வெள்ளி, டிசம்பர் 30, 2016

மர்மம் விலகுமா.. மந்திரம் பலிக்குமா?


டந்த 50 நாட்களுக்கும் மேலாக நாட்டு மக்களை பாடாய்படுத்தி வந்த ரூபாய் நோட்டு விவகாரம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்றாலும், அதன் பின்னணியில் எழுந்த பொருளாதாரத்தின் மீதான தாக்கம் குறைவதற்கு இன்னும் சில காலாண்டுகள் ஆகக்கூடும் என்றே கருதப்படுகிறது.


எதிர்பார்த்ததைவிடவும் பெருவாரியாக கிட்டத்தட்ட மொத்த தொகையுமே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குள் வந்துவிடும் என்றே தெரிகிறது. ஏற்கெனவே 90 சதத்திற்கும் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது.  இது எதைக்காட்டுகிறது என்றால் கருப்பு பண மலைகள் சிறு குன்றுகளாகவும், சிறுகுன்றுகள் சின்னஞ்சிறு ஜல்லிக் கற்களாகவும் மாறி அதிகாரப்பூர்வ பாதையில் பயணித்து இலக்கை அடைந்துவிட்டது என்பதைத்தான்.

கடமை தவறியதா ? கணிக்கத் தவறியதா ?


பிரதமரின் நவம்பர் 8ம் தேதியிட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பல்வேறு கேள்விகளை தொடர்ந்து எழுப்பிக்கொண்டு வருவதை தவிர்க்க இயலவில்லை. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டப்படி ரிசர்வ் வங்கியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியின் மூலமாக தெரியவந்துள்ள தகவல், ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அளிப்பதாக உள்ளதை மறுக்க இயலாது. அதாவது பிரதமர் நவம்பர் 8-ம் தேதி ரூபாய் நோட்டு செல்லாது என்கிற அறிவிப்பை வெளியிடுவதற்கு மூன்று மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திலேயே இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழு அதற்கு ஒப்புதல் அளித்ததாக வந்த தகவலே அது.


வியாழன், டிசம்பர் 29, 2016

காயத்திற்கு மருந்து.. கனிவு தரும் பட்ஜெட்!டந்தது நடந்து விட்டது, இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம் என களம் இறங்கிவிட்டது போலும் மத்திய அரசு. 2017-18க்கான பட்ஜெட் குறித்தும், பொதுவான பொருளாதார சூழல் குறித்தும் நிதி ஆயோக் அமைப்பு, பொருளாதார நிபுணர்கள் ஆகியோருடன் பிரதமர் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளது அதையே சுட்டிக்காட்டுவதாக உள்ளது.நவம்பர் 8ஆம் தேதிக்கு முந்தைய மொத்த பணப்புழக்கம் எல்லோரும் சொல்வது போல் ரூ.17.5  லட்சம் கோடி எனில், அதில் 100 மற்றும் 500 ரூபாய்களின் பங்களிப்பு 86 சதவிகிதம் எனக் கொண்டால், ரூ.15.05 லட்சம் கோடி இத்தகைய நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன என்பதே உண்மை. தற்போது ரூ.14 லட்சம் கோடி இத்தகைய பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குள் வந்துவிட்ட நிலையில், கிட்டத்தட்ட அனைத்தும் வந்துவிட்டதாகத்தான் இதற்கு அர்த்தம். இந்நிலையில், பல்வேறு கேள்விகள் எழுவதை தவிர்க்க இயலாது.புதன், டிசம்பர் 28, 2016

பள்ளிகளில் பாடமாக கூட்டாஞ்சோறு..!


ர் எழுத்தாளனுக்கு கிடைக்கும் மிகப் பெரிய பாக்கியம் என்று இதனை சொல்லலாம். தனது எழுத்தை அடுத்த தலைமுறையினர் படிக்கிறார்கள் என்பது வானில் சிறகடித்து பறக்கும் உணர்வுக்கு சமமானது. எனக்கும் அப்படியோர் உணர்வு ஏற்பட்டது, சிங்கப்பூரிலிருந்து வந்த அழைப்பின் மூலம்..!

சரியாக இரண்டு மாதத்திற்கு முன்பு ஓர் அழைப்பு. சத்யா என்பவர் பேசினார். தான் ஓர் ஆசிரியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். கூட்டாஞ்சோறைப் பற்றி வியப்போடு பேசினார். எப்படி தகவல்களை திரட்டுகிறீர்கள் என்ற தொழில் ரகசியத்தை கேட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் நீடித்த அந்த உரையாடலில் உங்கள் தகவல்களை எங்கள் பள்ளியில் பாடமாக வைத்திருக்கிறோம் என்ற நம்பமுடியாத தகவலை சொன்னார். 

செவ்வாய், டிசம்பர் 27, 2016

கிராமத்தை நோக்கி குடியேறும் மக்கள்


ந்தியாவில் இருக்கும் கிராமங்களில் மிகவும் செலவச் செழிப்பில் இருக்கும் மிகப் பணக்கார கிராமம் மதாபர் நவவியாஸ் தான். இந்தக் கிராமத்தை ஆசியாவின் பணக்கார கிராமம் என்றும் சொல்கிறார்கள். குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ்-அஞ்சர் நெடுஞசாலைக்கு அருகில் 4 கி.மீ. தொலைவில் உள்ள புஜியோ மலைப்பகுதியில் அமைந்துள்ளது.  

இந்தக் கிராமத்தின் மக்கள்தொகை 15 ஆயிரத்திலிருந்து 35 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் கிராமத்தினர் ஊரைக் காலிசெய்துவிட்டு நகரங்களை நோக்கி குடியேறிக்கொண்டிருக்கும் போது இங்கோ மற்ற நகரங்களில் இருந்து இந்த கிராமத்தை நோக்கி மக்கள் குடியேறி வருகிறார்கள்.


இங்கு மூன்று மாடிகளுக்கு குறைவான வீட்டையோ கடையையோ பார்க்கமுடியாது. மின்சாரமும் தண்ணீரும் 24 மணி நேரமும் தங்குதடையின்றி கிடைக்கிறது. உலகத்தரம் வாய்ந்த மெட்ரிக் பள்ளி, சிறப்பு வசதி பெற்ற சுகாதார மையம், மிகப்பெரிய கோயில் என நகரத்தை தூக்கிப்பிடிக்கும் எல்லா சமாச்சாரங்களும் இங்குண்டு. 

இந்தக் கிராமத்தினர் பெரும்பாலோனார் 'லேவா படேல்' என்ற வணிக சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் வணிகத்தில் சிறந்து விளங்குபவர்கள். இவர்களின் தொழில் நேர்த்திக்கும் பொருளாதார வெற்றிக்கும் அடையாளமாக இந்தக்  கிராமம் உள்ளது. 

400 வருடங்களுக்கு முன்பு சவுராஷ்டிரா பகுதியில் இருந்து கட்ச் பகுதிக்கு இவர்கள் இடம் பெயர்ந்தார்கள். 1800-களில் கடல் கடந்த வணிகம் இவர்களுக்கு கை கொடுத்தது. கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு வியாபாரிகளாகவும், கொத்தனார்களாகவும், தச்சர்களாகவும், கூலி ஆட்களாகவும் சென்று செல்வம் திரட்டினர்.


இவர்கள் தான்சானியாவில் உள்ள சான்சிபாரில் நிரந்தரமாக குடியேறினர். மேலும், சோமாலியா, உகாண்டா, காங்கோ, ரூவாண்டாவிலும் குடியேறினார்கள். 1960-களில் அங்கிருந்து இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தார்கள். இப்படி குடியேறிய அனைவரும் தங்கள் தாய் மண்ணான மூதாதையர் கிராமங்களுடன் தொடர்பில் இருந்தார்கள். அப்படிப்பட்ட கிராமங்களில் ஒன்றுதான் மதாபர்.

1990-களின் தொடக்கத்தில் லேவா படேல்கள் தங்கள் பூர்வீக இடங்களுக்கு திரும்ப நினைத்தார்கள். அப்படி திரும்பிய அவர்கள் பழைய கிராமத்திற்கு அருகிலேயே புதிய கிராமத்தை உருவாக்கினார்கள். இந்தக் கிராமத்தில் வாழ்பவர்களில் 60 சதவீதத்தினர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். 

இந்த சின்ன கிராமத்தில் 25 வங்கிகள் உள்ளன. தனியார், தேசிய வங்கிகள் அனைத்தும் தங்களின் கிளைகளை இங்கே போட்டிப்போட்டு தொடங்குகின்றன. காரணம் குவியும் டெபாசிட் தொகைதான். இங்கு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச டெபாசிட் தொகையே ரூ.20 லட்சம்தான்.


2005-ம் ஆண்டில் இந்த வங்கிகள் வெளியிட்ட கணக்கின்படி 2 ஆயிரம் கோடி ரூபாயை இந்த கிராமத்தினர் சேமிப்பு கணக்கில் போட்டு வைத்துள்ளனர். இங்கு ஒரு தனிநபரின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 13 லட்சமாக உள்ளது. இங்கு சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் 20 லட்சம் ரூபாயை வங்கி இருப்பாக வைத்துள்ளனர். 

இதுபோக இவர்கள் ஆண்டுதோறும் 10 முதல் 15 கோடி ரூபாயை நிரந்தர வைப்பு நிதியில் போட்டு வைத்துள்ளார்கள். இங்கு நிலத்தின் மதிப்பும் அதிகம். ஒரு சதுர மீட்டர் 35 ஆயிரம் ரூபாய். அரசு இலவசமாக கொடுக்கும் எதையும் இந்த மக்கள் வாங்குவதில்லை. 2001-ம் ஆண்டில் குஜராத்தில் நிகழ்ந்த பெரிய நிலநடுக்கத்தில் இந்தக் கிராமம் லேசான பாதிப்பை சந்தித்தது. அதற்காக நிவாரண தொகையாக மத்திய அரசு ரூ.20 கோடியை இங்கிருக்கும் அஞ்சலகத்தில் சேர்த்தது. ஆனால், இதுவரை ஒருவர்கூட இந்தப் பணம் கேட்டு வந்ததில்லை என்பதே இந்தக் கிராமத்தின் செழுமைக்கு அத்தாட்சி.  இலவசம் இவர்களுக்கு பிடிப்பதில்லை. அது பிச்சை எடுப்பதற்கு சமமானது என்பது இவர்களின் நம்பிக்கை. 

தேசத்தில் இருக்கும் மற்ற கிராமங்கள் என்று இந்த நிலையை அடையுமோ..? 
திங்கள், டிசம்பர் 26, 2016

மதிப்பு மிக்கது மக்களின் தியாகம்


ணவாட்ட சூழல், பொருளாதாரத்தின் போக்கு ஆகியவை குறித்து நிதி ஆயோக் அமைப்பின் பொருளாதார வல்லுநர்களுடன் இன்று பிரதமர் முக்கிய பேச்சு நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நவம்பர் 8 ஆம் தேதி ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைகளை அறிவித்தபோது 50 நாட்கள் அவகாசம் கோரியிருந்தார் பிரதமர். இன்றைக்கு 45 நாட்களுக்கு மேலாகியும் பணவாட்ட நிலவரத்தில் பெருத்த அளவில் மாறுதல்கள் இல்லை என்பது யாவரும் அறிந்ததே. தனது குழந்தைகளின் திருமணத்தை தான் விரும்பியவாறு செய்ய முடியாமலும், ஆசைப்பட்ட பொருட்களை வாங்க முடியாமலும், அடுத்தவருக்குத் தேவையான நேரத்தில் உதவ முடியாமலும் சராசரி குடிமகன் சிரமப்பட்டதோடு, அன்றாடச் செலவுகளுக்கும் அல்லல்பட வேண்டியிருப்பது கண்கூடு.

ஞாயிறு, டிசம்பர் 25, 2016

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழகத்தின் முதல் தேவாலயம்


ன்னியாகுமரி மாவட்டம் எனக்கு பல அபூர்வ தகவல்களை தரும் ஓர் இடமாகவே இருக்கிறது. அங்குதான் 1300 வருடங்கள் பழமையான மசூதி உள்ளது. அதேபோல் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழகத்தின் முதல் தேவாலயமும் இந்த மாவட்டத்தில்தான் உள்ளது என்று தெரிந்தபோது திக்குமுக்காடிப்போனேன். அந்த ஆலயம் இருப்பது திருவிதாங்கோட்டில்.


உடனே மதுரையிலிருந்து நாகர்கோயிலுக்கு பயணமானேன். அங்கிருந்து தக்கலை. தக்கலையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இருந்தது திருவிதாங்கோடு. இந்த ஊர் முன்னொரு காலத்தில் சேர மன்னர்களின் முதல் தலைநகரமாக இருந்தது என்றால் நம்புவதற்கு சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. இன்று அதன் பெருமைகள் மங்கி சாதாரணமான சிறிய ஊராக காட்சித்தருகிறது. ஆனால் இன்றைக்கும் பெருமைப்படக்கூடிய பாரம்பரிய சின்னங்கள் இங்கு இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் திருவிதாங்கோடு அரப்பள்ளி தேவாலயம்.

சனி, டிசம்பர் 24, 2016

யாரைத்தான் நம்புவதோ..!


ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகள் சாதாரண குடிமகனின் மனதில் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக உள்ளது. புழக்கத்தில் இருந்த பெருவாரியான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குள் வந்துள்ள நிலையில், மிகப்பெரும் அளவிலான கருப்பு பணம் வெள்ளையாக மாற்றப்பட்டுவிட்டதா? என்கிற ஐயம் எழாமல் இல்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வருமான வரி ரெய்டுகளின்போது, கிடைத்து வரும் ரொக்கம் ஓரளவுக்கு அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.  ரெய்டுகளில் பிடிபடும் ரொக்கத்தில் பெரும்பகுதி புதிய நோட்டுக்களாகவே உள்ள நிலையில், இவையும் பதுக்கப்படுவதற்காகவே மாற்றப்பட்டிருப்பது தெளிவாகிறது.


தடம் மாறிப் போயினவோ தார்மீக நெறிமுறைகள்


கைக்கட்டி நிற்கும் கல்வியாளர்கள், தத்தமது வீடுகளை தங்க நகை ஷோரூம்களாகவும், ரொக்க கஜானாக்களாகவும் மாற்றிவிட்ட சில அரசு அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் என்கிற செய்திகளை பார்க்கும் போது பேரதிர்ச்சி ஏற்படுகிறது.

மக்களுக்காக ஆட்சியாளர்கள் என்கிற நிலை மாறி, ஆட்சியாளர்களுக்காக மக்கள் என்கிற நிலைக்கு தமிழகம் தாழ்ந்துவிட்டதோ என எண்ணத்தோன்றும் அளவிற்கு காட்சிகள் நிழலாடுவதைக் காணமுடிகிறது. 24 மணி நேரத்திற்கும் அதிகமாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீடுகளிலும், அலுவலகத்திலும் வருமான வரி சோதனைகள் நடந்திருப்பது தமிழகத்திற்கு தலைக்குனிவு என்று சொல்லப்பட்டாலும், இதற்குரிய பொறுப்பை ஊழல் அதிகாரிகளும், அரசியல்வாதிகளுமே ஏற்கவேண்டும்.


வெள்ளி, டிசம்பர் 23, 2016

கிணறு வெட்ட வெட்ட கிளம்பும் பூதங்கள்


ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக பொதுமக்களின் சிரமங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமில்லை என்றபோதிலும், நாடெங்கும் நடந்து வரும் வருமான வரிச் சோதனைகள் குறித்து செய்திகள், அன்றாடம் சிரமங்களை மேற்கொண்டு வரும் சாதாரண குடிமகனின் காதுகளுக்கு இன்பத்தேனாகவே இருக்கக்கூடும்.


கிட்டத்தட்ட 15.4 லட்சம் கோடி மதிப்பிற்கு 500  மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பிற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், அதில் கிட்டத்தட்ட ரூ.13 லட்சம் கோடியையும் தாண்டி ரொக்கம் வங்கிகளுக்குள் வந்துள்ளது அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் சற்றே அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.

புதன், டிசம்பர் 21, 2016

பூமியில் மனிதன் கால் பதிக்க முடியாத மர்மமான இடம்


னிதன் நிலவுக்குப் போகிறான். செவ்வாய் கிரகத்துக்குக் கூட போகப்போகிறான். இப்படி பூமியை விட்டு பல லட்சம், பல கோடி கி.மீ. தொலைவில் உள்ள கிரகங்களுக்கே செல்லபோகும் மனிதானால் பூமியில் உள்ள ஒரு இடத்துக்கு மட்டும் போகவே முடியாது. அப்படியே போனாலும் அங்கிருக்கும் நிலத்தில் காலடி வைக்க முடியாது. வைத்தால் கால் இருக்காது..! 


அந்த இடத்தின் பெயர் 'மரியானா ட்ரென்ச்'. இதனை 'சேலஞ்சர் டீப்' என்றும் அழைக்கிறார்கள். இது ஒரு கடல் பகுதி. உலகின் மிக ஆழமான கடற்பகுதி இதுதான். பொதுவாக கடலின் சராசரி ஆழம் 4 கி.மீ. என்றால், இங்கோ ஆழம் 10,902 மீட்டர். அதாவது 11 கி.மீ.க்கு கொஞ்சம் குறைவான ஆழம். நமது எவரெஸ்ட் மலையை அப்படியே தூக்கி உள்ளே போட்டால் கூட அந்த மலை கடலின் மட்டத்தில் இருந்து 3 கி.மீ. ஆழத்தில்தான் கிடக்கும். அவ்வளவு ஆழமான பகுதி.

செவ்வாய், டிசம்பர் 20, 2016

கால் கடுக்க நிற்கும் மக்கள் கைவிட்டுவிட்ட மக்களவை


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எவ்வித பலனுமின்றி முடிந்துள்ளது பெருத்த ஏமாற்றத்தை மக்களுக்கு அளித்துள்ளது என்றால் அது மிகையில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக தங்களது சொந்த பணத்தை எடுப்பதற்கே கால் கடுக்க கிலோ மீட்டர்களில் நீளும் வரிசைகளில் நின்று வாடி வரும் மக்கள் தங்களது சிரமங்களும், வேதனைகளும் நாடாளுமன்றத்தில் எதிரரொலிக்கும் என்றும், அதன் அடிப்படையில் தங்களுக்கு கொஞ்சமேனும் சிரமங்கள் குறையும் என்றும் எண் ணியிருந்தது தற்போது தவிடு பொடியாகியுள்ளது.


கண்ணியமான முறையில் எதிர்ப்புகளை தெரிவிக்கும் நாடாளுமன்ற நடைமுறைகள் காற்றோடு போய்விட்டதாகவும், நியாயமான கேள்விகள் மற்றும் விவாதங்களின் அடிப்படையில பொதுமக்கள் நலன் குறித்த விசயங்களை ஆள்வோருக்கு எடுத்துச்சொல்லும் வாய்ப்புகளும் மறுதலிக்கப்பட்டு விட்டதாகவும் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் ஹமீத் அன்சாரி வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவையிலும்கூட சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், நாடாளுமன்றத்தின் மாண்பை இத்தகைய இடையூறுகள் தகர்த்துவிட்டதாகவும், மக்களின் எண்ணத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்த கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றும், வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளின் மீது ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை மேற்கொள்ள வேண்டுமென்றும், பிரதமர் அதுகுறித்து பேச வேண்டுமென்றும் பிடிவாதம் பிடித்த எதிர்கட்சிகள், பின்னர் அரசு தங்களை காயப்படுத்திவிட்டதாகவும் அதற்கு பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் நாடாளுமன்றத்தை மேலும் முடக்கக்கூடிய நடவடிக்களை மேற்கொண்டனர் என்றால் ஆளும் தரப்பும் எதிர்கட்சிகளை அணுசரித்து எத்தகைய விவாதத்தையும் ஏற்கத்தக்க உறுதியை காண்பிக்கவில்லை என்பதும் சோகமே.


அதுமட்டுமல்லாமல், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரும் சீர்திருத்தமாக குறிப்பிடப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரி விதிப்பு குறித்த நடவடிக்கைகளையும் நாடாளுமன்றத்தால் மேற்கொள்ள முடியாமல் போன காரணத்தினால், திட்டமிட்டபடி 2017 ஏப்.1 முதல் புதிய வரி விதிப்பு அமலாவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே மத்தியிலும் மாநிலங்களிலும் ஆளுவோர் தனிப்பெரும்பான்மையை கருத்தில் கொண்டு எதேச்சதிகார மனோபாவத்துடன் நடந்து கொள்வதாகவும், இத்தகைய போக்கு ஜனநாயகத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என்றும், சமூக நல ஆர்வலர்கள் தொடர்ந்தும் குறைகூறி வரும் நிலையில், மக்களுக்கான விவாதங்களை மேற்கொண்டு அதன் அடிப்படையில் சட்டங்களை இயற்ற வேண்டிய நாடாளுமன்றம், பயனின்றி கூடி களைவது பணவிரயம் மட்டுமல்லாது, நாம் போற்றி பாதுகாத்து வரும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும்.

நாளடைவில் இத்தகைய உயரிய அமைப்புகள் மீது ஒருவித சலிப்புத்தன்மையை மக்களிடம் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுத்திவிடும் அபாயம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.  அதிபர் முறை ஆட்சி போன்ற அவ்வப்போது தோன்றும் கோசங்களுக்கு இத்தகைய நிகழ்வுகள் வலுசேர்ப்பதாகவும் அமைந்துவிடும் என்பதும் துரதிர்ஷ்டமான யதார்த்தம் ஆகும்.

ஜனநாயகத்தின் மீது பற்றுள்ள அனைவரும் குறிப்பாக சான்றோர்கள், சமூக நல ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் ஓரணியில் திரண்டு நாடாளுமன்றம் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதற்கான கருத்துப் போராட்டத்தில் ஈடுபட வேண்டியது அவசியமாகியுள்ளது. மேலும், தற்போதைய சூழலில் ரூபாய் மதிப்பு இழப்பு விவகாரம் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு அமலாக்கம் போன்ற மிக முக்கிய பிரச்சினைகள் குறித்த விவாதங்களை நடத்துவதற்கு ஏதுவாக விசேச நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும், வலியுறுத்த வேண்டியதும் அவசியம்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவையை நடத்தவிடாமல் செய்தன என்றால், தற்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதனையே செய்வது என்பது உண்மையான ஜனநாயகமா என்பதை சம்பந்தப்பட்ட கட்சிகள் சிந்திக்க வேண்டும். தனிப்பட்ட கட்சிகளின் நலன்களை விடவும் அல்லது தலைவர்களின் ஈகோக்களைவிடவும் நாட்டின் நலன் முக்கியம் என்பதால், நாடாளுமன்றம் சிறப்பாக செயல்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சிறப்புக்கூட்டத்தை கட்சி வேறுபாடின்றி அனைவரும் வற்புறுத்த வேண்டும். ஏனெனில், வருங்கால சந்ததியின ருக்கு சிறப்பான நாடாளுமன்ற ஜனநாயகத்தை விட்டுச்செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமையுமாகும் என்பதை மறத்தல் ஆகாது.

இனியாகிலும் மாறுமா மக்களவை காட்சிகள். கை பிசைந்து நிற்கிறான் கடைசிக் குடிமகன்.

கட்டுரையாளர் : எம்.ஜே.வாசுதேவன் 
வெள்ளி, டிசம்பர் 16, 2016

என்று தணியும் இந்த சில்லரை தாகம்..!


ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், டிசம்பர் 10 ஆம் தேதி வரையில் ரூ.12.44 லட்சம் கோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


அதேநேரம், ரூ.4.61 லட்சம் கோடி பணம் பொதுமக்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்தான் பல்வேறு ஐயங்கள் எழுகின்றன. நாடெங்கும் வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் பணத்திற்காக வரிசைகள்  குறைவதற்கான வாய்ப்புக்களே இல்லாத சூழலே தென்படுகிறது. ஒட்டுமொத்தமாக ரூ.15.05 லட்சம் கோடி மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன என்கிற நிலையில், இவற்றில் வங்கி கருவூவலங்களில் எப்போதுமே இருப்பாக இருக்கும் கிட்டத்தட்ட ரூ.75 ஆயிரம் கோடி, தபால் நிலையங்களில் பெறப்பட்டதாகக் கூறப்படும் ரூ.25 ஆயிரம் கோடி ஆகியவற்றை கழித்துவிட்டுப் பார்த்தால், மொத்தமே ரூ.14 லட்சம் கோடி மட்டுமே புழக்கத்தில் இருக்கும் என்கிற நிலையில், இதில் ரூ.12.44 லட்சம் கோடி வங்கிகளுக்கு வந்துவிட்டது என்றால், மீதமுள்ள தொகை கிட்டத்தட்ட 1.6 லட்சம் கோடியாகவே இருக்கக் கூடும்.

ஆனால், ரூபாய் மதிப்பிழப்பு அடிப்படையில் பொருளாதாரத்திற்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றி  பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் கருத்து தெரிவிக்கும்போது நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 1 சதவிகிதம் வரை வளர்ச்சி குறைவு ஏற்படும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.


ஆசிய வளர்ச்சி வங்கியும்கூட, 7.6 சதவிகித வளர்ச்சி என்பதை 7 சதவிகிதமாக குறைத்துள்ளது. இது டிசம்பர் 14ஆம் தேதி வரையிலான சூழலைப் பொருத்ததே. இன்னும் நான்காம் காலாண்டு மிச்சமிருக்கின்ற நிலையில், தொடரப்போகும் பாதிப்புகள் வளர்ச்சி குறைவை  1 சதவிகிதத்திற்கும் அதிகமாகவே கொண்டுபோய் விடக்கூடும்.

நாட்டில் உள்நாட்டின் மொத்த உற்பத்தி ரூ.145 லட்சம் கோடி என்கிற நிலையில், அதில் 1 சதவிகித இழப்பு என்பது கிட்டத்தட்ட ரூ.1.45 லட்சம் கோடி ஆக இருக்கும். அதாவது இதுவரையில் வங்கிகளுக்குள் வராத பழைய நோட்டுகளின் மதிப்பும், இந்த நடவடிக்கையின் காரணமாக ஏற்படப் போகும் பொருளாதார இழப்பின் மதிப்பும் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கும் என்கிற ஐயமும் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கறுப்பு பணத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையென இது சொல்லப்பட்டாலும், தற்போது நாடெங்கும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் ரெய்டுகளின் பின்னணியில் புதிய ரூ.2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளே அதிகம் பிடிபடுகின்றன என்பதை என்னவென்று சொல்ல. மேலும், இதுகாறும் ரூ.4.61 லட்சம் கோடி பொதுமக்களுக்கு திருப்பித் தரப்பட்டுள்ளதில் 21.8 பில்லியன் நோட்டுகள் ரூ.10 ரூ.20 ரூ.50 மற்றும் ரூ.100 மதிப்பு கொண்டவை.


தோராயமாக இதன் மதிப்பு 2.25 லட்சம் கோடி என வைத்துக்கொள்ளலாம். அதே நேரம், புதிய ரூ.500 மற்று ரூ.2000 மதிப்பிலான நோட்டுகள் 1.7 பில்லியன் என்கிற எண்ணிக்கையிலேயே வெளியிடப்பட்டுள்ளதாகவும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதாவது, இதுவும்கூட சற்றேறக்குறைய ரூ.2.25 லட்சம் கோடியாக இருக்கக்கூடும். பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 12.44 லட்சம் கோடி வாங்கப்பட்டுள்ள நிலையில், ரூ.2.25 லட்சம் கோடி மட்டுமே புதிய நோட்டுகளாக புழக்கத்திற்கு வந்துள்ளன என்பதே உண்மை.


இதனால்தான் நாடெங்கும் கடுமையான பணவாட்டம் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கருத்துப்படியே இருக்கின்ற அச்சுத்திறனை கணக்கில் கொண்டால், ரூ.9 லட்சம் கோடி அளவிற்கு புதிய நோட்டுகளை வெளியிடவே 120 நாட்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே 40 நாட்கள் கழிந்துள்ள நிலையில், சில்லரை தாகம் தீர்ப்பதற்கு எதிர்பார்த்ததைவிட அதிக நாட்களாகும் என்பது புரிந்துவிட்டது.

அதனால்தான் பிரதமர் மோடியும்கூட, டிசம்பர் 30-க்குப் பிறகும்கூட மிக மிக மெதுவாகத்தான் சூழலில் மாற்றம் ஏற்படும் என தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. நீண்ட வரிசையில் நிற்கும் அனுபவம் மேலும் தொடரும் என்பதே யதார்த்த நிலவரமாகும். மக்கள் அதற்கு தயாராகிக் கொள்ள வேண்டியதுதான்.


கட்டுரையாளர் : எம்.ஜே.வாசுதேவன் வியாழன், டிசம்பர் 15, 2016

புரட்டிபோட்ட புயலும்.. புரிந்து செயல்பட்ட அரசும்..!


யற்கை பேரிடர்களின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாத ஒரு பூகோள அமைப்பிற்குள் தமிழகத்தின் தலைநகர் சென்னை சிக்கியுள்ளது யாவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக உலக வெப்பமயமாக்கலுக்கு பின்னர் சூறாவளி புயல், பெரு வெள்ளம் ஆகிய இயற்கை பேரிடர்களின் காரணமாக சென்னையில் இயல்புவாழ்க்கை முடங்கி விடுவது தற்போது வருடாவருடம் நிகழும் நிகழ்வாக மாறியுள்ளது.


வார்தா புயல் 192 கிமீ வேகத்தில் வீசியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், பயணிகள் பேருந்து கூட காற்றினால் கவிழ்க்கப்படும் காட்சிகளை
காணும் போது புயலின் தாக்கத்தை கண்கூடாக உணரமுடிகிறது. ஆனால் கடந்தாண்டை போல் இல்லாது இந்தாண்டு கடுமையான சூழல்களை எதிர்பார்த்து அரசு காத்திருந்ததாகவே தோன்றுகிறது. உடனடியாக முடுக்கிவிடப்பட்ட நிர்வாகத்தின் கரங்களை காணமுடிந்தது என்பதோடு ஆங்காங்கே சாலைகளை சீர்செய்யும் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள முடிந்தது. சுதந்திரமாக செயல்பட்ட முதல்வரும், அமைச்சர்களும் சுற்றிச்சுழன்று சேதங்களை பார்வையிட்டு நடவடிக்கை எடுத்ததும், அவ்வப்போது தொலைக் காட்சிகளில் தோன்றி தேவையான விளக்கங்களை அளித்ததும், சமீபத்தில் தமிழகம் காணாத ஒன்று. இயல்பு வாழ்க்கையை பாதித்த வார்தா புயல் கிட்டத்தட்ட 4000 மரங்களை வேரோடு வீழ்த்தி உள்ள தென்றும் எண்ணற்ற மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.


புயல் காற்று கரை கடந்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே மாநகராட்சி உள்ளிட்ட அரசு அமைப்புகள் உடனடியாக களத்தில் இறங்கி சாலைகளை சீர் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டது வரவேற்கத்தக்கது.  அதேநேரம் மின் விநியோகத்தில் உடனடியாக நிலைமைகளை சீர் செய்யும் வாய்ப்பு குறைவே என்றாலும் கூட, அதிலும் வேகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை உணர முடிகிறது. கடந்த ஆண்டு அபரிமிதமான வெள்ளம், இந்த ஆண்டு கடுமையான புயல் என இயற்கையின் சீற்றத்தை மாறிமாறி சென்னை சந்தித்து வருவது தவிர்க்க இயலாது என் றாலும் கூட இயற்கைக்கு மாறான நடவடிக்கைகளை குறைப்பதன் மூலம் தாக்கம் அதிகமாகி விடாது தடுக்க முடியும் என்பதை உணர்தல் அவசியம்.


அதேநேரம் 'கார்டன் சிட்டி' என அழைக்கப்படும் பெங்களூரை போல் சென்னையையும் அழைக்க முடியாது என்றாலும் கூட அது ஒரு முழுமையான கான்கிரிட் காடு என்றும் சொல்ல இயலாது. இந்நிலையில் கிட்டத்தட்ட 4000 மரங்கள் சாய்க்கப்பட்டுள்ளது, இயற்கை ஆர்வலர்களின் கவலையை அதிகமாக்கி உள்ளது. அதிலும் குறிப்பாக வேம்பு, புங்கை, பூவரசு, புன்னை போன்ற நமது மண்ணை சேர்ந்த மரங்கள் அதிக சேதமின்றி தப்பி உள்ள நிலையில் உள்முகர் போன்ற நமது சுற்றுச்சூழலுக்கு சற்றும் பொருத்தமில்லாத மர வகைகள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளதை காணமுடிகிறது. இதை கருத்தில் கொண்டு புயலின் தாக்கம் குறைந்த பின்னர் பெரிய அளவில் மரம் நடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு இந்திய கடற்கரையோர தரைச்சூழல்களை தாங்கி நிற்கும் திறன் கொண்ட மர வகைகளை நிறுவுவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும். மிகப்பெரும் அளவில் உயிர் சேதம் இல்லையென்றாலும் இந்த
புயலின் காரணமாக 1000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு போர்கால அடிப்படையில் சேதங்களை சரி செய்வதோடு, நீண்டகால அடிப்படையிலான இயற்கை பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளையும் விரைந்து நிர்மாணிக்க வேண்டியது அவசர அவசியமாகும். கட்டுரையாளர் : எம்.ஜே.வாசுதேவன் சனி, டிசம்பர் 10, 2016

உலகின் மிகப் பெரிய நஷ்டஈடு


ருவரின் உடல், மனம், வாழ்க்கை பாதிக்கப்படும் வகையான எந்த நிகழ்வுக்கும் தவறான ஒரு தீர்ப்பு அல்லது முடிவுதான் காரணம் என்பதை உணரும் போது பாதிக்கப்பட்ட நபருக்கு அவரின் பாதிப்புக்கு ஏற்றவாறு இழப்பீடு வழங்கப்படும். இதனையே நஷ்டஈடு என்கிறார்கள். அப்படிப்பட்ட தனி நபர் இழப்பீட்டில் மிக அதிகமான இழப்பீடை பெற்றவர் ஜோசப் என்பவர். 

சம்பந்தமே இல்லாமல் குற்றவாளி கூண்டில் ஏறி, தண்டனை பெறும் சம்பவம் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் தனது அன்பான குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தார் ஜோசப். சராசரி வருமானம் கொண்ட குடும்பம். தனது குடும்பத்தில் ஏற்படும் திடீர் பணநெருக்கடியை சமாளிக்க அவ்வப்போது கந்துவட்டிக்கர்களிடம் கடன் வாங்குவது அவரது வழக்கம். 


அப்படிதான் ஒருமுறை 400 டாலர் பணத்தை ஒரு கந்துவட்டிகாரனிடம் வாங்கியிருந்தார் ஜோசப். குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ஜோசப்பால் சொன்னபடி வட்டித்தொகையை குறிப்பிட்ட நாளில் கட்டமுடியவில்லை. அதற்காக ஜோசப் வீட்டிற்கு அடியாட்கள் சிலரை அனுப்பி பணத்தை வாங்கி வரும்படி கந்துவட்டிக்காரன் சொல்லியிருந்தான். 

அடியாட்கள் வீட்டுவாசலில் நின்று கொண்டு திமிராக பேசினார்கள். ஜோசப்பை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரையும் மனைவியையும் தவறாக பேசினார்கள். மனைவியின் நடத்தையை விமர்சித்தார்கள். ஜோசப்பும் பொறுத்து பொறுத்துப்  பார்த்தார். வாய்ச்சண்டை கைகலப்பாக .மாறியது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஜோசப் ஒரு உருட்டுக்கட்டையை எடுத்த அடியாட்களை அடிக்கத் தொடங்கினார். உக்கிரமான அந்த அடியை தாங்கமுடியாமல் அடியாட்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடத்தொடங்கினார்கள். ஜோசப்பும் விடாமல் வீதியில் ஓட ஓட அடியாட்களை அடித்து விரட்டினர்.

இந்த விஷயம் விபரீதமானது. ஏனென்றால் அடியாட்களை கந்துவட்டிக்காரனுக்காக அனுப்பி வைத்தவன் பார்போஸா என்ற ரவுடி. இவன் கொலை செய்வதில் கில்லாடி. 30-க்கும் மேற்பட்ட கொலைகளை அசால்டாக செய்தவன். தனது அடியாட்களை ஜோசப் அடித்து அனுப்பியது அந்த ரவுடி மனதில் வஞ்சகமாக வளர்ந்தது. உடனே ஜோசப்புக்கு பார்போஸா ஒரு கடிதம் எழுதினான். அதில் 'சரியான நேரத்தில் உனக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது' என்று மட்டும் எழுதி அனுப்பியிருந்தான். அப்போது அந்தக் கடிதத்தின் அர்த்தம் ஜோசப்புக்கு புரியவில்லை. 

சில வருடங்கள் கழித்து, அதாவது 1965-ல் எட்வார்ட் டீக்கன் என்பவரை ஒரு மாபியா கும்பல் சுட்டுத் தள்ளியது. இந்த வழக்கில் சாட்சியாக நீதிமன்றத்துக்குப் போனான் பார்போஸா. நீதிமன்றத்தில் இந்தக் கொலையை செய்தது ஜோசப்தான் என்று கூறினான். 


அவ்வளவுதான் ஜோசப்பை ஜீப்பில் அள்ளிப்போட்டுக் கொண்டு போனது போலீஸ். ஜோசப் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார், என்னென்னவோ முறையிட்டார். போலீஸ் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. சிறையில் தள்ளியது. 35 வயதில் தனது குடும்பத்தை பிரிந்து சிறைக்குப் போனார். சிறையில் இருந்தபடியே வெளியே வருவதற்காக ஆதாரங்களை திரட்டினார். 

30 வருடங்கள் சிறையிலேயே கடந்தது. ஒரு சின்ன ஆதாரம் கூட கிடைக்கவில்லை. கடைசியில் திடீரென்று விடுதலை செய்தனர். அதற்கு காரணம் ஜோசப் சிறைக்குள்  இருந்தபடியே தனது வழக்கறிஞர் மூலம் திரட்டிய ஆதாரம்தான். ஜோசப்பின் வக்கீல் முதல் தகவல் அறிக்கையை யதேச்சையாக புரட்டிக்கொண்டிருந்தபோதுதான் ஒரு ஆதாரம் கிடைத்தது. முதலில் தயாரிக்கப்பட்ட எப்.ஐ.ஆர்.-ல் ஜோசப் பெயர் இல்லை. இரண்டாவதாக உருவாக்கப்பட்ட எப்.ஐ.ஆர்.-ல் வலுக்கட்டாயமாக அவர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. இதுதான் ஜோசப் விடுதலையாக காரணமாக இருந்தது. 


இதையே ஆதாரமாக வைத்து ஜோசப் வெளியே வந்து பொய் வழக்கு போட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 101 மில்லியன் டாலர் தொகையை நஷ்டஈடாக பெற்றார். நமது இந்திய மதிப்பில் ரூ.67,670 கோடி.  உலகிலேயே அதிக அளவில் பெறப்பட்ட தனி நபர் நஷ்டஈடு இதுதான். ஆனால், இளமை இழந்தபின் வரும் வெறும் பணத்தை வைத்து என்ன செய்வது என்று வருத்தப்பட்டார் ஜோசப்.

* * * * * * * * *

இந்தப் பதிவை காணொலியாகவும் காணலாம்.

யாருக்கும் கிடைக்காத மிகப்பெரிய நஷ்டஈடு 

வியாழன், டிசம்பர் 08, 2016

வாரி வழங்க வங்கிகள் தயார்! வாராக்கடன்களை வசூலிப்பது யார்?


ட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள போதிலும், கட்டாய ரொக்க கையிருப்பு விகிதத்தில் தளர்வுகளை அனுமதித்துள்ளது வங்கிகளுக்கு சாதகமானதாகக் கருதப்படுகிறது.


சமீபத்திய டெபாசிட்டுகள் அனைத்தையும் தங்களிடம் கட்டாய ரொக்க கையிருப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமென நவ.26 ஆம் தேதி அறிவித்திருந்த ரிசர்வ் வங்கி, தற்போது அதை விலக்கிக் கொண்டுள்ளது. அதன் காரணமாக வங்கிகளிடம் டெபாசிட் கையிருப்பு அபரிமிதமாக உள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் வரத்தில் தொடர்ந்து சங்கடங்கள் நீடித்து வரும் நிலையில், குறிப்பிட்ட கால அளவுக்கு டெபாசிட்டுகளில் பெரும் பகுதி வங்கிகளிலேயே இருக்கக்கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளது. இத்தகைய டெபாசிட்டுகளுக்கு வட்டி வழங்கப்பட வேண்டும் என்பதால், அவற்றை கடன்களாக வழங்கி அதன் மூலம் சம்பாதிக்கவே வங்கிகள் விரும்பும் என்கிற நிலையில், தற்போது வங்கிக் கடன் வட்டி விகிதங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமே. ஆனால், சந்தை நுகர்வில் மெத்தனப்போக்கு ஏற்பட்டுள்ளதால், தொழில்துறை நடவடிக்கைகள் மந்தமாகிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.  அதாவது, கடன் வழங்க வங்கிகள் தயார் என்றாலும், வாங்குவதற்கு ஆளில்லை என்கிற  நிலைதான்.  இது ஒருபுறம் இருக்க, கடந்த ஏப்.2013 முதல் ஜூன் 2016 வரையிலான காலகட்டத்தில் ரூ.1.54 லட்சம் கோடி வாராக்கடன்களை பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2015-16 நிதியாண்டில் மட்டுமே ரூ.56,012 கோடி மதிப்பிலான வாராக்கடன்கள் பொதுத்துறை வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டுமே ரூ.15,163 கோடி தள்ளுபடி செய்துள்ளதோடு, ஒட்டுமொத்த வாராக்கடன்கள்  செப்.30 வரையிலான கால கட்டத்தில் ரூ.6,30,323 கோடியாக அதிகரித்துள்ளது.  முதலாவது காலாண்டில் இது ரூ.5,50,346 கோடியாக இருந்த நிலையில், ஒரு காலாண்டில் மட்டுமே கிட்டத்தட்ட  ரூ.80 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது வாராக்கடன்கள் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது.

இங்குதான் 2 கேள்விகள் எழுகின்றன. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் திரட்டப்பட்டுள்ள டெபாசிட்டுகளின் ஒரு பகுதி, கடன் வழங்கலை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் வாராக்கடன்களாக மாறிவிடுமோ என்பது ஒன்று. இன்னொன்று, இதுவரையில் உள்ள வாராக்கடன்களையே வசூலிக்க இயலாத நிலையில், இது புதிய பிரச்சினைகளை பொருளாதாரத்தில் ஏற்படுத்திவிடாதா என்பது.

வாராக்கடன்களை வசூலிக்க சட்டத்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் எடுத்தே வந்துள்ளன என்றாலும், நிலைமையின் தீவிரத்தை சமாளிக்க அவை போதுமானதாக இல்லை. அதேநேரம், டொபாசிட்டுகளை வங்கிகள் வெறுமனே வைத்திருக்க முடியாது என்பதையும், குறைந்த வட்டியில் கடன்கள் வழங்குவது  அதிகரித்தால் மட்டுமே தொழில்துறை உற்பத்தியில் மறுமலர்ச்சி ஏற்படும் என்பதையும், அதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி உயர்வு ஆகியவை நிகழும் என்பதால், முற்றிலுமாக அவற்றை தவிர்க்க இயலாது என்பதையும் ஏற்கத்தான் வேண்டும்.

இந்நிலையில், நாட்டின் கிராமச்சந்தைகள், அன்றாட காய்கறி, பழங்கள் விற்கின்ற சிறு வணிகர்கள் ஆகியோருக்கு மைக்ரோ பைனான்சிங் முறையிலான மிகக்குறுகிய கால, குறிப்பாக வார அடிப்படையிலான கடன்கள் வழங்குவது குறித்த அமைப்புகளை வங்கிகள் ஏற்படுத்துவது அவசியம் என்றே தோன்றுகிறது.

அடி மட்டத்தில் இத்தகைய பிரிவினரிடம் அதிக வட்டி வாங்கும் கந்து வட்டி நிறுவனங்கள் செழித்து வருகிறதே தவிர, எவையும் வாராக்கடன்களால் மூடப்பட்டதாக தெரியவில்லை.


இத்தகைய குறைந்த வட்டியிலான மைக்ரோ பைனான்சிங், கிராமப்புறத்தில் உற்பத்தி பெருக்கத்தையும், அதன் அடிப்படையில் நுகர்வையும் அதிகரிக்கும் என்பதால் வரவேற்கத்தக்கதாகவே இருக்கும். அதாவது இதுவரையில் வங்கிக்கடன்களுக்குள் வராத ஒரு பிரிவை நியாயமான கடன் நடவடிக்கைகளின் கீழ்கொண்டு வருவது அவசியம்தானே.

எது எப்படியோ, வாரி வழங்க வங்கிகள் தயார். வாராக்கடன்களை வசூலிப்பது யார் என்கிற கேள்வி ஆவேசமான கேள்வியாக மாற அரசும், வங்கிகளும் அனுமதிக்கலாகாது.


கட்டுரையாளர் : எம்.ஜே.வாசுதேவன் 
புதன், டிசம்பர் 07, 2016

ஜெயலலிதாவிடமிருந்து இப்படியொரு பேட்டியா..?!


ந்திய அரசியலின் நெருங்க முடியாத பெண்மணியாக இன்றும் பார்க்கப்படும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது.

செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில், அவரின் மிக உண்மையான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால், அது இதுவாக மட்டுமே இருக்கும்.


Rendezvous With Simi Garewal  என்ற இந்த நிகழ்ச்சியில், வெட்கப்படும், புன்னகைக்கும், உணர்ச்சிவசப்படும், பாட்டு பாடும், ஒரு சராசரிப் பெண்ணாக ஜெயலலிதாவைப் பார்க்கலாம். தன் இளைமைக்காலம் முதலான சுயசரிதம் பற்றி பேட்டியாளரான அவரது தோழியும் அவர் காலத்து இந்தி நடிகையுமான  சிமி க்ரேவல் என்பவரிடம் அவரே கூறும் பேட்டி இது...

இந்த பேட்டியின் தமிழாக்கம் கீழே.

சிமி: உங்கள் அரசியல் வாழ்க்கையை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிக துணிச்சலான பயணம். ஆனால் எந்த சினிமா திரைக்கதையை விடவும் அதிக திருப்பங்கள் கொண்டது இல்லையா அது?

ஜெ: அதிக போராட்டங்கள் நிறைந்ததும் கூட. (Its a tempestuous life என்கிறார் ஜெ. இந்த பேட்டி முழுவதுமே, கேட்கப்படும் கேள்விகளுக்கு, மிகத் துல்லியமான, அதிகம் பயன்படுத்தப்படாத ஆங்கில வார்த்தைகளை தேர்வு செய்து பதில் அளிக்கிறார் ஜெ)

சிமி: வெற்றி, தோல்வி, வழக்கு என்று எதிர்பார்த்திருக்காத வகையிலான ஏற்ற இறக்கங்களைக் கொண்டது உங்கள் வாழ்க்கை. எப்போதாவது எரிச்சல்பட்டிருக்கிறீர்களா ? பயம் அல்லது, ஆத்திரமடைந்திருக்கிறீர்களா ? அதை வெளிக்காட்டி இருக்கிறீர்களா ?

ஜெ: கண்டிப்பாக. நானும் எல்லோரையும் போலதானே. இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை என்றால்தான் நான் இயல்பாக இல்லை என்று அர்த்தம். ஆனால் நீங்கள் ஒரு தலைவராக இருக்கும்போது உங்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த கற்றுகொள்வீர்கள். வெளிப்படுத்த மாட்டீர்கள்.

சிமி: எப்போது பார்த்தாலும், எந்த நாளில் உங்களை பார்த்தாலும், மிக சாந்தமாக, அமைதியாக இருக்கிறீர்கள். இதற்குப் பின்னால் ஒளிந்திருப்பது என்ன ? என்று நான் தெரிந்து கொள்ளலாமா ?

ஜெ: (வெடித்து சிரிக்கிறார் ஜெ.பின் சிறு இடைவெளி விட்டு பதிலளிக்கிறார்) என்னுடைய உணர்வுகளை எனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறேன். அதை யாருக்கும் வெளிப்படுத்துவதில்லை. பொது இடங்களில் நிதானம் இழப்பதில்லை. அழுததில்லை. என்னுடைய உணர்வுகள் என்பது காட்சி படுத்துவதற்கல்ல என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

சிமி: இது எப்படி சாத்தியமாகிற்று ?

ஜெ: எனக்கு மனஉறுதி அதிகம். சுயகட்டுப்பாடும்.


சிமி: அரசியல் உங்களை வலிமை வாய்ந்தவராக மாற்றி இருக்கிறதா ?

ஜெ: கண்டிப்பாக. இப்போது நீங்கள் பார்க்கும் இந்தப்பெண் இல்லை நான். எப்போதும் இப்படியான பெண்ணாக இருந்ததில்லை. அதிக கூச்சமுடைய, அன்னியர்களை சந்திக்க விரும்பாத, அதுவுமில்லாமல், மற்றவர்களால் கவனிக்கப்படுவதை அறவே வெறுத்த பெண் நான்.

சிமி: நிஜமாகவா ? ஆச்சர்யமாக இருக்கிறது.

ஜெ: ஆச்சர்யம்தான். நிஜமாகவே மற்றவர்களின் கவனத்துக்கு ஆளாவதை வெறுத்திருக்கிறேன். ஆனால், நாட்டின் உயரிய இரண்டு பொறுப்புகளை வகித்தது விதியின் வழி. நிஜத்தில் பொறுப்புகளுக்கு பின்னாலிருந்து பணிபுரியவே நான் விரும்பி இருக்கிறேன்.

சிமி: பின்னோக்கி பார்த்தோமானால், உங்களுடைய தற்போதைய வாழ்க்கைக்கும், உங்கள் சிறுபிராயத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறது என்று நினைக்கிறீர்களா ?

ஜெ: கண்டிப்பாக இல்லை. தமிழ் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த நான்,  மிக பாரம்பரியமான, ஆச்சாரமான முறையில் எனது தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்ட பெண்.

சிமி: நீங்கள் உங்கள் ஆறு வயதில் இருந்து பத்து வயது வரை பெங்களூரில் தாத்தா பாட்டியிடம் வளர்ந்தீர்கள் இல்லையா ? உங்கள் அம்மாவை பிரிந்திருந்தது கஷ்டமாக இருந்ததா?

ஜெ: மிக கஷ்டமாக இருந்தது. மிகவும் சகித்துக்கொள்ள முடியாததாக இருந்தது.

சிமி: உங்களைப் பார்ப்பதற்கு அடிக்கடி பெங்களூருக்கு வருவார்களா? ??

ஜெ: அவர்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வருவார்கள். ஆனால், அடிக்கடி என்று சொல்ல முடியாது. எனக்கு ஐந்து வயதிருக்கும். அப்போது பெங்களூரு வரும் என்னுடைய அம்மா , சென்னை திரும்ப நேர்கையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, நான்  தொடர்ந்து அழுவேன். இதன் காரணமாக, என்னை தூங்க வைத்துவிட்டுத்தான், அம்மா சென்னைக்கு கிளம்புவார்கள்.

ஆனால், அம்மா சென்னைக்குக்  கிளம்பிவிடக்கூடாது என்பதற்காக , தூங்கும்போது, அவரது சேலைத் தலைப்பை என்னுடைய கைகளில் சுருட்டி வைத்துகொண்டுதான் தூங்குவேன்.

காலையில் எழுந்திருக்கும்போது, வேறு வழியில்லாமல், என் கையிலுள்ள சேலை தலைப்பை மெதுவாக உருவி எடுத்துவிட்டு, சித்தியின் சேலை தலைப்பை என் கைகளில் சுருட்டிவிட்டு, அம்மா கிளம்புவார்களாம் 

காலையில் எழுந்து அம்மாவைக் காணாது, அழுது, அழுது, ஒரு மூன்று நாட்களுக்காவது சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு அழுதிருக்கிறேன். பெங்களூரில் இருந்த நாட்களில் எல்லாம் என் அம்மாவுக்காக  ஒவ்வொரு நிமிடமும் ஏங்கி இருக்கிறேன்.

சிமி: ஜெயாஜி, சிறுபிராயம் என்பது நம்முடைய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடாது என்பது உங்கள் கருத்தாக இருந்தாலும், உணர்வுப்பூர்வமாக அது ஒரு அழுத்தத்தை, வாழ்க்கை ஏற்படுத்தவே செய்கிறது இல்லையா ?

ஜெ: இருக்கலாம். என் வாழ்க்கையை திரும்பி பார்த்தால், வாழ்க்கையில் மிகக் குறைவான காலங்களையே அம்மாவுடன்  கழித்திருக்கிறேன். யோசித்தால், நான் எதிர்பார்த்த முழுமையான அன்பை என் அம்மாவிடமிருந்து  நான் அனுபவிக்கவே இல்லை. நேரம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

அம்மாவுடன்  வசிப்பதற்காக பெங்களூரில் இருந்து சென்னை வந்தபோது, அவர் சினிமாத்துறையில் மிகவும் பரபரப்பாக இருந்தார். நான் எழுவதற்கு முன்னரே அவர் படப்பிடிப்பிற்கு சென்றிருப்பார். பள்ளிக் காலத்தில், ஆங்கில கட்டுரைப்போட்டியில் நான் பெற்ற முதல் பரிசை அம்மாவிடம் காண்பிப்பதற்கே நான் நள்ளிரவு வரை காத்திருந்திருக்கிறேன். மறக்க முடியாத, பொக்கிஷமான நினைவு அது.

சிமி: நீங்கள் கான்வென்ட்டில் படித்தீர்கள் அல்லவா ? பள்ளி மாணவிக்குரிய இயல்பான கனவுகளோ, ஈர்ப்புகளோ இருந்ததா உங்களுக்கு ?

ஜெ: இல்லாமல் எப்படி ?

கிரிக்கட் வீரர் நாரி காண்டிராக்டர் மீது எனக்கு பெரும் ஈர்ப்பு இருந்தது. அவரைப் பார்ப்பதற்காக மட்டுமே சென்னையில் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறும் மைதானங்களுக்கு செல்வேன்.

ஹிந்தி நடிகர் ஷம்மி கபூர் மீதும் கூட எனக்கு ஈர்ப்பு இருந்தது. அவர் நடித்த “ஜங்லி” திரைப்படம் , தற்போது வரை எனக்கு மிக பிடித்த படம்.”

(இதற்கடுத்த சில நொடிகளில், “ஆஜா சனம்” என்ற பிரபல ஹிந்தி அப்பாடலை ஜெ. பாடுகிறார். சிறு வெட்கத்துடன் )

சிமி: உங்களுடைய அம்மா ஒரு நடிகை என்பதற்காக,  பள்ளியில் உங்களுடன் படித்த மாணவிகள், உங்களை கேலி செய்திருக்கிறார்களா ? அது உண்மையா ?

ஜெ: உண்மைதான். மேல்தட்டு குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் சிலர், பரிகாசம் செய்வார்கள். முன்னணி நடிகையாக, என் அம்மா இல்லாததால்தான் அவர்கள் என்னை கிண்டலடித்தார்கள். அம்மா அப்போது குணச்சித்திர காதாபாத்திரத்தில்தானே நடித்தார். ஒருவேளை அவர் முன்னணி கதாநாயகியாக இருந்தால், அவர்கள் என்னைப் பார்த்து பொறாமைப்பட்டிருப்பார்கள்.

அதை எல்லாம் சரிக்கட்டும்விதமாக, அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவியாக  இருந்தேன்.  நான் பள்ளியை விட்டு செல்லும்போது, அனைத்து ஆசிரியர்களும் எனக்கு ஒருமனதாக “Best outgoing student of the year” பட்டம் அளித்தார்கள். என் வாழ்வில் நான் மிகப்பெருமையாக உணர்வதும், இதுவரை பெருமைப்படுவதும் அதற்காகத்தான்.

ஆனால் அப்போதெல்லாம், இந்த பரிகாசங்களை கேட்டு, உடைந்து போய் அழுதது உண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை. என்னை பரிகசிப்பவர்களுக்கு திருப்பி கொடுக்க கற்றிருக்கிறேன். சில நேரங்களில், அவர்கள் பரிகசித்ததற்கு அதிகமாகவே திருப்பி அடிக்கிறேன்.

சிமி: 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறீர்கள் இல்லையா ? உங்களுடைய சினிமா வாழ்க்கை எப்படி இருந்தது ?

ஜெ: well. என்னுடைய காலத்தில் நான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்திருக்கிறேன். எனக்கு அந்த துறை பிடிக்கவில்லை என்றாலும், ஏற்றுக்கொண்ட பொறுப்பில் மிகச்சிறந்து விளங்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்திருக்கிறேன். நம்பர் ஒன் நடிகையாகவும் இருந்தேன்.

அதேபோல்,  அரசியல் எனக்கு பிடிக்காவிட்டாலும் நான் ஒரு வெற்றிகரமான அரசியல் தலைவர் என்று மக்கள் கூறுகிறார்கள். என்னை பார்த்து நானே ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

சிமி: நடனம் ஆடுவது, ஒப்பனை செய்வது, ஒத்திகை பார்ப்பது, இப்படியான சினிமாத்துறை பணிகள் உங்களுக்கு பிடித்திருந்ததா ?

ஜெ: பிடித்தது என்று சொல்ல மாட்டேன். ஆனால் நடிப்பு எனக்கு இயற்கையாவே வந்தது. நான் ஒரு பிறவி நடிகர் என்றுதான் சொல்லவேண்டும். யாரையும்  பிரதி எடுத்து நடிக்க நான் முயன்றதே இல்லை.

சிமி: உங்களுடைய 23 வயதில், நீங்கள் அம்மாவை இழந்துவிட்டீர்கள். அந்த சூழலை எப்படி எதிர்கொண்டீர்கள்.

ஜெ: கண்ணைக் கட்டி காட்டுக்குள் விடப்பட்ட ஒரு சிறு குழந்தையைப் போல, திணறிப்போனேன். அதை அப்படித்தான் சொல்லவேண்டும். அம்மாதான் என்னுடைய முழு உலகமும். அவர் என்னைப் பாதுகாத்தாரே தவிர, வேறு எதையும் எனக்கு சொல்லித்தரவில்லை.

எனக்கு குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை. வங்கிக்கணக்கு பற்றியோ, காசோலையில் கையெழுத்து போடுவது பற்றியோ, வருமான வரி கட்டுவது பற்றியோ, ஏன் ? என் வீட்டில் எத்தனை பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பது பற்றியோ, இப்படி எனக்கு எதுவுமே தெரியவில்லை. நான் என்ன சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன் என்று கூட எனக்குத் தெரியவில்லை. மிகுந்த அப்பாவியான குழந்தை ஒன்றை கண்ணை கட்டி காட்டுக்குள் விட்டுவிட்டதை போலதான் உணர்ந்தேன்.

கையறு நிலையிலான அன்றைய சூழலலில்,  வெகுளியான, எளிதில் காயப்படக்கூடிய, அப்பாவி பெண்ணாக இருந்த என்னை, சுற்றி இருந்த அத்தனை பேருமே பயன்படுத்திக்கொண்டார்கள்.


சிமி: எம்.ஜி.ஆரை காதலித்தீர்களா ? அவர் மீது காதல் இருந்ததா ?

ஜெ: ( அகன்ற புன்னகை ஒன்றுக்குப் பின்) அவரை சந்தித்த அனைவருமே அவரை காதலித்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். கவர்ந்திழுக்கும் ஆளுமை அல்லவா அவர்.

சிமி: தனிப்பட்ட மனிதராக எம்.ஜி.ஆர் எப்படிப்பட்டவர் ? அவர் ஒரு புதிரைப் போன்றவர் இல்லையா ?

ஜெ: மிகுந்த அக்கறையும், இரக்கமும் உள்ள மனிதர் அவர். எனது அம்மாவுக்குப்  பின், என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர் அவர்தான். அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார். அப்பா, அம்மா, நண்பன், வழிகாட்டி, என்று எல்லாமுமாக.

சிமி: எம்.ஜி.ஆர் உங்கள் வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தினாரா ?

ஜெ: கண்டிப்பாக. அம்மாவும் , அவரும் என்னுடய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தினார்கள்தான். பிடிவாதமான ஆளுமைகள் அவர்கள் இருவருமே. அம்மா என் மீதும், எம்ஜிஆர் என் வாழ்க்கையின் மீதும் ஆதிக்கம் செலுத்தினார்கள். இருப்பினும், அவர்கள் இருவரும்தான் என் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.

சிமி: உங்கள் மீது எம்.ஜி.ஆர் possessive ஆக இருந்தாரா ?

ஜெ: (அதே அகன்ற புன்னகை) இருந்திருக்கலாம்.

சிமி: ஜெயாஜி. நிபந்தனையற்ற அன்பை கண்டிருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் ?

ஜெ: இல்லை. கண்டிப்பாக இல்லை. நிபந்தனையற்ற அன்பு என்ற ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை.

புத்தகங்கள், நாவல்கள், கவிதைகள், திரைப்படங்களில்தான் அது, அந்த நிபந்தனையற்ற அன்பு  இருக்கிறது. உண்மையில், அப்படி ஒன்று இருக்குமானால், அந்த நிபந்தனையற்ற அன்பை நான் இதுவரை சந்தித்திருக்கவில்லை.

சிமி: எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகுதான், அரசியலில், உங்களுக்கு எதிரான பெரும் போராட்டங்களை நீங்கள் சந்தித்ததும், வெற்றி கண்டதும். இல்லையா ?

ஜெ: மிகச்சரி. அவர் இருக்கும்வரை, அவர்தான் கட்சித்தலைவர். அவருடைய அறிவுரையை பின்பற்றுவதுதான் என்னுடைய வேலை. ஆனால் அவருக்குப் பின், நான் தனித்து விடப்பட்டேன். அவருடைய வாரிசாக வருவதற்கான எந்தப் பாதையையும் எம்ஜி.ஆர்  எனக்கு உருவாக்கித் தரவில்லை.

அரசியலுக்கு அவர்தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்த பாதையை  அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. ராஜீவ் காந்திக்கு அவருடைய தாயார் இந்திரா காந்தி செய்ததை போல, கட்சி தலைமையை பொறுப்பை வகிக்கும் அளவிற்கு  ராஜீவை, தயாராக்கியத்தை போல, என்னை யாரும் தலைமை பொறுப்பிற்கு உருவாக்கவில்லை.

தெற்கு ஆசியாவை எடுத்துகொண்டால், நாட்டின் தலைமை பதவிக்கு வந்த பெண்கள் அனைவருமே, யாரோ ஒரு தலைவரின் மகளாகவோ, அல்லது மனைவியாகவோதான் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த வாய்ப்பு தங்கத் தட்டில் வைத்து வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் எனக்கு அப்படி இல்லை.

மறைந்த தலைவரின் மனைவியாக இருந்தால், உங்கள் மீது இயல்பாகவே மரியாதை வந்துவிடும். மக்கள் உங்களை மரியாதையோடு விளிப்பார்கள். அணுகுவார்கள். ஆனால் எனக்கு அப்படி இல்லை.

அரசியலுக்கு அவர்தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்த பாதையை அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. என்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க நான் மிகவும் போராட வேண்டி இருந்தது.


சிமி: ஆண்கள் உங்களை பார்த்து பயப்படுகிறார்களா ?

ஜெ:அவர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் அப்படிதான் நினைக்கிறேன்.
ஆனால், இப்போதெல்லாம் என்னை பார்த்தாலே, ஆண்கள் பீதியாகுகிறார்கள் (சொல்லிகொண்டே சிரிக்கிறார்)

சிமி: ஏன் ?

ஜெ: ஊடகங்கள் அப்படியான ஒரு இமேஜை, என்னை பற்றி கட்டமைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, மற்றவர்களின் அபத்தங்களை, முட்டாள்தனங்களை இப்போதெல்லாம் நான் பொறுத்துக்கொள்வதில்லை.

அந்த பழைய,  ஜெயலலிதா இப்போது இல்லை. அதிர்ந்து பேசாத, எப்படி எதிர்த்து பேசுவது என்று தெரியாத, அவமானப்படுத்தினால், வீட்டுக்கு சென்று அறையை பூட்டிக்கொண்டு அழுகிற அந்த பழைய ஜெயலலிதா இல்லை நான் இப்போது.

என்னுடைய இந்த மாற்றம் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.

சிமி: ஆண்களை வெறுப்பவரா நீங்கள் ? are you a Man Hater ? ஆண்கள்தான் உங்களின் மோசமான விமர்சகர்கள் இல்லையா ?

ஜெ: இல்லையே. ஆண்களை வெறுப்பவள் இல்லை நான். இன்னும் சொல்லப்போனால், பெண்கள்தான் என்னை மிக மோசமாக விமர்சித்திருக்கிறார்கள்.


சிமி: சசிகலாவுடானன உங்கள் சிநேகம் இத்தனை விமர்சனங்களை சந்தித்த பின்னும், நீங்கள் அதை தொடருவது ஏன் ? சசிகலாவை விட்டுக்கொடுக்காமல் இருப்பது ஏன் ?

ஜெ:  என் மீதான அவருடைய விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிகத்தவறாக சித்தரிக்கப்பட்ட,  புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண் அவர்.எனக்காக அவர் மிக சிரமப்பட்டிருக்கிறார். உங்களுக்கு தெரியுமா ? அவர் ஒரு வருடம் சிறை அனுபவித்திருக்கிறார். என்னுடனான நட்பு மட்டும் இல்லையென்றால், அவரை யாருமே இந்தளவு தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள்.

பரபரப்பான அரசியல் வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒருவரால், அவருடைய குடும்பத்தையும் கவனித்து கொள்வது என்பது இயலாத காரியம். பெரும்பாலான ஆண்களுக்கு இது புரிவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு வீட்டில் மனைவியோ அல்லது வேறு யாரோ இருப்பார்கள். ஆண்கள்தான் எங்களுடைய நட்பை கொச்சைப்படுத்துகிறார்கள்.

எனக்கான ஷாப்பிங்கை கூட நான் செய்ய முடியாது. எனக்கான பொருட்களை யாராவது எனக்கு வாங்கி வர வேண்டும். என்னுடைய குடும்பத்தை எனக்காக யாராவது நிர்வகிக்க வேண்டும். அதைத்தான் அவர் செய்கிறார். என்னுடன் பிறக்காத சகோதரி அவர். என் அம்மாவின் இடத்தை, நிரப்பிய பெண் அவர்.

சிமி: நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை ஜெயாஜி ?

ஜெ:  அப்படி ஒன்று நடக்கவில்லை

சிமி:  திருமணம் செய்து கொள்ளுமளவிற்கு யாரையாவது சந்தித்திருகிறீர்களா ?  இவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எப்போதாவது தோன்றி இருக்கிறதா ?

ஜெ:  இல்லை. அப்படி யாரையும் சந்திக்கவில்லை. ஆனால், திருமணம் என்கிற அந்த எண்ணம் எனக்கும் இருந்தது. எல்லா இளம் பெண்களையும் போல, நானும் எனக்கான Prince Charming பற்றி கனவு கண்டிருக்கிறேன்.

என்னுடைய பதினெட்டு வயதில் , என்னுடைய அம்மா எனக்கு திருமணம் செய்து வைத்திருந்தால்,  அது பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, நான் மிக மகிழ்ச்சியாக ஒரு வாழ்க்கையை தொடங்கியிருப்பேன். குடும்பம், குழந்தைகள் என்று அந்த வாழ்க்கையை தொடர்ந்திருப்பேன்வீட்டை விட்டு வெளியே வந்திருக்கவே மாட்டேன்.ஆனால், எதிர்பார்ப்பதெல்லாம் நடப்பதில்லையே.


சிமி:  ஒரு முழுமையான குடும்பம் உங்களுக்கு இல்லை என்று தோன்றுகிறதா இப்போது ?

ஜெ:  இல்லை.எப்போதும் இல்லை. என்னுடைய சுதந்திரத்தை நான் முழுமையாக அனுபவிக்கிறேன்.

தோல்வியுறும் திருமணங்கள், பெற்றோர்களை கைவிடும் குழந்தைகள் என்று என்னை சுற்றி நடப்பவை எல்லாம் பார்க்கும்போது, எனக்கு திருமணமாகதது குறித்து வருத்தமில்லை. சந்தோஷப்படவே செய்கிறேன்.

இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய முடிவுகளை நானே எடுக்கும் சுதந்திரத்தை. யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்காத, மற்றவர்களை மகிழ்விப்பதற்காக வாழத் தேவையில்லாத இந்த சுதந்திரத்தை, நான் விரும்பவே செய்கிறேன்.

சிமி:  இப்படியான ஒரு மாலை சந்திப்புக்காக மிக்க நன்றி ஜெயாஜி. மிக நேர்மையாக, மிக உண்மையாக உங்கள் மனதை வெளிப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சியும் ஜெயாஜி.

ஜெ: எனக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு பேட்டி இது.  இது வரை என்னிடம் யாருக்கும் கேட்கத் தைரியமில்லாத கேள்விகளை கேட்டதோடு, அதற்கான பதில்களை வெளிக்கொண்டு வந்ததும் மிக அருமை. உங்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி. நன்றி.

ஒரு சாதாரண கட்டுப்பாடு நிறைந்த தமிழ்க் குடும்பத்திலிருந்து வந்து மிகப் பெரிய அரசியல் சாதனையாளராக சாதித்த பெண்ணின் உண்மை வரலாறு...!!! ஜெயலலிதா பேட்டி காணொளியாக 
பாகம் - 1


ஜெயலலிதா பேட்டி காணொளியாக 
பாகம் - 2


இந்தக் காணொளியையும் அதனை தமிழில் மொழிபெயர்த்து அனுப்பிய நண்பருக்கும் நன்றிகள்..!


செவ்வாய், டிசம்பர் 06, 2016

இரும்பு பெண்மணி; ஆனால் கரும்பு பெண்மணியும் கூட..!


டந்த 30 ஆண்டுகால தமிழக அரசியல் களத்தில் மிகுந்த பங்களிப்பைக் கொண்ட அரசியல் தலைவராக வலம் வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, இயற்கை எய்தியுள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


ஆணாதிக்க சமுதாயத்தில், குறிப்பாக அரசியலில் துணிச்சல் மிக்க பெண்ணாக பல்வேறு சோதனைகள், போராட்டங்கள், வழக்குகள் என அனைத்தையும் தனியாளாக எதிர்கொண்டு நெஞ்சுரத்துடன் செயல்பட்டு, தமக்கு வந்த சோதனைகளை எல்லாம் தவிடுபொடியாக்கியவர் அவர்.

தமிழகத்தின் மிக முக்கியமான காவிரி பிரச்சினை என்றாலும், முல்லை பெரியாறு பிரச்சினை என்றாலும், திடமான முடிவெடுத்து நிலைமாறாது செயல்பட்டு, தமிழகத்திற்கான சாதகமான தீர்ப்புகளை தமிழக முதல்வராக இருந்து அவரால் பெற முடிந்தது பெரும் சாதனையே.


அதுமட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கை கையாளுவதில் மிகத் துணிச்சலுடனும், தீர்க்கமான மனத்துடனும் செயல்படக்கூடியவர் முதல்வர் ஜெயலலிதா என்பதை தமிழகத்தில் யாரும் மறுக்கமாட்டார்கள். புகழ்பெற்ற எம்ஜிஆர் விட்டுச்சென்ற அதிமுக என்கிற மாபெரும் இயக்கத்தை கட்டிக்காத்து இன்றைக்கு தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் கட்சியாக முன்னிறுத்தியதில் ஜெயலலிதாவின் பங்களிப்பு மிக மிக அதிகம்.

அரசியல் ரீதியாக துணிச்சலான நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர் என்பதால், தமிழகத்தின் இரும்புப் பெண்மணி என வர்ணிக்கப்பட்டாலும்கூட, சமூகத்தில் கடைநிலையில் இருக்கும் தொண்டனைக்கூட அமைச்சர், எம்பி அந்தஸ்துக்கு உயர்த்தி அழகு பார்க்கும் மனப்பாங்கு கொண்டிருந்தவர் என்பதால், அவர் சார்ந்த இயக்கத் தொண்டர்களுக்கு கரும்புப் பெண்மணியாகவும் விளங்கினார். அதனால்தான் இயக்கத்தொண்டர்கள் மட்டுமல்லாமல், பெருவாரியான மக்களாலும் "அம்மா' என்று அடைமொழியிட்டு அன்போடு அழைக்கப்பட்டு வந்திருப்பவர் அவர்.


தமிழக அரசியலில் அவரது மறைவு ஈடு  செய்ய இயலாத இழப்பாகும் என்பதையும், அந்த வெற்றிடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். தமிழகம், தமிழர் நலன் என்கிற கோட்பாடுகளோடு திராவிட இயக்கங்களின் சமூக மேம்பாட்டுக் கொள்கைகளையும் மேலும் முன்னெடுத்துச் செல்கின்ற அரசியல் தலைவராக அடையாளம் காணப்பட்டவர் அவர்.

தேசிய சிந்தனை கொண்ட, ஆனால் மாநில நலனுக்காக கிஞ்சித்தும் அஞ்சாமல் போராடக்கூடிய ஒரு மாபெரும் தலைவராக அவர் விளங்கியதை நாடு நன்றாக அறியும். துயரமிக்க இந்த தருணத்தில் அதிமுக கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தங்களது தலைவி வகுத்து தந்திருக்கும் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்வதோடு, மாபெரும் அரசியல் தலைவியான அவரது கொள்கைகளையும், கனவுகளையும் திறமையாக முன்னெடுத்துச் சென்று தமிழகத்தை வளமாக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது என்பதையும் உணர்ந்து செயல்பட்டாக வேண்டும் என்பதே
தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்! வாழ்க அவர்தம் புகழ்.! 


கட்டுரையாளர் : எம்.ஜே.வாசுதேவன் ஞாயிறு, டிசம்பர் 04, 2016

கேளிக்கையா வரிவிலக்கு கேட்பது - நீதிமன்றம்


'சவாரி' என்கிற சினிமாவுக்கு 'யு' சான்றிதழ் வழங்குவது குறித்த வழக்கு ஒன்றின்போது, தமிழ் சினிமாவுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப் படுவது குறித்து நீதியரசர் கிருபாகரன் சில கருத்துகளை வெளியிட்டுள்ளது சிந்திக்கத்தக்கதாக உள்ளது.

'சவாரி' படத்தில் சனம் ஷெட்டி
தமிழ் கலாச்சாரத்தையும், மொழியையும் வளர்க்கும் அளவில், முற்றிலும் தமிழில் பெயர் கொண்ட தமிழ் திரைப்படங்களுக்கு 30 சதவிகித கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும் என 2006 ஆம் ஆண்டு அரசு அறிவித்திருந்தது. இதுவரையில் கிட்டத்தட்ட 2120 படங்களுக்கு  கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், எந்த அடிப்படையில் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டது என்றும்,  கலாச்சாரத்தையும், மொழியையும் வளர்க்க தமிழ் திரைப்படங்கள் என்ன செய்தன என்றும், நீதிபதி கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பதால், தயாரிப்பாளர் மட்டுமே பயன் அடைகிறார் என்றும் மக்களுக்கும், அரசுக்கும் அதனால் என்ன பயன் என்றும் நீதியரசர் கிருபாகரன் கேட்டுள்ளார்.


2006 முதல் 2016 வரை படங்களுக்கு அளிக்கப்பட்ட கேளிக்கை வரி விலக்கு பணமதிப்பு என்ன என்பதை குறிப்பிடுமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்டிருந்த நிலையில், அது குறித்து தகவல்கள் இல்லையென அரசு தெரிவித்துள்ளது வேடிக்கையாக உள்ளது.  சில காலங்களாகவே தமிழ் திரைப்படங்களில் அளவுக்கு அதிகமாக காதல் காட்சிகளும், மோசமான வன்முறை காட்சிகளும் இடம்பெற்று வந்துள்ளதாக சமூக நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியே வந்துள்ளனர். அதில் உண்மை இருப்பது சராசரி சினிமா ரசிகனும் அறிந்த ஒன்றே. இருந்தபோதும், வெறும் தமிழ் சொற்களில் தலைப்புகள் வைக்கப்படுவதன் அடிப்படையில் மாத்திரமே கேளிக்கை வரி விலக்கு வழங்கப்படுவது ஏற்கத்தக்கதா என்பது கேள்விக் குறியே. அதைத்தான் நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.


ஆனால் அதேநேரம், வருடத்திற்கு ரூ.1000 கோடிக்கும் அதிகமாக புழங்கும் தமிழ் திரைப்பட உலகம், கடுமையான சவால்களை எதிர் நோக்கியுள்ளதையும், இதுபோன்ற சலுகைகளை எதிர் பார்த்து காத்திருப்பதும் யாவரும் அறிந்த ஒன்றே. புதிய தொழில்நுட்பங்களின் வரவு சினிமாத் துறை வர்த்தகத்தை  மிக மோசமாக பாதித்துள்ளதையும், யாரும் மறுக்க இயலாது.

'ஷேர் இட்' போன்ற செயலிகள் மூலம் முழு திரைப்படத்தையும், சில நிமிடங்களில் பதிவிறக்கம்  செய்துவிடமுடியும். மேலும், மொபைல் புரட்சியின் காரணமாக நான்காம் தலைமுறை '4ஜி' மூலம் குறைந்த செலவில் இணையதள டேட்டா வசதிகளை அளிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. சொல்லப் போனால்,   வரும் வருடங்களில்  திரைப்படங்களை தியேட்டர்களில், டிவி சேனல்களில் பார்ப்பதை விடவும், அதிகமான அளவில் மொபைல் போன்களிலேயே பலரும் பார்ப்பர் என்கிற அளவுக்கு  நிலைமை மாறியுள்ளது கண்கூடு. இநநிலையில் தமிழ் திரைப்படத்துறை சுய பரிசோதனை செய்வதன் மூலம் தனக்கான சவால்களை வெற்றி காண வேண்டுமேயன்றி, கலாசார மொழி வளர்ச்சி என்கிற அடிப்படையில் தமிழ் பெயருக்காக வரி விலக்கைப்பெறுவது தவிர்க்கத்தக்கதே.

எந்த திரைப்படம் வெளியானாலும், முழுமையான கட்டணங்களே வசூலிக்கப்படுவதும் யாவரும் அறிந்ததே. ஒரே ஒரு திரை கொண்ட தியேட்டர்களில் ரூ.50க்கு மிகாமலும், 3 திரைகளுக்கு அதிகம் கொண்ட தியேட்டர்களில் ரூ.120க்கு மிகாமலும் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பதே அரசின் அறிவிப்பாகும். ஆனால் யதார்த்தத்தில் இந்நிலை காணப்பட வில்லை என்பதும் அனைவரும் அறிந்த ரகசியமே. வருடத்திற்கு 150க்கும் அதிகமான படங்கள் தயாரிக்கப்பட்டாலும், அவற்றில் 10 படங்களுக்கு உள்ளாகவே குறைந்தபட்ச லாபத்தையாவது சம்பாதிக்கின்றன எனும்போது, டிஜிட்டல் தொழில் நுட்ப புரட்சியின் அடிப்படையில், விநியோக முறைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தாலேயன்றி, திரைப்படத்துறை வளமான நாட்களை எதிர்பார்க்க முடியாது என்பதே வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. 

கருப்பு பணத்தை ஒழித்தே தீருவோம் என மத்திய அரசு செயல்பட்டு வரும் நேரத்தில் கருப்பு பணம் அதிகமாக புழங்குவதாக கருதப்படும் திரைப் படத்துறை, நிதித்துறை சீர்திருத்தங்களையும், நடிகர்கள் சம்பள குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் எடுப்பதோடு, விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் புதிய பரிமாணங்களை  எட்டுவது, அலைபேசி சேவை வாயிலாக திரைப்பட விநியோகத்தை மேற்கொள்வது, அனைத்து தியேட்டர்களிலும் மேம்பட்ட வசதிகளை உருவாக்குவது என பலவாறாக கவனம் செலுத்த வேண்டியுள்ளதை குறிப்பிட்டாக வேண்டும்.


வரி விலக்கு  அளிக்கப்படுவதில் ஏற்புடைய பின்னணி இல்லையென்பதையே நீதி அரசரின் கேள்விகள் சுட்டிக்காட்டுகின்றன எனும்போது, வரி விலக்கை தவிர்த்து தமிழ் திரைப்படத் துறை  சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதே யதார்த்தம். அதேநேரம், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதால், கேளிக்கை வரி விலக்கு  குறித்த அரசாணையை விலக்கிக் கொள்வது குறித்து தமிழக அரசும் பரிசீலிக்க வேண்டியது அவசியம்.


கட்டுரையாளர் : எம்.ஜே.வாசுதேவன் சனி, டிசம்பர் 03, 2016

கையில் கொஞ்சம் காசிருந்தால் கடைசி வரைக்கும் நிம்மதி


டிசம்பர் 31-க்குப் பிறகு, இன்னும் சொல்லப்போனால் மார்ச் 31, 2017க்குப் பிறகு பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளின் காரணமாக எதிர்பார்க்கப்படுவது போல் கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் கோடி வங்கிகளுக்குள் வராது போகுமானால் அது அரசுக்கு வருவாயாக மாறும் சூழல் ஏற்படும் என்பதால், அதனை வெற்றியாக அரசு அறிவிக்கக்கூடும். அதன் அடிப்படையில் தான் பட்ட சங்கடங்களையும் சமான்ய குடிமகன் மறந்து அரசை வாழ்த்தவும் கூடும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.


அதேநேரம், அதன் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள் ரொக்கமாக, நன்கொடையாளர் குறித்த விவரங்கள் இன்றி பெறும் நன்கொடைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், 'ரவுண்ட் ட்ரிப்பிங்' எனப்படும் உள்நாட்டில் திரட்டப்படும் கருப்பு பணம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அந்நிய கரன்சிகளாக மறுபடியும், இந்தியாவிற்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் முதலீடுகளாக வருவதற்கு எதிரான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

மோடி தலைமையிலான மத்திய அரசு அதை நோக்கியே பயணிப்பதாக தெரிவதும் உண்மை. ஆனால், ரொக்கமில்லா பரிவர்த்தனை கொண்ட நாடாக மாறவேண்டும் என்று ஓங்கி ஒலிக்கும் அறைகூவல்கள் குறித்து சற்றே எச்சரிக்கை அவசியம் என்றே தோன்றுகிறது. 2008 ஆம் ஆண்டில் 'லேமென் பிரதர்ஸ் வங்கி' திவாலான போது அமெரிக்க பொருளாதாரம் மட்டுமல்லாது, சர்வதேச நாடுகளின் பொருளாதாரங்களும் பாதிக்கப்பட்ட போது, இந்தியாவில் அது பெருத்த அளவில் உணரப்படாமல் போனமைக்கு இந்திய குடும்பங்களின் சேமிப்பே காரணம் என கூறப்பட்டது நினைவிருக்கும். 2013 ஆம் ஆண்டில் 22,124.14 பில்லியன் ரூபாய்களை இந்திய குடும்பங்கள் சேமிப்பாக கொண்டிருந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


2006 ஆம் ஆண்டில் இதுவே 8,689.88 பில்லியன் ரூபாய்களாக இருந்தது என்பதையும், வருடத்திற்கு சராசரியாக 2,819.47 பில்லியன் ரூபாய்கள் இத்தகைய சேமிப்பு  அதிகரித்து வருகிறது என்பதையும் புள்ளி விவரங்களிலிருந்து அறியும்போது, பெருமிதம் உண்டாகக்கூடும். ஆனால், சமூக, வரலாற்று மற்றும் பொருளாதார பண்பாட்டு ரீதியிலான மக்களின் மனோபாவ அடிப்படையில் அமைந்த இந்த சேமிப்பு பழக்கத்திற்கு தற்போதைய வங்கிகளில் இருப்பு, அட்டைகளில் செலவழிப்பு என்கின்ற 100 சத மின்னணு பரிவர்த்தனை முறை வேட்டு வைத்துவிடுமோ என்கிற ஐயப்பாடுகள் எழுவதை தவிர்க்க இயலவில்லை. மேலும், பெருமளவிலான நுகர்வு கலாச்சாரத்தையும், அது ஏற்படுத்தி விடக்கூடும். மின்னணு பரிவர்த்தனைக்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத போது, அதனை வற்புறுத்துவது தொழில் துறையில் குறிப்பாக 3 கோடி சில்லரை வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக அமையும் என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது. ஃபிளிப்கார்ட், அமோசன் போன்ற அன்னிய நிறுவனங்களுக்கே இதில் அதிக பயன் இருக்கும் என்பதையும் மறுக்க இயலாது.


அது மட்டுமல்லாமல் சிறுவாட்டுக் காசாக சேமிக்கப்படும் பணத்தை வங்கிகளில் வைத்திருக்க இந்திய பெண்கள் விரும்புவது சந்தேகமே. தற்போதும் கூட, நாளது தேதி வரையில் 8.5 லட்சம் கோடி ரூபாய்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், 2.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

இதில் 86 சதவிகிதம் அதாவது ரூ.2.21 லட்சம் கோடி உடனடியாக வங்கிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. முழுமையான அளவிற்கு புதிய ரூபாய்கள் வெளியிடப்பட்டிருப்பின் பொதுமக்கள் 80 சதத்திற்கும் அதிகமாகவே திரும்பப் பெற்றுக்கொண்டிருப்பர் என்பதுதான் உண்மை. ஆனால் தற்போது உள் செலுத்தப்பட்ட தொகைக்கு ஈடான புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படமாட்டாது என்றே தெரிகிறது.


அதாவது, ரொக்க பரிவர்த்தனையை குறைக்கும் முயற்சியே இது. ஏற்கெனவே, இ-ஷாப்பிங் போன்ற நவீன தொழில்நுட்பங்களின் காரணமாக இயற்கையாகவே இந்தியாவில் மின்னணு பரிவர்த்தனைகள் வருடா வருடம் அதிகரித்தே வந்துள்ளதை காணும் போது, தானாக கனிவதை தடியால் அடித்து கனிய வைக்க வேண்டுமா என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை.

தற்போது 20 சதவிகிமாக இருக்கும் மின்னணு பரிவர்த்தனைகள் 50 சதத்தையும் இயற்கையாகவே தாண்டுவதற்கான வாய்ப்புக்கள் உள்ள நிலையில், ரொக்க கையிருப்புக்கு எதிரான பிரச்சாரங்களை எச்ச ரிக்கையாகவும், கவனமுடனும் கையாள வேண்டியது அவசியம் என்றே தோன்றுகிறது.

கையில் கொஞ்சம் காசு இருந்தால் மட்டுமே கடைசி வரைக்கும் நிம்மதி’ என்கிற சராசரி இந்தியனின் எண்ணத்திற்கு மதிப்பளிக்க வேண்டாமா?


கட்டுரையாளர் : எம்.ஜே.வாசுதேவன் 
இத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்

பாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...