பதால். முன் ஜாக்கிரதையாக எங்கள் சொந்த ஊருக்குப் போகிறோம். நான் சொன்னது டிவியில வருமா..?"

"இப்படி சொன்ன வராது. நான் சொல்ற மாதிரி முகத்தை சோகமா வச்சுக்கிட்டு சொன்ன வரும்."

"எனக்கு டிவிலே என் முகம் வந்தா போதும்."

செய்தியாளர் சொன்னதுபோலவே அந்தப் பெண் சோகமாக சொல்கிறார். லீடுக்கான ஃபுட்டேஜ் கிடைத்துவிட்டது.

இதில் தமிழர்கள் வெளீயேறுகிறார்கள் என்பது உண்மை. அதில் உயிருக்குப் பயந்து என்பதுதான் ஊதி பெரியதாகும் சங்கதி. இதுதான் பரபரப்பு.

சரி ஊடகங்கள் ஏன் இப்படி மாறின? இன்றைக்கு ஊடகங்களுக்கு போட்டி சமூக ஊடகங்கள்தான். அதில் பரபரப்பாகவும் அதிரடியாகவும் உண்மையாக பொய்யாக என்று எதையாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இணையாக ஊடகங்களும் பரபரப்பு தர வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றன. அதுபோக சக ஊடகங்களின் போட்டியை சமாளிக்கவும் பரபரப்பாக ஏதாவது செய்தாக வேண்டியிருக்கிறது. அதனால் ஊடக தர்மம் காற்றில் பறக்கவிடப்படுகிறது.


கன்னடர்கள் பலர் தங்கள் வாகனங்களில் தமிழர்களை ஏற்றிக்கொண்டு தமிழக எல்லையில் வந்து விட்டிருக்கிறார்கள். இதை எந்த ஊடகமும் செய்தியாக வெளியிடவில்லை. அதேபோல் சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு கர்நாடகா எண் கொண்ட காரில் சென்று கொண்டிருந்த ஒரு கன்னட குடும்பத்தை மறித்து நிறுத்தி, அவர்களின் காரை பத்திரமாக ஓரிடத்தில் நிறுத்திவிட்டு தமிழக பதிவு எண் கொண்ட காரில் அனுப்பி வைத்தார்கள். அதுதான் பாதுகாப்பு என்றும் திரும்பி வரும்போது உங்கள் காரை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்தார்கள். இந்த நல்ல செய்தி எதுவும் எந்த ஊடகத்திலும் வரவில்லை. அதற்கு பதிலாக வன்முறை செய்திகளை முந்தி தருகிறார்கள்.

அதற்காக ஊடகங்களை ஒரேயடியாக குறையும் சொல்லிவிட முடியாது. சென்னை வெள்ளத்தின் போது அரசைவிட பொதுமக்கள் உடனடியாக வந்து உதவியதற்கு ஊடகங்களின் ஒளிபரப்பே  காரணம். அப்துல் கலாம் இறந்தபோது கூடிய கூட்டத்துக்கு ஊடகங்களின் பங்கு  அதிகம். ஊடகங்கள் நல்லதும் செய்கின்றன. அதன் எண்ணிக்கை குறைவாக இருப்பதுவே வருத்தமாக இருக்கிறது.


செவ்வாய், செப்டம்பர் 13, 2016

பெங்களூரின் உண்மை நிலை என்ன?


பெங்களூர் பற்றி எரிகிறது என்பதுதான் ஊடகங்கள் மீண்டும் மீண்டும் சொல்லும் சேதி. உண்மை அப்படிதான் இருக்கிறதா..? கலவரங்கள் நடந்திருக்கின்றன. தமிழர்களின் உடமைகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. என்பதெல்லாம் உண்மைதான் மறுப்பதற்கில்லை. இவையெல்லாம் கண்டிக்கத்தக்கவை. ஆனாலும், ஊடகங்கள் காட்டும் அளவுக்கு நிலைமை படுமோசமாக இல்லை என்கிறார்கள் பெங்களூர்வாசிகள். பெங்களூர் தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் இதையேதான் சொல்கிறார்கள். 

தமிழ் எழுத்தாளரும் மென்பொறியாளருமான வா.மணிகண்டன் அவர்களின் பதிவை படித்தாவது ஊடகங்கள் ஊதி பெரிதாகும் விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக அங்கு கலவரமே நடக்கவில்லை என்று சொல்ல வரவில்லை. நடக்கிறது. ஒரு கூட்டம் இந்த வெறியாட்டத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஆனால், எனது நண்பர்கள் உறவினர்கள் என்று பெங்களுருவில் வசிப்பவர்கள் தங்கள் பகுதியில் எந்த கலவரமும் இல்லை. கன்னட மக்கள் எங்களிடம் மிக அன்பாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இந்த பிரச்னையை ஊதி மிக பெரிதாக்குகிறதே என்றுதான் அவர்கள் கவலைப்படுகிறார்கள். இதே உண்மையை எழுத்தாளர் வா.மணிகண்டனும் எழுதியிருக்கிறார்.  அவர் பெங்களூரில் பிரச்சனை ஊடகங்கள் காட்டும் அளவிற்கு இல்லை என்று சொல்வதைக்கூட ஊடகங்கள் ஒளிபரப்பு செய்யவில்லை. ஊடகங்கள் இரு மாநிலங்களையும் பதட்டத்தில் வைத்திருக்கவே விரும்புகின்றன, என்பதையே இந்த பதிவு சொல்கிறது. 


இனி வா.மணிகண்டன் எழுத்துக்களில் அப்படியே..


பெங்களூரு
 9/13/2016 01:08:00 PM

நேற்று மதியத்திற்கும் மேலாக ராஜாஜி நகர், மைசூரு ரோடு உள்ளிட்ட இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இன்று காலை நிலவரப்படி மாகடி சாலை, விஜயநகர், சந்திரா லே-அவுட், யஸ்வந்த்புரா, பீனியா, ராஜாஜி நகர், நந்தினி லே-அவுட் உட்பட பதினாறு காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. காலை பதினோரு மணி வரைக்கும் குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. நேற்றைய இரவிலும் நகரம் அமைதியாகவே இருந்திருக்கிறது.

நேற்றிரவு அலுவலகம் முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது போது நேரலை தமிழ் செய்திக்காக ஒரு தொலைக்காட்சியிலிருந்து அழைத்தார்கள். எம்.ஜி.ரோட்டில் ஆரம்பித்து கோரமங்களா, ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட், மங்கமன்பாளையா, பொம்மனஹள்ளி வழியாக வீட்டிற்கு வந்தேன் என்றும் இந்தப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அசம்பாவிதம் எதுவும் தென்படவில்லை எனவும் வட பெங்களூரில் கலவரங்கள் நடந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருவதாகச் செய்திகள் வருகின்றன என்று சொல்லிக் கொண்டிருந்த போதே இணைப்பைத் துண்டித்துவிட்டார்கள். எழுத்தாளர் சொக்கனுக்கும் இதே அனுபவம்தான். அவர் பிடிஎம் லே-அவுட், சில்க் போர்ட் போன்ற பகுதிகளில் பிரச்சினை இல்லை என்று சொல்லியிருப்பார் போலிருக்கிறது. தன்னைப் பேசவே அனுமதிக்கவில்லை என்றார். 

ஊடகங்கள் காரஞ்சாரமான செய்திகளைத்தான் விரும்புகின்றன. 

தமிழனுக்கும் கன்னடத்தவனுக்கும் பிரச்சினையென்று வரும் போது பெங்களூர்வாசிகளைவிடவும் அதிகம் பாதிக்கப்படப் போவது சாம்ராஜ்நகரிலும், குண்டுலுபேட்டிலும், நரசிங்கபுரத்திலும் என தமிழக கர்நாடக எல்லை முழுக்கவும் ஐந்து ஏக்கரும் பத்து ஏக்கருமாக குத்தகைக்கு இடம் பிடித்து வேளாண்மை செய்து கொண்டிருக்கும் தமிழர்கள்தான். பெங்களூரு மட்டுமே கர்நாடகா இல்லை. பெங்களூரில் வீட்டைப் பூட்டிக் கொண்டு இருந்து கொள்ளலாம். ஒரு மாதம் வேலைக்கு விடுப்பு எடுத்தாலும் கூட எதுவும் ஆகிவிடாது. ஆனால் மேற்சொன்ன பகுதிகளில் இதெல்லாம் சாத்தியமில்லை. விவசாய பூமிகளை அழிப்பதும், டிராக்டர்களை அடித்து நொறுக்குவதும், தமிழ் விவசாயிகளின் கால்நடைகளை நாசம் செய்வதும் நிகழ்ந்தால் அவர்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் கரைந்து போய்விடும். தமிழகத்தில் அதிகபட்சமாக ஐந்து சதவீத கன்னடர்கள் வாழக் கூடும். ஆனால் கர்நாடகத்தில் வாழக் கூடிய தமிழர்களின் எண்ணிக்கை சதவீதத்தில் மிக அதிகம். அவர்களையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு ஊடகங்கள் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

நேற்றிலிருந்து கருந்தேள் ராஜேஷ், சொக்கன், சிவராம் உள்ளிட்ட பெங்களூர் நண்பர்களின் ஃபேஸ்புக் பக்கங்களைப் பார்த்த போது அவர்கள் சொல்வதையெல்லாம் வெளியில் இருப்பவர்கள் யாரும் நம்புவதாகவே தெரியவில்லை. எனக்கும் இதே அனுபவம்தான். இதே ஊரில் வாழ்கிறவர்கள் சொல்வதைவிடவும் ஊடகங்கள் சொல்வதைத்தான் மனம் நம்புகிறது. இவர்கள் பெங்களூருவின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்கிறவர்கள். சொக்கன் இத்தகையவர்களிடம் விவாதிக்க முடியாது என்று தான் எழுதியவற்றையெல்லாம் அழித்துவிட்டார். கருந்தேள் ராஜேஷ் இன்றைக்கும் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

‘கே.பி.என் பேருந்துகளை எரித்தது உண்மையில்லையா?’ ‘தமிழ் வண்டிகளை கன்னட வெறியர்கள் தாக்கியது உண்மையில்லையா?’ ‘தமிழ் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிக்கப்பட்டது உண்மையில்லையா?’ என்று கேட்டால் இதையெல்லாம் யாரும் மறுக்கவில்லை. நடந்திருக்கின்றன. மறுத்து யாரைக் காப்பாற்றப் போகிறோம்? எச்சரிக்கையாக இருக்க வேண்டியதில்லை என்றும் யாரும் சொல்லவுமில்லை. ஆனால் ஊடகங்களில் இங்கேயிருக்கும் நிலைமையைவிடவும் அதீதமாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது. 

நன்றாகத் தெரிந்தவர்கள் கூட ‘பொறுப்பில்லாமல் எழுதாதீர்கள்’ என்றும் ‘சப்பைக் கட்டு கட்டாதீர்கள்’ என்றும் சொல்லும் போதுதான் வேதனையாக இருக்கிறது. பிரச்சினைகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆனாலும் பதற்றப்படாமல் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்வதுதான் பொறுப்பானதாக இருக்க முடியுமே தவிர, ‘இங்கே எங்களை எல்லாம் கொல்லுகிறார்கள்; அங்கே நீங்கள் கன்னடத்தவர்களை அடித்து நொறுக்குங்கள்’ என்று வெளியூர்க்காரர்களை உசுப்பேற்றுவது பொறுப்பாக இருக்காது. 

பெங்களூருவில் பதற்றம் இருக்கிறது. வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்த பெங்களூருவிலும் இப்படி நடக்கவில்லை என்பதுதான் உண்மை. அலுவலங்களும், கல்லூரிகளும், பள்ளிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறையளிக்கப்பட்டிருக்கின்றன. மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு அசாதாரண அமைதி நிலவுகிறது.

தமிழக வாகன ஓட்டிகள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் லாரி ஓட்டுநர்கள். ஆனால் வீடுகளில் வசிப்பவர்கள் மீதும் பணியாளர்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் இல்லை. டயர்களை எரித்து நடத்தப்பட்ட போராட்டங்களைக் கூட வாட்ஸப்பில் வாகனத்தை எரித்ததாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட். அங்கே டயர்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வாட்ஸப்பில் தமிழக வண்டி எரிக்கப்பட்டதாகச் செய்தி வந்திருக்கிறது.

நேற்றிரவு பத்தரை மணிக்கு பெங்களூரில் வாழும் தமிழ் செய்தியாளர் ஒருவரிடம் பேசிய போது ‘மத்தியானம் வரைக்கும் ராமேஸ்வரத்தில் கன்னடத்துக்காரர் தாக்கப்படுவதைத்தான் திரும்பத் திரும்ப ஒளிபரப்பினாங்க...கவனிச்சீங்களா?’ என்றார். அலுவலகத்தில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை. வெறியேற்றியிருக்கிறார்கள். மதியத்திற்கு மேலாக பிரச்சினைகள் ஆரம்பித்திருக்கின்றன. இன்று காலையிலிருந்து கவனித்ததில் நேற்று பெங்களூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டை திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ‘பூர்விகா மொபல் நிறுவனத்தை உடைத்தார்கள்’ என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஹிண்ட் கொடுக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்து அணைத்துவிட்டு அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டேன்.

அதே ஊடக நண்பரிடம் ‘நாளைக்கு நிலைமை சகஜமாகிடுமா?’ என்று கேட்ட போது ‘சந்தேகம்தான்’ என்றார். நல்லவேளையாக நேற்றைய தினத்தைவிடவும் இன்றைய தினம் பரவாயில்லை. அலுவலகத்தில் மிகக் குறைவானவர்களே வந்திருக்கிறார்கள். நகரப் பேருந்துகள் ஒன்றிரண்டு மட்டும் ஓடிக் கொண்டிருக்கின்றன. சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சில மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், ஒன்றிரண்டு உணவு விடுதிகள் செயல்படுகின்றன. ஆட்டோக்கள், மகிழ்வுந்துகள், இருசக்கர வாகனங்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன. திரும்பவும் சொல்கிறேன். இது ஓசூர் பிரதான சாலை, எம்.ஜி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மதியம் பனிரெண்டு மணியளவிலான நிலவரம். ‘தெருவுக்குள் சுற்றிப்பார்த்துவிட்டு வந்து நகரமே நல்லா இருக்குன்னு எழுதுறியா?’ என்று நக்கலாகக் கேட்டவர்களுக்காக மேற்சொன்ன இடங்களைத் தெளிவாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட பதினேழு கிலோமீட்டர் தூரம் இதுதான் நிலவரம். வட பெங்களூரில் நிலவரம் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.

கன்னட வெறியர்களின் வெறியாட்டம். இவர்கள்தான் பிரச்சனையின் மூலம்.
இந்தக் கலவரத்தில் அரசியல் கட்சிகள் பின்னணியில் இருக்கின்றன; சில இயக்கங்கள் வலு சேர்க்கின்றன, அவர்கள்தான் இதையெல்லாம் ஒருங்கிணைக்கிறார்கள் என்றெல்லாம் நிறையத் தியரிகள் வந்து கொண்டேயிருக்கின்றன. எதை நம்புவது எதை விடுவது என்று தெரியவில்லை. எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒன்று- யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. நானெல்லாம் வக்காலத்து வாங்கி எழுதி எதுவும் நடக்கப் போவதில்லை. முடிந்தளவுக்காவது பதற்றத்தைக் குறைக்கலாம் என்றுதான் மனப்பூர்வமாக விரும்புகிறேன். அதேசமயம் பதற்றத்தைக் குறைக்க விரும்புகிறேன் என்பதற்காக எதையும் இட்டுக்கட்டியும் சொல்லவில்லை. இடங்கள் நேரம் குறித்துத் தெளிவாக எழுதியிருந்தேன். எழுதியிருக்கிறேன். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி தமிழனை அடி வாங்கி வைக்க விரும்புகிறவனாகவும் நான் இல்லை. என்னை நம்பலாம்.

ஒன்றை மட்டும் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும். Be safe. அதே சமயம் Be very very responsible and dont believe everything and everyone.திங்கள், செப்டம்பர் 12, 2016

மணல் எனும் அற்புத இயற்கை அரண்றுகள் நமக்கு தண்ணீர் மட்டுமல்லாமல் செழிப்பான வண்டல் மண்ணையும் அள்ளித் தருகின்றன. இதை பாதுகாத்தால் நமக்கு மட்டுமல்லாமல் நமது சந்ததிகளுக்கும் இந்த இயற்கை வளங்கள் தொடர்ந்து கிடைக்கும். ஆனால், யாரும் அப்படி நினைப்பதில்லை. மாறாக இயற்கை வளங்களை சுரண்டுவது மிகப் பெரும் தொழிலாக வளர்ந்திருக்கிறது. இன்றைக்கு நீரும் மணலும் மிக முக்கிய வணிகப் பொருட்கள்.


கோடிக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையும் நதிநீரும் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி உருவாக்கிய அற்புதமான மணலை முழுவதுமாக சுரண்டி பணமாக்கிவிட வேண்டும் என்ற வேட்கையில் மணற் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இயற்கை மீதும் அக்கறையில்லை, வருங்காலத் தலைமுறைமீதும் நம்பிக்கையில்லை. 'எப்படியாவது பணம் பண்ணு..!' என்ற நோக்கில் இப்போதைக்கு பணம் சேர்த்தால் போதும் என்று அலைபவர்கள். 


ஆற்று மணல் இப்படியெல்லாம் அரசியல்வாதிகள் கையில் சிக்கி சீரழியும் என்று அன்றே வெள்ளைக்காரர்களுக்கு தெரிந்திருக்கிறது போலும். ஆறுகளை காப்பதற்காக 1884-ம் ஆண்டில் 'ஆறுகள் பாதுகாப்புச் சட்டம்' என்ற ஒன்றை ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. அன்று கொண்டுவந்த சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. அதன்படி ஆறுகளின் இருபுறமும் வெள்ளக் கரைகளுக்கு அப்பால் 100 அடி வரை மண் அல்லது மணல் அள்ளக்கூடாது. அது தனியார் நிலமாக இருந்தாலும் இதே விதிதான். 

அவசியத் தேவைக்காக மணல் எடுக்க வேண்டுமென்றால் அந்த ஆற்றுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட பொதுப்பணித் துறை அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 30 நாட்களில் அந்த அலுவலர் மணல் எடுக்க முடிவு செய்துள்ள இடத்தை பார்வையிடுவார். அந்த இடத்தில் மணல் எடுப்பதால் நதியின் பாதுகாப்புக்கு பாதகம் ஏற்படுமா என்று ஆய்வு செய்வார். பாதகம் இல்லையென்றால் அங்கு மணல் அள்ள சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவார். 


மணல் எடுப்பதை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தம் அதிகாரம் அந்த அலுவலருக்கு உண்டு. அதை மீறினால் சிறைத்தண்டனையும் ரூ.50 அபராதமும் விதிக்கப்படும். அந்தக்காலத்தில் 50 ரூபாய் என்பது பெருந்தொகை. தற்போது இந்த சட்டத்தை யாரும் மதிப்பதில்லை. எவ்வளவு மணலை அள்ளமுடியுமோ அவ்வளவு மணலை அள்ளி ஆறுகளை வறண்டுபோக வைக்கிறார்கள். 


தமிழ்நாட்டில் 33 ஆற்றுப்படுக்கைகள் உள்ளன. இவை எல்லாவற்றிலும் வெவ்வேறு அளவுகளில் மணல் அள்ளப்படுகின்றன. இப்படி சகட்டுமேனிக்கு அள்ளப்படும் ஆற்று மணல் நமக்கு என்னென்ன நன்மை செய்கிறது என்று பார்த்தால், அது ஏராளமாய் இருக்கிறது. மணல் துகள்கள் வழியே தண்ணீர் செல்லும்போது நச்சுக்கிருமிகள் அழிந்து விடும். அதனால்தான் ஆறுகளில் இருந்து குடிநீருக்கு நீர் எடுக்கும்போது கிணறு அமைத்து அதன் மூலம் நீரை இறைத்து எடுக்குகிறார்கள். 


ஆற்றில் எவ்வளவுக்கு எவ்வளவு மணல் இருக்கிறதோ அவ்வளவு அதிகம் தண்ணீர் கிடைக்கும். ஆற்றில் இருக்கும் மணல் ஒரு நிலத்தடி நீர்த்தேக்கமாக செயல்படுகிறது. இதனால் நதிக்கரையின் ஓரமாக உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கிறது. ஆற்றில் இருந்து மணல் அள்ளுவதால் நமக்கு மூன்று வழிகளில் ஆபத்து வருகிறது. கிடைக்கும் குடிநீர் அளவு குறையும். தண்ணீர் சுத்தமாவது நடக்காமல் நோய்க் கிருமிகள் நீரில் இருக்கும். குறிப்பாக கோலிபார்ம் என்ற கிருமி தண்ணீரில் அழியாமல் நோய் பரவுகிறது. சுற்றுப்புறக் கிராமங்களில் உள்ள கிணறுகள் வற்றிப்போகின்றன. அப்படியே கிணற்றில் நீர் இருந்தாலும் ஆற்றில் மணல் இல்லாவிட்டால் கிணற்று நீர் மாசுபட்டதாக மாறிவிடும். அதனால் மணல் நம்மை நோயிலிருந்தும் இயற்கை பேராபத்துகளில் இருந்தும் காக்கும் முக்கிய அரணாகும். அதனை உயிர்போல காப்போம். மணற்கொள்ளையை முற்றிலுமாக ஒழிப்போம். 
ஞாயிறு, செப்டம்பர் 11, 2016

இனி அஸ்திவாரம் இல்லாமல் வீடு கட்டலாம்


ரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால் முதலில் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். அந்த கட்டடத்தின் மொத்த வலிமையையும் அந்த அஸ்திவாரத்தையே நம்பி இருக்கிறது. ஆனால், இனி அஸ்திவாரமெல்லாம் தேவையில்லை. அந்த செலவை மிச்சப்படுத்துங்கள் என்கிறார் ஒரு கட்டடக் கலைஞர். இந்த வீடுகள் அல்லது கட்டடங்கள் மற்றவற்றை விட பலமாக இருக்கும் என்கிறார் அவர். அவரின் பெயர் யூரி விளாசங் என்பது. 

இந்த முறையை பயன்படுத்தி ரஷ்யாவில் உள்ள 'நோவோசிபிரிஸ்க்' என்ற இடத்தில் குடியிருப்புகளை இவர் ஏற்படுத்தியுள்ளார். களிமண்ணும் மணலும் நிரம்பிய அந்த இடத்தில்16 மீட்டர் ஆழம் தோண்டினால் மட்டுமே அஸ்திவாரம் அமைக்க முடியும் என்று தீர்மானித்தார். ஆனால், 11 மீட்டருக்கு மேல் தோண்ட முடியவில்லை. கடும் பாறைதான் இதற்கு காரணம். 


இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் 16 மீட்டர் ஆழத்திற்கு அஸ்திவாரம் தோண்டாமல் மண்ணை அழுத்தி கடினமாக்குவதன் மூலம் கட்டடம் உருவாக்கலாம் என்கிறார் விளாசங்.  மேலும், கட்டடம் மண்ணை அழுத்தும் போது மண் உறுதியாக இருந்து கட்டடத்தை தாங்கும் என்று தெரிவித்தார். 

விளாசங் கண்டுபிடித்த இந்த முறைப்படி 12 அல்லது 14 டன் எடைக் கொண்ட இரும்பு சிலிண்டரை 'கிரேன்' மூலம் தூக்கி வேகமாக கீழே விட வேண்டும். அப்படி செய்யும்போது 3 மீட்டர் ஆழத்திற்கு குழி ஏற்படும். அந்தக் குழியை மண் கொண்டு நிரப்ப வேண்டும். பின் மீண்டும் அந்த இடத்தில் கிரேன் மூலம் சிலிண்டரை தூக்கி கீழே இறக்க வேண்டும். இப்படி மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்வதால் மண் இறுகிவிடும்.

இந்த அதி அழுத்த சக்தியால் மண்ணின் கீழ் பரப்பில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டுவிடும். மண்ணுக்கு அடியில் உள்ள நீரே கட்டடங்கள் பலவீனம் அடைய காரணம். அதிக அழுத்தத்தின் காரணமாக நன்றாக இறுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டினால் அந்த மண் 300 டன் எடை கொண்ட வீட்டையும் தாங்கும் வலிமை பெற்றுவிடும். இதனால் இனி அஸ்திவாரத்திற்கு என்று அதிகமாக செலவு செய்யும் அவசியம் இருக்காது. வருங்காலத்தில் இப்படிப்பட்ட அஸ்திவாரம் இல்லாத வீடு அதிகமாக கட்டப்படும் என்கிறார் விளாசங். 

எப்படியோ வீடு பலமாகவும் நமக்கு செலவும் குறைந்தால் நல்லதுதான்.

நோவோஸிபிரிஸ்கில் உள்ள பழமையான தேவாலயம்சனி, செப்டம்பர் 10, 2016

மரண வாக்குமூலம் செல்லுபடியாகுமா?


ல வழக்குகளின் போக்கையே திசை திருப்பி விடும் சக்தி, மரண வாக்குமூலத்திற்கு உண்டு. இந்திய சான்று சட்டம் 1872-ன் பிரிவு 32-ன் படி மரண வாக்குமூலத்தை, ஏற்கக்கூடிய வாக்குமூலமாக கருதலாம் என்று சட்டம் சொல்கிறது. 

ஆசிட் வீச்சுக்கு பலியான நர்ஸ் பிரீத்தி ரதி
ஒருவர் இறக்கும் போதோ, இறப்பை எதிர்பார்த்து இருக்கும் போதோ கொடுக்கும் வாக்குமூலமே மரண வாக்குமூலம். தனது இறப்புக்கு யார் காரணம்? எப்படி தாக்கினார்கள்? என்ன ஆயுதம் பயன்படுத்தினார்கள்? என்று இதில் விலாவாரியாக  கூறலாம். இறக்கும் தருவாயில் உள்ள ஒருவர் தனது மரண வாக்குமூலத்தை மருத்துவமனையில் கொடுக்கலாம். தாக்கப்பட்ட இடத்திலேயே கூட கொடுக்கலாம். எங்கு மரண வாக்குமூலம் கொடுத்தாலும் அது செல்லும். 

யார் தூண்டுதலும் இல்லாமல் தானே முன்வந்து கொடுப்பது தான் மரண வாக்குமூலம். சிகிச்சை அளிக்கும்  மருத்துவர், காவல் துறை அதிகாரி, குற்றவியல் நடுவர் முன் இதை கொடுக்கலாம். வாக்குமூலம் கொடுக்கும் நபரின் உயிர் நீடிக்குமானால் காவல் துறையினர் குற்றவியல் நடுவரை அழைத்து வந்து வாக்குமூலத்தை பதிவு செய்வார்கள். தாசில்தார் கூட மரண வாக்குமூலத்தை பதிவு செய்யலாம். 

ஆட்டோ சங்கரின் பிரபலமான மரண வாக்குமூலம்
சில வேளைகளில் இரண்டாவது முறை மரண வாக்குமூலம் கொடுக்கும் சூழ்நிலை வரும். முதலில் டாக்டரிடமும், காவல் துறை அதிகாரியிடமும் உடனடி வாக்குமூலம் கொடுப்பார். பின்னர் குற்றவியல் நடுவர் முன்பும் கொடுப்பார். இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட மரண வாக்குமூலங்கள் கொடுக்கும் போது, எல்லா வாக்குமூலங்களும் ஒத்து போனால் தான் அந்த வாக்குமூலம் ஏற்கப்படும். ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டால் அந்த வாக்குமூலத்தை நீதிமன்றமே நிராகரித்துவிடும். 

ஒருவேளை, மரண வாக்குமூலம் கொடுத்தவர் பிழைத்துக் கொண்டால், அந்த வாக்குமூலம் நீதி மன்றத்தில் சத்திய பிரமாணம் செய்து குற்றம் பற்றி கொடுத்த வாக்கு மூலமாகவே கருதப்படும். இதன் மேல் குறுக்கு விசாரணையும் நடைபெறும். 

ஆசிட் வீச்சுக்கு பலியான வினோதினி
மரணவாயிலில் நிற்கும் ஒருவர் கொடுக்கும் வாக்குமூலம் உண்மையாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் உள்ளது. ஆனாலும் இது எல்லா நேரங்களிலும் உண்மையானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. பொய்யான மரண வாக்குமூலங்களும் மற்றவர்களை பழிவாங்குவதற்காக கொடுக்கபடுவதுண்டு. 

குற்றம் செய்யாதவர்களை உள்நோக்கத்தோடு  சம்பந்தப்படுத்தியும் மரண வாக்குமூலம் கொடுக்கலாம். இதை குறுக்கு விசாரணையும் செய்ய முடியாது. ஏனென்றால் வாக்குமூலம் கொடுத்தவர் உயிர் பிழைத்திருந்தால் தான் இதெல்லாம் செய்ய முடியும். மரண வாக்குமூலம் குறுக்கு விசாரணை செய்ய முடியாத சான்றாகும். இதை அப்படியே ஏற்றுக்கொண்டால் நிரபராதி குற்றவாளியாக நிறுத்தப்பட்டு தண்டிக்கபடுவார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி கவுசல்யாவின் மரண வாக்குமூலம்
இதற்காகத்தான்  கண்ணை மூடிக்கொண்டு மரண வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதில்லை. வாக்குமூலத்திற்கு ஒத்துவரக்கூடிய சான்றுகள் வேண்டும். அந்த சான்றுகள் மரண வாக்குமூலத்தின் மூலம் உறுதி படுத்துகிறதா? என்று ஆராயப்படும். அவ்வாறு உறுதிப்படுத்தினால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கில் தண்டனை வழங்கப்படும். இதன் மூலம் மரண வாக்குமூலம் உண்மையாக இருந்தால் மட்டுமே தண்டனை கிடைக்கும். 

வினோதினியின் மரண வாக்குமூலம்
வெள்ளி, செப்டம்பர் 09, 2016

ஹிட்லரும் நல்ல மனிதர்தான்..!


லகில் யாரும் 100 சதவீதம் நல்லவர்களும் இல்லை. 100 சதவீதம் கெட்டவர்களும் இல்லை. உலகமே கொடுங்கோலனாக நினைக்கும் ஹிட்லர் தான் ஜெர்மனியின் வளர்ச்சிக்கு அடிப்படையானவர். பின்னாளில் அவர் நடத்திய கொடுங்கோல் ஆட்சி காரணமாக அவரது சாதனைகள் யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. 


ஹிட்லரின் ஆரம்பக்கால சாதனைகளை பார்த்தால் ஜெர்மனியின் சரித்திரத்தில் தோன்றிய மிகச்சிறந்த மாமனிதராகவே இருந்தார். முதலாம் உலகப்போர் முடிந்திருந்த காலத்தில் ஜெர்மனியின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்தது. மக்களை வறுமை வாட்டியெடுத்தது. 

இதை மூன்றே வருடங்களில் சரி செய்தவர், ஹிட்லர் 1933-ல் ஹிட்லர் 'சான்சலர்' பதவியை ஏற்றபோது 60 லட்சம் மக்கள் வேலை இல்லாமல் இருந்தார்கள். 1936-ல் ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர்கூட இல்லை. இத்தனைக்கும் ஹிட்லருக்கு பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது. அவரது அமைச்சரான ஜால்மர் ஷ்ஹாக்ட் என்பவர்தான் ஜெர்மனியை அடியோடு மாற்றிக் காட்டினார்.


ஹிட்லரின் ஆட்சியில் வேலைக்கேற்ற ஊதியம், போனஸ், விலைவாசி எல்லாம் சரியாக நிர்ணயிக்கப்பட்டது. வாகனங்கள் வேகமாக செல்ல நீண்ட சாலைகளை உலகில் முதன்முதலாக அமைத்தவர் ஹிட்லர்தான். இன்றைய நமது நான்கு வழிச்சாலை அறிமுகப்படுத்தியவர் ஹிட்லர்தான். 

முதியவர்களுக்கு பென்ஷன், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவம், எல்லோருக்கும் மருத்துவ காப்பீடு என்று வரிசையாக ஹிட்லர் அறிவித்த ஒவ்வொன்றும் மிகப் பெரிய புரட்சி திட்டங்கள்.


போர்ஷ் கார் நிறுவன அதிபர் பெர்டினான்ட் போர்ஷை அழைத்து சாமானியர்களும் வாங்கும் விலையில் கார் தயாரிக்குமாறும், அது ஒரு காலன் பெட்ரோலுக்கு 40 மைல் செல்ல வேண்டும் என்றும் கூறினார். பின்பகுதியில் என்ஜின் வைத்து தயாரிக்கப்பட்ட அந்த சிறிய காருக்கு 'போக்ஸ்வேகன்' என்று பெயரிட்டார். இன்று அந்தக் கார்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறது. 

தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பபடக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தவர். அதற்கென சட்டமும் கொண்டுவந்தார். அன்றைய தொழிற்சாலைகளும் அதற்கான சாதனங்களை போருத்திக்கொண்டன. அன்று ஜெர்மனியில் ஓடிய நதிகள் அனைத்தும் சுத்தமாக இருந்தன. 

ஹிட்லர் காலத்தில் எந்த தொழிற்சாலையிலும் சம்பள பிரச்சனை, வேலை நிறுத்தம் கிடையாது. முதலாளிகள் பக்கமும் சாயாமல், தொழிலாளர்கள் பக்கமும் சாயாமல் நடுநிலை வகித்தார். பிரச்சனை ஏற்படுத்துபவர்கள் முதலாளியாக இருந்தாலும் தொளிலளியாக் இருந்தாலும் சிறையில் தள்ளினார்.


ஹிட்லர் ஆட்சி ஏற்ற போது ஜெர்மனி ராணுவத்தில் ஒரு லட்சம் வீரர்கள் இருந்தனர். அவர்களிடம் நவீனரக துப்பாக்கிகள் கிடையாது. நான்கே ஆடுகளில் நவீன போர் விமானங்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள், டாங்கிகள் கொண்ட ஐரோப்பாவில் மிக சக்தி வாய்ந்த இராணுவமாக மாற்றினர். 

ஹிட்லரின் 12 வருட ஆட்சியில் முதல் 5 வருடமும் அவர் செய்த சாதனைகள், உலக பொருளாதார மேதைகளை வியப்பில் ஆழ்த்தின. ஆனால், அதன்பின்னர், ஹிட்லர் ஒரு கொலைகார சாத்தானாக மாறத் தொடங்கியதால், அது மட்டுமே இன்றும் பேசப்படுகிறது. சாதனைகள் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டுவிட்டன.
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...