Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

நீர்வழிச் சாலை: வெள்ளநீரில் விவசாயம் - 14


வெள்ளநீரில் விவசாயம்

ன்றைய விவசாயிகள் வெள்ளத்தைப் பார்த்தாலே அரண்டடித்து ஓடுகிறார்கள். ஆனால், அன்று வெறும் வெள்ளத்தை மட்டுமே நம்பி அந்த நீரில் விவசாயம் செய்த விவசாயிகள் இருந்தார்கள் என்றால் இப்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கும். 

விவசாயத்தில் ஏரியை நம்பி விவசாயம் நடந்தால் அதை 'ஏரிப் பாசனம்' என்றும், ஆற்றை நம்பி நடந்தால் 'ஆற்றுப் பாசனம்' என்றும், கிணற்றை நம்பி நடந்தால் 'கிணற்றுப் பாசனம்' என்றும், மழையை நம்பி நடந்தால் அது 'மழைநீர் பாசனம்' என்றும், ஆற்றின் வெள்ளத்தை நம்பி நடக்கும் விவசாயத்திற்கு 'வெள்ளநீர்ப் பாசனம்' என்றும் பெயர்கள் இருந்தன.


இதில் மழைநீரையும் வெள்ளநீரையும் தவிர மற்ற எல்லா பாசனங்களும் 'நன்செய் நிலம்' என்கிறார்கள். அதாவது வருடம் முழுவதும் நீர் இருக்கும் பாசனம்.  மழையை மட்டும் எதிர்பார்த்து நடக்கும் விவசாயத்திற்கு 'மானாவாரி விவசாயம்' என்று பெயர். இதை 'புஞ்சை நிலம்' என்றும் சொல்வார்கள்.

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்புவரை புன்செய் விவசாயிகளுக்கும், நன்செய் விவசாயிகளுக்கும் பெரிய வேறுபாடு இருந்ததில்லை. அவர்களுக்குள் ஏற்ற தாழ்வும் வரவில்லை. சொல்லப்போனால் தமிழர்களின் பெரும்பான்மையான உணவுத் தேவைகளை மானாவாரி பயிர்களே ஈடு செய்துவந்தன. அந்த பெரும்பான்மையை  எல்லாம் ஆங்கிலேயர்கள் காணாமல் செய்துவிட்டனர்.

ஆங்கிலேயர்கள் வந்தபின் நன்செய் விவசாயிகளுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். மானாவாரி நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் எல்லாம் இரண்டாம்தர குடிமக்கள் போல் நடத்தப்பட்டனர். இதைப்பற்றி பின்னர் பார்ப்போம். அதற்கு முன் வெள்ளநீரில் மட்டுமே நடைபெறும் விவசாயம் ஒன்றிருந்தது. அதைப் பற்றிப் பார்ப்போம்.

ஆற்றில் வரும் வெள்ளத்தை வைத்துதான் இந்த விவசாயமே நடைபெறும். தமிழகம், வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் 'வெள்ள வெள்ளாமை' வெகு விமர்சையாக நடந்தது. மழைநீரும் வஞ்சிக்கும் பகுதியில்தான் இந்த விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. நதியை ஒட்டியிருக்கும் மேடானப் பகுதியில் நடைபெற்றது. 

எப்படியும் அன்றைய நதிகள் வருடத்திற்கு ஒருமுறையாவது வெள்ளத்தை கொண்டு வந்துவிடும். ஒருசில வருடங்கள் மட்டும் வெள்ளம் வராமல் போகும். வெள்ளநீர் வெள்ளாமை செய்யும்  பகுதியில் வாழும் மக்கள் வருடம் முழுவதும் ஆற்றின் கரையை உயர்த்தி கட்டுவதில் ஈடுபடுவார்கள். இப்படி உயர்த்தி கட்டுவதால் வெள்ளம் வரும் காலங்களில் ஆற்றைவிட்டு வெளியே வரும் நீர் மீண்டும் ஆற்றுக்குள் செல்லாது. அப்படி செல்லாமல், நீர் சென்று சேர்ந்துவிடாமல் தடுப்பதற்குத்தான் இந்த கரைகள்.

வெள்ளநீர் எப்போதும் செம்மண் நிறத்தில்தான் ஓடிவரும். இந்த நிறம்தான் வண்டல் மண் அதில் கலந்திருப்பதற்கான அறிகுறி. வண்டல் மண் கலந்த செழுமையான நீர், பயிர்களுக்கு நல்ல விளச்சளைத்தரும. அன்றைய விவசாயிகள் மழையைப் போலவே வெள்ளத்தையும் கொண்டாடினார்கள். வெள்ளம் வந்துவிட்டுப் போனால் அடுத்த வெள்ளாமை செழிக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை என்றும் பொய்த்துப் போனதில்லை.


வெள்ளத்தின் அளவு, வெள்ளம் நீடிக்கும் காலம் இவைகளைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இருந்தது. அதனால் வெள்ளக் காலங்களில் மிகுந்த முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வார்கள். வேகமாக நாற்றுகளை நட்டு விவசாயத்தை தொடங்குவார்கள். அதற்குள் இவர்கள் உயர்த்திக் கட்டிய ஆற்றின் கரை தானாகவே உடைந்து, வெள்ளநீர் மீண்டும் ஆற்றுக்கே போய்விடும். 

சில நேரங்களில் மக்களே கூட அவர்கள் கட்டிய கரையை அவர்களே உடைத்து மீண்டும் வெள்ளநீரை ஆற்றுக்கே அனுப்பிவிடுவார்கள். அதற்குள் முன்பே அவர்கள் ஏற்படுத்தி தயாராக வைத்திருந்த பண்ணைக் குட்டைகளில் எல்லாம் நீர் நிறைந்துவிடும். அந்த வருட வெள்ளாமைக்கு அந்த நீர் போதும். இனி அடுத்த வெள்ளத்திற்கு காத்திருக்க வேண்டியதுதான்.

வெள்ளநீர் மேலாண்மையை முழுவதுமாக அங்கு வாழும் மக்களே மேற்கொண்டார்கள். ஆற்றின் கரையை கட்டுவது, வெள்ளத்திற்குப் பின் அந்த கரையை உடைத்து வெள்ளநீரை வடியவைப்பது என்ற எல்லா வேலையையும் மக்களே செய்து வந்தனர். வடக்குப்பட்டி என்ற இடத்தில் இந்த வெள்ளநீர் விவசாயத்தின் மூலம் 45 டன் உணவு தானியம் விளைந்ததாக கி.பி.1760-ல் எடுக்கப்பட்ட ஆங்கிலேயர்களின் புள்ளிவிவரம் ஒன்று சொல்கிறது.

குளத்துப் பாசனம், ஏரிப் பாசனம், ஆற்றுப் பாசனம், கிணற்றுப் பாசனம் போன்றே வெள்ளநீர்ப் பாசனமும் அன்றைய விவசாயத்தில் ஒரு அங்கமாக இருந்தது. ஆங்கிலேயர்கள் நீர்ப் பாசனத்தை அவர்கள் கையில் எடுத்தப்பின் விழுந்த முதல் அடி வெள்ளநீர்ப் பாசனத்திற்குதான்.

இந்த வெள்ளநீர் வேளாண்மைப் பற்றி எதுவும் தெரியாத ஆங்கிலேயர்கள், மண்ணைக் கொண்டு உயர்த்திக் கட்டிய நதிக் கரைகளுக்குப் பதில் கற்களைக் கொண்டு வலுவான காங்கிரிட் கரைகளை அமைத்தார்கள். வழக்கமாக விவசாயிகள் அமைக்கும் கரைகளைவிட ஆங்கிலேயர்கள் அதிக உயரமாக நதியின் கரைகளை அமைத்தார்கள். இது பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. வெள்ளத்தின்போது ஆற்றின் பக்கவாட்டில் வடிந்த வெள்ளநீர் மீண்டும் ஆற்றுக்குள் செல்ல முடியாமல் அப்படியே தேங்கி நின்றது. பழைய மண் கரைகளில் மக்கள் வேண்டும் பொழுது ஆற்றின் கரையை உடைத்து வெள்ளநீரை மீண்டும் ஆற்றுக்குள்ளே திருப்பிவிட்டனர். கான்கிரிட் கரைகளை உடைக்க முடியாததால் எப்போதும் நீர் தேங்கியே நின்றது.

பொதுவாக வெள்ளநீரில் வண்டல்மண்ணும் மீன்குஞ்சுகளும் அடித்து வரப்படும். இந்த மீன்குஞ்சுகள் தேங்கிய வெள்ளநீரில் இருக்கும் கொசுக்களின் லார்வாக்களை உணவாக உட்கொள்ளும் இதனால் கொசுக்கள் தொல்லை இருக்காது. ஆங்கிலேயர்கள் கரைகளை உயர்த்தியதில் மீன்குஞ்சுகள் அடித்து வருவதும், வண்டல் மண் படிவதும் வெகுவாக குறைந்து விட்டது. 

தேங்கிய இருக்கும் நீரில் கொசுக்கள் பெருகின. அதுவரை பெரிய விஷயமாக இல்லாத மலேரியா நோய் பெரும் பிரச்சனையாக மாறியது. உயிர் இழப்புகள் கொசுக்களால் உருவானது. மலேரியா ஒரு தலைவலி மிக்க ஒரு நோயாக வளர்ந்தது. அதே வேளையில் ஆற்றின் வண்டல் மண் வெளியே வராமல் நதிப்படுகையிலேயே தங்கியதால்  நதியின் தரைமட்டம் உயர்ந்தது. ஆற்றின் கொள்ளளவு குறைந்தது, இதை ஈடுகட்டுவதற்காக ஆங்கிலேயர்கள் மேலும் கரையை உயர்த்தினார்கள்.

இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. காட்டுத்தனமான வெள்ளம் வரும் போது இந்தக் கரைகளை உடைத்து வெள்ளம் ஆக்ரோஷமாய் ஊருக்குள் பாயும். கிராமங்கள் அழியத் தொடங்கின. 'அதுவரை பூனை போல் சத்தம் இல்லாமல் மெதுவாக வந்த வெள்ளம். இப்போது சிங்கம் போல் கர்ஜித்துக்கொண்டு சீறிப் பாய்கிறது' என்று ஆங்கிலேய இன்ஜினியர் ஒருவர் இந்த வெள்ளத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். 

வெள்ளநீர் வெள்ளாமை இப்படித்தான் அழிந்து போனது. இன்னும் ஆங்கிலேயர்கள் அழித்தது நிறைய இருக்கிறது.

அதையும் பார்ப்போம். 

                                                                                                                                          - தொடரும்






தொடர்புடைய பதிவுகள்



22 கருத்துகள்

  1. தொடர்ந்து பிரமிப்பான தகவல்கள் நண்பரே தொடர்கிறேன்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  2. வெள்ளநீர்ப்பாசனம் என்ற பயன்பாட்டை தங்களது பதிவு மூலமாகத் தான் அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நண்பரே ஒரு வேண்டுகோள்
    இத்தொடர் நினைவுற்றதும்
    தனியொரு அச்சு நூலாகவோ அல்லது மின்னூலாகவோ
    வெளியிடுங்கள்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  4. அருமையான தொடர் பல தகவல்கள் அறிய முடிகின்றது தொடர்கின்றோம் .

    கீதா: சகோ, இதில் குறிப்பிட்டிருக்கும் அனைத்துப் பாசன முறைகளையும் படித்திருக்கின்றேன். வெள்ள வெள்ளாமை என்றதும் தான் நினைவுக்கு வந்தது அதுவும் படித்த நினைவு...வெள்ள நீர்ப்பாசனம் என்றதும் ...ஆங்கிலத்தில் படித்த விளைவு..flood irrigation அது சட்டென்று தமிழில் வரவில்லை. இப்போதும் கூட இதைச் சீர்ப்ப்படுத்த முடியும். வெள்ளத்தில் பயிர்கள் அடித்துச் செல்லப்படாமல். ஆனால் பாருங்கள் இப்போது மைக்ரோ இரிகேஷன் - ட்ரிப் இரிகேஷன் - சொட்டுநீர்ப்பாசனம் கையாளுதல் நல்லது என்ற அளவிற்கு தண்ணீர் சேமிப்பு அவசியமாகிவிட்டது. இது இப்போது இல்லை 35 வருடங்களுக்கு முன்பே பேசப்பட்டுவிட்டது. அருமையான தொடர் சகோ. தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது முனோர்கள் இயற்கையின் அத்தனை அம்சங்களையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டது நம்மை வியக்க வைக்கிறது. இன்றைய நிலைக்கு சொட்டுநீர் பாசனம் அவசியத் தேவைதான். தொடர்ந்து ஆழமாக கருத்திடும் தங்களுக்கு நன்றிகள்!

      நீக்கு
  5. உங்கள் அளவிற்கு எழுத முடியுமா என்று தெரியவில்லை இருந்தாலும் விவசாயத்திற்கான இந்தச் சொட்டு நீர்ப்பாசனம் வந்தது குறித்து எழுத முனைகின்றேன். உங்கள் தொடரிலும் கூட பிற்பகுதியில் வருகின்றதோ...!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரை சொட்டுநீர் பாசனத்தைப் பற்றி எழுதும் ஐடியா இல்லை. ஒருவேளை தொடரின் போக்கைப் பொறுத்து எழுதவேண்டிய நிலைவந்தால் எழுதுவேன்.

      நீக்கு
  6. என்ன சொல்லி பாராட்டுவது என தெரியவில்லை.

    இனியேனும் நாம் விழிக்கா விட்டால் இனி எங்கே விழிப்போம் எனும் நிலையில் விழிப்பூட்டவும் வழி காட்டவும் செய்யும் உங்கள் பதிவுகளுக்கான தேடல்களை கண்டு பிரமிக்கின்றேன்!

    எழுத்துலகில் சமுகத்துக்கும் பயன் படும் வகையில் ஆய்வு கட்டிரைகளை எழுதிட அதன் நம்பக்த்தன்மை தேடி எத்தனை சிரம்ப்படுவீர்கள் என புரிகின்றது. என் மனமார்ந்த பாராட்டுகள்.

    நீர்ப்பாசன முறைகளை சிறு வயதில் அம்மாவின் ஊருக்கு செல்லும் போது மாமாவின் வயலில் பார்த்திருக்கின்றேன்.என் அம்மா வழி தாத்தா மற்றும் மாமா மாரின் பிரதான தொழிலே உழவு தான். இலங்கையில் பிரபல்யமான திருகோணேஸ்வரர் கோயிலை ஒட்டில விவசாய நிலங்களில் வேளாண்மை செய்திருப்பார்கள்.எக் காலத்தில் சென்றாலும் வயல்களில் நீங்கள் படத்தில் காட்டியது போல் முழங்கால் அளவு நீர் இருக்கும்.கரிய நிற சேற்று மணலாயிருக்கும். இடையிடையே குட்டை போலிருக்கும் இடங்களில் கரிய எருமைகள் படுத்து கிடக்கும்.அக்காலத்தில் மாமா வீட்டுக்கு செல்ல பிரதான வீதியிலிருந்து மாட்டு வண்டியில் தான் செல்வோம்.குளிப்பதெல்லாம் மாகாவலி கங்கை ஓடி வந்து கடலில் கலக்கும்ஆற்றில் தான்.ஆனாலும் விவசாயம் செய்து வாழ முடியாதெனெ ஒரு மாமா அரசு பணிக்கு சென்றார்.இங்கே உங்கள் பதிவுகள் காணும் போது இயல்பில் இரத்தத்தில் ஊறியிருக்கும் விவசாய சிந்தனை எங்கேனும் தோட்டம் துரவு என தேடி போக மாட்டோமா எனும் ஏக்கத்தினை தருகின்றது.

    வரப்புயர நீர் உயரும்,
    நீர் உயர நெல் உயரும்
    நெல் உயர குடி உயரும்
    குடி உயர கோன் உயர்வான்

    என எத்தனை அழகாக வரப்புக்களை உயர்த்தி கட்டினால் நெல் உயரும் என பாடி இருக்கின்றார்கள்.

    காணி நிலம் சொந்தமாக வேண்டாம் பராசக்தியே
    வாடகைக்கேனும் நாங்கள் வரும் போது விவசாயம் செய்ய விளை நிலைங்களை பாதுகாப்பாக வைத்திரு பராசக்தியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழமையான நீங்கள் பார்த்து ரசித்த வேளாண்மையை இங்கு பகிர்ந்ததற்கு நன்றி நிஷா! மீண்டும் அந்த பொற்காலத்தை கொண்டுவர முயற்சி செய்வோம்.

      நீக்கு
  7. ஆங்கிலேயர்கள் நமது வெள்ளநீர் வேளாண்மையை அழித்தார்கள் என்பது போன்ற புதிய தகவல்களை தொகுத்து அளிக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்! தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. வானம் பார்த்தபூமியிலும்
    வானளாவி விவசாயம் செய்த பூமியை
    அறியாமையால் கெடுத்திருக்கிறார்களே அன்னியர்..!

    பதிலளிநீக்கு
  9. உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை! எவ்வளவு செய்திகள்! தொடருங்கள் தொடர்வேன்!

    பதிலளிநீக்கு
  10. இந்த பதிவினில் உமது கருத்தில் மாறுபடுகின்றேன் நண்பரே! முன்பெல்லாம் அடிக்கடி வெள்ளம் வந்து ஊரையும், ஊர் நிலங்களையும் பாழ்படுத்தும். ஆங்கிலேயர்களின் ஆறு பராமரிப்பு முறையினால் ஆற்றங்கரைகள் பலமாகவும், ஊருக்குள் வெள்ளம் புகுவதும் தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கு உதாரணமாக காவிரியிலிருந்து பிரிந்து செல்லும் கொள்ளிடம் ஆற்றின் கரைகளையும், ஆற்றோர ஊர்களையும் சொல்லலாம். இப்போது கர்நாடகம் காவிரி ஆற்றின் குறுக்கே பல அணைகளைக் கட்டிவிட்டதால் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கே இல்லை. இன்று ஆற்று ஆக்கிரமிப்புகளே அதிகம் என்று சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, நீங்கள் மட்டுமல்ல. நானும் அப்படித்தான் நினைத்தேன். நாம் மட்டுமல்ல, எல்லோருமே அப்படிதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் எழுதிய சரித்திரத்தை படித்து வளர்ந்த நாம் அப்படிதான் பேசுவோம். இந்த தொடரின் நோக்கமே அப்படி மறைக்கப்பட்ட சரித்திரத்தை சொல்வதும். நாம் மிகப் பெரிய பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள் என்பதை இன்றைய தலைமுறை தெரிந்து கொள்வதும்தான். தொடர்ந்து வரும் பதிவுகளில் உங்கள் கேள்விக்கான விடை உள்ளது நண்பரே, கருத்துக்கு நன்றி!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை